M K Stalin
“முரசொலியில் பதிவான செய்திகள் இந்த மண்ணின் அரசியல்!” - முதலமைச்சர் புகழாரம் !
முரசொலியின் இன்றைய செய்தி தமிழ்நாட்டின் நாளைய வரலாறு!
நம் உயிருடன் கலந்திருக்கும் தலைவர் கலைஞரின் அன்பு உடன்பிறப்புகளுக்கு உங்களில் ஒருவன் எழுதும் வாழ்த்துக் கடிதம்.
இந்த வாழ்த்து, நம் உயிர்நிகர் தலைவர் கலைஞரின் உடன்பிறப்புகளான நாம் அனைவரும் முத்தமிழறிஞரின் மூத்த பிள்ளையாம் முரசொலிக்குத் தெரிவிக்கின்ற வாழ்த்தாகும். ஆகஸ்ட் 10, நம் கொள்கை ஆயுதமாகத் திகழும் முரசொலியின் பிறந்தநாள்.
பள்ளி மாணவனாக இருந்த காலத்திலயே தன் சிந்தனைத் தீப்பொறிகளை எழுதுகோல் தூரிகையால் எழுத்தோவியமாக்கி ‘மாணவநேசன்‘ என்ற கையெழுத்துப் பத்திரிகையை நடத்திய நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் அவர்கள், பள்ளி இறுதித் தேர்வு முடித்து, தனது 18 வயதில் 10-8-1942-இல் முரசொலி எனும் அச்சிடப்பட்ட இதழைத் தொடங்கி அதில் ‘சேரன்‘ என்ற பெயரில் சிந்தனையைத் தூண்டும் படைப்புகளை வழங்கி வந்தார். இந்திய விடுதலைப் போராட்டத்தில் ஆகஸ்ட் புரட்சி என்று அழைக்கப்படுகிற வெள்ளையனே வெளியேறு இயக்கம் உத்தமர் காந்தியடிகளால் தொடங்கப்பட்ட அடுத்த இரண்டு நாட்களில், அதே 1942 ஆகஸ்ட் மாதம் 10-ஆம் நாளன்று, காலங்காலமாக இந்த சமுதாயத்தில் நிலவி வந்த அடிமைத்தனத்தையும் மூடநம்பிக்கைகளையும் வெளியேற்றி சுயமரியாதையும் பகுத்தறிவும் மிக்க, மானமும் அறிவும் நிறைந்த, இன உணர்வுமிக்கதாகத் தமிழ்ச் சமுதாயம் அமைந்திட வேண்டும் என்ற நோக்கத்துடன் திராவிடக் கொள்கையினால் கூர்தீட்டப்பட்ட போர்வாளாக வெளியானது முரசொலி.
திருவாரூரில் அதனை அச்சிட்டு, ஓடம்போக்கி ஆற்றுத் தண்ணீரைக் கடந்து அதனை ஊருக்குள் கொண்டு வருவதற்கு முத்தமிழறிஞர் கலைஞரும் அவரின் அன்பு நண்பர் தென்னனும் எத்தனை பாடுபட்டார்கள் என்பதையும், முரசொலியைத் தொடர்ந்து நடத்துவதற்காக தலைவர் கலைஞர் தன் அருமைத் துணைவியாரின் நகைகளை அடமானம் வைத்து இடர்பாடுகளை எதிர்கொண்டதையும் நெஞ்சுக்கு நீதியின் முதல் பாகத்தினைப் படித்தால் தெளிவாக அறிந்திட முடியும்.
தந்தை பெரியாரின் நேரடி மாணவராக ஈரோடு குடிஅரசு அலுவலகத்தில் தலைவர் கலைஞர் பெற்ற பயிற்சி, முரசொலியை மேலும் செம்மையான முறையிலே வெளியிடுவதற்கான அனுபவத்தையும் ஆற்றலையும் அவருக்கு வழங்கியது. முரசொலியின் தொடக்கக்கட்டத்தில் ‘பெரியார் ஆண்டு’ என்று காலவரிசைக் கணக்கை நம் உயிர்நிகர் தலைவர் கடைப்பிடித்ததிலிருந்து அவருடைய கொள்கை உணர்வையும் தலைமை மீது கொண்டிருந்த பற்றினையும் அறிந்துகொள்ளலாம்.
முதலில் துண்டறிக்கையாகவும், பின்னர் வார ஏடாகவும், அதன்பின் நாளேடாகவும் தன் மூத்த பிள்ளையான முரசொலியைக் கண்ணும் கருத்துமாக வளர்த்தெடுத்து, திராவிட இயக்கத்தின் கொள்கை முரசமாக மட்டுமின்றி, இதழியலில் ஒரு புரட்சியையே நடத்திக் காட்டியவர் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய கனல் தெறிக்கும் எழுத்துகள், கற்கண்டு சுவை கொண்ட இலக்கியப் படைப்புகள், மின்னல் கீற்றுப் போன்ற கேள்வி - பதில்கள், நூறு சொற்களால் சொல்ல வேண்டியதை ஒரு சில கோடுகளால் தெளிவாக விளக்கும் கருத்துப் படங்கள், கலையுலகச் செய்திகள் என ஒரு பத்திரிகைக்குரிய அத்தனை பகுதிகளையும் ஓர் இயக்கத்தின் இதழ் முழுமையாகவும் சுவையாகவும் கொடுத்ததென்றால் அது கலைஞரின் முரசொலிதான். பெரியாரின் குடிஅரசு, பேரறிஞர் அண்ணாவின் திராவிடநாடு ஆகியவற்றில் தன் படைப்புகளைப் பதிவு செய்த முத்தமிழறிஞர் கலைஞர், தன் தலைவர்களிடம் கற்றுக் கொண்டதைத் தொண்டர்களிடம் தெளிவாக எடுத்துரைக்கும் ஏடாக முரசொலியை அரும்பாடு பட்டுத் தொடர்ந்து நடத்தினார்.
கழகத்தின் தலைவராக, தமிழ்நாட்டின் முதலமைச்சராக, இந்திய அரசியலில் முதன்மைப் பங்கு வகித்தவராக முத்தமிழறிஞர் கலைஞர் இருந்தபோதும் அவர் முரசொலி நாளேட்டின் மூத்த பத்திரிகையாளர் என்ற அடையாளத்தைக் கைவிடவேயில்லை. ‘இன்றைய செய்தி-நாளைய வரலாறு’ என்று முரசொலியின் முகப்பில் இருக்கின்ற வரிகளைப் போல, தமிழ்நாட்டின் 80 ஆண்டுகால வரலாற்றை அறிந்துகொள்ள நினைப்பவர்களும், திராவிட இயக்கத்தின் வளர்ச்சியையும் சாதனைகளையும் ஆய்வு செய்ய முயல்பவர்களும் முரசொலியைத் தவிர்க்கவே முடியாது என்கிற வகையில் தலைவர் கலைஞரின் கைவண்ணத்தில் அது மின்னி மிளிர்ந்தது. முரசொலியில் பதிவான செய்திகள் ஒவ்வொன்றும் இந்த மண்ணின் அரசியல் - சமுதாய வரலாற்று ஆவணங்களாகும்.
நெருக்கடி நிலைக் காலத்தில் ஆயிரக்கணக்கான கழகத்தினருடன் தலைவர் கலைஞரின் மகனான நானும் கைது செய்யப்பட்டு ஓராண்டு காலம் சிறைப்பட்டிருந்த நேரத்தில், கலைஞருக்குத் துணையாக, தூணாக, கருத்துரிமை ஆயுதமாக இருந்தது அவரது மூத்த பிள்ளையான முரசொலிதான். நாங்கள் சிறைக்காவலர்களால் சித்திரவதைகளை எதிர்கொண்டோம். முரசொலி தணிக்கை எனும் சென்சாரால் சித்திரவதைக்குள்ளானது. ஆனாலும், கலைஞர் எனும் முழுமையான பத்திரிகையாளரின் நுணுக்கமான எழுத்தாற்றல் அதில் வெளிப்பட்டது. தன் உடன்பிறப்புகளிடம் அவர் சொல்ல வேண்டிய செய்திகளை முரசொலி தாங்கிச் சென்றது.
இப்போது போல அப்போது தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறவில்லை. செல்போன்கள் இல்லாத காலம். சமூக வலைத்தளங்கள், வாட்ஸ்அப் குரூப்கள், யூ-டியூப் எதுவும் இல்லாத காலத்தில் முரசொலிதான் நம் உயிர்நிகர் தலைவர் கலைஞருக்கும் அவருடைய உயிரினும் மேலான உடன்பிறப்புகளுக்கும் தகவல் தொழில்நுட்ப சாதனமாக இருந்தது. ஒரு பெட்டிச் செய்தியில் ஓராயிரம் உணர்வுகளை உள்ளடக்கி அதனை உடன்பிறப்புகளின் மனதில் பதிய வைத்ததில் கலைஞரின் முரசொலிக்கு முதன்மையான பங்கு உண்டு. தமிழ்நாட்டின் தலைநகரான சென்னை முதல் கடைக்கோடி கிராமம் வரை கழகப் படிப்பகங்களில், சிறிய தேநீர்க் கடைகளில், முடிதிருத்தும் நிலையங்களில், சலவையகங்களில் எளிய மக்களும் முரசொலியைப் படித்தனர். கழகத்திற்கு எதிரான வன்மப் பரப்புரைகளை அன்றைய ஊடகங்கள் திட்டமிட்டுச் செய்துகொண்டிருந்த நிலையில், உண்மை நிலையைத் தொண்டர்கள் உணர்ந்துகொள்ள முரசொலி மட்டுமே இருந்தது. அது one man army என்பது போல திறம்படத் தன் பங்கினை ஆற்றியது.
தலைவர் கலைஞர் எழுதிய உடன்பிறப்புக் கடிதங்கள் அரசியல் இலக்கியங்களாகத் திகழ்ந்தன. ஒரு பத்திரிகையாளராகத் தன் வாசகர்களுடனும், ஒரு தலைவராகத் தன் தொண்டர்களுடனும் முரசொலியில் வெளியான கடிதங்கள் வாயிலாக அன்றாடம் உரையாடினார் முத்தமிழறிஞர் கலைஞர். அவருடைய கடிதத்தைப் படிக்கின்ற உடன்பிறப்புகளுக்கு, தலைவர் கலைஞரின் கரகரப்பான அந்த கம்பீரத் தமிழ்க் குரல் மனதில் ஒலிக்கும்.
முரசொலியை வளர்த்தெடுப்பதில் தலைவர் கலைஞருக்கு உற்றதுணையாக இருந்ததில், அவருடைய மனசாட்சியாகத் திகழ்ந்து, முரசொலி என்பதையே தன் பெயரில் முதன்மையாகக் கொண்டவரான முன்னாள் ஒன்றிய அமைச்சர் திராவிட சிந்தனையாளர் முரசொலி மாறன் அவர்களுக்கும், அவரது இளவல் முரசொலி செல்வம் அவர்களுக்கும் பெரும் பங்கு உண்டு. இருவரும் அதன் ஆசிரியர்களாக இருந்து பல சோதனையான காலக்கட்டங்களிலும் முரசொலி தொய்வின்றித் தொடரத் துணை நின்றது முரசொலியின் இதழியல் வரலாற்றுப் பக்கங்களில் நிறைந்திருக்கிறது.
முரசொலிக்குப் பெரும் வாசகர் வட்டம் உள்ளது போலவே முரசொலியில் உருவான படைப்பாளர்கள் எண்ணிக்கையும் ஏராளம். கட்டுரையாளர்கள், கவிஞர்கள், எழுத்தாளர்கள், ஓவியர்கள், செய்தியாளர்கள், ஆய்வாளர்கள் எனப் படைப்புலகின் பல்வேறு பரிமாணங்களைக் கொண்டவர்களுக்கும் தாயாக இருந்தது கலைஞரின் மூத்த பிள்ளையான முரசொலி. மற்றவர்களுக்குத் தாய் என்றால் எனக்கு முரசொலி மூத்த அண்ணனன்றோ!
நானும் என் உடன்பிறந்த சகோதரர்களும் இளம் வயதில் முரசொலி அலுவலகத்தில், பேப்பர் கட்டுகளைப் பார்சல் செய்து உரிய நேரத்தில் வெளியூர்களுக்கு அனுப்புகின்ற வேலையைச் செய்வோம். என் மூத்த அண்ணன் மீது எனக்கு ஏற்பட்ட பாசத்தினால், ஒரு கட்டத்தில் முரசொலியின் செய்தியாளனாகவும் ஆகிவிட்டேன். நம் உயிர்நிகர் தலைவர் கலைஞர் உள்ளிட்ட கழக முன்னோடிகளின் மேடைப் பேச்சுகளை டேப்ரெகார்டரில் பதிவு செய்து, பின்னர் அந்த கேசட்டுகளைச் சுழல விட்டு, வார்த்தைக்கு வார்த்தை அப்படியே தாளில் எழுதி, ஆசிரியர் குழுவினருடன் இணைந்து அது சரிபார்க்கப்பட்டு, உரிய அளவில் அச்சிடப்பட்டு வாசகர்களிடம் சென்று சேர்ந்தபோது எனக்கு அளவற்ற மகிழ்வைத் தந்தது. வெளியூர்களிலிருந்து கழக நிர்வாகிகள் அனுப்புகின்ற இயக்கச் செய்திகளை நான் தொகுத்து எழுத, ‘தினப்பலன்’ என்ற தலைப்பில் அது தொடர்ந்து வெளியாகி வந்தது.
தலைவர் கலைஞரின் உயிரனைய உடன்பிறப்புகளாம் உங்களிடம், உங்களைப் போன்ற உடன்பிறப்பான என் உள்ளத்து உணர்வுகளைப் பகிர்ந்து கொள்ளும் வகையில் நான் எழுதுகிற இந்த ‘உங்களில் ஒருவன்’ கடிதத்தை உங்கள் கரங்களில் கொண்டு வந்து சேர்ப்பதும் தலைவர் கலைஞர் தாயாக இருந்து வளர்த்தெடுத்த மூத்த பிள்ளையும் என் மூத்த அண்ணனுமான முரசொலிதானே!
முக்கால் நூற்றாண்டு கடந்து, பவள விழா ஆண்டில் வெற்றிநடை போடுகிற திராவிட முன்னேற்றக் கழகத்தின் இன்றைய இளைய தலைமுறையினர், திராவிட இயக்கத்தின் வரலாற்றையும், கழகத்தினர் கண்ட போராட்டக் களங்களையும், அவர்கள் செய்த தியாகங்களையும், அதனால் ஏற்பட்ட சமுதாய மாற்றங்களையும், கழக அரசின் சாதனைத் திட்டங்களையும் எளிதாகப் படித்துப் புரிந்துகொள்ளும் வகையில் கழகத்தின் இளைஞரணிச் செயலாளர் தம்பி உதயநிதி அவர்களின் முயற்சியில் நாள்தோறும் வெளியாகும் பாசறைப் பக்கம் கருத்துகளின் கருவூலமாகத் திகழ்கிறது. திராவிட இயக்கத்திற்கான இளம் வாசகர்களையும் புதிய படைப்பாளர்களையும் உருவாக்கும் இரட்டைப் பணியை முரசொலியின் பாசறைப் பக்கம் சிறப்பாகத் தொடர்ந்து கொண்டிருக்கிறது.
காலத்திற்கேற்ற தொழில்நுட்ப வளர்ச்சியுடன் தன்னை மெருகேற்றிக் கொண்டே வரும் முரசொலி, தமிழில் கணினித் தட்டச்சுக்கு மாறிய முன்னணி இதழ்களில் ஒன்றாகும். அதுவும், ஓர் இயக்கத்தின் சார்பில் வரக்கூடிய இதழ்களில் அச்சுக்கோர்ப்பு முறையிலிருந்து DTP என்கிற தொழில்நுட்பத்திற்குத் தன்னைத் தகவமைத்துக்கொண்ட முதல் நாளிதழ் முரசொலிதான். இன்று இணையதளத்தின் வழியாகவும், செயலி முறையிலும் முரசொலியைப் படிக்கின்ற தலைமுறை உருவாகியிருக்கிறது.
83-ஆம் ஆண்டில் அடியெடுத்து வைக்கும், தமிழினத்தைக் காக்கின்ற கொள்கை ஆயுதமான முரசொலியைக் கலைஞரின் உடன்பிறப்புகளான நாம் அனைவரும் கையில் ஏந்துவோம். அதனைப் படிப்போம். அதிகளவில் பகிர்வோம் – பரப்புவோம்! ‘வீழ்வது நாமாக இருப்பினும், வாழ்வது தமிழாக இருக்கட்டும்’ என்று முத்தமிழறிஞர் பொறித்த பொன்னெழுத்துகளுக்கேற்ப, போர்க்குணம் மிக்க திராவிட வீரர்களாக நாம் ஜனநாயகக் களத்தில் தீரமுடன் செயல்படுவதற்கான கருத்தாயுதமாகத் திகழும் முரசொலியை வாழ்த்துவோம்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?