M K Stalin

”மக்களைப் பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, எழும்பூர் ராஜரத்தினம் விளையாட்டு அரங்கில், காவல் துறை சார்பில் நடைபெற்ற இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள், ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் மற்றும் தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் வழங்கும் விழாவில் ஆற்றிய உரை:-

முதலமைச்சர் என்ற முறையில் தினமும் பல்வேறு துறைகள் சார்பில் நடக்கும் நிகழ்ச்சிகளில் நான் கலந்து கொள்கிறேன். இன்று காவல்துறை சார்பாக நடக்கும் விழாவில் பங்கெடுக்கிறேன் என்று சொன்னால் என்னுடைய துறையின் சார்பில் நடைபெறும் நிகழ்ச்சி என்பதால், கூடுதல் மகிழ்ச்சியை நான் அடைகிறேன்.

எல்லாத் துறைகளும் என்னுடைய துறைகள்தான். இருந்தாலும், காவல்துறையினர் என்னை அதிகம் உரிமை கொண்டாடிக் கொள்ள முடியும் என்பதுதான் உண்மை. என் துறையைச் சேர்ந்த காவலர்கள் பல்வேறு பதக்கங்களை பெற்றிருப்பதை பார்க்கும்போது நான் பதக்கம் வாங்கியதுபோல எனக்கு ஒரு மகிழ்ச்சி ஏற்படுகிறது.

இந்திய குடியரசுத் தலைவர் பதக்கங்கள் -

ஒன்றிய உள்துறை அமைச்சர் பதக்கங்கள் -

தமிழ்நாடு முதலமைச்சர் பதக்கங்கள் - ஆகியவற்றை பெற்றுள்ள காவலர்கள் அனைவருக்கும் எனது வாழ்த்துகளையும், பாராட்டுக்களையும் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

காவல்துறை –

ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்புத் துறை –

தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை -

சிறைகள் மற்றும் சீர்திருத்தப் பணிகள் துறை –

ஊர்க்காவல் மற்றும் குடிமை பாதுகாப்புப் படை

தடய அறிவியல் - ஆகிய துறைகளில் பணியாற்றும் காவலர்களுக்கு இந்தப் பதக்கங்கள் வழங்கப்பட்டிருக்கிறது.

இந்தப் பதக்கங்களுக்குப் பின்னால் இருக்கும் உங்கள் உழைப்பும், திறமையும் தலைவணங்கத்தக்க அம்சமாகும்! தமிழ்நாடு பெருமைமிகு மாநிலமாக திகழ்கிறது என்றால், அந்தப் பெருமையில் தமிழ்நாடு காவல்துறைக்குப் பெரும் பங்கு இருக்கிறது. அமைதியான மாநிலத்தில்தான் வளமும் வளர்ச்சியும் இருக்கும். தமிழ்நாட்டில் சட்டம் - ஒழுங்கு நிலை மிகவும் சிறப்பாக இருப்பதால்தான், தொழில் வளர்ச்சி, கல்வி வளர்ச்சி, உள்கட்டமைப்பு மேம்பாடு, மனித வளர்ச்சிக் குறியீடுகள் என்று எதை எடுத்துக் கொண்டாலும் தமிழ்நாடு இந்தியாவில் முன்னணி மாநிலமாக திகழ்கிறது. இத்தகைய பெருமையை அரசுக்கு உருவாக்கித் தரும் காவலர்கள் எல்லோருமே பதக்கங்களுக்கு தகுதி படைத்தவர்கள்தான்!

சிறப்பாக பணியாற்றும் காவலர்களுக்கு ஆண்டுதோறும் பதக்கமும் விருதும் வழங்கிப் பாராட்டுவதை 1969-ஆம் ஆண்டு தொடங்கி வைத்தவரே அன்றைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். 21.08.1969 அன்று அண்ணா பதக்கங்களை வழங்கினார் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். பதக்கம் கொடுக்கத் தொடங்கி 55 ஆண்டுகள் ஆகிவிட்டது.

ஆண்டுதோறும் அண்ணா பதக்கம் வழங்கப்படுகிறது. காவல்துறை அதிகாரிகள் எல்லாருக்கும் மிகப்பெரிய ஊக்கம் அளிப்பதாக அது அமைந்திருக்கிறது.

சட்டம் ஒழுங்கை நிலைநிறுத்தும் பணியில் அர்ப்பணிப்போடு செயல்படும் காவல் அதிகாரிகளையும், காவல் ஆளிநர்களையும் நான் மனதார பாராட்டுகிறேன். இதுபோன்ற பதக்கங்கள் வழங்கப்படுவதும், அதற்காக விழா நடத்துவதும், இதுபோன்ற பதக்கங்களை மற்றவர்களும் பெற வேண்டும் என்ற ஊக்கத்தை அளிக்கத்தான்.

கடமை - கண்ணியம் - கட்டுப்பாடு என்ற நெறிகளைப் பின்பற்றி அல்லும் பகலும் உழைத்தால், அவர்கள் போற்றப்படுவார்கள் என்பதற்கு எடுத்துக்காட்டாக இந்த நிகழ்ச்சி நடைபெற்று வருகிறது. உங்கள் கடமையை நீங்கள் செய்தால், அதற்கான பாராட்டும் பலனும் உங்களை தேடி வந்து சேரும். அதற்கு எடுத்துக்காட்டுதான் இந்த விழா.

பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் இருந்தே நம்முடைய சென்னை காவல்துறை மிகச் சிறப்பான காவல் துறையாக இருந்து வந்தாலும், 1970-ஆம் ஆண்டு காவல்துறையை நவீனமயம் ஆக்கியவர், அந்தப் பணியை மிகச் சிறப்பாக செய்தவர் அன்றைய முதலமைச்சராக இருந்த முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான். இதை தமிழ்நாடு காவல்துறை ஐ.ஜி.-ஆக அந்தக் காலத்தில் இருந்த மரியாதைக்குரிய எப்.வி. அருள் அவர்களே குறிப்பிட்டுச் சொல்லியிருக்கிறார்.

காவல்துறையை நவீனப்படுத்துவதற்காக இந்தியாவிலேயே முதல் காவல் ஆணையத்தை அமைத்தவர் முதலமைச்சர் கலைஞர் அவர்கள். அதன் பிறகுதான், ஒன்றிய அளவில் காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகள் தொடங்கியது. இரண்டாவது - மூன்றாவது காவல் ஆணையத்தையும் கலைஞர் அவர்கள்தான் அமைத்தார். ஐந்தாவது காவல் ஆணையத்தை சென்னை உயர் நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதியரசர் சி.டி. செல்வம் தலைமையில் திராவிட மாடல் அரசு அமைத்திருக்கிறது. மக்களைப் பாதுகாக்கும் காவலர்களை பாதுகாக்க வேண்டியது அரசின் கடமை!

அந்த அடிப்படையில்தான், இந்த ஆணையத்தை அமைத்து காவலர்கள் கோரிக்கைகளை நிறைவேற்றிக் கொடுத்து வருகிறோம். காவல்துறையை மேலும் நவீனமயமாக்கி வருகிறோம். கடந்த மூன்றாண்டு காலத்தில் காவல் துறையின் உட்கட்டமைப்பை வலுப்படுத்தவும், காவல் துறையை நவீனமயமாக்கவும், காவலர் நலனைப் பாதுகாக்கவும் பல்வேறு சாதனைகள் செய்யப்பட்டுக் கொண்டிருக்கிறது.

காவல்துறையில் முதன்முதலாக மகளிரை இடம்பெறச் செய்தது தலைவர் கலைஞர் அவர்கள்தான். இன்று எனக்கு அளிக்கப்பட்ட அணிவகுப்பு மரியாதை கமாண்டாராக ஒரு பெண் அதிகாரி இருந்து அந்த காட்சியை நீங்கள் பார்த்தீர்கள். அது எனக்கு மிகவும் இரட்டிப்பு மகிழ்ச்சியாக இருக்கிறது. மகளிர் பொன்விழா ஆண்டான இப்போது, மகளிர் காவலர்களிடையே நீண்ட நாட்களாக இருக்கும் ஒரு கோரிக்கையை மிகுந்த மகிழ்ச்சியோடும் மனைநிறைவோடும், இந்த நிகழ்ச்சியில் அறிவிப்பாக நான் வெளியிட விரும்புகிறேன்.

தமிழ்நாடு காவல்துறையில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு ஒரு ஆண்டு மகப்பேறு விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறை முடிந்து, அவர்கள் பணிக்கு திரும்பும்போது அவர்கள் குழந்தைகளை பராமரிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுவது தொடர்பாக தொடர்ந்து அவர்கள் கோரிக்கை வைத்து வருகிறார்கள்.

அவர்கள் கோரிக்கையை ஏற்று, மகப்பேறு விடுமுறையில் இருந்து பணிக்குத் திரும்பும் பெண் காவலர்களுக்கு, அவர்கள் பணிமூப்புக்கு விலக்களித்து, அவர்களுடைய பெற்றோர்களோ அல்லது கணவர் வீட்டைச் சார்ந்தவர்களோ வசிக்கும் மாவட்டங்களுக்கு அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு பணிமாறுதல் வழங்க அரசு முடிவு செய்திருக்கிறது என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், பெண்கள் மற்றும் குழந்தைகளை பாதிக்கும் குற்றச்செயல் பிரச்சனைகளை தீர்ப்பதில் நம்முடைய பெண்காவலர்கள் மிக முக்கிய பங்காற்றுகிறார்கள். எனவே, இப்படிப்பட்ட குற்றங்களை கையாளுவதில் பெண் காவலர்களின் தொழில்முறைத் திறன்களை மேலும் மேம்படுத்தும் வகையில், பெண் கடத்தல் குற்றங்கள், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கு எதிரான சைபர் குற்றங்களை விசாரித்து தீர்ப்பதற்கு அவர்களுக்கு சிறப்புத் திறன் பயிற்சி அளிக்கப்படும்.

உங்களுக்கு இருக்கும் கடமையும், பொறுப்பும் மிக மிகப் பெரியது. மக்களைக் காப்பாற்றுவது உங்கள் கடமை! மக்களை பாதுகாப்பது உங்கள் பொறுப்பு! அதை எந்தக் குறையும் இல்லாமல் நீங்கள் நிறைவேற்றி தாருங்கள் என்பதுதான் என்னுடைய வேண்டுகோள்.

குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டும் இல்லாமல், குற்றங்கள் நடப்பதற்கு முன்பே தடுக்கும் துறையாக செயல்பட வேண்டும் என்று நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டு வருகிறேன். குற்றங்கள் நடக்காத மாநிலமாக - போதைப் பொருள் நடமாட்டம் இல்லாத மாநிலமாக - பாலியல் குற்றம் இல்லாத மாநிலமாக - நம்முடைய மாநிலம் உருவாக வேண்டும்.

குற்றங்கள் எங்கேயும் யாராலும் நடக்கக் கூடாது. மீறி நடந்தால், உடனடியாக குற்றவாளி கைது செய்யப்பட்டாக வேண்டும். சட்டத்தின் முன் நிறுத்தப்பட்டு விரைவாக தண்டனையை பெற்றுத் தந்தாக வேண்டும். இந்த உறுதிமொழியை நான் மட்டும் எடுத்தால் போதாது - காவல்துறையின் உயரதிகாரிகள் மட்டும் எடுத்தால் போதாது - ஒவ்வொரு காவலரும் எடுத்தாக வேண்டும். "என்னுடைய காவல் எல்லைக்கு உட்பட்ட பகுதியில் எந்த வகைப்பட்ட குற்றமும் நடக்கவில்லை - நடக்க விடமாட்டேன்" என்று ஒரு காவலர் முடிவெடுத்துவிட்டால் குற்றங்கள் பூஜ்ஜியத்திற்கு வந்துவிடும்.

மனித வளர்ச்சியின் அனைத்துக் குறியீடுகளிலும் முன்னணி மாநிலமாக இருக்கும் தமிழ்நாடு - குற்றச் சம்பவங்களில் பூஜ்ஜியமாக இருந்தால்தான், நமக்கெல்லாம் பெருமை. இதில் பூஜ்ஜியம் வாங்க - 100 விழுக்காடு அர்ப்பணிப்புடன், அனைத்துக் காவலர்களும் பணியாற்ற வேண்டும் என்று கேட்டு, விருது பெற்ற அனைவரையும் பாராட்டி, மகிழ்ந்து வணக்கம் சொல்லி, விடைபெறுகிறேன்.

Also Read: தொழிலாளர்கள் நலனில் அக்கறை செலுத்தும் திராவிட மாடல்! : தமிழ்நாடு அரசு புகழாரம்!