M K Stalin
இந்தியா முழுமைக்குமே எதிரிதான் பா.ஜ.க ! : தமிழ்நாடு முதலமைச்சர் சிறப்பு நேர்காணல்!
தினத்தந்தி நாளிதழில் இன்று (06-04-2024) வெளியாகியுள்ள, கழகத் தலைவர் – மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்களின் விரிவான நேர்காணல்:
1. நாடாளுமன்றத் தேர்தல் பரப்புரைக்காக நீங்கள் எல்லா தொகுதிகளுக்கும் சென்று வருகிறீர்கள். பொதுக்கூட்டங்களில் பங்கேற்று பேசுவது மட்டுமல்லாமல், நடைப்பயிற்சியின் போது பொதுமக்களையும் சந்தித்து வருகிறீர்கள். மக்களின் எண்ண ஓட்டம் எப்படி இருக்கிறது? வெற்றி வாய்ப்பு எந்த வகையில் உள்ளது?
2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கான அடிப்படைப் பணிகளை தி.மு.க. 2022-ஆம் ஆண்டு செப்டம்பர் 15 அண்ணா பிறந்தநாளில் விருதுநகரில் நடைபெற்ற முப்பெரும் விழாவிலேயே தொடங்கிவிட்டது.
‘நாற்பதும் நமதே! நாடும் நமதே!’ என்ற இலக்கு அந்த நிகழ்வில்தான் முன்னெடுக்கப்பட்டது. அதற்கேற்ப பாக முகவர்கள், வாக்குச்சாவடி குழுக்கள், ஒருங்கிணைப்பாளர்கள், தொகுதிப் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு, அவர்களுக்கான பயிற்சிப் பாசறைக் கூட்டங்களும் நடத்தி முடிக்கப்பட்டுவிட்டன.
எப்போதும் மக்களுடன் இருக்கும் இயக்கமான தி.மு.க., கடந்த மூன்றாண்டுகால திராவிட மாடல் ஆட்சியில் தமிழ்நாட்டு மக்களுக்கு, குறிப்பாகப் பெண்களுக்கு, மாணவர்களுக்கு செய்த திட்டங்களினால் பயன்பெற்றவர்களை நேரில் சந்தித்து வாக்குகளைச் சேகரித்து வருகிறது.
களப்பணியில் தி.மு.க. உடன்பிறப்புகள் தங்கள் அடிப்படையான பணியை முழுமையாக மேற்கொண்ட நிலையில்தான், தேர்தல் களப் பரப்புரை பணிகளில் கழகத் தலைவரான நானும் கழகத்தின் மூத்த நிர்வாகிகளும் ஈடுபடுகிறோம்.
ஒவ்வொரு வீட்டுக்கும் பயன் தந்து வரும் திராவிட மாடல் ஆட்சி என்பதால் தி.மு.கவுக்கு மக்களிடம் பெரும் ஆதரவு உள்ளது. பத்தாண்டுகால பா.ஜ.க. அரசு தமிழ்நாட்டை வஞ்சித்திருப்பதையும், அதற்கு அ.தி.மு.க. முழுமையாகத் துணை போயிருப்பதையும் தமிழ்நாட்டு மக்கள் அறிந்திருக்கிறார்கள்.
காலையில் அடுப்பை பற்ற வைக்கும்போது கேஸ் விலை அவர்கள் மனதில் அனலாகக் கொதிக்கிறது. தி.மு.க. ஆட்சியின் சாதனைகளும் பா.ஜ.க. அரசின் துரோகங்களும் தமிழ்நாட்டில் இந்தியா கூட்டணிக்கு முழுமையான வெற்றியைத் தரும்.
2. கச்சத்தீவு பிரச்சினை தற்போது பாரதீய ஜனதா கட்சி மூலம் விஸ்வரூபம் எடுத்துள்ளதே. தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் மூலம் பெறப்பட்டதாக கூறி, கச்சத்தீவை இலங்கைக்கு தாரை வார்த்ததற்கு முன்னாள் பிரதமர்கள் நேரு, இந்திரா காந்தி, கலைஞர் கருணாநிதி ஆகியோர்தான் காரணம் என்று குற்றம் சாட்டுகிறார். கச்சத்தீவு தொடர்பான இந்த புதிய தகவல்கள் தி.மு.க.வின் இரட்டை நிலைப்பாடு முகத்திரையைக் கிழித்துவிட்டது என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருக்கிறார். இதற்கு உங்களின் பதில் என்ன?
கடந்த 2015-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் நாள் பிரதமர் மோடி தலைமையிலான இதே பா.ஜ.க ஆட்சியில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவு இலங்கைக்குச் சொந்தமானது எனத் தெரிவிக்கப்பட்டது.
அப்போது, திரு.ஜெய்சங்கர் அவர்கள் வெளியுறவுத் துறைச் செயலாளராக இருந்தார். இப்போது அவர் ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சராக உள்ள நிலையில், தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு, கச்சத்தீவை நேரு, இந்திராகாந்தி அம்மையார் போன்ற முன்னாள் பிரதமர்கள் தாரை வார்த்துக் கொடுத்து விட்டதாகவும் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அதனை எதிர்க்கவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதிலிருந்து கச்சத்தீவு விவகாரத்தில் இரட்டை வேடம் போடுவது பா.ஜ.க.தான் என்பதும், திட்டமிட்டே தேர்தல் நேரத்தில் வதந்திகளைப் பரப்பி, தமிழ்நாட்டில் அரசியல் லாபம் பெற முயற்சிக்கிறார்கள் என்பதும் மக்களுக்கு நன்றாகத் தெரியும். இந்த விவகாரம் விஸ்வரூபமும் எடுக்கவில்ல. வேறு எந்த ரூபமும் எடுக்கவில்லை.
பத்தாண்டுகால சாதனைகள் என்று தமிழ்நாட்டு மக்களிடம் சொல்வதற்கு ஒற்றைச் செங்கல்லைத் தாண்டி வேறு எதுவும் இல்லாத பா.ஜ.க.,வில் பிரதமர், நிதியமைச்சர், வெளியுறவுத்துறை அமைச்சர் தொடங்கி கத்துக்குட்டிகள் வரை கச்சத்தீவு பற்றிய வதந்திகளைப் பரப்பிக் கதறுகிறார்கள்.
இந்த விவகாரத்தில் தி.மு.க.வின் உறுதியான நிலைப்பாடு என்ன என்பது நாடாளுமன்ற விவாதங்களிலும், சட்டமன்றத் தீர்மானத்திலும், ஒன்றிய அமைச்சர்களுடன் கலைஞர் நடத்திய ஆலோசனைகள் பற்றிய குறிப்புகளிலும் தெளிவாக உள்ளது.
கடந்த 2022-ஆம் ஆண்டு நேரு ஸ்டேடியத்தில் நடந்த விழாவிலும் பிரதமர் முன்னிலையில் கச்சத்தீவை மீட்டுத் தர வேண்டும் என முதலமைச்சர் என்ற முறையில் கோரிக்கை வைத்தேன். பத்தாண்டு கால பா.ஜ.க. ஆட்சியில் இம்மியளவில்கூட செயல்படவில்லை.
இலங்கைத் தலைநகர் கொழும்புவில் கடந்த 2-ஆம் தேதி நடைபெற்ற அந்நாட்டு அரசின் கேபினட் கூட்டத்திற்குப் பிறகு நிருபர்களிடம் பேசிய அந்நாட்டு அமைச்சர் பந்துல குணவர்த்தனே “கச்சத்தீவு விவகாரம் குறித்து மந்திரிசபையில் விவாதிக்கப்படவில்லை. ஏனெனியில் அந்தப் பிரச்சினை ஒருபோதும் எழுப்பப்படவில்லை” என்று தெரிவித்திருந்ததை தினத்தந்தி முதல் பக்கத்தில் செய்தியாக வெளியிட்டிருந்தது.
இதிலிருந்தே கடந்த பத்தாண்டுகளில் மோடி தலைமையிலான பா.ஜ.க. அரசு கச்சத்தீவை இந்தியாவிடம் ஒப்படைக்கக் கோரி எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்பது அம்பலமாகியுள்ளது. கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு என்பார்கள். அந்தக் கெட்டிக்காரத்தனம் கூட இல்லாமல் புளுகிய சில மணிநேரங்களிலேயே அம்பலப்பட்டுப் போய்விடுகிறது பா.ஜ.க.
3. தி.மு.க. தேர்தல் அறிக்கையில் கூறியதை நிறைவேற்றவில்லை என்று அ.தி.மு.க. பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி குற்றம்சாட்டுகிறாரே. 2021 தேர்தல் அறிக்கையில் சொன்ன 505 வாக்குறுதிகளில் இதுவரை எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது?
மகளிர் உரிமைத் தொகை உள்ளிட்ட முதன்மையான வாக்குறுதிகளையும் கணக்கில்கொண்டால் 80 விழுக்காட்டுக்கும் அதிகமான வாக்குறுதிகளை நிறைவேற்றியுள்ளோம்.
அ.தி.மு.க. பழனிசாமி அரசு தமிழ்நாட்டின் நிதி நிலைமையை அதலபாதாளத்தில் கொண்டு போய் தள்ளியதால், அதிலிருந்து இந்த மூன்றாண்டுகளில் மெல்ல மெல்ல மீண்டு, வாக்குறுதிகளை நிறைவேற்றி வருகிறோம். இன்னும் ஒரு சில வாக்குறுதிகளையும் அடுத்த சட்டமன்றத் தேர்தலுக்குள் நிறைவேற்றுவோம்.
தேர்தல் அறிக்கையில் இடம்பெறாத காலை உணவுத் திட்டம், நான் முதல்வன் போன்ற பல்வேறு திட்டங்ளும் மக்களுக்குப் பயன் தந்து வருகின்றன. எதிர்க்கட்சித் தலைவர் அரசியல் செய்வதற்கு எதுவும் கிடைக்காமல் அபாண்டமாகப் பேசுவது பரிதாபமாக உள்ளது.
4. 'இந்தியா' கூட்டணி தலைவர்களில் ஹேமந்த் சோரன், அரவிந்த் கெஜ்ரிவால் ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். ஊழல் செய்தவர்கள் மீது நடவடிக்கை தொடரும் என்று பிரதமர் நரேந்திரமோடி கூறிவருகிறார். இதை எந்த வகையில், ‘இந்தியா’ கூட்டணி எதிர்கொள்ளப்போகிறது?
அரவிந்த் கெஜ்ரிவாலுக்கும், ஹேமந்த் சோரனுக்கும் உள்ள அளவுகோல் ஏன் பா.ஜ.க.வில் சேரும் ஊழல் குற்றச்சாட்டுக்கு உள்ளானவர்களிடம் கடைப்பிடிக்கப்படுவதில்லை?
கர்நாடகத்தின் குவாரி ஊழல் புகழ் ரெட்டி சகோதரர்களில் தொடங்கி, மராட்டியம், மேற்கு வங்கம் என ஊழல் வழக்குகளில் சிக்கியவர்கள் பா.ஜ.க.வுக்கு வந்ததும் ஒரே நாளில் வாஷிங் மெஷினில் துவைப்பதுபோல க்ளீன் இமேஜ் கொடுக்கப்பட்டு, தேர்தலில் போட்டியிட சீட் கொடுக்கப்படுகிறதே அது எப்படி? பா.ஜ.க.வுக்குத் தாவியர்கள் மீதான ஊழல் குற்றச்சாட்டில் நடவடிக்கை என்ன? இதைத்தான் இந்தியா கூட்டணி மக்கள் மன்றத்திலும், நீதிமன்றத்திலும் முன்வைத்து வெற்றி பெறும்.
5. 'இந்தியா' கூட்டணியில் நிறைய பிளவு ஏற்பட்டுள்ளதே. உதாரணத்துக்கு வயநாடு தொகுதியில் ராகுல்காந்தியை எதிர்த்து இந்திய கம்யூனிஸ்டு கட்சி வேட்பாளர் ஆனி ராஜா போட்டியிடுகிறார். மேற்கு வங்காளம் மாநிலத்தில் மமதா பானர்ஜி தனியாக போட்டியிடுகிறார். இதேபோல், மேலும் சில மாநிலங்களிலும் பிரச்சினை இருக்கிறது. எப்படி கூட்டணிக் கட்சிகளை ஒன்றிணைக்கப் போகிறீர்கள், தேர்தலில் எப்படி வெற்றி பெற முடியும்?
தமிழ்நாட்டில் காங்கிரசும் இடதுசாரிகளும் ஒரே கூட்டணியில் இடம்பெறுவது புதிதல்ல. அதற்கு காரணம், தி.மு.க தலைமையின் அணுகுமுறை. கேரளா அரசியல் சூழல் இதிலிருந்து மாறுபட்டது. அதுபோலத்தான் மேற்கு வங்கமும்.
இந்தியா கூட்டணியைப் பொறுத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் எங்கள் கூட்டணியில் அதிக வெற்றி வாய்ப்புள்ள கட்சிகள் அதிக இடங்களில் போட்டியிடுவது என்றும், எக்காரணம் கொண்டும் பா.ஜ.க.வுக்கு வாய்ப்பளித்து விடக்கூடாது என்பதுதான் முதன்மையான நோக்கம். தேர்தல் முடிவுகளில் அதை நீங்கள் பார்க்கத்தான் போகிறீர்கள்.
6. நீங்கள் குடும்ப அரசியல் செய்வதாக தமிழ்நாட்டுக்கு வரும்போதெல்லாம் பிரதமர் மோடி குற்றச்சாட்டுகிறாரே. அதுபற்றி உங்கள் கருத்து என்ன?
நான் கலைஞரின் மகன் என்பதும் - உதயநிதி என்னுடைய மகன் என்பது இது ஊரறிந்த உண்மை. ஒரு கலைஞர் குடும்பம் மட்டுமல்ல, ஒவ்வொரு உடன்பிறப்பின் குடும்பமும் திராவிட முன்னேற்றக் கழகத்தைத்தான் முதல் குடும்பமாக நினைக்கிறது.
தி.மு.க. அரசு தமிழ்நாட்டு மக்களையே தனது குடும்பமாக மதித்து, திட்டங்களை நிறைவேற்றி வருகிறது. மதிப்பிற்குரிய குமரி அனந்தன் அவர்களின் அன்பு மகள், கர்நாடக முன்னாள் முதல்வர் எடியூரப்பாவின் மகன் உள்ளிட்ட பலருக்கும் இந்தத் தேர்தலில் போட்டியிட வாய்ப்பு கொடுத்துள்ள மோடி, தமிழ்நாடு வந்ததும் ஞாபகமறதி ஏற்பட்டு, குடும்ப அரசியல் என்று குற்றம்சாட்டுகிறார். ஸ்க்ரிப்ட்டை மாற்றட்டும்.
7. மாணவர்களுக்கு காலை உணவு திட்டம், கல்லூரி மாணவிகளுக்கு புதுமைப்பெண் திட்டம், கல்லூரி மாணவர்களுக்கு தமிழ் புதல்வன் திட்டம், இல்லத்தரசிகளுக்கு கலைஞர் மகளிர் உரிமைத் திட்டம், மகளிருக்கு விடியல் பயணத் திட்டம் என்று நிறைவேற்றியுள்ள உங்கள் பட்டியலில் அடுத்து உழவர்களுக்கு ஏதாவது திட்டம் இருக்கிறதா?
வேளாண்மைக்கென்று தனி பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறது திராவிட மாடல் அரசு. உழவர்களின் இலவச மின்சாரத் திட்டத்திற்காக கடந்த 3 ஆண்டுகளில் 2 லட்சம் புதிய இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.
விளைபொருட்களை மதிப்புக்கூட்டி விற்பனை செய்யும் திட்டமும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கலைஞர் ஆட்சியில் ஒழுங்குமுறை விற்பனைக்கூடம், உழவர் சந்தை என விவசாயிகளின் நலன் காக்கப்பட்டது போல, இந்த ஆட்சியிலும் அது தொடரும்.
8. போதைப் பொருட்களின் கேந்திரமாக தமிழகம் மாறிவிட்டதாக எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டுகிறதே?. பிப்ரவரி 15 முதல் மார்ச் 15 வரையிலான காலக்கட்டத்தில் தமிழகத்தில் போதைப்பொருள் கடத்தல் வழக்கில் 402 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 1,827 கிலோ கஞ்சா பறிமுதலும் செய்யப்பட்டுள்ளது. போதைப்பொருளைத் தடுக்க அரசு வகுத்துள்ள திட்டம் என்ன?
அ.தி.மு.க. ஆட்சியில்தான் குட்கா போதை பொருள் விற்பனை தொடர்பாக அமைச்சர் மீதும் டி.ஜி.பி மீதும் வழக்கு பதியப்பட்டது. கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்களின் நடமாட்டத்தைக் கட்டுப்படுத்திடவும், போதைப் பொருள் விற்பனையில் ஈடுபடுவர்கள் மீது சட்டரீதியான நடவடிக்கை எடுத்திடவும் தி.மு.க அரசு தொடர்ந்து உறுதியான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.
நானே பல ஆய்வுக்கூட்டங்களை நடத்தி, போதைப் பொருட்கள் ஒழிப்பில் தனிக் கவனம் செலுத்தி வருகிறேன். நீங்கள் மேலே குறிப்பிட்டுள்ள கைது நடவடிக்கையும், கஞ்சா பறிமுதலும் அதைத்தான் காட்டுகிறது.
இளைஞர்களிடம் போதைக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சாரத்தையும் மேற்கொண்டுள்ளது இந்த அரசு. இதைத்தாண்டி, நார்கோட்டிக் வகை போதைப் பொருட்கள் குஜராத் மாநில துறைமுகங்களில் இருந்துதான் இந்தியா முழுவதும் விநியோகம் செய்யப்படுகிறது என்பது ஆதாரங்களுடன் நிரூபணமாகியுள்ளது.
இத்தகைய போதைப் பொருட்களை நாட்டுக்குள் நுழையவிடாமல் தடுக்க வேண்டிய பொறுப்பில் இருப்பது ஒன்றிய அரசின் நேரடிக் கட்டுப்பாட்டில் உள்ள போதைக் கட்டுப்பாட்டு அமைப்பான என்.சி.பி.தான்.
எனவே, பல துறைகளிலும் வளர்ந்துள்ள மாநிலமான தமிழ்நாட்டை, போதை கேந்திரம் என பா.ஜ.க.வும் அதனுடன் சேர்ந்தவர்களும் குற்றம்சாட்டுவது, தமிழ்நாட்டிற்கு வரக்கூடிய முதலீடுகளைத் தடுப்பதற்கும், தமிழர்களின் வளர்ச்சியைக் கெடுப்பதற்குமான முயற்சிகள்தான்.
9. புதிய திட்டங்களை அரசு செயல்படுத்தும்போது, கடன் வாங்குகிறோம். தற்போதைய நிலையில் ரூ.7.26 லட்சம் கோடி கடன் இருப்பதாக சொல்லப்படுகிறது. சொந்த வருவாயும் ரூ.3 லட்சத்து 3 ஆயிரத்து 814 கோடி என்ற அளவில்தான் இருக்கிறது. உயர்ந்து கொண்டிருக்கும் கடன் அளவைக் குறைக்க சொந்த வருவாயைப் பெருக்கும் வகையில் திட்டம் எதுவும் வகுக்கப்பட்டுள்ளதா?
மாநில அரசிடம் இருந்த வரி வருவாய் உள்ளிட்ட பல சொந்த வருவாய்களை ஒன்றிய பா.ஜ.க. அரசு பறித்துக்கொண்டுவிட்டது. தமிழ்நாட்டிற்குத் திருப்பி அளிக்கக்கூடிய வரிப்பங்கீடும் மிகக் குறைவாக உள்ளது. அதனால்தான் புதிய திட்டங்களுக்காகக் கடன் வாங்க வேண்டியுள்ளது. அதுவும், நிர்ணயிக்கப்பட்ட அளவுக்குள்தான் இருக்கிறது.
10. 2019-ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் ராகுல்காந்தியை பிரதமர் வேட்பாளராக தி.மு.க. அறிவித்தது. ஆனால், இந்த தேர்தலில் யாரையும் பிரதமர் வேட்பாளராக அறிவிக்கவில்லை. ‘இந்தியா’ கூட்டணியின் பிரதமர் வேடட்பாளர் யார்? தேர்தலுக்கு முன்பே பிரதமர் வேட்பாளரைத் தேர்வு செய்து அறிவிக்க வாய்ப்பு இருக்கிறதா?
’இந்தியா’ என்ற பெயர்தான் எங்கள் வேட்பாளர். ஜூன் 4-ஆம் தேதிக்குப் பிறகு இந்தியாவுக்குப் புதிய – திறமையான – மக்கள் மேல் அக்கறைக் கொண்ட நல்ல பிரதமர் கிடைப்பார்.
11. வரிப் பகிர்வில் தமிழகம் ஒரு ரூபாய் மத்திய அரசாங்கத்துக்கு தந்தால், 29 பைசாதான் திரும்ப வருகிறது என்று கூறுகிறீர்கள். இதை அதிகரித்துப் பெற தமிழக அரசும், தி.மு.க.வும் என்ன முயற்சிகளை எடுக்கும்?
தி.மு.க.வின் நாடாளுமன்றத் தேர்தல் அறிக்கையின் 50-ஆவது அம்சமாக, மாநில அரசிடமிருந்து பெறப்படும் நிதியில் 42% முதல் 50% வரிப் பங்கீடு மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்க நிதிக்குழுமம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், செஸ் எனப்படும் மேல்வரியை மாநிலங்களுக்குப் பகிர்ந்தளிக்கப் பரிந்துரைக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனைச் செயல்படுத்துவதற்கான அனைத்து முயற்சிகளையும் எடுக்கும்போது, தமிழ்நாடு உள்ளிட்ட மாநிலங்களின் நிதி உரிமை பாதுகாக்கப்படும்.
12. தேர்தல் பத்திரங்கள் மூலம் பாரதீய ஜனதா கட்சி உள்பட அனைத்து கட்சிகளும் நன்கொடை பெற்றிருக்கிறது. தி.மு.க.வும் நன்கொடை பெற்றிருக்கிறது. இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு சில கருத்துகளை சொல்லியிருக்கிறது. இவ்வாறு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி பெறுவதை சீரமைக்க உங்களின் யோசனை என்ன?
தி.மு.க.வைப் பொறுத்தவரை, அது களம் கண்ட 1957 தேர்தல் முதலே கட்சியினரிடமும் பொதுமக்களிடமும் தேர்தல் நிதி வசூலித்து, அதற்கு முறையான கணக்கையும் சமர்ப்பித்து வருகிற கட்சியாகும்.
தேர்தல் பத்திரங்கள் மூலம் தி.மு.க பெற்ற நிதியும் வெளிப்படையானது. அதனால்தான், எங்கள் கட்சியின் பொருளாளர் அந்த விவரங்களைப் பொதுத்தளத்தில் வெளியிட்டார்.
ஆனால், பா.ஜ.க. இந்த தேர்தல் பத்திரங்களை தன்னுடைய நுட்பமான ஊழலுக்குப் பயன்படுத்தியிருக்கிறது. உச்சநீதிமன்றத்தில் ஒன்றிய பா.ஜ.க. அரசு, தேர்தல் பத்திரங்களின் விவரங்களை வெளியிட வேண்டியதில்லை என்று வாதிட்டது.
உச்சநீதிமன்றம் கண்டித்த பிறகுதான் உண்மைகள் வெளிவந்தன. இப்போது பிரதமர் மோடி, தேர்தல் பத்திரங்கள்தான் வெளிப்படைத்தன்மையான நிதி திரட்டலுக்கு உதவுகிறது என்கிறார்.
அந்த வெளிப்படைத்தன்மைக்கு மாறாக நீதிமன்ற வாதத்தில் மறைக்க முயன்றது ஏன்? பா.ஜ.க.வுக்கு தேர்தல் பத்திரங்கள் மூலம் நிதி தந்த பல நிறுவனங்கள் ரெய்டு நடவடிக்கைக்கு உள்ளாகியிருப்பதையும், அந்த நடவடிக்கைக்குப் பிறகே அவை தேர்தல் பத்திரங்கள் மூலம் பா.ஜக.வுக்கு நிதி அளித்துள்ளன என்பதையும் ஒப்பிட்டுப் பார்த்தால், பா.ஜ.க.வால் சட்டப்பூர்வமாகத் திட்டம் போட்டு செய்யப்பட்ட ஊழலே, தேர்தல் பத்திர நிதி சேகரிப்பு என்கிற உண்மை புலப்படும்.
13. நடக்க இருக்கும் நாடாளுமன்ற தேர்தலில் தி.மு.க.வுக்கு எதிர்க்கட்சி யார்? என்று நினைக்கிறீர்கள். அ.தி.மு.க.வா? பாரதீய ஜனதாவா?
பேரறிஞர் அண்ணா காலத்தில் தொடங்கி, கலைஞர் காலத்திலும் தற்போதும் தி.மு.க. யாரையும் எதிரியாகப் பார்ப்பதில்லை. சமூகநீதிக்கு எதிரானவர்கள் எங்களின் எதிரிகள், மதநல்லிணக்கத்தின் எதிரிகள் எங்கள் எதிரிகள். மாநில உரிமைகளின் எதிரிகள் எங்கள் எதிரிகள்.
அந்த வகையில் கருத்தியல் ரீதியாக பா.ஜ.க. என்பது இந்தியா முழுமைக்குமே எதிரிதான். தமிழ்நாட்டுத் தேர்தல் களத்தைப் பொறுத்தவரை, பா.ஜ.க.வுக்கு நம் மக்கள் எந்தவித முக்கியத்துவமும் தரமாட்டார்கள். அ.தி.மு.க.தான் சட்டமன்றத்தில் எங்களுக்கு எதிர்க்கட்சி.
14. பாரதீய ஜனதா கட்சி, தி.மு.க.வை கடுமையாக விமர்சிக்கிறது. தி.மு.க. அமைச்சர் ஒவ்வொருவரும் ஊழல் செய்கிறார்கள் என்று பட்டியலிடுகிறது. இதற்கு முற்றுப்புள்ளி வைக்க நீங்கள் என்ன செய்யத் திட்டமிட்டுள்ளீர்கள்?
ஏழரை இலட்சம் கோடி ரூபாய் முறைகேடு என்று பா.ஜ.க. அரசு மீது சி.ஏ.ஜி குற்றம்சாட்டியுள்ளது. ஆயுஷ்மான் எனும் மருத்துவத் திட்டம் முதல், நெடுஞ்சாலைகள் அமைப்பது வரை இந்தியா முழுவதும் ஊழலில் திளைப்பது பா.ஜ.க.தான்.
அதை மறைக்க, தி.மு.க. உள்ளிட்ட கட்சியினர் மீது ஊழல் குற்றச்சாட்டுகள் வைப்பது பா.ஜ.க.வின் வழக்கம். “யோக்கியரு வர்றாரு.. சொம்பை எடுத்து உள்ளே வை” என்கிற கிராமத்து மக்கள் மொழி பா.ஜ.க.வினருக்குத்தான் கச்சிதமாகப் பொருந்துகிறது.
15. தி.மு.க. தலைவராக இந்த கேள்விக்கு பதில் சொல்லுங்கள். தி.மு.க. இரளஞரணி செயலாளர் உதயநிதி ஸ்டாலின், எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி, பா.ஜனதா மாநில தலைவர் அண்ணாமலை, நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோரை ஒப்பிட்டு, அவர்களின் செயல்பாடுகள் பற்றி கூற முடியுமா?
யாரையும் யாருடனும் ஒப்பிட முடியாது. அவரவர் கட்சி சார்ந்து செயல்படுவதுதான் ஜனநாயகத்தின் தன்மை. இதில், தி.மு.க. எப்போதும் எவருடனும் ஒப்பிட முடியாத தனித்துவமான பேரியக்கம்.
16. ஒவ்வொரு முறையும் வெளிநாடுகளுக்கு தொழில் முதலீடுகளை ஈர்க்க நீங்கள் செல்லும்போது, மருத்துவ பரிசோதனைக்காகத்தான் செல்கிறீர்கள் என்று வதந்திகளை பரப்பி விடுகிறார்கள். “நீங்கள் நலமா” திட்டத்தை நிறைவேற்றிக் கொண்டிருக்கும் உங்களிடம் கேட்கிறோம். நீங்கள் நலமா?
நீங்களே சொல்லிவிட்டீர்கள் வதந்திகளைப் பரப்புகிறார்கள் என்று!
உங்களைப் போன்றவர்களின் அன்பினால், மக்களின் ஆதரவினால் எப்போதும் நலமாகவே இருக்கிறேன். நடைப்பயிற்சி, மூச்சுப் பயிற்சி, உடற்பயிற்சி என வாய்ப்புள்ள பயிற்சிகளை மேற்கொள்வதும், உணவுக் கட்டுப்பாடும் என் உடல்நிலையை நல்லபடியாகவே வைத்துள்ளது.
அதனை மக்களுக்காக உழைக்கப் பயன்படுத்துகிறேன். நான் நலமாக இருப்பதைவிடவும் நம் மக்கள் நலமாக இருக்க வேண்டும் என்ற வகையில் செயல்படுகிறேன்.
17. தமிழக அரசில், மேல் மட்டத்தில் இருந்து கீழ்மட்டம் வரை ஊழல் நடக்காமல் இருப்பதை கண்காணிக்கவும், அதைத் திறன்படத் தடுத்து நிறுத்தவும் என்ன திட்டத்தை செயல்படுத்துவீர்கள்?
திராவிட மாடல் அரசு வெளிப்படைத்தன்மையுடன் செயல்படுகிறது. பத்திரப்பதிவு தொடங்கி, பட்டா வழங்குதல், சான்றிதழ் வழங்குதல் உள்ளிட்ட பலவும் ஆன்லைன் வாயிலாக மேற்கொள்ளப்படுவதால் ஊழலுக்கு இடமில்லை.
அரசின் ஒவ்வொரு திட்டமும் கடைக்கோடி மக்கள் வரை சரியாகப் போய்ச் சேந்திருக்கிறதா என்கிற கண்காணிப்புடனேயே இந்த அரசு செயல்பட்டு வருகிறது. இனியும் அப்படியே செயல்படும்.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!