M K Stalin

”உழவர்களுக்கு விரோத அரசு ஒன்றிய பா.ஜ.க அரசு” .. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு!

முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் இன்று (8.7.2023) சென்னை, நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் வேளாண் வணிகத் திருவிழா 2023-யை தொடங்கி வைத்து ஆற்றிய உரை:-

உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கான வேளாண் வணிகத் திருவிழாவைத் தொடங்கி வைப்பதில் நான் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறேன்!

இதனை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய வேளாண்மை மற்றும் உழவர் நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் அவர்களையும் அவருக்கு துணையாக நின்று செயல்படக்கூடிய துறை சார்ந்த அதிகாரிகள், அலுவலர்கள் அத்தனை பேரையும் நான் இந்த நேரத்தில் பாராட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.

வேளாண் துறை வளர்ச்சி என்பது மக்களின் வாழ்வோடும் - உயிரோடும் தொடர்புடையது. ஒரு நாட்டின் செழிப்பின் அளவுகோல், வேளாண் துறை!

“வரப்புயர நீர் உயரும்

நீர் உயர நெல் உயரும்

நெல் உயரக் குடி உயரும்

குடி உயரக் கோல் உயரும்

கோல் உயரக் கோன் உயர்வான்” - என்று பாடினார் அவ்வையார் அவர்கள்!

எனவே, ஆட்சியாளர்களாகிய நாங்கள் பெயர்பெற வேண்டுமென்று சொன்னால், உழவர்கள் உரிய மரியாதையையும், சிறப்பையும், வளத்தையும் பெற்றாக வேண்டும்.

நம்முடைய அரசு பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டாண்டு காலமாக உழவர்களுடைய உள்ளத்தில் மகிழ்ச்சியை நாம் பார்க்கிறோம்.

கழக அரசு அமைந்ததும், வேளாண் துறைக்கு கூடுதல் முக்கியத்துவம் தரக்கூடிய வகையில் வேளாண்மைக்கென என தனி நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. இதனை மற்றுமொரு துறை என்று நினைக்காமல் வேளாண்மையை முதன்மையான துறையாக நாங்கள் நினைக்கின்ற காரணத்தால்தான், இத்தகைய வளர்ச்சியை எட்ட முடிந்தது. பல்வேறு புதிய திட்டங்களை நாம் தொடங்கி இருக்கிறோம்.

கலைஞரின் அனைத்துக் கிராம ஒருங்கிணைந்த வேளாண் வளர்ச்சித் திட்டம் முதலமைச்சரின் மானாவாரி நில மேம்பாட்டு இயக்கம் வேளாண் நிலங்களில் நீடித்த பசுமைப் போர்வைக்கான இயக்கம் நீர்ப்பாசன நவீன மயமாக்கல் திட்டம் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமை மண்வள மேலாண்மை இளைஞர்களைத் தொழில் முனைவோர் ஆக்குதல் - ஆகிய திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டு முனைப்புடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

மண்ணும் செழித்துள்ளது. மக்களும் செழித்துள்ளார்கள். பாசனப் பரப்பு அதிகமாகி உள்ளது. உற்பத்தியும் அதிகமாகி இருக்கிறது. கடந்த இரண்டாண்டு காலத்தில் வேளாண்மை - உழவர் நலத்துறை செய்த பல்வேறு செயல் திட்டங்கள்தான் இதற்கு முக்கியக் காரணமாக அமைந்திருக்கிறது!

உணவு தானிய உற்பத்தில் மகத்தான சாதனை செய்யப்பட்டுள்ளது. 120 லட்சம் மெட்ரிக் டன் உணவு உற்பத்தி செய்யப்பட்டுள்ளது. இது முந்தைய ஆண்டை விட 11 விழுக்காடு அதிகம்! சுமார் 79 இலட்சம் மெட்ரிக் டன் அரிசி உற்பத்தியும் 36 இலட்சம் மெட்ரிக் டன் சிறுதானிய உற்பத்தியும் 5 லட்சம் மெட்ரிக் டன் பயறு உற்பத்தியும் செய்யப்பட்டுள்ளது. இவை முந்தைய ஆண்டை விட 4 விழுக்காடு அதிகம்.

காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை நெல் சாகுபடி செய்ய ஜூன் 12-ஆம் நாளே அல்லது அதற்கு முன்பாகவோ மேட்டூர் அணையைத் திறந்து விட்டிருக்கிறோம். இது ஒரு மிகப் பெரிய சாதனை என்பதை நான் மகிழ்ச்சியோடு தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்!

காவிரி டெல்டா உழவர்களுக்காக 61 கோடி ரூபாய்க்கு குறுவை தொகுப்பு உதவித் திட்டத்தை வழங்கினோம். அரிசி மட்டுமல்லாமல், சிறுதானிய உற்பத்தியிலும், பயறு உற்பத்தியிலும் சாதனை படைத்திருக்கிறோம். பருத்தி, தென்னை என அனைத்திலும் கவனம் குவிக்கப்பட்டிருக்கிறது. உழவர்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல், கடன் வழங்குதல், மானியம் வழங்குதல் ஆகியவற்றில் அக்கறையோடு செயல்பட்டோம்.

காவிரி டெல்டா பகுதியை அக்கறையோடு கவனித்தோம். காவிரி டெல்டா பகுதியின் வேளாண் வளர்ச்சிக்கும் இப்பகுதியில் உள்ள ஆறுகள் மற்றும் கால்வாய்களைத் தூர்வாருவதற்கும் முன்னுரிமை அளித்திருக்கிறோம். இவை அனைத்தும் சேர்ந்து தமிழ்நாட்டில் மாபெரும் வேளாண் புரட்சியை நடத்தி உள்ளன. இதற்கெல்லாம் மகுடம் வைக்கக்கூடிய விழாவாக வேளாண் வணிகத் திருவிழா இப்பொழுது நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.

வேளாண்மை என்பது வாழ்க்கையாக, பண்பாடாக இருந்தாலும், அது லாபம் தரும் தொழிலாக முழுமையாக இன்னும் மாறவில்லை. அப்படி உயர்த்தப்பட வேண்டும் என்று தமிழ்நாடு அரசு நினைப்பதால்தான் வேளாண் வணிகத் திருவிழாவை நடத்துகிறது. வெறும் “அக்ரி எக்ஸ்போ”-ஆக இல்லாமல், இது “அக்ரி பிசினஸ் எக்ஸ்போ”-ஆக நடத்தப்படுகிறது.

உழவர்கள் உற்பத்தியாளர்களாக மட்டும் காலமெல்லாம் இருந்துவிடக் கூடாது. அவர்களே விற்பனையாளர்களாக மாற வேண்டும் என்ற உன்னதமான நோக்கத்துடன்தான் உழவர் சந்தைகளை தலைவர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அமைத்துக் கொடுத்தார்கள். இடைத்தரகர்கள் இல்லாமல் வேளாண் பொருட்களை உழவர்கள் விற்பனை செய்து பயன்பெற்றார்கள்.

அடுத்து வந்த ஆட்சியாளர்கள் அதனை முறையாகச் செயல்படுத்தி இருந்தால் உழவர்களுடைய வாழ்வில் மாற்றம் ஏற்பட்டிருக்கும். கழக அரசு அமைந்ததும், சுமார் 100 உழவர் சந்தைகளை மீண்டும் புத்தொளி பெற வைத்தோம். புதிதாக 10 உழவர் சந்தைகளை அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. உழவர் சந்தைகளில் இருக்கும் காய்கறி கழிவுகளை உரமாக்குவதற்கு அலகுகள் நிறுவப்பட்டு உரம் தயாரிக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது.

இதன் அடுத்த கட்டமாக, உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்கள் உருவாக்கப்பட்டுள்ளன. இத்தகைய நிறுவனங்களுக்கு மூலதன உதவியும், கடன் உத்தரவாதமும் தரப்பட்டுள்ளது. 140 உழவர் உற்பத்தியாளர் நிறுவனங்களுக்கு 12 கோடியே 45 லட்சம் ரூபாய் நிதி உதவி அரசால் தரப்பட்டுள்ளது. இவர்களது உற்பத்தி பொருட்கள் மாநகராட்சி அங்காடிகளில், விற்பனை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது. கூட்டமைப்பும் உருவாக்கப்பட்டுள்ளது.

வேளாண் துறையில், உழவர்களுக்காகச் செய்யப்பட்ட மாபெரும் முன்னெடுப்பு இது. வேளாண் ஏற்றுமதிகளை அதிகப்படுத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காகவே, மின்னணு மயமாக்கலும் நடந்து வருகிறது. இவை அனைத்தும் உழவர்களின் வாழ்க்கையை உயர்த்தும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.

மாபெரும் தொழில் நிறுவனங்கள் கண்காட்சிகள் நடத்தும் இடத்தில் வேளாண் கண்காட்சி நடத்தப்படுவது உள்ளபடி சிறப்பானது! இது ஒரு மிகப் பெரிய சாதனை! இது ஒரு மகத்தானது!

பாசனப் பரப்பு அதிகமாக வேண்டும். அதன் மூலமாக உற்பத்திப் பெருக வேண்டும். உற்பத்தியான பொருட்களுக்கு உரிய விலை கிடைக்க வேண்டும். உரிய விலையின் பயன்கள் உழவர்களுக்கு கிடைக்க வேண்டும். தரமான வேளாண் பொருட்கள் மக்களுக்கு உரிய விலையில் கிடைக்க வேண்டும். ஏற்றுமதி பெருக வேண்டும்.

இத்தகைய வேளாண் புரட்சியை நாம் நடத்தி வருகிறோம். அதற்காக எத்தனையோ திட்டங்களை நாம் தீட்டித் தந்திருக்கிறோம். இன்னும் பல திட்டங்களை அறிமுகம் செய்ய இருக்கிறோம்.

வேளாண்மையில், நவீன தொழில் நுட்பங்கள் அறிமுகம் செய்யப்பட வேண்டும். இரண்டு ஆண்டுகளாக நல்ல மழை பெய்து வருகிறது. தண்ணீர் பிரச்சினை இல்லை. வேளாண் பணியாளர்கள் கிடைக்கிறார்கள். இவை அனைத்தையும் உழவர்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

பருவநிலை மாற்றம் மற்றும் உணவுத் தேவை அதிகரிப்பு ஆகிய இரண்டையும் சமாளிக்கும் வகையில் நம்முடைய வேளாண் முயற்சிகள் அமைய வேண்டும்.

துல்லியமான வேளாண்மை முறைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். ஸ்மார்ட் போனைப் பயன்படுத்திப் பயிர் பாசன முறையைக் கண்காணித்தல், ஆளில்லா விமானங்களை பயன்படுத்துதல் ஆகியவை எல்லாம் இப்போது பயன்பாட்டுக்கு வந்துள்ளது.

வேளாண் துறையில் உற்பத்தியை அதிகரிக்க நவீன தொழில் நுட்பத்தை பயன்படுத்த வேண்டும் என்று சொல்லும் போது, உழவர்களுக்கு தொழில்நுட்பம் தெரிந்திருக்க வேண்டும். அதிகாரிகளுக்கு வேளாண்மை தெரிந்திருக்க வேண்டும். இவை இரண்டும் ஒருங்கிணைக்கப்பட்டால், வேளாண்மை என்பது வர்த்தகத் தொழிலாக மாறும். அதற்கு இது போன்ற கண்காட்சிகள் அடித்தளம் அமைக்கும். இது போன்ற கண்காட்சிகளை தொடர்ந்து நடத்துங்கள். வேளாண் விற்பனை மற்றும் வேளாண் வணிகத் துறை அதிகாரிகளால் முன்னெடுக்கப்படும் இது போன்ற கண்காட்சிகளால் விளை பொருட்களுக்கு அதிக சந்தை வாய்ப்பு கிடைக்கும் என்பதில் ஐயமில்லை.

இப்படி, வேளாண் பெருங்குடி மக்களின் நலன் போற்றும் அரசாக நம்முடைய அரசு இருந்து வருகிறது. ஆனால் உழவர்களுக்கு எதிராக

3 வேளாண் சட்டங்களை கொண்டு வந்து அவர்களை மாதக் கணக்கில் தகிக்கும் வெயிலிலும், நடுங்கும் குளிரிலும், தலைநகரில் போராட வைத்தது ஒன்றிய பாஜக அரசு. பல நூறு பேர் உயிரிழந்த பின்னும், அவர்களின் உறுதியை குறையாத கண்ட பின்னர்தான், அவர்கள் பின் வாங்கினார்கள். இதுதான் உழவர் விரோத ஒன்றிய பாஜக அரசு. ஆனால், திமுக அரசு எப்பொழுதும் உழவர்களின் நண்பனாக இருக்கும்.

அதனால்தான் 2006-ஆம் ஆண்டு ஆட்சிக்கு வந்ததும், ஒரே கையெழுத்தில், 7000 கோடி ரூபாய் வேளாண் கடன்களை தள்ளுபடி செய்தார் நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவர் வழியில் நடக்கும் நம்முடைய அரசு ஆட்சிக்கு வந்த ஒன்றரை ஆண்டுகளில், நமது அரசும் ஒன்றரை இலட்சித்திற்கும் அதிகமான இலவச மின் இணைப்புக்களை உழவர்களுக்கு வழங்கி வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.

இவையெல்லாம் வேளாண் பெருங்குடி மக்களும் நன்கு உணர்ந்திருக்கிறார்கள். அதன் அடிப்படையில், இந்த மண்ணையும், மக்களையும் காப்பதற்கான கடமை அவர்களுக்குக் காத்திருக்கிறது. அதற்கான காலம் நெருங்கிக் கொண்டிருக்கிறது.

வேளாண் அறிவு என்பது உழவர்கள் மட்டுமல்ல, அனைத்து மக்களும் பெற்றாக வேண்டும். மண்ணைக் காப்போம். மக்களைக் காப்போம்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: 2 ஆண்டுகள்.. உழவர்களுக்கு திமுக அரசு செய்தது என்ன?: வேளாண் வணிகத் திருவிழாவில் பட்டியலிட்ட முதலமைச்சர்!