M K Stalin

”வானத்தை ஆளும் சூரியன் கலைஞர் ” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நெகிழ்ச்சி!

ஐந்து முறை தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்தவரும், 13 முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு 13 முறையும் வெற்றி பெற்றவரும், தமிழ்நாடு சட்டமன்ற மேலவை உறுப்பினராகவும், தமிழ்நாட்டின் அரசியல் தலைவராக மட்டுமல்லாமல் இந்திய அரசியலின் திசையை தீர்மானிப்பவராகவும் திகழ்ந்தார் நூற்றாண்டு நாயகர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.

அவரது பன்முக ஆற்றலையும், அவர் படைத்தளித்த மக்கள் நலத்திட்டங்களையும், சமுதாயத்தில் அதன் தாக்கத்தையும் வருங்காலங்களில் தமிழ்நாட்டு மக்கள் என்றென்றும் நினைவில் கொள்ளும் வகையிலும், நவீன தமிழ்நாட்டை உருவாக்கிய சிற்பியான தமிழினத் தலைவர் கலைஞர் அவர்கள் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்காக அறிவித்து நிறைவேற்றிய திட்டங்களை இளைய சமுதாயத்தினர் அறிந்து கொள்ளும் வகையிலும், வாழும் காலத்திலே தமிழ்நாட்டு மக்களுக்கு எண்ணற்ற நலத்திட்டங்களை வாரி வழங்கி இன்றும் வரலாறாய் வாழ்ந்து கொண்டிருக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு விழாவினை ஓராண்டு காலம் மக்களுக்கு பயன் தரத்தக்க வகையில் நடத்திட வேண்டும் என்று மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் ஆணையிட்டிருந்தார்.

அந்த ஆணைக்கிணங்க, 12 சிறப்பு குழுக்கள் அமைக்கப்பட்டு, தமிழ்நாடு முழுவதும் மிகச் சிறப்பாக பொதுமக்கள், மாணவ, மாணவியர்கள், மகளிர் என அனைத்து தரப்பினராலும் கொண்டாடப்பட்டது.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடம் திறக்கப்பட்ட நாள் முதல் தினந்தோறும் ஆயிரக்கணக்கான பொதுமக்கள் வருகை தந்து, அவருடைய வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், சமூக நீதிக்கான பங்களிப்புகள், செயல்படுத்திய திட்டங்கள், இதழியல் துறை, கலைத்துறை போன்ற பல்வேறு துறைகளில் அவர் புரிந்த சாதனைகள் குறித்து ஆர்வத்துடன் பார்வையிட்டு வருகின்றனர்.

முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் 101-ஆவது பிறந்தநாளையொட்டி இன்றைய தினம் சென்னை, மெரினா கடற்கரையில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நினைவிடத்தில், செய்தி மக்கள் தொடர்பு துறையின் ‘தமிழரசு’ வாயிலாக தயாரிக்கப்பட்ட முத்தமிழறிஞர் கலைஞர் நூற்றாண்டு நிறைவு மலர் - தொகுதி -1, தொகுதி -2 மற்றும் தொகுதி -3 ஆகிய சிறப்பு மலர்களை தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் வெளியிட்டார்.

அதனைத் தொடர்ந்து, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் நூற்றாண்டு நிறைவையொட்டி, செய்தி மக்கள் தொடர்புத் துறை சார்பில் அமைக்கப்பட்டிருந்த “கலைஞர் நூற்றாண்டு நிறைவு நினைவலைகள்” சிறப்பு புகைப்படக் கண்காட்சியை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் பார்வையிட்டு, முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் வாழ்க்கை வரலாறு, அரசியல் பயணம், செயல்படுத்திய அரசுத் திட்டங்கள் போன்றவற்றை விளக்கும் குறும்படத்தையும் பார்வையிட்டார்.

பின்னர் சென்னை, ஓமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருச்சிலைக்கு அருகில் வைக்கப்பட்டிருந்த அவரது திருவுருப் படத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

முன்னதாக, தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் மற்றும் சி.ஐ.டி. காலனி இல்லத்திற்கும் நேரில் சென்று முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருவப் படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும், அண்ணா அறிவாலயம் மற்றும் முரசொலி அலுவலக வளாகங்களில் அமைந்துள்ள முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களின் திருவுருச்சிலைக்கு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

இந்நிலையில், வானத்தை ஆளும் சூரியன் கலைஞர் என சமூகவலைதளத்தில் நெகிழ்ச்சியுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

அதில், ”பிறந்தார் - நிறைந்தார் என்ற வாழ்வின் இரு புள்ளிகளுக்கிடையில்,

தொட்ட துறைகளில் எல்லாம் உச்சம் தொட்டார்!

ஒடுக்கப்பட்ட மக்களுக்காக வாழ்ந்தார்!

தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காகப் பாடுபட்டார்!

தமிழினத்தின் எழுச்சிக்காக உழைத்தார்!

வரலாற்றைத் தன்னைச் சுற்றிச் சுழலவிட்டார்!

முத்தமிழறிஞர் கலைஞர் எனும் பேருழைப்பில் தமிழ்நாடு வளம் பெற்றது! தமிழினம் நலம் பெற்றது!

இந்த நூறாண்டுகளில் நிகழ்ந்துள்ள தமிழ்ப் புரட்சி - தமிழினத்தின் எழுச்சி - தமிழ்நாட்டின் வளர்ச்சி என எங்கும் எதிலும் தலைவர் கலைஞரின் முத்திரை பதிந்துள்ளது. அவரது புகழை நாளும் சொல்வது, நாளை நாம் பெற வேண்டிய வெற்றிகளுக்குப் பாதை அமைப்பதாகும்!

கலைஞர்: வரலாறு எனும் வானில் வெட்டிவிட்டு மறைந்த மின்னல் அல்ல; அந்த வானத்தை ஆளும் சூரியன்.” என தெரிவிக்கப்பட்டுள்ளது

Also Read: ”மிகச்சிறந்த தலைவர் முத்தமிழறிஞர் கலைஞர்” : ராகுல் காந்தி எம்.பி புகழாரம்!