M K Stalin

“ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?” - மம்தா அவமதிக்கப்பட்ட விவகாரம் - முதலமைச்சர் கண்டனம் !

நாடாளுமன்ற தேர்தல் முடிந்து 2024 - 2025-க்கான பட்ஜெட் கடந்த ஜூலை 23-ம் தேதி ஒன்றிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். இந்த பட்ஜெட்டில் தமிழ்நாடு உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் பெயர்கள் இடம்பெறவில்லை. குறிப்பாக பாஜக ஆளும் மாநிலங்கள், பாஜக கூட்டணியான பீகார், ஆந்திரா ஆகிய மாநிலங்களும், பாஜக ஆளும் அசாம் உள்ளிட்ட மாநிலங்களே இடம்பெற்றது.

மேலும் அந்த மாநிலங்களுக்கு சிறப்பு நிதி ஒதுக்கீடும் செய்யப்பட்டது. தனது நாற்காலியை தக்க வைத்துக்கொள்ள பாஜக செய்திருக்கும் இந்த செயலுக்கு மட்டுமின்றி, ஒன்றிய அரசின் இந்த பாரபட்சமான பட்ஜெட்டிற்கும் கண்டனங்கள் குவிந்து வருகிறது. தமிழ்நாடு நிராகரிக்கப்பட்டதற்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், மோடி தலைமையில் நடைபெறும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிப்பதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

இவரைத் தொடர்ந்து கர்நாடக முதலமைச்சர் சித்தராமையா, தெலங்கானா முதலமைச்சர் ரேவந்த் ரெட்டி, ஹிமாச்சல் முதலமைச்சர் சுக்விந்தர் சுகு, கேரள முதலமைச்சர் பினராய் விஜயன், ஜார்க்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், பஞ்சாப் முதலமைச்சர் பகவந்த்மான் உள்ளிட்ட எதிர்க்கட்சிகளை சேர்ந்த முதல்வர்களும் இன்று நடைபெறும் இந்த கூட்டத்தை புறக்கணித்தனர்.

மேலும் பா.ஜ.க கூட்டணியில் இருக்கும் புதுச்சேரி முதலமைச்சர் ரங்கசாமியும் நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்துள்ளார். மொத்தம் 10 மாநில முதல்வர்கள் இந்த கூட்டத்தை புறக்கணித்த நிலையில், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி மட்டும் பங்கேற்றார். அப்போது அவர் அந்த கூட்டத்தில் உரையாற்றும்போது அவரது மைக் அணைக்கப்பட்ட சம்பவம் கண்டனங்களை எழுப்பியுள்ளது.

டெல்லியில் இன்று (ஜூலை 27) நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஒவ்வொரு மாநில முதல்வர்களுக்கும் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது. அந்த வகையில் மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி பேசும்போது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களை பாரபட்சமாக நடத்தக்கூடாது என்றார். இந்த சூழலில் மம்தா பேசிக்கொண்டிருக்கும்போதே அவரது மைக் திடீரென அணைக்கப்பட்டுள்ளது.

இதையடுத்து இதனை கண்டித்து மம்தா வெளிநடப்பு செய்தார். பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், கூட்டாச்சி தத்துவத்தின் அடிப்படையில் ஒன்றிய அழைப்பை ஏற்று, நிதி ஆயோக் கூட்டத்தில் பங்கேற்ற தான், பேசிக்கொண்டிருக்கும்போதே மைக் அணைக்கப்பட்டதாகவும், தனக்கு பேச வெறும் 5 நிமிடங்கள் மட்டுமே வழங்கப்பட்டதாகவும், பிறர் 10-15 நிமிடங்கள் வரை பேசியதாகவும் குற்றம்சாட்டினார்.

ஒரு முதலமைச்சர் இவ்வாறு அவமானப்படுத்தப்பட்டதற்கு கண்டனங்கள் எழுந்து வரும் நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து தனது சமூக வலைதளத்தில் அவர் வெளியிட்டுள்ள பதிவு வருமாறு :

"இதுதான் கூட்டாட்சியா? ஒரு முதலமைச்சரை இப்படித்தான் நடத்துவதா?.எதிர்க்கட்சிகள் நமது ஜனநாயகத்தின் ஒரு அங்கம் என்பதை ஒன்றிய பாஜக அரசு புரிந்து கொள்ள வேண்டும். எதிர்க்கட்சிகளை எதிரிகள்போல் ஒடுக்க நினைக்கக்கூடாது. கூட்டாட்சியில் எதிர்க்கட்சிகளின் குரல்களுக்கும் மரியாதை அளிக்கப்பட வேண்டும்.”

Also Read: வன்மத்தை கக்கும் பட்ஜெட் : பாசிச பா.ஜ.க அரசை கண்டித்து வெகுண்டெழுந்த தமிழ்நாடு!