M K Stalin
3 துறைகள்.. 2000க்கும் மேற்பட்டோர்.. ஒரே நாளில் பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர்!
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் (TNPSC) வழி நடத்தப்பட்ட தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்ற 2,000க்கும் மேற்பட்டோருக்கு, இன்று பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இதன் வழி, நிதித்துறையில் 537 பேருக்கும், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையில் 1474 பேருக்கும், இந்து சமய அறநிலையத்துறையில் 172 பேருக்கும் பணி நியமன ஆணை வழங்கப்பட்டது.
நிதித்துறை
நிதித்துறையின் கட்டுப்பாட்டில் செயல்படும் கருவூலக் கணக்குத் துறையில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கணக்கர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
கருவூலக் கணக்குத் துறையில் தமிழ்நாடு அரசு பணியாளர்களுக்கு சம்பளம் மற்றும் ஓய்வூதியம் பட்டுவாடா செய்தல், வரவு - செலவு விபரங்களை ஒப்பாய்வு செய்து கணக்குகளை மாநிலக் கணக்காயருக்கு ஒப்படைப்பு செய்தல், அரசின் வைப்பு கணக்குகளை கையாளுதல் மற்றும் முத்திரைத்தாள் விநியோகம் உள்ளிட்ட பணிகளை மேற்கொண்டு வருகிறது.
இத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த கருவூலக் கணக்குத் துறையின் பணிகள் தொய்வின்றி நடைபெற காலிப் பணியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகிறது.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையிலான அரசு பொறுப்பேற்றதிலிருந்து, இதுநாள் வரை, கருவூலக் கணக்குத் துறையில் 16 கணக்கு அலுவலர், 118 இளநிலை உதவியாளர், 57 தட்டச்சர் மற்றும் ஒரு சுருக்கெழுத்து தட்டச்சர், என மொத்தம் 192 பணியிடங்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதன் தொடர்ச்சியாக, தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் கணக்கர் பணியிடங்களுக்கு தெரிவு செய்யப்பட்ட 537 நபர்களுக்கும், கருவூலக் கணக்குத் துறையில் பணிபுரிந்து பணிக்காலத்தில் காலமான பணியாளர்களின் 10 வாரிசுதாரர்களுக்கு கருணை அடிப்படையிலும், பணி நியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் இன்று 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
புதிதாக நியமனம் பெற்றுள்ள பணியாளர்களுக்கு சிறப்பாக பணிபுரியும் பொருட்டு முழுமையான பயிற்சிகள் வழங்கவும் விரிவான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை
தமிழ்நாட்டு மக்களுக்கு உயர்தர மருத்துவ வசதிகள் கிடைத்திட, புதிய அரசு மருத்துவமனைகள், ஆரம்ப சுகாதார நிலையங்களை கட்டுதல், மருத்துவமனைகளின் உட்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல், மருத்துவக் கருவிகளை நிறுவுதல், காலிப் பணியிடங்களை நிரப்புதல், அனைவருக்கும் நலவாழ்வு என்கிற உயரிய நோக்கினை செயல்படுத்தும் வகையில் “மக்களைத் தேடி மருத்துவம்” சாலை விபத்துக்களில் உயிரிழப்புகளை தடுக்கும் வகையில் “இன்னுயிர் காப்போம்-நம்மைக் காக்கும்-48”, சுகாதார நடைபாதை திட்டம் போன்ற பல்வேறு திட்டங்களை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வாயிலாக தமிழ்நாடு அரசு செயல்படுத்தி வருகிறது.
முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற மே 2021 முதல் இதுநாள் வரை மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் மருத்துவப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 1947 உதவி மருத்துவர்கள், 1291 இதர மருத்துவம் சார்ந்த பணியாளர்கள் பணி நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
அதேபோன்று தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக 628 இளநிலை உதவியாளர், 158 தட்டச்சர், 220 சுருக்கெழுத்து-தட்டச்சர், 12 சுகாதார அலுவலர், 30 கணிணி இயக்குபவர் மற்றும் தடுப்பூசி பண்டக காப்பாளர், 5 கணினி இயக்குபவர், 1 புள்ளி விவர தொகுப்பாளர், 1 மக்கள் திரள் பேட்டியாளர் என்று மொத்தம் 4293 பணியிடங்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
946 மருந்தாளுநர்கள் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்
மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் அலகின் கீழ் செயல்படும் இயக்ககங்களில் காலியாகவுள்ள 946 மருந்தாளுநர்கள் பணியிடங்களுக்கான தேவைப் பட்டியல் மருத்துவ பணியாளர் தேர்வு வாரியத்திற்கு அனுப்பப்பட்டு அதன் மூலம் தேர்ந்தெடுக்கப்பட்ட மருந்தாளுநர்களுக்கு அரசின் அறிவுறுத்தலின்படி உரிய கலந்தாய்வு 13.08.2024 அன்று நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வின் மூலம் அவர்கள் விரும்பிய இடங்கள் தேர்ந்தெடுத்து அதன்மூலம் 946 மருந்தாளுநர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் 3 நபர்களுக்கு பணிநியமன ஆணைகளை வழங்கினார்.
523 உதவியாளர் பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்
மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறையின் சார்பில் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் 2018-19 முதல் 2022-23 வரையிலான காலத்திற்கான காலி பணியிட மதிப்பீட்டு அறிவிப்பின்படி தெரிவு செய்யப்பட்ட 523 உதவியாளர் பணியிடத்திற்கு 17.08.2024 அன்று கலந்தாய்வு நடத்தப்பட்டது. அக்கலந்தாய்வு மூலம் அவர்கள் விரும்பிய இடங்கள் தேர்ந்தெடுத்து பணிநியமனம் செய்யப்பட்ட 523 உதவியாளர்களுக்கு பணிநியமன ஆணைகள் வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர் அவர்கள் 3 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார்.
5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்கள் (Vocational Counsellor) பணியிடத்திற்கு தெரிவு செய்யப்பட்ட நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்குதல்
கல்வி, வாழ்க்கைத் தொழில், தனியர் தொடர்பான பல்வேறு பிரச்சனைகளுக்கு ஆலோசனையும், வழிகாட்டுதல்களையும் வழங்குதல், பள்ளி, கல்லூரிகளில் உள்ள தொழில் வழிகாட்டி ஆசிரியர்களுடன் ஒருங்கிணைந்து செயலாற்றுதல், வழிகாட்டப்பட வேண்டியவர்களின் நுண்ணறிவு, உளச்சார்பு, ஈடுபாடு மற்றும் ஆளுமை குணங்கள் ஆகியவற்றினை கணிக்கும் உளவியல் தேர்வினை நடத்துதல் போன்ற பணிகளை மேற்கொள்ள தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் வாயிலாக தெரிவு செய்யப்பட்ட 5 தொழில் வழிகாட்டி ஆலோசகர்களுக்கு (Vocational Counsellor) பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக முதலமைச்சர், ஒரு ஆலோசகருக்கு பணி நியமன ஆணையினை வழங்கினார்.
ஆலோசகர் பணியிடத்திற்கு உளவியல் முதுகலை பட்டம் / வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் முதுநிலை பட்டயம் / வழிகாட்டுதல் மற்றும் ஆலோசனையில் பட்டயப்படிப்பு படித்தவர்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இப்புதிய ஆலோசகர்கள் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகள் மற்றும் அரசு புனர்வாழ்வு மற்றும் மருத்துவ நிலையத்தில் பணிபுரிவர்.
இந்து சமய அறநிலையத்துறை
இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கினார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகக் கட்டுப்பாட்டிலுள்ள திருக்கோயில்களை முறையாக பராமரித்தல், சொத்துகளை பாதுகாத்தல் மற்றும் நிர்வகிக்கும் பணிகளை மேற்கொண்டு வரும் செயல் அலுவலர் பணியிடங்களும், துறையின் அமைச்சுப்பணியில் அவ்வப்போது ஏற்படும் காலிப் பணியிடங்களும் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் நிரப்பப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், முதலமைச்சர் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் செயல் அலுவலர் (நிலை-1, நிலை-3 மற்றும் நிலை-4) பணியிடங்களுக்கு தேர்வு செய்யப்பட்ட 169 நபர்களுக்கும், இளநிலை உதவியாளர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 80 நபர்களுக்கும், தட்டச்சர் பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 101 நபர்களுக்கும் மற்றும் சுருக்கெழுத்து தட்டச்சர் (நிலை-3) பணியிடத்திற்கு தேர்வு செய்யப்பட்ட 31 நபர்களுக்கும், என மொத்தம் 381 நபர்களுக்கு ஏற்கனவே பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது.
மேலும், கருணை அடிப்படையில் துறையில் இளநிலை உதவியாளர், அலுவலக உதவியாளர் மற்றும் இரவுக் காவலர் ஆகிய பணியிடங்களுக்கு 29 நபர்களுக்கும், திருக்கோயில்கள் சார்பில் 111 நபர்களுக்கும் பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
இந்து சமய அறநிலையத்துறையில் பதவி உயர்வு வழங்கப்படாமல் நீண்டகாலமாக நிலுவையில் இருந்த 713 அலுவலர்கள் மற்றும் பணியாளர்களுக்கு பதவி உயர்வு வழங்கப்பட்டதோடு, திருக்கோயில்களில் தொடர்ந்து 5 ஆண்டுகள் தற்காலிகமாக பணிபுரிந்த 1,289 பணியாளர்கள் பணிவரன்முறை செய்யப்பட்டுள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, இந்து சமய அறநிலையத்துறையின் அமைச்சுப்பணியில் உதவியாளர் பணியிடத்திற்கு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் தேர்வு செய்யப்பட்ட 172 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை வழங்கிடும் அடையாளமாக 10 நபர்களுக்கு பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் இன்று வழங்கினார்.
முதலமைச்சரால் இன்று 172 உதவியாளர் பணியிடத்திற்கு வழங்கப்பட்ட பணிநியமன ஆணைகளையும் சேர்த்து கடந்த மூன்று ஆண்டுகளில் இந்து சமய அறநிலையத் துறை சார்பில் மொத்தம் 693 நபர்களுக்கு பணி நியமன ஆணைகள் வழங்கப்பட்டுள்ளன.
Also Read
-
“அகப்பட்டுக் கொண்டார் அதானி - பிரதமர் மோடி மவுனம் சாதிப்பது ஏன்?” : மோடியை வெளுத்து வாங்கிய முரசொலி!
-
”மொழியையும், கலையையும் காக்க வேண்டும்!” : முத்தமிழ்ப் பேரவையின் பொன்விழா - முதலமைச்சர் உரை!
-
“திட்டமிட்டு பழிவாங்கும் போக்கை ஆளுநர் ஆர்.என்.ரவி கைவிட வேண்டும்!” : தொல். திருமாவளவன் கண்டனம்!
-
அதிகாரிகளுக்கு ரூ. 2,200 கோடி லஞ்சம்! : நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் வைகோ உரை!
-
இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் 75-ம் ஆண்டு விழா : மாணவர்களுக்கு போட்டி - முதலமைச்சர் உத்தரவு!