M K Stalin

வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள் : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

தமிழ்நாட்டின் இளைஞர்களுக்கு அதிக எண்ணிக்கையிலான வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் நோக்கத்துடனும், மாநிலத்தில் தொழில் முதலீடுகளையும், வளர்ச்சியையும் மேம்படுத்துவதற்காகவும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமெரிக்காவில் அரசு முறை பயணம் மேற்கொண்டுள்ளார்.

சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில், உலகின் முன்னணி தொழில் நிறுவனங்களான நோக்கியா, பேபால், ஈல்ட்டு இன்ஜினியரிங் சிஸ்டம்ஸ், மைக்ரோசிப் டெக்னாலஜி, இன்பிங்ஸ் ஹெல்த்கேர் மற்றும் அப்ளைடு மெட்டீரியல்ஸ் ஆகிய 6 நிறுவனங்களுடன் 900 கோடி ரூபாய் முதலீட்டில் சென்னை, கோவை மற்றும் மதுரையில் 4 ஆயிரத்து 100 நபர்களுக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் முதலமைச்சர் முன்னிலையில் நேற்று புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.

அதன் தொடர்ச்சியாக லிபோர்னியாவில் உள்ள ஆப்பிள் நிறுவனத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நேரில் சென்று பார்வையிட்டார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் முன்னிலையில், கூகுள் நிறுவனமும், தமிழ்நாடு தொழில் வழிகாட்டி நிறுவனமும் இணைந்து தமிழ்நாட்டில் செயற்கை நுண்ணறிவு ஆய்வகங்களை (AI) நிறுவுவது குறித்து புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.

பின்னர் அமெரிக்காவின் சான்பிரான்சிஸ்கோவில் நடைபெற்ற அமெரிக்க வாழ் தமிழர்கள் சந்திப்பு நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார்.

இந்நிலையில், வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சியுடன் தெரிவித்துள்ளார். இது குறித்து முதலமைச்சர மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூகவலைதள பதிவில்,

”அன்னை மண்ணைப் பிரிந்து அயலகத்தில் இருக்கிறேன் என்ற உணர்வே எழாத வகையில் வாஞ்சையோடு என்னை அணைத்துக்கொள்ளும் நம் உறவுகள். தங்களது உழைப்பாலும் - அறிவாலும் வாய்ப்புகளை அமைத்துக் கொண்டு அமெரிக்க நாட்டில் உயர்ந்து கொண்டிருக்கும் இவர்களுக்கு அன்பும் நன்றியும்." என தெரிவித்துள்ளார்.

Also Read: "முதலமைச்சர் என்ற தகுதியோடு உங்களை சந்திக்க இப்போது வந்துள்ளேன்" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி !