M K Stalin
"பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !
கடந்த 2002-ம் ஆண்டில் குஜராத் மாநிலம் கோத்ரா இரயில் எரிப்புச் சம்பவத்துக்குப் பின் குஜராத்தில் பெரும் வன்முறை ஏற்பட்டது. இந்த வன்முறையின்போது 5 மாத கர்ப்பிணியான பில்கிஸ் பானு என்ற பெண்ணை இந்துத்துவ கும்பல் கூட்டு பாலியல் வன்கொடுமை செய்தது. மேலும் அவரது குடும்பத்தாரையும், அவரது 2 வயது மகன்களையும் கொடூரமாக கொன்றது.
இந்த சம்பவம் இந்தியாவையே உலுக்கிய நிலையில், இதில் தொடர்புடைய 11 பேரை காவல்துறையினர் கைது செய்தனர். பிறகு கடந்த 2008-ம் ஆண்டு குற்றம் சாட்டப்பட்ட 11 பேருக்கும் ஆயுள் தண்டனை விதித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த வழக்கில் குற்றவாளிகளான 11 பேரையும், குஜராத் பா.ஜ.க அரசு 2022-ம் ஆண்டு சுதந்திர தினத்தன்று விடுதலை செய்ததது.
இதனை எதிர்த்து பில்கிஸ் பானு மற்றும் வேறு சிலர் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில், " பில்கிஸ் பானு வழக்கின் விசாரணை மகாராஷ்டிரா மாநிலத்துக்கு மாற்றப்பட்டதால் 11 குற்றவாளிகளை விடுவிப்பதற்கான அதிகாரம் குஜராத் அரசுக்கு கிடையாது.பல உண்மைகளை மறைத்து மோசடி மூலம் நீதிமன்றத்தில் விடுதலை செய்வதற்கான உத்தரவுகள் பெறப்பட்டுள்ளது. பாலியல் வன்கொடுமை குற்றவாளிகள் 11 பேரை விடுவிப்பது குறித்து பரிசீலிக்க வேண்டும் என்று பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அவர்கள் மீண்டும் சிறைக்கு செல்லவேண்டும்" என்று உச்சநீதிமன்ற நீதிபதிகள் தீர்ப்பளித்தனர்.
இந்த நிலையில், பில்கிஸ் பானு வழக்கில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். இது குறித்து தனது X சமூக வலைதள பக்கத்தில், "சகோதரி பில்கிஸ் பானு வழக்கில் இறுதியில் நீதி நிலைநாட்டப்பட்டு இருப்பது ஆறுதல் அளிக்கிறது. இருள் சூழ்ந்த வேளையில் நம்பிக்கை தரும் ஒளிக்கீற்றாக உச்சநீதிமன்றத் தீர்ப்பு அமைந்திருக்கிறது.
குஜராத் மாநில பா.ஜ.க. அரசு, உண்மைகளை மறைத்து குற்றவாளிகளுக்கு உடந்தையாக இருந்திருக்கிறது என்று உச்சநீதிமன்றம் இடித்துரைத்திருப்பது, அரசியல் இலாபங்களுக்காக நீதி வளைக்கப்பட்டதை வெளிச்சம் போட்டுக் காட்டி இருக்கிறது.
தங்களுக்கு வேண்டியவர்கள் என்றால் உண்மைகளை மறைத்து, நீதிமன்றத்தையே தவறாக வழிநடத்தி கொடுங்குற்றவாளிகளை விடுவிக்க பிரயத்தனம் செய்யும் பா.ஜ.க. ஆட்சியாளர்கள், எதிர்க்கட்சிகள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் நீண்டகால சிறைவாசிகளை - நன்னடத்தையின் அடிப்படையிலும் வயது மூப்பு கருதியும் சட்டபூர்வமாக முன்விடுதலை செய்யும் முயற்சிகளுக்கு முட்டுக்கட்டை போடுவது அவர்களது இரட்டை நிலைப்பாட்டையே காட்டுகிறது.
“நீதி கிடைத்தது கண்டு கண்ணீர் மல்கினேன்; என் குழந்தைகளைக் கட்டி அணைத்துக் கொண்டேன்; ஒரு பெரிய மலையையே என் மேல் இருந்து அகற்றியது போன்ற உணர்வை பெறுகிறேன். இப்போதுதான் நிம்மதிப் பெருமூச்சு விடுகிறேன்” என்று சகோதரி பில்கிஸ் பானு அவர்கள் கூறியுள்ள வார்த்தைகள் அவர் பட்ட இன்னல்களை விவரிக்கின்றன.
நீதி கேட்டு அவர் நடத்திய நெடும்பயணத்துக்குக் கிடைத்துள்ள வெற்றி, பாதிக்கப்படும் ஒவ்வொரு பெண்ணுக்கும் ஊக்கத்தையும் போராடும் மன உறுதியையும் தருவதாகும். அஞ்சாமலும் சலிப்பின்றியும் அவர் நடத்திய போராட்டம் வரலாற்றில் நிலைத்து நிற்கும். அவருக்கும் அவருக்கு துணையாக நின்ற மூத்த வழக்கறிஞர்கள் உள்ளிட்ட ஜனநாயக சக்திகள் அனைவருக்கும் என் பாராட்டுகள்" என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!