M K Stalin

”நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இனி ஆட்சி செலுத்துவார்கள்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொல்வது என்ன?

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (2.08.2024) சென்னை, கோட்டூர்புரம், அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் நடைபெற்ற முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் அரசுப் பள்ளி மாணவர்களுக்கான பாராட்டு விழாவில் ஆற்றிய உரை:-

தாய்த் தமிழ்நாட்டிற்கு “தமிழ்நாடு” என்று பெயர் சூட்டிய பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்களுடைய பெயரால் அமைந்திருக்கின்ற இந்த நூலக அரங்கத்தில் தமிழ்நாட்டின் அறிவுச் சொத்துக்களாக விளங்கும் மாணவக் கண்மணிகளை பாராட்ட வந்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் நான் அடைந்து கொண்டிருக்கிறேன்.

தமிழ்நாட்டு மாணவர்கள் அனைத்திலும் சிறந்தவர்களாக எப்போது உயர்வார்களோ என்று புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் ஏங்கினார். இப்போது அவர் நம்மிடையே இருந்திருந்தால் உங்களை எல்லாம் பார்த்து...

“என்னரும் மாணவச் செல்வங்களே, ஓங்கிடும் கீர்த்தி எய்தி விட்டீர்கள்” என்று பாராட்டி மகிழ்ந்திருப்பார். இப்படிப்பட்ட உயர்வை அடைந்திருக்கின்ற மாணவ - மாணவியர் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துகளை நானும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்!

மாணவர்கள் உயர்ந்தால் அந்தப் பெருமை, ஆசிரியப் பெருமக்களுக்கு உண்டு! குழந்தைகள் உயர்ந்தால், அந்தப் பெருமை பெற்றோருக்கு உண்டு!

எனவே, உங்களுக்கு உறுதுணையாக இருந்தால், ஆசிரியர்களையும், பெற்றோர்களையும் நான் மனதார வாழ்த்துகிறேன். பள்ளிக்கல்வித் துறையின் முன்னெடுப்பு இல்லாமல் இந்த சாதனையை நாம் அடைந்திருக்க முடியாது.

இந்தத் துறையின் அமைச்சர், நான் பார்த்து வளர்ந்த பிள்ளை தம்பி அன்பில் மகேஸ் பொய்யாமொழிக்கும், துறை அதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுக்களை நான் முதலில் தெரிவித்துக் கொள்கிறேன்.

இன்னொரு முக்கியமான விஷயம், இங்கே பேசுகிறபோது தம்பி மகேஷ் சொன்னார். 54 மாற்றுத்திறனாளி மாணவர்கள் முதன்மை உயர் நிறுவனங்களில் சேர்ந்திருக்கிறார்கள் என்று சொன்னார். அதற்காக அந்தத் துறையின் அமைச்சர் என்கின்ற முறையில் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.

நீங்கள் செய்திருப்பது உங்களுடைய வேலை இல்லை – சேவை அது! எதிர்காலக் கல்விச் சொத்துக்களை உருவாக்கி இந்த சமூகத்துக்கும், நாட்டிற்கும் கொடுத்திருக்கிறீர்கள். உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கின்ற பொழுது மாணவர்களுடைய அறிவாற்றல், நாளைய தினம் தமிழ்நாட்டுக்கு மட்டுமில்லை, இந்தியாவுக்கு மட்டுமில்லை, உலகுக்கே பயன் தரப்போகிறது!

அந்த வகையில், உலகின் அறிவுச் சொத்துக்களான இந்த மாணவர்களை பார்க்கும்போது எனக்கு உள்ளபடி பெருமையாக இருக்கிறது. ஏறத்தாழ, 10 ஆண்டுகளுக்குப் பிறகு நம்முடைய அரசுப் பள்ளிக் குழந்தைகள், இந்தியாவின் முதன்மையான உயர்கல்வி நிறுவனங்களுக்கு நாம் ஆட்சிக்கு வந்த இந்த மூன்று ஆண்டுகளில் சாரை சாரையாக படிக்கப் போகிறார்கள்.

2022-ஆம் ஆண்டு 75 மாணவர்கள்! 2023-ஆம் ஆண்டு 274-ஆக ஆனது. இந்த ஆண்டு, அது மேலும் இரண்டு மடங்காகி, 447 மாணவர்கள் இதுவரை தேர்ந்தெடுக்கப்பட்டு இருக்கிறார்கள்.

இன்னமும் பல நிறுவனங்களில் சேர்க்கை நடத்தி முடிக்கவில்லை. அதனால், இந்த எண்ணிக்கை இன்னும் தினமும் ஏறிக்கொண்டே இருக்கிறது. நான் தொடங்கி வைத்த “மாடல் ஸ்கூல்ஸ்”-ல் தொடங்கிய இந்தப் பயணம், இன்றைக்கு தமிழ்நாட்டின் அனைத்து அரசுப் பள்ளிகளுக்கும் விரிவடைந்திருக்கிறது.

நம்முடைய திராவிட மாடல் அரசு அமைந்த பிறகு அனைத்துத் துறைகளுமே மலர்ச்சி அடைந்திருக்கிறது. அதிலும், கல்வித் துறை மறுமலர்ச்சி அடைந்திருக்கிறது.

உயர்கல்வி மாணவர் சேர்க்கையில் தமிழ்நாடுதான் இந்தியாவிலேயே நம்பர் ஒன்! நாம் தொடங்கிய புரட்சிகரமான புதுமைப்பெண் திட்டத்தின் பயனாக, கல்லூரியில் சேருகின்ற மாணவியர் எண்ணிக்கை 34 விழுக்காடு உயர்ந்திருக்கிறது!

ஏராளமானவர்களுக்கு உயர்கல்வி நிறுவனங்களில் இடம் கிடைத்தது. இதற்கெல்லாம் அடித்தளம் அமைத்தது கல்வித்துறையின் செயல்பாடுகள்! அதில் முக்கியமானது, இந்தக் காலச்சூழலுக்கு ஏற்ப டெக்னாலஜியை யூஸ் செய்து கற்பிக்கும் முறையை நவீனமாக்கியது. எடுத்துக்காட்டிற்கு சொல்ல வேண்டும் என்றால்,

* ஒவ்வொரு ஸ்கூலிலும் Hi-tech Labs, மேம்படுத்தப்பட்ட சிலபசையும், மாடல் கொஸ்ட்டின் பேப்பர்களையும், அனிமேஷனில் விளக்குவது, நான் முதல்வன் வெப்சைட்டில் கடந்த 10 ஆண்டு வினாத்தாள்களை வெளியிட்டது, அதையெல்லாம் மணற்கேணி App-லிலும் வெளியிட்டு இருக்கிறது என்று பல்வேறு புதுமைகள் புகுத்தியிருக்கிறோம்!

இப்படி, திட்டமிட்ட செயல்பாடுகளின் விளைவாகதான், நம்முடைய மாணவர்கள் இன்றைக்கு நாட்டின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களில் படிக்கப் போகிறார்கள்.

முதன்மை உயர்கல்வி நிறுவனங்கள் என்றால் ஐ.ஐ.டி., என்.ஐ.டி மட்டுமல்ல! தேசிய சட்டப் பல்கலைக்கழகங்கள், விண்வெளி ஆராய்ச்சித் துறை என்று அனைத்துத் துறைகளிலும் முதன்மையாக விளங்குகின்ற உயர்கல்வி நிறுவனங்களில் நம்முடைய மாணவர்கள் சேர்ந்திருக்கிறார்கள். தமிழ்நாட்டு மாணவர்களின் வேகம் இந்திய நாட்டுடன் நிற்கவில்லை!

14 மாணவர்கள் தைவான், மலேசியா, ஜப்பான் ஆகிய நாடுகளில் உள்ள உலகின் சிறந்த பல்கலைக் கழகங்களில் சேர, முழுமையான ஸ்காலர்ஷிப் பெற்றிருக்கிறார்கள். இந்தியாவின் முதன்மை உயர்கல்வி நிறுவனங்களுக்குப் செல்கின்ற மாணவர்களுடைய கல்விச் செலவையும், வெளிநாடுகளில் படிக்கச் செல்லும் மாணவர்களின் முதல் பயணச் செலவையும் அரசே ஏற்றுக்கொள்ளும் என்று மகிழ்ச்சியுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.

அரசுப் பள்ளி மாணவர்கள் மிகப் பெரிய கல்வி நிறுவனங்களுக்குப் போவது பெரும் சமூக, பொருளாதார மாற்றத்திற்கான அடித்தளம். இதன்மூலம், அரசுப் பள்ளி மாணவர்கள் யாருக்கும் சளைத்தவர்கள் இல்லை என்று மீண்டும் மீண்டும் நிரூபிக்கிறார்கள்!

நம்முடைய மாணவர்களுக்கு வாய்ப்பு கிடைத்தால், அவர்கள் எந்த உயரத்தையும் எட்டிப் பிடிப்பார்கள்! ஏன் விண்வெளியில் கூட நம்முடைய அரசுப் பள்ளி மாணவர்கள்தான் இனி ஆட்சி செலுத்துவார்கள்! அவர்களுக்கு என்னுடைய அரசு துணையாக இருக்கும்! முதன்மை உயர்கல்வி நிறுவனங்களின் துணைவேந்தர்களும் இயக்குநர்களும், முதல்வர்களும் இங்கே வந்திருக்கிறீர்கள். உங்களுக்கு ஒரு வேண்டுகோள்....

இந்த மாணவ, மாணவியர் ஏதோ தனி நபர்களாக உங்கள் நிறுவனத்தில் சேரவில்லை! தமிழ்நாடு அரசின் பிரதிநிதிகளாகதான் சேருவார்கள். எங்களுடைய பிள்ளைகளின் பின்னால், இந்த அரசு எப்போதும் துணையாக நிற்கும்.

அவர்களுக்கு வேண்டிய ஊக்கத்தையும், உதவிகளையும் நீங்கள் தரவேண்டும் என்று இந்த நேரத்தில் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன். நம்முடைய மாணவர்கள் உயர்கல்வி கற்கச் செல்லும் தைவான் மற்றும் மலேசியா நாட்டு தூதரக அதிகாரிகளும் இங்கே வந்திருக்கிறார்கள்.

My dear officials from Taiwan and Malaysia! Take care of our students like your own children, and provide them all necessary support.

இன்னும் சில நாட்களில் உயர்கல்வி நிறுவனங்களுக்கு செல்லவுள்ள என் அன்பான மாணவக் கண்மணிகளே! இந்த இடத்திற்கு நீங்கள் சாதாரணமாக வந்துவிடவில்லை. எத்தனையோ தடைகளைத் தாண்டித்தான் வந்திருப்பீர்கள். இனியும் தடைகள் வரலாம். அதை பற்றியெல்லாம் கவலைப்படாமல் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள்.

தன்னம்பிக்கை உள்ளவர்களாக உங்களை நீங்கள் வளர்த்துக் கொள்ளுங்கள்! அறிவாற்றல் இருந்தால் எந்தத் தடையையும் வெல்லலாம்.

படிக்கின்ற காலத்தில் வேறு எதிலும் கவனம் சிதறாமல் பார்த்துக் கொள்ளுங்கள்! உங்களை நம்பித்தான் உங்கள் பெற்றோரும், இந்தச் சமூகமும் இருக்கிறார்கள்.

எங்கள் கனவுகளை நீங்கள் நிறைவேற்ற வேண்டும். தமிழ்நாடு பெருமைப்பட, இந்திய நாடு பெருமைப்பட நீங்கள் உயர வேண்டும் என்று தமிழ்நாட்டு முதலமைச்சராக மட்டுமில்லை, உங்கள் குடும்பத்தில் ஒருவராக, அன்புடன் கேட்டு, விடை பெறுகிறேன்.

Also Read: முத்தமிழறிஞர் கலைஞரின் 6 ஆம் ஆண்டு நினைவு நாள் - அமைதி பேரணி : சென்னை மாவட்ட தி.மு.க அறிவிப்பு!