M K Stalin

“மூஸா ரஸா மறைவு, அனைத்து துறைகளுக்கும் ஒரு பேரிழப்பு” - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் !

முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், சமூகச் செயல்பாட்டாளரும், நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தென்னிந்திய கல்வி அறக்கட்டளை (SIET) தலைவருமான மூஸா ரஸா (87) காலமானார். இவரது மறைவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி வருமாறு :

“முன்னாள் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியும், சமூகச் செயல்பாட்டாளரும், நீதிபதி பஷீர் அகமது சையது மகளிர் கல்லூரி உள்ளிட்ட கல்வி நிறுவனங்களை நடத்தி வரும் தென்னிந்திய கல்வி அறக்கட்டளை (SIET) தலைவருமான திரு. மூஸா ரஸா அவர்கள் மறைவெய்திய செய்தியறிந்து மிகவும் வருந்தினேன்; எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

1960-இல் இந்தியக் குடிமைப் பணி அதிகாரியாக பணிக்குச் சேர்ந்த மூஸா ரஸா அவர்கள், குஜராத் முதலமைச்சருக்கான முதன்மைச் செயலாளர், ஜம்மு காஷ்மீருக்கான தலைமைச் செயலாளர், உத்தரப்பிரதேச ஆளுநருக்கான ஆலோசகர் உள்ளிட்ட முக்கியப் பொறுப்புகளில் திறம்படப் பணியாற்றியவர். கவிஞர், எழுத்தாளர் எனப் பன்முக ஆற்றலாளரான இவரது சொந்த நூலகத்தில் பத்தாயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களைச் சேமித்து வைத்திருந்த அறிவுத் தேடல் கொண்டவர்; பல்லாயிரக்கணக்கான மாணவர்களுக்கு வழிகாட்டியாக விளங்கியவர்.

சமூகப்பணிகள், கல்விப் பணிகள் எனப் பல்வேறு துறைகளிலும் தன்னை அர்ப்பணித்துக் கொண்டு தென்னிந்திய கல்வி அறக்கட்டளையின் தலைவராகப் பணியாற்றியவர். இவரது சமூகப் பங்களிப்பைப் பாராட்டி கடந்த 2010-ஆம் ஆண்டு இந்திய அரசு "பத்மபூஷண்" விருது வழங்கிக் கௌரவித்தது.

அர்ப்பணிப்பும், அயரா உழைப்பும், தொண்டுள்ளமும் கொண்ட மூஸா ரஸா அவர்களின் மறைவு அவர் பங்களித்து வந்த அனைத்துத் துறைகளுக்கும் பேரிழப்பாகும். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், SIET கல்லூரி நிர்வாகத்தினர் என அனைவருக்கும் இந்தத் துயர்மிகு நேரத்தில் எனது ஆறுதலைத் தெரிவித்துக் கொள்கிறேன்.”

Also Read: பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடிவிபத்தில் 8 தொழிலாளர்கள் உயிரிழப்பு : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல்!