M K Stalin
“நீட் தேர்வை முதன் முதலில் எதிர்த்தது திமுகதான்” - AK ராஜன் அறிக்கையை 9 மொழிகளில் வெளியிட்ட முதல்வர் !
மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வு கட்டாயம் என ஒன்றிய அரசு அறிவித்தது முதல், மருத்துவப் படிப்புக் கனவுகள் தகர்ந்துபோய்த் தவித்து வருகிறார்கள் கிராமப்புறங்களைச் சேர்ந்த ஏழை மாணவர்கள். மருத்துவம் படிக்க தகுதி இருந்தும், நீட் தேர்வால் தங்கள் கனவு நிறைவேறாமல் போனதால் கடந்த ஆண்டுகளில் மாணவர்கள் பலர் தற்கொலை செய்துகொண்டுள்ளனர்.
அண்மையில் நடைபெற்ற நீட் தேர்வில் கூட பீகார், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்ட பெற்றோர்கள், மாணவர்கள், தேர்வு நடத்தும் அதிகாரிகள் என 30-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். நாடு முழுவதும் சுமார் 50-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டதாக தகவல் வெளியானது.
இந்த சூழலில் எந்த ஆண்டும் இல்லாத அளவில் இந்த ஆண்டு 67 மாணவர்கள் 720-க்கு 720 மதிப்பெண்கள் பெற்று முதலிடம் பிடித்ததாக அறிவிக்கப்பட்டது. அதே நேரம் நீட் தேர்வில் முதலிடம் பிடித்த 67 பேரில் 8 பேர் ஹரியானாவில் உள்ள ஒரேமையத்தில் தேர்வு எழுதியவர்கள் என்றும், அவர்களது பதிவு எண் ஒரே வரிசையில் தொடங்குவதாகவும் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
எனவே இந்த ஆண்டு நடைபெற்ற நீட் தேர்வை ரத்து செய்ய வேண்டும் என்று பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். அந்த வகையில் பாஜக கூட்டணி ஆளும் மகாராஷ்டிர மாநில அரசும், ஒன்றிய பாஜக அரசுக்கு வலியுறுத்தியுள்ளது. தொடர்ந்து நீட் தேர்வு மோசடி குறித்து குழு அமைக்கப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்படும் என்றும் ஒன்றிய உயர்கல்வித் துறை செயலாளர் தெரிவித்துள்ளார்.
மாணவர்களின் போராட்டங்களோடு அரசியல் கட்சி தலைவர்களும் இந்த விவகாரத்திற்கு குரலெழுப்பி வருகின்றனர். அந்த வகையில் காங்கிரஸ் எம்.பி ராகுல் காந்தி, “நீட் தேர்வில் நடந்த ஊழல் 24 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களையும் அவர்களது குடும்பங்களையும் பேரழிவிற்கு உட்படுத்தியுள்ளது. கல்வி மாஃபியா கும்பல்கள் அரசு இயந்திரத்துடன் கூட்டு சேர்ந்து நடத்தப்பட்ட இந்த மோசடியை எதிர்த்து, நாடாளுமன்றத்தில் குரல் எழுப்புவோம்!” என்று தெரிவித்துள்ளார்.
இந்த நிலையில், முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தனது சமூக வலைதள பக்கத்தில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்ந்துள்ளார். இதுகுறித்து அவரது சமூக வலைதள பதிவு பின்வருமாறு :
"திராவிட முன்னேற்றக் கழகம் தான் நீட் தேர்வின் தீமைகளை முதன்முதலில் கண்டுணர்ந்து, பெரிய அளவில் அதற்கெதிராகப் பரப்புரை மேற்கொண்டது. ஆட்சிக்கு வந்ததும், நீட் தேர்வின் அடிப்படையில் மருத்துவப் படிப்புகளுக்கான சேர்க்கை மேற்கொள்வதால் ஏற்படும் தாக்கங்களை ஆராய, ஓய்வுபெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் அவர்கள் தலைமையில் உயர்நிலைக் குழு ஒன்றினை அமைத்தோம்.
அக்குழு மிக விரிவான தரவுப் பகுப்பாய்வுகள், மாணவர்கள், பெற்றோர்கள், பொதுமக்கள் ஆகியோரிடம் இருந்து பெறப்பட்ட கருத்துகள் ஆகியவற்றின் அடிப்படையில் வழங்கிய அறிக்கை வெளியிடப்பட்டது. நீட் தேர்வு ஏழைகளுக்கும், சமூகநீதிக்கும் எதிரானது என்பதை அனைவரும் அறிந்துகொள்ளும் வகையில் பிற மாநில அரசுகளுக்கும் அந்த அறிக்கை அனுப்பிவைக்கப்பட்டது.
அந்த அறிக்கையில் இடம்பெற்ற பரிந்துரைகளின் அடிப்படையில், நீட் தேர்வில் இருந்து விலக்கு கோரும் மசோதா தமிழ்நாடு சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு, ஆளுநர் ஏற்படுத்திய தேவையற்ற தாமதத்தையடுத்து, தற்போது குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்காக நிலுவையில் உள்ளது.
நீட் தேர்வில் அண்மையில் நடந்த பரவலான குளறுபடிகளால், நாடு முழுவதும் நீட் தேர்வுக்கு எதிர்ப்பு வலுத்து வரும் இவ்வேளையில், நீட் தேர்வின் பாதகங்களை அனைத்துத் தரப்பினரும் அறிந்துகொள்ள ஏதுவாக, நீதியரசர். ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை ஆங்கிலம் மற்றும் பிற இந்திய மொழிகளில் பகிர்கிறோம்." என்று குறிப்பிட்டு தமிழ், ஆங்கிலம், மலையாளம், தெலுங்கு, கன்னடம், இந்தி, மராத்தி, பஞ்சாபி, பெங்காலி ஆகிய மொழிகளில் அறிக்கையை வெளியிட்டுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!