M K Stalin
"கட்டி முடிக்காத கோவிலை திறந்து எதையோ சாதித்ததாக காட்டிக் கொள்கிறார்கள்" - முதலமைச்சர் விமர்சனம் !
சென்னை அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கில் கழக நாடாளுமன்ற குழு தலைவர் டி.ஆர்.பாலு அவர்களின் நூல்கள் வெளியிட்டு விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் டி.ஆர்.பாலுவின் உரிமைக்குரல் என்ற முதல் நூலை திராவிட கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணியும், T.R. baalu, The man & message என்ற முதல் நூலை முன்னாள் ஒன்றிய அமைச்சரும், நாடாளுமன்ற உறுப்பினருமான ப.சிதம்பரமும், MY Voice for the voiceless என்ற முதல் நூலை இந்து என்.ராமும், பாதை மாறாப் பயணம் ( பாகம் -3) என்ற முதல் நூலை கவிப்பேரரசு வைரமுத்து ஆகியோரும் பெற்றுக்கொண்டனர்.
பின்னர் நிகழ்ச்சியில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், இன்று, நமது கழக நாடாளுமன்றக் குழுத் தலைவரும் - கழகப் பொருளாளருமான என்னுடைய அருமைச் சகோதரர் டி.ஆர்.பாலு அவர்கள் எழுதியுள்ள ‘பாதை மாறாப் பயணம்‘ புத்தகத்தின் மூன்றாவது பாகத்தை வெளியிடுகிறேன்.
பாலு அவர்களை பற்றி ஒரு வார்த்தையில் சொல்ல வேண்டும் என்றால், சின்சியாரிட்டி! ஏதாவது சொன்னோம் என்றால், அதை முடித்துவிட்டுத்தான் அடுத்த ஃபோனே செய்வார்.
விருதுநகர் முப்பெரும் விழாவில் நம்முடைய பாலு அவர்களைப் பற்றி நான் பேசியதை, மீண்டும் ஒருமுறை நினைத்துப் பார்க்கிறேன்... ‘கலைஞரின் தொண்டரா? தோழரா? செல்லப்பிள்ளையா? உடன்பிறப்பா? பற்றாளரா? வெறியரா? என்னவென்று பாலுவைச் சொல்வது? இது எல்லாம் கலந்த கலவைதான் பாலு‘ என்று அன்று நான் சொன்னேன்.
அன்றைக்கு நான் சுருக்கமாக சொன்னதற்கு விளக்கவுரையாக தன்னுடைய தன்வரலாற்றை எழுதி இருக்கிறார் நம்முடைய பாலு! 17 வயதில் தலைவர் கலைஞரின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்த பாலுவிற்கு, இப்போது 80 வயது! இன்றைக்கு வரைக்கும், ‘ஒரே கொடி - ஒரே இயக்கம் - ஒரே தலைமை‘ என்று கொள்கைப் பிடிப்போடு இயங்கிக் கொண்டு இருக்கிறார்.
முதல் பாகத்தில், அரசியலில் அவர் வளர்ந்தது பற்றியும், கழகத்தின் வளர்ச்சிக்காகத் தொண்டாற்றியது பற்றியும் எழுதிய அவர், இரண்டாவது பாகத்தில், அவரால் இந்திய நாடும் - நம்முடைய மாநிலமான தமிழ்நாடும் எப்படிப்பட்ட வளர்ச்சியை அடைந்தது என்றும் விரிவாக எழுதியிருக்கிறார்.
கிட்டத்தட்ட 27 ஆண்டுகள் நாடாளுமன்ற உறுப்பினராக, 12 ஆண்டுகள் ஒன்றியத்தில் அமைச்சராக இருந்திருக்கிறார். நாடாளுமன்றத்தின் இரண்டு அவைகளிலும் கழகத்தின் குரலை அவர் கம்பீரமாக ஒலித்திருக்கிறார்.
தமிழ்நாட்டில் ஓடும் தங்கநாற்கரச் சாலையாக இருந்தாலும், தேசிய நெடுஞ்சாலைகளில் இருக்கும் பாலங்களாக இருந்தாலும், இது அனைத்துமே நம்முடைய பாலு அவர்களின் திறமைக்கான மகுடங்கள்!
12 ஆண்டுகள் ஒன்றிய அமைச்சராக இருந்த பாலு, மூன்று முக்கியமான துறைகளில் முத்திரை பதித்தார். ஒன்றிய பெட்ரோலியத் துறை அமைச்சராக இருந்தபோது, தமிழ்நாட்டிற்கு மட்டும் 22 ஆயிரத்து 758 கோடி ரூபாய் மதிப்பிலான 15 பெரிய பெட்ரோலியத் துறை சார்ந்த திட்டங்களை கொண்டு வந்தார்.
சுற்றுச்சூழல் - வனத்துறை அமைச்சராக இருந்தபோது, தேசிய பல்வகை உயிரின வளங்கள் ஆணையத்தைத் தமிழ்நாட்டிற்குக் கொண்டு வந்தார்.
கப்பல் - தரைவழிப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சராக இருந்தபோது, 56 ஆயிரத்து 644 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டங்கள் தமிழ்நாட்டுக்கு வந்தது. தமிழ்நாட்டில் உள்ள தேசிய நெடுஞ்சாலைகளில் மட்டும் 335 பாலங்களைக் கட்டியது பாலுவின் மாபெரும் சாதனை!
ஆனால், இதையெல்லாம் விடப் பெரிய சாதனையாக வந்திருக்க வேண்டிய ஒன்று இருக்கிறது! அதுதான், பேரறிஞர் அண்ணாவின் கனவுத் திட்டமான சேதுசமுத்திரத் திட்டம்! தலைவர் கலைஞரின் வற்புறுத்தலால் இந்தத் திட்டம் 2004-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டாலும் அடுத்தடுத்து வந்த அரசியல் சூழ்ச்சிகளின் காரணமாக அந்தத் திட்டம் முடக்கப்பட்டது. அந்தத் திட்டம் நிறைவேறி இருந்தால், இந்தியாவின் வளர்ச்சிக்கும் - தமிழ்நாட்டின் வளர்ச்சிக்கும் மிக முக்கியமானதாக இன்றைக்கு அமைந்திருக்கும்.
இத்தகைய சாதனைக் களஞ்சியமாக இருக்கிறது டி.ஆர்.பாலு எழுதி இருக்கும் இந்த வாழ்க்கை வரலாறு! அதேபோல ஈழத்தமிழர் விடியலுக்காகத் திராவிட முன்னேற்றக் கழகம் ஆற்றிய பணிகளையும், அதனால் ஆட்சியையே இழந்த தியாகத்தையும் யாராலும் மறக்க முடியாது. இனப்படுகொலை மற்றும் மனித உரிமைக் குற்றச்சாட்டுகளுக்கு ஆளான இலங்கை அரசு மீது விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி, ஐக்கிய நாடுகள் அவையிடம் கோரிக்கை மனு அளிப்பதற்காக என்னையும், டி.ஆர். பாலுவையும்தான் தலைவர் கலைஞர் அவர்கள் அனுப்பி வைத்தார். ஐ.நா. துணைப் பொதுச்செயலாளர் யான் லியாசன் அவர்களையும், மனித உரிமை ஆணையர் நவநீதம் பிள்ளை அவர்களையும் சென்று சந்தித்து, ஈழத்தமிழர்களுக்காக வாதிட்டோம். இது தொடர்பான முழுமையான செய்திகளை பாலு இந்த நூலில் விளக்கமாக எழுதியிருக்கிறார்.
தலைவர் கலைஞர் அவர்கள் நிறைவுற்ற பிறகு நடந்த நிகழ்வுகளைச் சொல்கிறபோது, அது கழக வரலாறாகவும், என்னுடைய வரலாறாகவும் அமைந்துவிட்டது. கழகத்தையும் - என்னையும் - பாலுவையும் பிரித்து வரலாற்றை எழுத முடியாது!
நெருக்கடிக் காலத்திற்கு முன்பு, கோபாலபுரம் பகுதியில் நான் இளைஞர் தி.மு.க. தொடங்கிய நேரத்தில் எனக்குத் துணையாக இருந்தவர். பின்னாளில் நெருங்கிய நண்பர்கள் ஆனோம்.
இந்த வளர்ச்சிக்குப் பின்னால் இருக்கும் வழித்தடத்தை விளக்கத்தான் இந்தப் ‘பாதை மாறாப் பயணம்‘! இது பாலுவின் வரலாற்றுப் புத்தகம் மட்டுமல்ல, மற்றவர்களுக்கு வழிகாட்டும் புத்தகம்!
பா.ஜ.க.வை வீழ்த்தப் போகும் இந்தியா கூட்டணியின் உருவாக்கத்தில் நம்முடைய பாலுவிற்கு மிக முக்கியப் பங்கு இருக்கிறது. இந்தியாவின் எதிர்காலத்தை மனதில் வைத்து, எல்லோரும் கடமையாற்ற வேண்டும்! ஏன் என்றால், நடைபெற இருக்கும் நாடாளுமன்றத் தேர்தல் என்பது, யார் ஆட்சியில் அமரக் கூடாது என்பதற்காக நடைபெறும் தேர்தல்!
கடந்த பத்தாண்டுகாலமாக, மக்களுக்குக் கொடுத்த எந்த வாக்குறுதியையும் நிறைவேற்றாமல், தமிழ்நாட்டுக்கும், தமிழ்நாட்டு மக்களுக்கும் எதையும் செய்யாமல், பேரிடர் பாதிப்புக்குக் கூட நிதி ஒதுக்காமல் இறுதிக் காலத்தில் ஒரு கோயிலைக் காட்டி, மக்களைத் திசைதிருப்பப் பார்க்கிறது பா.ஜ.க. தலைமை. தேர்தலைச் சந்திக்க இருக்கும் பா.ஜ.க.விற்கு மக்களிடம் சொல்வதற்குச் சாதனை என்று எதுவும் இல்லை. அதனால்தான் முழுவதுமாக கட்டி முடிக்கப்படாத கோயிலை, அவசர அவரசமாகத் திறந்து, எதையோ சாதித்துவிட்டதாகக் காட்ட நினைக்கிறார்கள். இதுமாதிரியான திசைதிருப்பும் தந்திரங்களுக்கு மக்கள் சரியான பாடம் கொடுப்பார்கள். இது உறுதி!
எல்லா வகையிலும் மக்களை நசுக்கிய ஆட்சி, பா.ஜ.க. ஆட்சி. அந்தக் கோபம் மக்கள் மனதில் இருக்கிறது. தமிழ்நாட்டில் நாம் வலுவான கூட்டணியை அமைத்திருப்பது போன்று, இந்தியா முழுமைக்கும் வலுவான கூட்டணியை உறுதி செய்தாக வேண்டும்.
இந்தியா கூட்டணிக் கட்சிகள், தங்களுக்குள் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தையை அந்தந்த மாநிலங்களில் நடத்தி வருவதாக செய்திகள் வருகிறது. விரைவில் எல்லாம் நல்லபடியாக முடிந்து நாட்டு மக்களைக் காப்பாற்ற, தமிழ்நாட்டின் முன்னேற்றத்திற்கு உதவும் ஒரு ஒன்றிய அரசை உருவாக்க நாமெல்லாம் தேர்தல் களத்தில் நுழைகிறோம். அதற்கும், டி.ஆர்.பாலு அவர்கள் தயாராக வேண்டும் என்று இந்த நேரத்தில் கேட்டுக் கொள்கிறேன்.
இந்தப் பணிகளை எல்லாம் வெற்றிகரமாக முடித்த பிறகு, இந்த பாதை மாறாப் பயணத்தின் அடுத்தடுத்த பாகங்களை எழுதுவதற்கான வேலைகள் நம்முடைய டி.ஆர்.பாலு அவர்களுக்குக் காத்திருக்கிறது. தமிழ்நாட்டு முன்னேற்றத்தின் வரலாற்றைச் சொல்ல, திராவிட முன்னேற்றக் கழக வரலாற்றை, தலைவர் முத்தமிழறிஞர் கலைஞரின் வரலாற்றை, இந்தத் திராவிட மாடல் அரசின் வரலாற்றைத் தொடர்ந்து கழகத்தினர் எழுதிக் கொண்டே இருக்க வேண்டும் என்ற வேண்டுகோளை விடுத்து விடைபெறுகிறேன்” என்று கூறினார்.
Also Read
-
‘ஒரு தொகுதிக்கு ஒரு நூலகம்’ - மக்கள் பயன்பாட்டுக்கு எப்போது வரும்? - அமைச்சர் சேகர்பாபு !
-
"உயர்நீதிமன்றம் தலையில் குட்டியது மறந்து போனதா?" - ஒன்றிய அமைச்சர்களுக்கு சு.வெங்கடேசன் MP கேள்வி !
-
ஆமைகளை பாதுகாக்க ரூ.35 லட்சம் நிதி ஒதுக்கீடு... தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு !
-
ஒன்றிய அரசை கண்டித்து டெல்லி எல்லையில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் - விவசாயிகள் சங்கம் அறிவிப்பு !
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !