M K Stalin
BJP vs ADMK : “பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா?” - பழனிசாமியை விமர்சித்த முதல்வர் !
சென்னை கிழக்கு மாவட்ட கொளத்தூர் தொகுதியின் பெரம்பூர் தொன் போஸ்கோ பள்ளி வளாகத்தில் கழக சிறுபான்மை நல உரிமை பிரிவின் சார்பில் மதசார்பற்ற கிறிஸ்துமஸ் பெருவிழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, சிறுபான்மை நல உரிமை பிரிவின் செயலாளர் சுபேர் கான், சிறுபான்மை நல வாரிய தலைவர் பீட்டர் அல்போன்ஸ், நாடாளுமன்ற உறுப்பினர் கலாநிதி வீராசாமி, சட்டமன்ற உறுப்பினர்கள் தாயகம் கவி, இ.கருணாநிதி, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன், திருச்சபைகளின் பேராயர்கள், அருட்தந்தைகள், அருட்சகோதரிகள் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டனர்
இந்த விழாவில் கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் விழாத் தலைமையுரை ஆற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது பின்வருமாறு : "அண்மையில் சென்னையிலும் சுற்றியுள்ள மாவட்டங்களிலும் வெள்ளம் வந்தபோது மக்கள் எல்லோருக்கும் அரசின் சார்பில் நிவாரண பொருட்களை வழங்கினோம். உண்மையான அக்கறையோடு செய்தோம். அமைச்சர்களில் இருந்து அதிகாரிகள் வரைக்கும் மக்களோடு மக்களாக களத்திலேயே இருந்து செயல்பட்டார்கள். அதிலும் இங்கே இருக்கக்கூடிய நம்முடைய சேகர்பாபு அவர்கள் 24 மணி நேரமும் மக்களோடே இருந்தார். இதே மாதிரிதான் திமுக தொண்டர்கள், நிர்வாகிகள், மக்கள் பிரதிநிதிகள் எல்லோரும் இரவு பகல் பார்க்காமல் உழைத்தார்கள். சமூக சேவை அமைப்புகளைச் சேர்ந்தவர்கள், தன்னார்வத் தொண்டர்கள் என்று எல்லாரும் மக்களுக்காக உழைத்தார்கள்.
மழை வெள்ள பாதிப்பு ஏற்பட்டதும் குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.6000 வழங்கப்படும் என்று அறிவித்தோம். அறிவித்து இரண்டு வாரத்துக்குள் கொடுத்த ஆட்சிதான் நம்முடைய திராவிட மாடல் ஆட்சி. நான் வரும் போது தொலைபேசியில் அதிகாரிகளைத் தொடர்பு கொண்டு, “சென்னை, சென்னையைச் சுற்றியுள்ள மாவட்டங்களுக்கு அறிவித்தோமே, எந்த அளவுக்குக் கொடுத்திருக்கிறோம்” என்று கேட்டேன். 98% கொடுத்துவிட்டதாகச் சொன்னார்கள். மீண்டும் 5 லட்சம் பேர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள். அவர்களது கோரிக்கையும் விரைவில் பரிசீலிக்கப்பட்டு உரிய வகையில் பரிசீலிக்கப்பட்டு வழங்கப்படும்.
ஒன்றிய அரசிடம் இருந்து நிதி வரட்டும் என்று காத்திருக்காமல் ஒன்றிய அரசு இன்னும் நிதி தரவில்லை என்று காரணம் சொல்லாமல் உடனடியாக கொடுத்தோம். இதற்கு இடையில் தென்மாவட்டங்களிலும் மழை வெள்ளம் வந்தது. அந்த மக்களுக்கும் இழப்பீடு அறிவித்திருக்கிறேன். அவர்களுக்கும் விரைவில் கொடுக்கப் போகிறோம்.
அந்த மக்களை போய் நான் பார்த்தபோது அரசு இயந்திரம் உடனடியாகச் செயல்பட்டு எங்களைக் காப்பாற்றி விட்டது என்று சொன்னார்கள். அவர்களின் முகங்களில் மகிழ்ச்சியைப் பார்த்தபோதுதான் எனக்குக் கொஞ்சம் நிம்மதி வந்தது. பல்வேறு இன்னல்களுக்கு ஆளாகிக் கொண்டிருக்கும் அந்த மக்கள் எங்களை இன்முகத்தோடு வரவேற்றார்கள் அதையெல்லாம் பார்த்த போது நான் பூரித்துப் போனேன்.
ஆனால் இன்று அர்த்தம் இல்லாத குறைகளைச் சொல்கிறார்கள் நூற்றாண்டு காணாத மழை பெய்யும்போது இது மாதிரியான பேரிடர் ஏற்படும் நேரத்தில் அரசுக்கு உதவியாக, எந்தக் கட்சியாக இருந்தாலும் அது எதிர்க்கட்சியான அதிமுகவாக இருந்தாலும் அரசுக்கு துணை நின்றிருக்க வேண்டும். அரசுடன் இருந்து மக்களுக்குப் பணியாற்றி இருக்க வேண்டும். அப்படி யாராவது வந்தார்களா என்றால் இல்லை. கொரோனா காலகட்டத்தில் ஆட்சியில் இருந்த போதும் அவர்கள் இல்லை. எதிர்க்கட்சியாக இருந்த திமுகதான் முன்னின்று ஒன்றிணைவோம் வா என்ற திட்டத்தை அறிவித்து செயலாற்றியது. அதை நீங்கள் எல்லாம் மறந்திருக்க மாட்டீர்கள்.
இந்த மாதிரி நேரத்திலும் மலிவான அரசியல் செய்ய முன்னால் வந்து விடுகிறார் எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி. சில நாட்களுக்கு முன் நடந்த ஒரு விழாவில் பேசிய பழனிசாமி அவர்கள் சிறுபான்மை மக்களின் பாதுகாவலன் அ.தி.மு.க.தான் என்று பேசி இருக்கிறார். சிறுபான்மை மக்கள் மேல் அவருக்கு திடீர் என்று பாசம் பொங்குகிறது. குடியுரிமைத் திருத்தச் சட்டம், காஷ்மீர் சிறப்புரிமை ரத்து, முத்தலாக் என்று எல்லா சட்டங்களையும் கண்ணை மூடிக்கொண்டு ஆதரித்தவர் பழனிசாமி. கூட்டணி தர்மத்திற்காக ஆதரிக்க வேண்டியதாக இருந்தது என்று சப்பைக்கட்டு கட்டினார். இப்போதுதான் பாஜக-வுடன் கூட்டணி இல்லை என்று ஒரு கபட நாடகம் போட்டுக்கொண்டு இருக்கிறாரே! பாஜகவை எதிர்த்து ஒரு வார்த்தையாவது பேசியிருக்கிறாரா? இல்லையே!
இவரின் நாடகத்தை எல்லாம் பார்த்து மக்கள் யாரும் ஏமாற மாட்டார்கள். இந்தியா கூட்டணிதான் அடுத்த ஆண்டில் நடைபெற உள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ஒன்றிய அளவில் ஆட்சியை அமைக்கும் இந்தியா கூட்டணியின் ஆட்சி அமைய நாம் ஒன்றிணைந்து உழைக்க வேண்டும். அதற்கு நீங்கள் ஆதரவு தர வேண்டும்." என்றார்.
Also Read
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!
-
”தொழில் தொடங்க தமிழ்நாட்டிற்கு வாருங்கள்” : மலேசியா தமிழ்ச் சங்கத்தில் பேரவைத் தலைவர் அப்பாவு பேச்சு!