M K Stalin
இனி மாணவர்களுக்கும் மாதம் ரூ.1000 - ‘தமிழ்ப் புதல்வன் திட்ட’த்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் !
அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவியருக்கு மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் புதுமைப் பெண் திட்டத்தைப் போல, அரசுப் பள்ளியில் பயின்று கல்லூரிக் கல்விக்குள் பயில வரும் மாணவர்க்கும் மாதம்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கும் "தமிழ்ப் புதல்வன் திட்டம்" வருகிற ஆகஸ்ட் மாதத்தில் இருந்து தொடங்கப்படும்” என்று மாண்புமிகு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.
அதற்கான ஏற்பாடுகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், தமிழ்ப் புதல்வன் திட்டத்தை செயல்படுத்த தமிழ்நாடு அரசு கடந்த ஜூலை மாதம் அரசாணை வெளியிட்டது. அதன்படி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள் முழுமையாக பயனடைவதற்கு இணையதளம் மூலம் விண்ணப்பிக்க ஏற்பாடு செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
மேலும் ஊக்கத் தொகை மாணவர்களின் வங்கி கணக்கிற்கு பரிமாற்றம் செய்த பின்னரும் அவர்களின் பதிவு செய்யப்பட்ட அலைபேசி எண்ணிற்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும் என்றும், வருமான உச்ச வரம்பு இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்தவொரு பாகுபாடும் இன்றி, 6ம் வகுப்பு முதல் 12ம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள், தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும்.
மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்று தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள் என அரசாணையில் கூறப்பட்டுள்ளது.
மேலும், தொலைதூர / அஞ்சல் வழியிலும், அங்கீகரிக்கப்படாத கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் ஊக்கத்தொகையை பெற இயலாது என்றும், பிற மாநிலங்களில் ஒன்றிய அரசின் கீழ் செயல்படும் IIT, NIT. IISER போன்ற தகைசால் கல்வி நிறுவனங்களில் பயிலும் அரசுப் பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ்வழிக் கல்வியில் பயின்ற மாணவர்களும் இத்திட்டத்தில் பயன்பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்திற்கான பணிகள் தொடர்ந்து நடைபெற்று வந்த நிலையில், இன்று இந்த மகத்தான திட்டத்தை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின். கோயம்புத்தூரில் நடைபெற்ற அரசு விழாவில், 6-ஆம் வகுப்பு முதல் 12-ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் பயின்று உயர்கல்வி பயிலும் மாணவர்களுக்கு மாதந்தோறும் ரூ.1000/- உதவித் தொகை வழங்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை தொடங்கி வைக்கும் விதமாக மாணவர்களுக்கு பற்று அட்டைகளை (Debit Card) வழங்கினார்.
’தமிழ்ப் புதல்வன் திட்ட’த்தின் கீழ் 3 லட்சத்து 28 ஆயிரம் கல்லூரி மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000 பெறுவர். இந்த திட்டம் மூலம் உயர்கல்வியில் சேரும் மாணவர்கள் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும்.
Also Read
-
’சமத்துவம் மலரட்டும்' : பள்ளி பெயர் பலகையில் இருந்த ‘அரிசன் காலனி’ என்பதை அழித்த அமைச்சர் அன்பில் மகேஸ்!
-
”மழையை எதிர்கொள்ள தமிழ்நாடு அரசு தயார்” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி!
-
ரூ.80 கோடி : 12,100 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கிய துணை முதலமைச்சர் உதயநிதி!
-
”உ.பி மக்களுக்கு நீதி வழங்க வேண்டும்” : துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்கு பிரியங்கா காந்தி கண்டனம்!
-
தமிழ்நாடு சட்டப்பேரவை டிசம்பர் 9ஆம் நாள் கூடுகிறது! : சபாநாயகர் அப்பாவு அறிவிப்பு!