M K Stalin
கோவையில் ரூ.158.32 கோடியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம்... திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (5.11.2024) தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை சார்பில், கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் 2.94 இலட்சம் சதுர அடி பரப்பளவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்தார்.
மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சியை விரைவுபடுத்துவதில் தகவல் தொழில்நுட்பத் துறையின் திறனை உணர்ந்து, விரைவான தகவல் தொழில்நுட்ப வளர்ச்சிக்கு உகந்த வணிகச் சூழலை தமிழ்நாடு அரசு உருவாக்கி வருகிறது. இதன்மூலமாக பன்னாட்டுத் தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவை நிறுவனங்கள் முதலீடு செய்வதற்குத் தமிழ்நாடு விருப்பத் தேர்வாக உருவாகியுள்ளது.
தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சேவைகள் தமிழ்நாட்டில் தழைத்து வளர, தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மூலமாக தகவல் தொழில்நுட்பம் மற்றும் தகவல் தொழில்நுட்பவியல் சார்ந்த சிறப்புப் பொருளாதார மண்டலங்களை (ELCOSEZ) உருவாக்குதல், கிராமம் மற்றும் நகர மக்களிடையே தகவல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துவதில் உள்ள இடைவெளியை நிரப்புதல், தமிழ்நாட்டை தகவல் தொழில்நுட்ப மின் ஆளுமையில் சிறந்த மாநிலமாக மாற்றுதல், தமிழ்நாட்டின் மென்பொருள் ஏற்றுமதியை அதிகரித்தல் ஆகியவற்றை நோக்கமாக கொண்டு இவ்வரசு செயல்படுகிறது.
கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடம் :
கோயம்புத்தூர், விளாங்குறிச்சியில் 158 கோடியே 32 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள தகவல் தொழில்நுட்பக் கட்டடம், சிறிய, நடுத்தர மற்றும் பெரிய நிறுவனங்களுக்கு இடம் அளிக்கக்கூடிய வகையில் ஒருங்கிணைந்த கட்டட மேலாண்மை அமைப்பை (IBMS) கொண்டுள்ளது.
இப்புதிய தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தின் இரண்டு அடித்தளங்களில் வாகனங்கள் நிறுத்துமிடமும், தரை மற்றும் ஐந்து மேல் தளங்களில் தகவல் தொழில் நுட்ப அலுவலகத்திற்கான இடவசதியும் செய்யப்பட்டுள்ளது. மேலும் 8 மின்தூக்கிகள், தீயணைப்பு வசதிகள், தொலைத்தொடர்பு வசதிகள், மழை நீர் சேகரிப்பு வசதிகள், 72 மணி நேரம் ஜெனரேட்டர் இயக்கத்திற்காக 30,000 லிட்டர் கொள்ளளவு கொண்ட டீசல் சேகரிப்பு தொட்டி, ஆறு இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட நிலத்தடி நீர்த்தொட்டி, 1.35 இலட்சம் லிட்டர் கொள்ளளவு கொண்ட மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி, 130 KLD கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையம் போன்ற பல்வேறு வசதிகளுடன் கட்டப்பட்டுள்ளது.
விளாங்குறிச்சியில் தகவல் தொழில்நுட்பக் கட்டடத்தை திறந்து வைத்த தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், இக்கட்டடத்தில் பல்வேறு நிறுவனங்களுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு, அதற்கான ஆணைகளை வழங்கினார். இதன்மூலம் சுமார் 3500 நபர்களுக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும்.
இந்த நிகழ்ச்சியில், நகராட்சி நிர்வாகத் துறை அமைச்சர் திரு.கே.என். நேரு, பொதுப்பணித் துறை அமைச்சர் திரு. எ.வ. வேலு, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சர் திரு.மு.பெ. சாமிநாதன், மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் திரு.வி.செந்தில்பாலாஜி, தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், தொழில், முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வர்த்தகத் துறை அமைச்சர் முனைவர் டி.ஆர்.பி. ராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்கள் திரு. கணபதி பி. ராஜ்குமார், திரு. கே. ஈஸ்வரசாமி, தலைமைச் செயலாளர் திரு. நா. முருகானந்தம், இ.ஆ.ப., பொதுப்பணித் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. மங்கத் ராம் சர்மா, இ.ஆ.ப., தகவல் தொழில்நுட்பவியல் மற்றும் டிஜிட்டல் சேவைகள் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் திரு. குமார் ஜெயந்த், இ.ஆ.ப., டிட்கோ மேலாண்மை இயக்குநர் திரு. சந்தீப் நந்தூரி, இ.ஆ.ப., தமிழ்நாடு மின்னணு நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் திரு. இரா. கண்ணன், இ.ஆ.ப, கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு. கிராந்திகுமார் பாடி, இ.ஆ.ப., மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!