M K Stalin
“உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!” - செந்தில் பாலாஜி ஜாமீனுக்கு முதலமைச்சர் வரவேற்பு !
ஒன்றிய பா.ஜ.க அரசு ஆட்சிக்கு வந்த பிறகு எதிர்க்கட்சி ஆட்சி செய்து வரும் மாநிலங்களை அடக்க நினைத்து பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக அமலாக்கத்துறை, வருமான வரித்துறை, சிபிஐ போன்றவற்றைக் கொண்டு எதிர்க்கட்சி தலைவர்களை கைது செய்து மிரட்டி வருகிறது.
அப்படிதான் டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா, டெல்லி முன்னாள் முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால், ஜார்க்கண்ட் முதல்வர் ஹேமந்த் சோரன் உள்ளிட்ட பலரையும் அமலாக்கத்துறை பல்வேறு வழக்குகளில் கைது செய்து மிரட்டியது. பாஜகவில் சேர்ந்துவிடும்படி தங்களுக்கு மிரட்டல் வருவதாக அவர்கள் நேரடியாக குற்றம் சாட்டினர்.
எனினும் மிரட்டலுக்கு அஞ்சாமல் சட்டத்தின்படி நேரடியாக எதிர்கொண்டு தற்போது அவர்களுக்கு பல மாதங்களுக்கு பிறகு ஜாமீனில் வெளியே வந்துள்ளனர். இந்த சம்பவம் நடக்கும்போதே தமிழ்நாட்டின் அமைச்சராக இருந்த செந்தில் பாலாஜியை சட்டவிரோதப் பணப்பரிமாற்றம் என்ற வழக்கில் கடந்த 2023 ஆம் ஆண்டு அமலாக்கத்துறை கைது செய்தது.
முன் அறிவிப்பு இன்றி, அலுவலகம், வீடு என பலவற்றையும் சோதனை செய்து, உடனடியாக கைது செய்யப்பட்டார் செந்தில் பாலாஜி. அமலாக்கத்துறையின் இந்த கைது நடவடிக்கைக்கு எதிராகவும், ஜாமின் வழங்க கோரியும் செந்தில் பாலாஜி நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். ஆனால் சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றமும், சென்னை உயர் நீதிமன்றமும் அதனை தள்ளுபடி செய்தது.
பின்னர் உச்சநீதிமன்றத்தில் ஜாமின் கோரி மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இம்மனு மீதான விசாரணை உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நிலையில், கடந்த ஆகஸ்ட் 20-ம் தேதி விசாரித்த நீதிபதி செப் 26-ம் தேதிக்கு வழக்கை ஒத்தி வைத்து தீர்ப்பு வழங்கினார். இந்த வழக்கு உச்சநீதிமன்ற நீதிபதி அபய் எஸ்.ஒஹா தலைமையிலான அமர்வில் நடைபெற்று வந்தது.
இந்த நிலையில் இன்று செந்தில் பாலாஜிக்கு ஜாமின் வழங்கி உச்சநீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. மேலும் அடிப்படை உரிமைகளுக்கு எதிராக எந்த நபரையும் நீண்ட நாட்களுக்கு சிறையில் வைத்திருக்க முடியாது என்பதை இன்று உச்சநீதிமன்றம் மீண்டும் அழுத்தமாக கூறியுள்ளது. இந்த ஜாமினை தொடர்ந்து 471 நாட்களுக்கு பிறகு செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்துள்ளது.
இன்று மாலை அல்லது நாளை அவர் சிறையில் இருந்து வெளியே வருவார் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், அவர் மீண்டும் அமைச்சராக தொடர்வதற்கு எந்த தடையும் இல்லை என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ளது. மேலும் செந்தில் பாலாஜிக்கு ஜாமின் கிடைத்ததை அடுத்து கரூரில் திமுக தொண்டர்கள் பட்டாசுகள் வெடித்து கொண்டாடி வருகின்றனர்.
அரசியல் தலைவர்களும் செந்தில் பாலாஜி ஜாமினுக்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். அந்த வகையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் தனது சமூக வலைதளத்டில் பதிவு வெளியிட்டு வரவேற்பு அளித்துள்ளார்.
அந்த பதிவு வருமாறு :
“ஆருயிர் சகோதரர் செந்தில் பாலாஜி அவர்களுக்கு 471 நாட்களுக்குப் பிறகு, உச்ச நீதிமன்றத்தால் பிணை கிடைத்திருக்கிறது. அமலாக்கத் துறையானது, அரசியல் எதிரிகளை ஒடுக்கும் துறையாக மாற்றப்பட்ட தற்போதைய சூழலில், அதற்கு உச்சநீதிமன்றம் ஒன்றே விடியலாக இருக்கிறது.
எமர்ஜென்சி காலத்தில் கூட இவ்வளவு நாட்கள் சிறை வாழ்க்கை கிடையாது. அரசியல் சதிச் செயல்கள் 15 மாதங்கள் தொடர்ந்தன. கைது செய்து சிறையிலேயே வைத்துவிடுவதால் சகோதரர் செந்தில் பாலாஜியின் உறுதியைக் குலைக்க நினைத்தார்கள். முன்னிலும் உரம் பெற்றவராய்ச் சிறையில் இருந்து வெளியில் வரும் சகோதரர் செந்தில் பாலாஜியை வருக வருக என வரவேற்கிறேன்.
உன் தியாகம் பெரிது! உறுதி அதனினும் பெரிது!”
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!