M K Stalin
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை : பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட ஒன்றிய அரசுக்கு முதலமைச்சர் கண்டனம் !
முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்காக கேரளா அரசு தொடர்ந்து முயற்சி செய்து வருகிறது. ஆனால், இதற்கு உச்சநீதிமன்றம் வரை போராடி தமிழ்நாடு அரசு தடை உத்தரவு பெற்றுள்ளது. இதனிடையே முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முன்மொழிந்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக்கொண்டுள்ளது.
ஒன்றிய அரசின் இந்த செயல் கடும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில், இதற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடும் கண்டனம் தெரிவித்து ஒன்றிய அமைச்சர் பூபேந்தர் யாதவ்க்கு கடிதம் எழுதியுள்ளார். இது குறித்து அவர் எழுதியுள்ள கடிதத்தில், உச்ச நீதிமன்றத்தின் உத்தரவை மீறி, முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்வதற்கு கேரள அரசு விண்ணப்பித்துள்ள கருத்துருவினை ஒன்றிய அரசு பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டமைக்கு தமிழ்நாடு அரசு கடும் ஆட்சேபனையைத் தெரிவித்துக் கொள்வதாகத் தெரிவித்துள்ள முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், ஒன்றிய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகத்தின் (MoEF) கீழ் உள்ள நிபுணர் மதிப்பீட்டுக் குழு (Expert Appraisal Committee), கேரள அரசின் பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் மேற்படி கருத்துருவினை வரவிருக்கும் கூட்டத்தின் நிகழ்ச்சி நிரலில் சேர்த்துள்ளதையும் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
தற்போதுள்ள முல்லைப் பெரியாறு அணைக்குப் பதிலாக, புதிய அணையைக் கட்டுவதற்கான கேரள அரசின் மேற்படி முன்மொழிவு, மாண்பமை உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளுக்கு முற்றிலும் எதிரானது என்றும், தற்போதுள்ள அணை அனைத்து அம்சங்களிலும் பாதுகாப்பானது என பல்வேறு நிபுணர் குழுக்களால் மீண்டும் மீண்டும் கண்டறியப்பட்டு, உச்ச நீதிமன்றம் 27.02.2006 மற்றும் 07.05.2014 தேதியிட்ட தனது தீர்ப்புகளில் அதனைத் தெளிவுபடுத்தியுள்ளதாகவும் முதலமைச்சர் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
பின்னர், 2018 ஆம் ஆண்டில், புதிய அணை கட்டுவதற்கான ஆய்வினை மேற்கொள்ள கேரள அரசு முயற்சித்தபோது, உச்ச நீதிமன்றத்தில் தமிழ்நாடு அரசின் சார்பில் இந்தப் பிரச்சினை கொண்டுசெல்லப்பட்டதாகவும், புதிய அணை கட்டுவது தொடர்பாக எந்தவொரு நடவடிக்கை மேற்கொண்டாலும், அதற்கு உச்ச நீதிமன்றத்தின் அனுமதி தேவை என்று உச்சநீதிமன்றம் அப்போதே தெளிவாகத் தீர்ப்பு வழங்கியுள்ளதையும் முதலமைச்சர் தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.
எனவே, கேரள பாசன வடிவமைப்பு மற்றும் ஆராய்ச்சி வாரியத்தின் சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை தயார் செய்யும் தற்போதைய செயல் மற்றும் ஒன்றிய அரசின் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழு இதனை பரிசீலனைக்கு எடுத்துக் கொண்டுள்ள நடவடிக்கை ஆகியவை நிச்சயமாக உச்ச நீதிமன்றத்தின் உத்தரவுகளை அவமதிக்கும் செயலாகும் என முதலமைச்சர் தனது கடிதத்தில் மேலும் தெளிவுபடக் குறிப்பிட்டுள்ளார்.
இந்தப் பிரச்சினையில் தங்களது ஆட்சேபனைகளை ஏற்கெனவே தமிழ்நாடு அரசின் நீர்வளத் துறை கூடுதல் தலைமைச் செயலாளர் , ஒன்றிய சுற்றுச்சூழல், வனத் துறைக்கும், நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் அனைத்து உறுப்பினர்களுக்கும் விரிவாகத் தெரிவித்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ள முதலமைச்சர், இந்தப் பிரச்சினையில் உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ள முந்தைய உத்தரவுகளை தொடர்புடைய துறைகள் கடைபிடிக்கவில்லை என்றால், நீதிமன்ற அவமதிப்பு மனுக்கள் உட்பட வலுவான சட்ட நடவடிக்கையை தமிழ்நாடு அரசின் சார்பில் எடுக்கவுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
எனவே, 28-5-2024 அன்று நடைபெறும் சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுக் கூட்டத்திற்கான நிகழ்ச்சி நிரலில், முல்லைப் பெரியாற்றில் புதிய அணை கட்டுவதற்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கையைத் தயார் செய்வதற்கு அனுமதி அளிப்பது தொடர்பான விவாதப் பொருளினை நீக்கிடவும், எதிர்காலத்தில் கேரள அரசின் இதுபோன்ற எந்தவொரு கருத்துருவினையும் பரிசீலனைக்கு எடுத்துக்கொள்ளக் கூடாது எனவும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத்துறை அதிகாரிகளுக்கும், சுற்றுச்சூழல் நிபுணர் மதிப்பீட்டுக் குழுவின் உறுப்பினர்-செயலருக்கும் ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் உத்தரவிட வேண்டுமென்று வலியுறுத்திக் கேட்டுக் கொண்டுள்ள தமிழ்நாடு முதலமைச்சர் , சூழ்நிலையின் தீவிரத்தை கருத்தில் கொண்டு மாண்புமிகு ஒன்றிய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சர் அவர்கள் இதில் உடனடியாக தனிப்பட்ட முறையில் தலையிட வேண்டுமென்றும் கேட்டுக் கொண்டுள்ளார்
Also Read
-
சென்னை MTC பேருந்துகளில் கட்டணமின்றி 20 கிலோ எடை வரை செல்லலாம்- எதற்கெல்லாம் கட்டணம்? முழு விவரம் உள்ளே !
-
”கிராம பொருளாதாரத்தின் முதுகெலும்பு கூட்டுறவுத்துறை” : துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பெருமிதம்!
-
அஸ்வின் உலகத்தரம் வாய்ந்த வீரர், அதனாலதான் அவரால் இதனை செய்ய முடிகிறது - நாதன் லயான் புகழாரம் !
-
”சமஸ்கிருதம் படியுங்கள்” : பா.ஜ.கவுக்கு பிரச்சாரம் செய்த பேராசிரியர் - நடவடிக்கை எடுத்த பல்கலைக்கழகம்!
-
இஸ்ரேல் தாக்குதலில் ஹிஸ்புல்லாவின் செய்தித்தொடர்பாளர் படுகொலை : இஸ்ரேல் அறிவிப்பு !