M K Stalin

” 80 ஸ்குவாஷ் சாம்பியன்களை உருவாக்கிய ஒரே மாநிலம் தமிழ்நாடு”.. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமித பேச்சு!

தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (17.6.2023) சென்னையில் நடைபெற்ற சர்வதேச ஸ்குவாஷ் போட்டி - 2023 நிறைவு விழாவில் சர்வதேச ஸ்குவாஷ் போட்டியில் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகளை வழங்கி ஆற்றிய உரை:-

தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பையை நடத்திய அனைவருக்கும் முதலில் என்னுடைய மனமார்ந்த நன்றியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன். விளையாட்டு வீரர்களிடையே கவனத்தை ஈர்க்கக்கூடிய மாநிலமாக தமிழ்நாடு அமைய இது காரணமாக அமையும்.

கடந்த ஆண்டு உலக செஸ் ஒலிம்பியாட் போட்டி தமிழ்நாட்டில் நடந்தது. அதன்மூலமாக, தமிழ்நாடு உலகப் புகழ் அடைந்தது. உலக சதுரங்க ஒலிம்பியாட் போட்டியானது அதற்கு முன்பு இந்தியாவில் நடந்ததே இல்லை. முதன் முதலாக அதுவும் தமிழ்நாட்டில் நடந்தது. அது நமக்குக் கிடைத்த மிகப்பெரும் பெருமை.

செஸ் ஒலிம்பியாட் போட்டி நடத்த திட்டமிட்ட உடனேயே அதற்காக 102 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து தமிழ்நாடு அரசு ஆணையிட்டது. இதுபோன்ற பன்னாட்டு விளையாட்டுப் போட்டிகளை நடத்துவதற்கான ஏற்பாடுகளைச் செய்வதற்கு குறைந்தபட்சம் 18 மாதங்கள் ஆகும் என்பார்கள். ஆனால்நான்கே மாதங்களில் பன்னாட்டுப் போட்டிக்கான அனைத்து ஏற்பாடுகளையும் தமிழ்நாடு அரசு சிறப்பாகச் செய்தது. உலகமே வியக்கும் அளவுக்கு போட்டியையும் நாம் நடத்திக் காட்டினோம்.

தமிழ்நாட்டில் தாங்கள் எப்படி அன்போடும், மரியாதையுடனும் கவனிக்கப் பட்டோம் என்பதை உலக செஸ் விளையாட்டு வீரர்கள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்தார்கள். இதனை விட எங்களுக்கு வேறு பெரிய பாராட்டு நிச்சயமாக இருக்க முடியாது.

அத்தகைய கவனத்துடனும் பொறுப்புணர்வுடனும்தான், இப்போதும் இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை அரசு ஒத்துழைப்புடன் நடைபெற்றுள்ளன.

இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி அவர்கள், இதுபோன்ற போட்டிகளை தனிப்பட்ட சம்மேளனங்கள் நடத்தும் போட்டிகளாக அல்லாமல் அரசு நடத்தும் போட்டிகளைப் போலவே உதவிகளை செய்து வருகிறார்.

விளையாட்டுத் துறையின் கேப்டனாக இருந்து அனைத்து வகை விளையாட்டு வீரர்களையும் சாம்பியன்களாக ஆக்கிக் கொண்டு இருக்கிறார் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்கள். அவருக்கும் அவரது துறையைச் சார்ந்த உயரதிகாரிகளுக்கும், அலுவலர்களுக்கும் எனது மனமார்ந்த பாராட்டுக்களை நான் தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.

உலகின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்கள் கலந்துகொண்டுள்ள இந்த ஸ்குவாஷ் உலகக் கோப்பை போட்டியில், இந்திய அணியில் 4 வீரர்களில் 3 பேர் தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் என்பதும், அவர்கள் சென்னையில் உள்ள தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய அகாடமியில் தமிழ்நாடு ஸ்குவாஷ் ராக்கெட் சங்கத்தால் பயிற்சி பெற்றவர்கள் என்பதும் பெருமைக்குரிய ஒன்று.

நமது மாநிலம் தேசிய ஸ்குவாஷ் சாம்பியன்களில் 80 நபர்களைக் கொண்டு பலம் பெற்றுள்ளது. நமது மாநிலத்தில் ஸ்குவாஷ் துறையில் 5 அர்ஜுனா விருதுபெற்றவர்களும், பத்மஸ்ரீ விருது பெற்ற ஒருவரும் உள்ளனர்.

நம் மாநிலத்தின் முன்னணி ஸ்குவாஷ் வீரர்களான ஜோஷ்னா சின்னப்பா, தீபிகா பல்லிக்கல், சவுரவ் கோஷல் மற்றும் அபய் சிங் ஆகியோர் தமிழ்நாட்டின்விளையாட்டு வீரர்களுக்கு மிகுந்த ஊக்கமளிப்பவர்களாக உள்ளனர்.

ஒருபுறம் துவக்க நிலையில் உள்ள விளையாட்டு வீரர்களையும், மறுபுறத்தில் விளையாட்டில் சிறந்து விளங்குபவர்களையும் ஊக்குவிக் நமது அரசு அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது.

செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக முடித்த பிறகு, பன்னாட்டு விளையாட்டுகள் மற்றும் போட்டிகளுக்கான விருப்பமான இடமாக தமிழ்நாடு உருவெடுத்துள்ளது.

ஆகஸ்ட் மாதத்தில் சென்னையில் ஆசிய ஹாக்கி சாம்பியன்ஷிப்பையும், மகாபலிபுரத்தில் உலக சர்ஃபிங் லீக்கையும் நம் மாநிலம் நடத்தவுள்ளது. கேலோ இந்தியா இளைஞர் விளையாட்டுப் போட்டி – 2023, நமது மாநிலத்தில் நடைபெற உள்ளது என்று இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத் துறை அமைச்சர் அவர்கள் சமீபத்தில் அறிவித்து இருந்தார். இந்தப் போட்டிகளில் இந்தியாவின் அனைத்து மாநிலங்களிலிருந்தும் சிறந்த விளையாட்டு வீரர்கள் /வீராங்னைகள் பங்கேற்க உள்ளனர்.விளையாட்டு உள்கட்டமைப்பில் அரசு அதிநவீன வசதிகளை உருவாக்கி வருகிறது.

ஒரு விளையாட்டு வீரர், தனது திறமையைக் காட்டி வெற்றி பெற எதுவும் தடையாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தான் ‘Tamil Nadu Champions Foundation’என்கிற அறக்கட்டளையை சமீபத்தில் தொடங்கினோம்.

ஸ்குவாஷ் உலகக்கோப்பை - 2023 போட்டியை சென்னையில் நடத்துவதற்கு இந்திய ஸ்குவாஷ் ராக்கெட் சங்கம் எடுத்த முயற்சிகளை மீண்டும் பாராட்டுகிறேன். குறிப்பாக, சர்வதேச ஸ்குவாஷ் சம்மேளத்தின் தலைவர் ஜீனா உட்ரிட்ஜுக்கு(Zena Woodridge) நான் தனிப்பட்ட முறையில் நன்றி கூறுகிறேன். தமிழ்நாடுவிளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் துணைத் தலைவர் என்.ராமச்சந்திரன் அவர்கள் நமது மாநிலத்தில் விளையாட்டை மேம்படுத்தும் பணியில் முக்கிய பங்காற்றுகிறார்.

இந்தப் போட்டியில் பங்கேற்பதற்காக நாடு முழுவதிலுமிருந்து வந்திருக்கும்அனைத்து வீரர்களுக்கும் எனது நன்றியையும், வாழ்த்துக்களையும் நான் தெரிவித்துக்கொள்கிறேன். இப்போட்டிகளில் வெற்றி வாகை சூடிய வீரர், வீராங்கனைகளுக்கும்,விளையாட்டு மேலாளர்கள் மற்றும் அரசு அதிகாரிகளுக்கும் எனது பாராட்டுகளைத் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

விளையாட்டு வீரர்களே, வீராங்கனைகளே! வெற்றி ஒன்றே இலக்காகக் கொண்டு விளையாடுங்கள்! நீங்கள் அடையும் வெற்றி என்பது நீங்கள் பிறந்த நாடு அடையும் வெற்றி! நீங்கள் சார்ந்த நாடு அடையும் வெற்றி! எனவே, உங்களது கடமையும் பெரிது,பொறுப்பும் பெரிது. உங்களது திறமையும் பெரிது.அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: இந்தியாவுக்கே முன்மாதிரி மாநிலமாக தலைநிமிர்ந்து நிற்கிறது தமிழ்நாடு: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!