M K Stalin

”தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து முதலீடு செய்யுகள்” : The Hindu நாளிதழில் முதலமைச்சர் எழுதிய கட்டுரை!

"அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, புதுமை, உலகளாவிய கூட்டாண்மைகள் ஆகியவற்றை நமது திராவிட மாடல் அரசு முன்னெடுத்து வரும் நிலையில், இந்தியாவின் தொழிற்புரட்சிக்கும் பொருளாதார எதிர்காலத்துக்கும் தலைமை தாங்கிட நமது மாநிலம் தயாராக உள்ளது.

எல்லாருக்கும் எல்லாம் என்ற வழியில் நடைபோடும் தமிழ்நாட்டில் முதலீடு செய்வீர்" என “தி இந்து” நாளிதழில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கட்டுரை எழுதியுள்ளார்.

அதன் விவரம் வருமாறு:-

1968-இல் அன்றைய தமிழ்நாடு முதலமைச்சரும் தொலைநோக்கு கொண்ட தலைவருமான சி.என். அண்ணாதுரை அவர்கள் யேல் பல்கலைக்கழகத்துக்கு மதிப்புமிக்க சப் ஃபெல்லோஷிப் மூலம் வருகை தந்தார். அவ்வருகையின்போது, “மக்களாட்சிக்கான சோதனைக் கூடம்” என இந்தியாவை விவரித்தார். மக்களாட்சியை அரசியல் கருவியாகக் கொண்டு இந்தியா தனது பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்யமுடியுமானால், அது சீனா மற்றும் பிற கம்யூனிஸ்ட் நாடுகள் தழுவியுள்ள முற்றதிகார மாதிரிகளுக்கான சரியான பதிலாக அமையும் என்றும் அவர் அவதானித்திருந்தார்.

அவர் தீர்க்கதரிசனத்துடன், “நாங்கள் எத்தகைய பொருளாதார வளர்ச்சியை அடைந்தாலும் எங்களது மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுப்படுத்தாவிட்டால், வறுமையை ஒழிக்க இயலாது” என்றும் எச்சரித்தார்.

50 ஆண்டுகள் கடந்த நிலையில், பேரறிஞர் அண்ணா அவர்களது தொலைநோக்கின் ஆற்றலுக்கான சான்றாகத் தமிழ்நாடு விளங்குகிறது. மக்களாட்சியின் கருவிகளைப் பயன்படுத்தி, மக்கள்தொகைப் பெருக்கத்தைக் கட்டுக்குள் கொண்டு வந்து, இந்தியாவில் அனைவரையும் உள்ளடக்கிய, நிலைத்த வளர்ச்சிக்கான வழிகாட்டியாகத் தமிழ்நாடு திகழும் வகையில் எங்கள் பொருளாதாரத்தை மறுகட்டுமானம் செய்துள்ளோம். ‘சீனா+1’ உத்தி வழியாகச் சீனாவிற்கான மாற்றுகளை உலகம் தேடிவரும் நிலையில், உலகளாவிய முதலீடுகளுக்கான வலிமையான போட்டியாளராகத் தமிழ்நாடு வளர்ந்துள்ளது.

பெரிதும் வேளாண் சார்ந்த மற்றும் வறிய பொருளாதாரமாக இருந்த நிலையில் இருந்து தொழில் வளர்ச்சிக்கான திறன் மையம் ஆகியுள்ள தமிழ்நாட்டின் பயணம் என்பது மக்களாட்சிக் கருத்தியல்களாலும் மக்களை மையப்படுத்திய கொள்கைகளாலும்தான் உந்தப்பட்டது. முற்றதிகார ஆட்சிமுறைகளில் திணிக்கப்படும் ‘மேலிருந்து கீழ்’ பொருளாதார மாதிரிகளைப் போலன்றி, தமிழ்நாட்டின் வளர்ச்சி அனைவரையும் பங்கேற்கச் செய்யும் நிர்வாகமுறை, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, வாய்ப்பு மறுக்கப்பட்டோருக்கு வாய்ப்பு-வளங்களைப் பகிர்ந்தளிக்கும் சமத்துவ நடவடிக்கைகள் ஆகியவற்றில் வேர்கொண்டுள்ளது. தமிழ்நாட்டின் பொருளாதார மறுகட்டுமானம் வெற்றி பெற்றதற்குச் சமூகநீதி, பொருளாதாரரீதியாக அதிகாரமளித்தல், அனைத்துக் குடிமக்களின் நலன்மீது அக்கறை செலுத்துதல் ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளித்ததைக் காரணமாகச் சுட்டலாம். நாங்கள் பிறப்பு விகிதத்தைக் (TFR) குறைத்ததன் விளைவாக மாநிலத்தின் வறுமைச்சுமை குறைந்தது, கல்வி, மருத்துவச் சேவை, உட்கட்டமைப்பு ஆகிய துறைகளில் கவனத்துடன் முதலீடுகளை மேற்கொள்ள வழிவகுத்தது. இதன் விளைவாக பொருளாதார வளர்ச்சியை ஊக்குவித்தது.

சீனா+1-இன் புதிய முகவரி

இன்றைக்கு, இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (GDP) தமிழ்நாடு இரண்டாவது பெரிய பங்களிப்பை வழங்குகிறது. இந்திய மக்கள்தொகையில் 6 விழுக்காட்டை மட்டுமே கொண்டுள்ள தமிழ்நாடு 9% பங்களிப்பைத் தருகிறது.

தனிநபர் வருமானத்தில் இந்தியாவிலேயே தமிழ்நாடு மிக உயர்ந்த இடத்தில் உள்ளது, அனைவரையும் அரவணைக்கும் அதன் வளர்ச்சி மாதிரியின் வெற்றியைப் பிரதிபலிப்பதாக அமைந்துள்ளது.

சீனாவை மையப்படுத்திய உற்பத்தி-விநியோகச் சங்கிலிகளை மாற்றி பிற இடங்களுக்கு விரிவாக்குவதற்கான உலகளாவிய போட்டியில் தமிழ்நாடு தெள்ளத்தெளிவாக மேலெழுந்து வருகிறது.

இந்தியாவின் டெட்ராய்ட் என அழைக்கப்படும் தமிழ்நாடு, நாட்டின் ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் ஏற்றுமதியில் 35 விழுக்காடு பங்கு வகிக்கிறது. உலகளவில் பெரும் நிறுவனங்களான ஹூண்டாய், டாம்லர், ரெனோ, நிசான், பி.எப்.டபிள்யூ, ஸ்டெல்லாண்டிஸ் ஆகியவற்றுடன் விநியோகஸ்தர்கள் மற்றும் உதிரிப்பாகத் தொழிலகங்களின் வலிமையான வலைப்பின்னலுடன் தமிழ்நாட்டின் மோட்டார் வாகன உற்பத்திச் சூழமைவு திடமாக உள்ளது. அண்மையில் முதலீடுகளை ஊக்குவிக்க நாங்கள் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணத்தைத் தொடர்ந்து, ஃபோர்டு நிறுவனம் சென்னையிலுள்ள தனது தொழிற்சாலையில் உற்பத்தியை மீண்டும் தொடங்குவதாக அறிவித்துள்ளது எங்களுக்குப் பெருமகிழ்ச்சி அளிக்கிறது.

தமிழ்நாட்டின் வலிமை ஆட்டோமொபைல் துறையுடன் நிற்கவில்லை. ஆப்பிள், டெல், எச்.பி., சாம்சங், கூகுள் பிக்சல் போன்ற நிறுவனங்களைக் கொண்டு, இந்தியாவின் மின்னணுப் பொருட்கள் ஏற்றுமதியில் 33% விழுக்காடு பங்களிப்புடன் மின்னணுப் பொருட்கள் உற்பத்தியிலும் தமிழ்நாடு தலைமையிடத்தைப் பெற்றுள்ளது. திறன்வாய்ந்த தொழிலாளர், வலிமையான விநியோகச் சங்கிலி வலைப்பின்னல் மற்றும் உலகத்தரத்திலான உட்கட்டமைப்பு ஆகியவை மின்னணு மற்றும் தொழில்நுட்பவியல் சார்ந்த தொழிற்சாலைகளுக்கான மையமாகத் தமிழ்நாட்டை நிலைநிறுத்தியுள்ளன.

உலக அளவில் உற்பத்திச் சங்கிலியில் ஏற்பட்டு வரும் மாற்றத்தின் ஒரு பகுதியாக, புதிய முதலீடுகளை ஈர்க்க வியூகமிக்க பல நகர்வுகளைத் தமிழ்நாடு மேற்கொண்டு வருகிறது. வணிகம் புரிவதை எளிதாக்குவதில் கவனம் செலுத்தி - வரிவிலக்கு உள்ளிட்ட சலுகைகள் அளித்தல், மானிய விலையில் நிலம், ஒற்றைச் சாளர முறையில் அனுமதி அளிப்பதன் மூலம் தொழில் தொடங்கும் நடைமுறையை ஒழுங்குபடுத்துதல் போன்ற கொள்கைகளை மாநில அரசு செயல்படுத்தியுள்ளது. இதன் விளைவாக, எளிதாக வணிகம் செய்ய உகந்த மாநிலங்களுக்கான தரவரிசைப் பட்டியலில் தமிழ்நாடு தொடர்ந்து முன்னணி வகித்து, உலக முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாகத் தனது இடத்தை மேலும் உறுதிப்படுத்திக் கொண்டுள்ளது.

திறன்பயிற்சி, புதுமை, புதிய கூட்டாண்மைகள்

உலக முதலீடுகளை தமிழ்நாடு ஈர்ப்பது அதன் உற்பத்தித் திறத்தால் மட்டுமல்ல; புதுமையாலும், திறன் மேம்படுத்தலாலும்தான்! ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டை (R&D) வளர்க்கவும், உலகப் பெருநிறுவனங்களுடன் திறன்பயிற்சி சார் கூட்டாண்மைகளை உருவாக்கவும் மாநில அரசு அண்மையில் மிகுந்த முக்கியத்துவம் அளித்து வருகிறது. இது தொழிற்துறையின் நவீன பிரிவுகளில் தமிழ்நாடு முதலிடம் வகிக்க வழிகோலி வருகிறது.

அண்மையில் நாங்கள் அமெரிக்காவுக்கு மேற்கொண்ட பயணம் இதில் முக்கியமான மைல்கல் ஆகும். இந்தப் பயணத்தின்போது, கூகுள், ஆப்பிள், அப்ளைடு மெட்டீரியல்ஸ், ஜாபில், பேபல், நோக்கியா, மைக்ரோசிப், ஈல்ட் இஞ்சினியரிங் சிஸ்டம்ஸ் மற்றும் ட்ரில்லியண்ட் நெட்வர்கஸ் முதலிய உலகின் முன்னணி நிறுவனங்களுடன் முக்கிய முதலீடுகள், திறன்பயிற்சி மற்றும் ஆராய்ச்சி & மேம்பாடு சார்ந்த கூட்டாண்மைகள் ஆகியவற்றைப் பெற்றுள்ளோம். இந்தக் கூட்டாண்மைகள் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதோடு, மேம்பட்ட தொழில்நுட்பங்கள் மற்றும் உலக அளவில் சிறந்த நடைமுறைகளையும் தமிழ்நாட்டுக்குக் கொண்டு வந்து, புதுமைக்கான பன்னாட்டு மையமாகத் தமிழ்நாட்டை உயர்த்தும்.

திராவிட மாடலின் வலிமைகள்

தமிழ்நாட்டின் வளர்ச்சியின் மையமாக விளங்குவது திராவிட மாடல் என அழைக்கப்படும் அதன் தனித்துவமான ஆட்சிமுறை ஆகும். இந்த அணுகுமுறை சமூகநீதி, அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி மற்றும் வளங்களைச் சமத்துவமாகப் பகிர்ந்தளித்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. பொருளாதார வளர்ச்சி என்பது அனைத்து நிலைகளிலும் உள்ள குடிமக்களின் வாழ்க்கைத் தரத்தையும் முன்னேற்றுவதை உறுதிசெய்வதும்தான் என்பதில் கவனம் செலுத்துவதே திராவிட மாடல்.

கல்வி முதல் மருத்துவம் வரை பல சமூகக் குறியீடுகளிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது.

இந்தியாவிலேயே தமிழ்நாட்டில்தான் உயர்கல்வியில் சேரும் மாணவர்களின் விகிதம் (47%) மிக அதிகம். இந்தியாவில் உள்ள தொழிற்சாலைகளில் பதிவுசெய்யப்பட்ட பெண் தொழிலாளர்களில் வியத்தகு அளவாக 42 விழுக்காட்டினர் தமிழ்நாட்டில்தான் பணிபுரிந்து வருகின்றனர். இந்தியாவிலேயே மாபெரும் திறன்பயிற்சிக்கான முன்னெடுப்பான நான் முதல்வன் போன்ற திட்டங்கள் மாநில இளைஞர்களுக்கு தொழில்நுட்பம் மற்றும் நிதித் துறைகள் எதிர்கால வேலைவாய்ப்புகளுக்குத் தேவையான திறன் பயிற்சிகளை அளித்து வருகின்றன.

பன்முகத்தன்மை, சமத்துவம், அனைவரையும் உள்ளடக்கும் பண்பு (DEI) ஆகியவற்றில் தமிழ்நாடு கொண்டுள்ள உறுதிப்பாடானது பெண்கள், திருநர்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளைப் பணியிலமர்த்தும் முதலீட்டாளர்களுக்குச் சிறப்பு மானியங்கள் அளிப்பது போன்ற எங்கள் கொள்கைகளில் வெளிப்படுகிறது. இதன் காரணமாகச் சமூகப் பொறுப்புணர்வை மதிக்கும் உலகப் பெரு நிறுவனங்கள் விரும்பும் முதலீட்டுத் தலமாக தமிழ்நாடு திகழ்கிறது.

நிறுவப்பட்ட தனது மின்நிலையங்களில் இருந்து 57 விழுக்காடு அளவு புதுப்பிக்கத்தக்க ஆற்றல் வளங்களில் இருந்து வருவதால் இந்தியாவின் புதுப்பிக்கத்தக்க எரிசக்திப் புரட்சியிலும் தமிழ்நாடு முன்னணி வகிக்கிறது. தாராளமான காற்று, சூரிய, கடலோர ஆற்றல் மையங்களைக் கொண்டுள்ள புவியியல் அனுகூலத்தால் தூய்மையான ஆற்றல் உற்பத்தியில் தமிழ்நாடு தலைமையிடத்தைப் பெற்றுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி அளவை 75 விழுக்காடாகவும், மாநிலப் பரப்பளவில் பசுமைப் பரப்பளவை 33 விழுக்காடாக உயர்த்தவும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

திடமான உற்பத்தித் துறை, மிகவும் திறன்வாய்ந்த – தேவைக்கேற்பத் தகவமைத்துக் கொள்ளும் பணியாளர்கள், அனைவரையும் உள்ளடக்கிய ஆட்சிமுறை மற்றும் நிலைத்த வளர்ச்சிக்கான உறுதிப்பாடு ஆகியவற்றால் முதலீட்டுக்கான மிகச்சிறந்த வாய்ப்பினை வழங்குகிறது. உலகெங்கும் உள்ள முதலீட்டாளர்களுக்கு நாங்கள் சொல்லும் செய்தி இதுதான்: தமிழ்நாட்டின் மீது நம்பிக்கை வைத்து, எங்கள் வளர்ச்சியில் இணையுங்கள்.

Also Read: பிரதமர் மோடியிடம் 3 முக்கிய கோரிக்கைகள் வைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் : அந்த கோரிக்கைகள் என்ன?