M K Stalin
”பசிப்பிணிப் போக்கும் பணி அரசுக்கும் பொருந்தும்" : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!
திருவள்ளூர் மாவட்டம், கீழச்சேரி, புனித அன்னாள் தொடக்கப் பள்ளியில் ஊரகப் பகுதிகளில் உள்ள அனைத்து அரசு உதவி பெறும் பள்ளிகளிலும் 1 முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவியர்களுக்கு விரிவுபடுத்தப்பட்ட முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை இன்று தொடங்கி வைத்து, தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரை:-
”மிக மிக மகிழ்ச்சியாக உங்கள் முன்னால் நின்று கொண்டிருக்கிறேன். என் மகிழ்ச்சிக்கு என்ன காரணம் என்று கேட்டீர்கள் என்றால், ‘முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்’, ‘நான் முதல்வன்’, ‘புதுமைப்பெண்’, ‘கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம்’ என தமிழ்நாட்டில் இருக்க, பெண்கள் – குழந்தைகள் – மாணவர்கள் – இளைஞர்கள் என்று உங்களுடைய முன்னேற்றத்திற்கும், எதிர்காலத்திற்கும் முதலமைச்சராக இருந்து பணியாற்றக்கூடிய வாய்ப்பு, பாடுபடக்கூடிய எண்ணம் எனக்கு மிகுந்த மகிழ்ச்சியைத் தந்து கொண்டிருக்கிறது. இந்த மகிழ்ச்சியை வழங்கிய தமிழ்நாட்டு மக்களான உங்களுக்கு முதலில் என்னுடைய நன்றி!
பள்ளிக்கு வரக்கூடிய குழந்தைகளுடைய பசியைப் போக்கவேண்டும் என்று முடிவு செய்து உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம்!
சென்னையில், ஒரு பள்ளி விழாவிற்கு சென்றபோது, ஒரு குழந்தை, “இன்னும் காலை உணவு சாப்பிடவில்லை” என்று சொன்னதை கேட்டவுடனே, ஒரு பெற்றோருக்கே உரிய பாச உணர்வுடன் நான் உருவாக்கிய திட்டம்தான், இந்த காலை உணவுத் திட்டம்!
“அரசாங்கத்திற்கு எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை, ஒரு குழந்தை கூட பசியோட ஸ்கூல்ல தவிக்க கூடாது” என்று இந்தத் திட்டத்தை தொடங்க உத்தரவிட்டேன்.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்னால், பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தைத் தொடங்கினேன். இன்றைக்கு பெருந்தலைவர் காமராசரின் பிறந்தநாளில் இந்தத் திட்டத்தை விரிவுபடுத்தியிருக்கிறேன்.
“அரசுப் பள்ளி மாணவர்களுக்கு மட்டும்தானா? எங்களுக்கு இல்லையா?” என்று அரசு உதவி பெறும் பள்ளி மாணவ, மாணவியர் கேட்டார்கள்… அதனால்தான், கிட்டத்தட்ட 18 லட்சத்து 50 ஆயிரம் அரசுப் பள்ளி மாணவ மாணவியர் வயிறார சாப்பிடக் காரணமான இந்த திட்டத்தை இன்றைக்கு விரிவுபடுத்தியிருக்கிறேன்.
இனிமேல், அரசு உதவி பெறும் பள்ளிகளைச் சேர்ந்த இரண்டு லட்சத்து 23 ஆயிரத்துக்கும் அதிகமான மாணவர்கள் காலை உணவு சாப்பிட இருக்கிறார்கள். மொத்தமாக சொல்லவேண்டும் என்றால், நாள்தோறும்
20 லட்சத்து 73 ஆயிரத்துக்கும் அதிகமான குழந்தைகள் சத்தான – சுவையான காலை உணவை சாப்பிடுகிறார்கள்.
புறநானூறு, திருக்குறள், மணிமேகலை என்று நம்முடைய இலக்கியங்கள் மட்டுமில்லை. அவ்வையார், வள்ளலார் போன்ற சான்றோர்களும் பசிப் பிணியைப் போக்குவதை பற்றி, உயர்வாக சொல்லியிருக்கிறார்கள்!
சங்க காலத்தைச் சேர்ந்த ஒரு குறுநில மன்னர், ஏழை எளியோருடைய பசியை போக்கியதால், 'பசிப்பிணி மருத்துவன்' என்று போற்றப்படுகிறார். பசிப்பிணிப் போக்கும் பணி – அரசுக்கும் பொருந்தும்! ஏழை எளிய மாணவர்களுக்கு உணவு அளிப்பது மூலமாக, குழந்தைகளை நலமான, வளமான அறிவுமிக்க சமூகமாக வளர்த்தெடுக்கிறோம்! ஏனென்றால், குழந்தைகள்தான் தமிழ்நாட்டின் எதிர்கால சொத்து! அதனால்தான், காலை உணவுத் திட்ட ஒதுக்கீடு பற்றி, அதிகாரிகள் என்னுடன் விவாதித்தபோது, “அதை நிதி ஒதுக்கீடு என்று சொல்லாதீர்கள், வருங்கால தலைமுறையை உருவாக்குகிற முதலீடு என்று சொல்லுங்கள்” என்று ஆணித்தரமாக சொன்னேன். ஆனால், இந்தத் திட்டம் மாணவ – மாணவியருக்கு தன்னம்பிக்கையை அளிக்கின்றது. பெற்றோர்களுக்கு பொருளாதாரச் சுமையை குறைக்கின்றது. பள்ளிகளுக்கு வரும் மாணவர்களுடைய எண்ணிக்கையை அதிகரிக்கின்றது. இடைநிற்றலை குறைக்கின்றது!
இதுபோல, ஏராளமான நன்மைகள் காலை உணவுத் திட்டத்தால் விளையுது! சிறிது நாளுக்கு முன்னால், ஒரு பெண் அளித்திருந்த பேட்டியை பார்த்தேன்… டிவி-யில் பார்த்தேன், வாட்ஸ் ஆப்-பிலும் பார்த்தேன். அதில், “காலை உணவுத் திட்டம் ஏழை எளிய குடும்பங்களுக்கு மட்டுமில்லை, பெற்றோர் இரண்டு பேருமே வேலைக்குப் போகின்ற மிடில் கிளாஸ் குடும்பங்களுக்கும் பயனுள்ளதாக இருக்கிறது” என்று பேட்டி கொடுத்திருந்தார்கள்.
இதுபோல, நம்முடைய திராவிட மாடல் அரசு கொண்டு வருகின்ற ஒவ்வொரு திட்டத்தையும் பத்திரிக்கைகள் பாராட்டுகின்றதோ இல்லையோ, பயன்பெறுகிற மக்கள் பாராட்டிக் கொண்டுதான் இருக்கிறார்கள்!
இல்லாத கற்பனைக் கதைகளுக்கு வடிவம் கொடுப்பதையும், ஈரைப் பேனாக்கும் வேலையைச் செய்பவர்களுக்கும் நம்மைப் பாராட்டுவதற்கு மனமில்லை! அதைபற்றி நமக்கு கவலையுமில்லை!
எந்தவொரு சிறு பிரச்சினை நடந்தாலும் – நம்முடைய அரசு உடனடியாக அதை கவனத்தில் எடுத்து, அதை தீர்த்து வைக்கின்றது! எந்த விவகாரத்திலாவது நம்முடைய அரசு செயல்படாமல் தேங்கி நின்றிருக்கிறதா? இல்லை!
நாள்தோறும் மக்களுக்கான நலத்திட்டங்கள், தமிழ்நாட்டின் எதிர்கால முன்னேற்றத்திற்கு தேவையான செயல்பாடுகள் என்று நாங்கள் தொடர்ந்து செய்து கொண்டு, இயங்கிக்கொண்டு தான் இருக்கிறோம். பொய்ச் செய்திகள் மூலம் ஒரு சில கருத்துருவாக்கங்களை உருவாக்கி, அதில் குளிர் காயலாம் என்று நினைக்கின்ற அந்த மக்கள் விரோத சக்திகளுடைய அஜெண்டா எந்த காலத்திலும் நடக்காது. ஏனென்றால், ஒவ்வொரு குடும்பமும் பயன்பெறக்கூடிய வகையில் மக்கள் நலத் திட்டங்களைப் பார்த்து பார்த்து செயல்படுத்திக் கொண்டு இருக்கிறோம்!
குறிப்பாக, இந்த காலை உணவுத் திட்டம் நம்முடைய திராவிட மாடல் அரசுக்கு நீடித்த புகழைத் தேடித் தந்திருக்கிறது!
நாம் தொடங்கிய பின்பு, இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில், ஏன் கனடா போன்ற நாடுகளிலும் தொடங்கப்பட்டிருக்கிறது. இந்த நேரத்தில் அமைச்சர்களையும், அதிகாரிகளையும், சட்டமன்ற உறுப்பினர்களையும், நாடாளுமன்ற உறுப்பினர்களையும் நான் கேட்டுக்கொள்ள விரும்புவது, “எந்த ஊரிலும் – எந்த ஸ்கூலிலும் – உணவின் தரம் ஒரு துளிகூட குறையக் கூடாது!
உங்கள் குழந்தைகள் சாப்பிடுகிற சாப்பாட்டை எப்படி கவனமாக பார்த்துக் கொள்வீர்களோ அதுபோல, அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி மாணவர்களுடைய சாப்பாட்டையும் கவனமாக ’ஸ்பெஷல் கேர்’ எடுத்து பாருங்கள். நான் ஆய்வுக்கு வெளியூர் போகும் போதெல்லாம், ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு திடீர் என்று போகிறேன். அங்கே இருக்கின்ற பிள்ளைகளுடன் பேசுகிறேன். காலை உணவு எப்படி இருக்கும் என்று பார்க்கிறேன். அந்த உணவை நானே சாப்பிட்டும் பார்க்கிறேன். அமைச்சர் தம்பி உதயநிதிகூட சுற்றுப்பயணம் போகிறபோது, நிகழ்ச்சிக்குப் போகிறபோது இதுபோல ஆய்வு செய்வதை பார்க்கிறேன். மற்ற அமைச்சர்களும், மக்கள் பிரதிநிதிகளும் மாவட்ட ஆட்சியர்களும், அதிகாரிகளும் அவரவர்கள் பகுதிகளில் இருக்கின்ற பள்ளியில் இப்படி திடீர், திடீரென்று ஆய்வுகளை மேற்கொள்ளவேண்டும் என்று மிகவும் பணிவோடு நான் கேட்டுக்கொள்கிறேன்.
திராவிட மாடல் அரசையும், என்னையும் பொருத்தவரைக்கும் நம்முடைய தமிழ்நாட்டு பசங்க படிப்பதற்கு எதுவும் தடையாக இருக்க கூடாது என்று நினைக்கிறோம். அது பசியாக இருந்தாலும் சரி, நீட் தேர்வாக இருந்தாலும் சரி, ஒன்றிய அரசின் புதிய கல்விக் கொள்கையாக இருந்தாலும் சரி, எந்த தடை வந்தாலும் அந்த தடைகளை உடைப்பதுதான் எங்களுடைய முதல் பணி!
நீட் தேர்வை நாம் எதிர்க்க தொடங்கியபோது ஏன் எதிர்க்கிறீர்கள் என்று சிலர் எதிர்கேள்வியை கேட்டார்கள். ஆனால், இன்றைக்கு நீட் தேர்வில் நடக்கின்ற முறைகேடுகளை பார்த்து, உச்சநீதிமன்றம் கேள்வி கேட்கின்றது. மாணவர் சமுதாயம் போர்க்கொடி தூக்குகின்றது. பல முதலமைச்சர்கள், தேசிய தலைவர்கள் நீட் வேண்டாம் என்று குரல் கொடுக்க ஆரம்பித்துவிட்டார்கள். ஏன்? ஒட்டுமொத்த இந்தியாவும் தமிழ்நாட்டு வழியில், நீட் தேர்வை எதிர்க்கின்றது!
ஒன்றிய பா.ஜ.க. அரசு அரசியலுக்காக இப்போது, நெருக்கடி நிலையை பற்றி நாடாளுமன்றத்தில் தொடர்ந்து பேசுகிறார்கள். ஆனால், நாம் அவர்களிடம் கேட்கின்ற கேள்வி நெருக்கடி நிலை காலத்தில், ஒத்திசைவுப் பட்டியலுக்கு மாற்றப்பட்ட கல்வியை உடனடியாக மாநிலப் பட்டியலுக்கு மாற்ற ஒன்றிய அரசு தயாராக இருக்கிறதா? இந்த ஆக்கபூர்வமான செயலை அவர்கள் செய்வார்களா?
நம்மை பொறுத்தவரை, நீட் தேர்வு – புதிய கல்விக் கொள்கை தேவையற்றது. அதை எதிர்க்கிறோம். ஒருபக்கம் அரசியல் மற்றும் சட்டப் போராட்டங்களை நடத்துகிறோம். இன்னொரு பக்கம் மாணவர்களின் நலனுக்காக பள்ளிக்கல்விக்கும், கல்லூரிகளுக்கும், உயர்கல்விக்கும் ஏராளமான திட்டங்களை தீட்டுகிறோம். எனவே, “தடைகளை நாங்கள் உடைக்கிறோம். மாணவர்கள் கல்வியில் மட்டும் கவனம் செலுத்துங்கள். ஏனென்றால், நான் திரும்பவும் சொல்கிறேன், கல்விதான் யாராலும் திருட முடியாத சொத்து, அந்த சொத்தை தமிழ்நாட்டு மாணவர்கள் பெற்றாகவேண்டும்.
மாணவச் செல்வங்களே! “படிங்க… படிங்க…படிங்க… நீங்கள் உயர படிங்க.. நீங்கள் உயர… உங்கள் வீடும் உயரும்! இந்த நாடும் உயரும்!” என்று உங்களையெல்லாம் மனதார வாழ்த்தி விடைபெறுகிறேன்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!