M K Stalin
விருதுநகரில் ரூ.417.21 கோடியில் அரசு நலத்திட்ட உதவிகள் - 57,556 பயனாளிகளுக்கு வழங்கினார் முதலமைச்சர் !
விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில் ரூ.77.12 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் ரூ.21.36 கோடி செலவில் முடிவுற்ற 34 பணிகள் ஆகியவற்றை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் திறந்து வைத்து, ரூ.417.21 கோடி மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57,556 பயனாளிகளுக்கு வழங்கினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (10.11.2024) விருதுநகரில் நடைபெற்ற அரசு விழாவில், 77 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் 21 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 34 பணிகளை திறந்து வைத்து, 417 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57,556 பயனாளிகளுக்கு வழங்கினார்.
விருதுநகர் மாவட்டத்தில் அரசு விழாவில் கலந்துகொள்வதற்காக நேற்று (9.11.2024) விருதுநகருக்கு வருகை தந்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், விருதுநகரில் உள்ள மதன் பட்டாசு தொழிற்சாலையை பார்வையிட்டு ஆய்வு செய்து, அந்நிறுவனத்தின் உரிமையாளரிடம் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவருக்கும் பாதுகாப்பிற்கான முறையான காப்பீடு வசதியினை செய்திட வேண்டும் என்று அறிவுறுத்தி, தொழிலாளர்களிடம் அவர்களது கோரிக்கைகள் குறித்து கேட்டறிந்தார்.
அதனைத் தொடர்ந்து, விருதுநகர் அன்னை சத்யா அம்மையார் நினைவு அரசு குழந்தைகள் காப்பகத்திற்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்து, அங்கு தங்கி பயிலும் மாணவியர்களுக்கு வழங்கப்படும் உணவின் தரம், தங்கும் வசதிகள், அவர்களது கல்வி விவரங்கள் குறித்து கேட்டறிந்து, மாணவிகளுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் அரசு செய்து தரும் என்று தெரிவித்தார்.
பின்னர், விருதுநகர் மாவட்டத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் வளர்ச்சி திட்டப் பணிகள், முதலமைச்சர் அவர்களின் அறிவிப்புகள், சட்டப்பேரவை மானியக் கோரிக்கையின்போது அறிவிக்கப்பட்ட அறிவிப்புகள் ஆகியவற்றின் தற்போதைய நிலை குறித்து தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தலைமையில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.
அதன் தொடர்ச்சியாக இன்றையதினம் (10.11.2024) தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் விருதுநகர், பட்டம்புதூரில் நடைபெற்ற அரசு விழாவில், விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடம் மற்றும் முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கிய விவரங்கள்.
=> விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகக் கட்டடத்தை திறந்து வைத்தல் :
வருவாய்த்துறை சார்பில், விருதுநகர் மாவட்டம், விருதுநகர் வட்டம், கூரைகுண்டு கிராமத்தில் 7.67 ஏக்கர் பரப்பளவில், 77 கோடியே 12 இலட்சம் ரூபாய் செலவில் 6 தளங்களுடன் கட்டப்பட்டுள்ள விருதுநகர் மாவட்ட புதிய ஆட்சியர் அலுவலகத்திற்கான கட்டடத்தை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
இக்கட்டடத்தின் தரைத்தளத்தில், குறைதீர் கூட்ட அரங்கம், செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம், தேர்தல் பிரிவு அலுவலகம், நான்கு சக்கர வாகன நிறுத்தம் ஆகியவையும், முதல் தளத்தில் மாவட்ட சுகாதார அலுவலகங்கள், உணவு பாதுகாப்புத் துறை, பொதுப்பணித்துறை, தொழிலகப் பாதுகாப்பு மற்றும் சுகாதாரத் துறை அலுவலகம், புள்ளியியல் துறை அலுவலகம், தமிழ்நாடு அரசு தொழில் முன்னேற்றக் கழக அலுவலகம், இந்திய தேசிய நெடுஞ்சாலை ஆணைய அலுவலகங்கள் ஆகியவையும், இரண்டாம் தளத்தில் தேசிய தகவல் மையம், ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சித் திட்டம், மாவட்ட கருவூலம், வருவாய்த்துறை துணை ஆட்சியர் அலுவலகங்கள் ஆகியவையும், மூன்றாம் தளத்தில் துணை ஆட்சியர் (கலால், முத்திரை), சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை, தமிழ் வளர்ச்சித் துறை, சமூக நலத்துறை, தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டு வசதி மற்றும் மேம்பாட்டுக் கழகம் ஆகியவற்றின் அலுவலகங்கள், நான்காம் தளத்தில் மாவட்ட ஆட்சியர் அறை, மாவட்ட வருவாய் அலுவலர் அறை, கூட்ட அரங்கம், கலந்தாய்வு கூட்ட அரங்கம், காணொலிக் கூட்ட அரங்கம், உதவி ஆட்சியர் அலுவலகம், வருவாய்த்துறை அலுவலகங்கள் ஆகியவையும், ஐந்தாம் தளத்தில் அவசரகால உதவி மையம், ஆதிதிராவிடர் நலத் துறை, உள்ளூர் நிதி தணிக்கை அலுவலகம், சுற்றுலாத்துறை, கம்பி வட தொலைக்காட்சி அலுவலகம், துணை இயக்குநர் (கனிம வளத்துறை), உதவி இயக்குநர் (கைத்தறித்துறை), மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலகம் ஆகிய அலுவலகங்களும், ஆறாம் தளத்தில் மாநில நிதி தணிக்கை அலுவலகம், துணை ஆட்சியர் அறை, பல்நோக்கு அரங்கம் ஆகியவையும் கட்டப்பட்டுள்ளது.
மேலும், இக்கட்டடம், 132 இருக்கை வசதிகளுடன் மக்கள் குறைதீர் கூட்டரங்கம், 200 இருக்கை வசதிகளுடன் கூட்ட அரங்கம், 40 இருக்கை வசதிகளுடன் சிறு கூட்ட அரங்கம் ஆகியவையும், தரைத்தளத்தில் 17 நான்கு சக்கர வாகனங்களும், வெளிப்புறத்தில் சுமார் 227 நான்கு சக்கர வாகனங்களும் நிறுத்தும் வசதி, குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள், மழைநீர் சேகரிப்பு வசதி உள்ளிட்ட அனைத்து வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
=> விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு துறைகளின் சார்பில் முடிவுற்ற பணிகளைத் திறந்து வைத்தல் :
* வருவாய்த்துறை சார்பில், இராஜபாளையம் வட்டத்தில் 30 இலட்சத்து 97 ஆயிரம் ரூபாய் செலவில் இராஜபாளையம் வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, சிவகாசி வட்டத்தில் 30 இலட்சத்து 96 ஆயிரம் ரூபாய் செலவில் சல்வார்பட்டி வருவாய் ஆய்வாளர் அலுவலகம் மற்றும் குடியிருப்பு, அருப்புக்கோட்டையில் 4 கோடியே 49 இலட்சத்து 11 ஆயிரம் ரூபாய் செலவில் வருவாய் வட்டாட்சியர் அலுவலகம், என 5 கோடியே 11 இலட்சம் ரூபாய் செலவில் 3 முடிவுற்ற பணிகள்;
* வணிகவரி மற்றும் பதிவுத் துறை சார்பில், அருப்புக்கோட்டையில் 1 கோடியே 86 இலட்சம் ரூபாய் செலவில் சார்பதிவாளர் அலுவலகம்;
* மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில், சாத்தூர் அரசு மருத்துவமனையில் 3 கோடியே 71 இலட்சம் ரூபாய் செலவில், விபத்து மற்றும் அவசர சிகிச்சைப் பிரிவு;
* வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சித் துறை சார்பில், விருதுநகர் மாவட்ட பெருந்திட்ட வளாகத்தில், 2 கோடியே 44 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் மாவட்ட நகர் ஊரமைப்பு அலுவலகம்;
* பள்ளிக்கல்வித் துறை சார்பில், இராஜபாளையம் வட்டம், மேலப்பாட்ட கரிசல்குளம் கிராமம், தென்றல் நகரில் 30 இலட்சம் ரூபாய் செலவில் நூலகக் கட்டடம், வெம்பக்கோட்டை வட்டம், விஜயகரிசல்குளம், செவல்பட்டி மற்றும் முத்தாண்டியாபுரம் ஆகிய கிராமங்களில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளிகளில் 54 இலட்சம் ரூபாய் செலவில் சுகாதார வளாகங்கள்;
* உயர்கல்வித் துறை சார்பில், அருப்புக்கோட்டை வட்டம், செட்டிக்குறிச்சி, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் 88 இலட்சம் ரூபாய் செலவில் இயற்பியல் ஆய்வுக் கூடம்;
* ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை சார்பில், இராஜபாளையம் ஊராட்சி ஒன்றியம், கோபாலபுரத்தில் 42 இலட்சத்து 65 ஆயிரம் ரூபாய் செலவில் கிராம ஊராட்சி செயலகக் கட்டடம், ஜமீன்கொல்லங்கொண்டானில் 54 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் வட்டார சுகாதார பிரிவுக் கட்டடம், நல்லமநாயக்கன்பட்டி, கணபதி சுந்தரநாச்சியார்புரம், ரெங்கப்பநாயக்கன்பட்டி, புல்வாய்பட்டி, பெத்துரெட்டியபட்டி, விஜயரெங்கபுரம் ஆகிய இடங்களில் 1 கோடியே 88 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் ஊராட்சி மன்ற அலுவலகக் கட்டடங்கள், வெம்பக்கோட்டை ஊராட்சி ஒன்றியம், கொங்கன்குளத்தில் 41 இலட்சத்து 45 ஆயிரம் ரூபாய் செலவில் துணை சுகாதார மையக் கட்டடம், 30 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் கிழவிகுளம் ஊராட்சி ஒன்றிய அலுவலகக் கட்டடம்;
* ஏழாயிரம் பண்ணை, என். சுப்பையாபுரம், கோசுகுண்டு, ஆத்திகுளம் ஆகிய இடங்களில் 31 இலட்சம் ரூபாய் செலவில் பயணியர் நிழற்குடைகள், இராமசாமியாபுரம், ஆத்திகுளம், எஸ். மறைக்குளம் ஆகிய இடங்களில் 32 இலட்சத்து 75 ஆயிரம் ரூபாய் செலவில் நியாய விலைக்கடைகள், கல்குறிச்சி. அழகியநல்லூர் மற்றும் கம்பாளி ஆகிய இடங்களில் 75 இலட்சம் ரூபாய் செலவில் சமுதாய நலக்கூடங்கள், கரிசல்பட்டியில் 18 இலட்சத்து 20 ஆயிரம் ரூபாய் செலவில் 60,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டி, பெரிய ஓடைபட்டியில் 9 இலட்சம் ரூபாய் செலவில் கலையரங்கம், வெம்பக்கோட்டை வட்டம், குண்டாயிருப்பு ஊராட்சியில் 1 கோடியே 28 இலட்சத்து 10 ஆயிரம் ரூபாய் செலவில் திருநங்கைகளுக்கான வீடுகள், என 6 கோடியே 51 இலட்சத்து 76 ஆயிரம் ரூபாய் செலவில் 23 முடிவுற்ற பணிகள்;
- என மொத்தம் 21 கோடியே 36 இலட்சம் ரூபாய் செலவில் பல்வேறு துறைகளின் சார்பில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 34 பணிகளை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் திறந்து வைத்தார்.
பயனாளிகளுக்கு அரசு நலத்திட்ட உதவிகள் வழங்குதல் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை சார்பில் 40,148 பயனாளிகளுக்கு இலவச வீட்டுமனைப் பட்டாக்கள், தமிழ்நாடு மாநில ஊரக மற்றும் நகர்ப்புற வாழ்வாதார இயக்கம் (மகளிர் திட்டம்) சார்பில் சுய உதவி குழுக்களில் 9758 பயனாளிகள் பயன்பெறும் வகையில் கடனுதவி, ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறையின் கலைஞரின் கனவு இல்லம் திட்டத்தில் 4 பயனாளிகளுக்கும், வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் 223 பயனாளிகளுக்கும் உதவிகள், மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் 12 பயனாளிகளுக்கு கடனுதவிகள், வேளாண் பொறியியல் துறை சார்பில் 85 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் உதவிகள், வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை சார்பில் 200 பயனாளிகளுக்கு பல்வேறு திட்டங்களில் நலத்திட்ட உதவிகள், தோட்டக்கலை துறை சார்பில் 150 பயனாளிகளுக்கு உதவிகள், கைத்தறி, கைத்திறன், துணிநூல் மற்றும் கதர்துறை சார்பில் நெசவாளர் முத்ரா திட்டத்தின் கீழ் 5 பயனாளிகளுக்கு உதவிகள், முன்னோடி வங்கியின் சார்பில் 6,971 பயனாளிகளுக்கு கடனுதவி, என மொத்தம் 417 கோடியே 21 இலட்சம் ரூபாய் மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை 57,556 பயனாளிகளுக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வழங்கினார்.
முன்னதாக, விழா நடைபெறும் அரங்கில் வெம்பக்கோட்டை அகழ்வராய்ச்சி, கலைஞர் மகளிர் உரிமைத் தொகை, நான் முதல்வன் திட்டம், தமிழ்ப் புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டங்கள் குறித்தும், வேளாண்மை - உழவர் நலத்துறை, வருவாய்த் துறை, சமூக நலத்துறை போன்ற பல்வேறு துறைகளின் சார்பிலும் அமைக்கப்பட்டிருந்த கண்காட்சி அரங்கினை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டார்.
இந்த நிகழ்ச்சியில், பொதுப்பணித் துறை அமைச்சர் எ.வ.வேலு, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், நிதி, சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத் துறை அமைச்சர் சி.வி.கணேசன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் மாணிக்கம் தாகூர், நவாஸ் கனி, ராணி ஸ்ரீகுமார், சட்டமன்ற உறுப்பினர்கள் ஏ.ஆர்.ஆர்.சீனிவாசன், எஸ். தங்கபாண்டியன், ஏ.ஆர்.ஆர். ரகுராமன், வருவாய் நிர்வாக ஆணையர் / கூடுதல் தலைமைச் செயலாளர் ராஜேஷ் லக்கானி, இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை முதன்மைச் செயலாளர் பெ.அமுதா, இ.ஆ.ப., விருதுநகர் மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் வீ.ப. ஜெயசீலன், இ.ஆ.ப., உள்ளாட்சி அமைப்புகளின் பிரதிநிதிகள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
Also Read
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!
-
”டங்க்ஸ்டன் சுரங்க ஏலத்தை ரத்து செய்ய வேண்டும்” : ஒன்றிய அரசுக்கு கடிதம் எழுதிய சு.வெங்கடேசன் MP!
-
”ஜெயலலிதாவால் கோடீஸ்வரர்களான கும்பல்” : ஒப்புதல் வாக்குமூலம் கொடுத்த திண்டுக்கல் சீனிவாசன்!