M K Stalin
”ஆசிய நாடுகளின் நுழைவாயில் சென்னை”: ஜப்பான் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேச்சு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுடன் தமிழ்நாட்டிற்கு உள்ள பொருளாதார மற்றும் வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் வகையிலும், சென்னையில் 2024 ஜனவரி மாதம் நடைபெறவுள்ள உலக முதலீட்டாளர்கள் மாநாட்டிற்கு அழைப்பு விடுக்கும் வகையிலும், தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்கும் நோக்கிலும், சிங்கப்பூர் மற்றும் ஜப்பான் நாடுகளுக்கு அரசு முறைப் பயணமாக 23.5.2023 அன்று சிங்கப்பூர் சென்றார்.
தொடர்ந்து, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 24.5.2023 மற்றும் 25.5.2023 ஆகிய தேதிகளில் சிங்கப்பூர் நாட்டின் தொழில் நிறுவனங்களின் தலைமை செயல் அலுவலர்களையும், சிங்கப்பூர் நாட்டின் அமைச்சர்களையும் சந்தித்து பேசியதுடன், அங்கு நடைபெற்ற முதலீட்டாளர்கள் மாநாட்டில் கலந்து கொண்டு பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டன.
அதனைத் தொடர்ந்து நேற்று (25.5.2023) காலை சிங்கப்பூரிலிருந்து புறப்பட்ட மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் நேற்றிரவு ஜப்பான் நாட்டின் ஒசாகா நகரத்திற்கு வந்தடைந்தார்.
அதன் தொடர்ச்சியாக இன்று (26.5.2023) ஜப்பான் நாட்டைச் சேர்ந்த ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்புடன் (Japan External Trade Organization – JETRO) இணைந்து நடத்தப்பட்ட மாபெரும் முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். இம்மாநாட்டில் சுமார் 80 ஜப்பானிய நிறுவனங்களின் மூத்த மேலாண்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
முதலீட்டாளர்கள் மாநாட்டில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரை:-
பரந்து விரிந்த இந்திய நாட்டின், தமிழ்நாடு என்ற தனிப்பெரும் மாநிலத்தின் முதலமைச்சராக, ஜப்பானின் ஒசாகா நகரத்துக்கு நான் வருகை தந்துள்ளேன். மிக அழகான - கம்பீரமான - கட்டடக் கலை மிளிரும் நகரம், ஒசாகா! அற்புதமான உணவுகள் கிடைக்கும் நகரம். நட்பைப் பேணக்கூடிய மக்கள் வாழும் நகரம். எனக்கு ஜப்பான் புதிதல்ல. உங்களுக்கு நானும் புதியவனல்ல.
சென்னை மெட்ரோ ரயில் திட்டம் மற்றும் ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டத்துக்காக ஜப்பான் நாட்டு நிதி உதவியை பெறுவதற்காக 2008-ஆம் ஆண்டு நான் டோக்கியோ நகருக்கு வருகை தந்ததை இந்த நேரத்தில் நினைத்துப் பார்க்கிறேன். மெட்ரோ ரயில் திட்டமாக இருந்தாலும், ஒகேனக்கல் கூட்டுக் குடிநீர் திட்டமாக இருந்தாலும் தமிழ்நாட்டு மக்களுக்கு மிக மிக முக்கியமான திட்டங்கள்.
அப்போது ஜப்பானை நம்பி உதவிகள் கேட்டோம். ஜப்பான் நாடு எங்களைக் கைவிடவில்லை.
2010-ஆம் ஆண்டு ஜப்பான் மற்றும் தமிழ்நாடு தொழில் துறை கூட்டுக் கூட்டம் சென்னையில் நடந்தது. அப்போது நான் தமிழ்நாட்டின் துணை முதலமைச்சராக இருந்தேன். ஜப்பான் நாட்டின் பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர் மசாயூகி நாஷிமா அவர்கள் அப்போது சென்னைக்கு வருகை தந்து அந்தக் கூட்டத்தில் கலந்து கொண்டார்கள்.
ஜப்பான் வெளிநாட்டு வர்த்தக அமைப்பின் அலுவலகத்தை அப்போது அவர்கள் திறந்து வைத்தார்கள். இப்படி ஒரு அலுவலகத்தை சென்னையில் நீங்கள் திறக்க வேண்டும் என்று முதன்முதலாக கோரிக்கை வைத்தவர் அன்றைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள்தான். அதனை ஏற்று அந்த அலுவலகம் சென்னையில் திறந்து வைக்கப்பட்டது. அந்தக் காலக்கட்டத்தில் ஜப்பான் நாட்டைச் சேர்ந்த 840 நிறுவனங்கள் இந்தியாவில் தொழில் தொடங்கி நிறுவனங்களை நடத்தி வந்தன.
அதில் தமிழ்நாட்டில் மட்டும் 170 நிறுவனங்கள் தங்கள் தொழிற்சாலையை நடத்தி வந்தன. அதற்கு ஒரு அலுவலகமாக அப்போது திறந்து வைக்கப்பட்டது. அதில் பேசும்போது, ஜப்பான் நாட்டைச் சேர்ந்த தனியார் நிறுவனங்கள் தமிழ்நாட்டில் தொழில் தொடங்க வேண்டும் என்று நான் கேட்டுக் கொண்டேன். அப்போது பேசிய ஜப்பான் அமைச்சர் மாண்புமிகு மசாயூகி நாஷிமா அவர்கள், "சென்னை என்பது ஆசிய நாடுகளின் நுழைவாயிலாக அமைந்துள்ளது" என்று குறிப்பிட்டார்கள்.
அதே, ஆசிய நாடுகளின் நுழைவாயிலான சென்னையில் இருந்து நான் வருகை தந்துள்ளேன். ‘உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை 2024’ ஜனவரி 10 மற்றும் 11 ஆகிய தேதிகளில் சென்னையில் நடத்த தமிழ்நாடு அரசு திட்டமிட்டுள்ளது. அந்த, உலக முதலீட்டாளர்கள் மாநாடு 2024 நிகழ்வுக்கு, கூட்டாளர் நாடாக ஒத்துழைப்பு அளித்திடுமாறு கேட்டுக் கொள்கிறேன்.
உலக முதலீட்டாளர் மாநாட்டுக்கு அழைப்பு விடுப்பதற்காக எங்கள் மாநிலத்தில் இருந்து பல்வேறு நாடுகளுக்கு நாங்கள் பயணம் மேற்கொண்டு வருகிறோம். அந்த வரிசையில், முதல் சுற்றுப்பயணமாக சிங்கப்பூர் மற்றும் ஜப்பானுக்கு வந்துள்ளேன். இந்தியாவும் ஜப்பானும் ஆசியாவின் இரண்டு பெரிய மற்றும் பழம்பெரும் ஜனநாயக நாடுகள். குறிப்பாக சொல்லப்போனால், ஜப்பான் நாட்டின் அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவியை (Official Development Assistance - ODA) அதிகம் பெறும் நாடு இந்தியாதான்.
இரு நாடுகளுக்கு இடையேயான, பொருளாதார உறவுகள், சமீப காலங்களில் மிகப் பெரும் எழுச்சி கண்டுள்ளது. இந்திய சந்தைக்குள் நுழையும் ஜப்பானிய நிறுவனங்களின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்தியாவுக்குள், தமிழ்நாடுதான் ஜப்பானிய முதலீடுகளுக்கு உகந்த மாநிலமாக முன்னணியில் விளங்குகிறது.
தெற்காசியாவிலேயே, முதலீடுகளை ஈர்த்திட உகந்த மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்திட நாங்கள் அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு வருகின்றோம். எண்ணற்ற ஜப்பான் நிறுவனங்கள், தமிழ்நாட்டைத் தேர்ந்தெடுத்து, தங்கள் திட்டங்களை இங்கு நிறுவியுள்ளனர்.
❖ நிசான்,
❖ தோஷிபா,
❖ யமஹா,
❖ கோமேட்ஸு,
❖ யோரோசு,
❖ யமஹா
❖ ஹிட்டாச்சி மற்றும்
❖ யூனிப்ரெஸ் – போன்ற மிகப் பெரும் நிறுவனங்கள், தங்கள் உற்பத்தித்
திட்டங்களை தமிழ்நாட்டில் அமைத்துள்ளன. இது நீண்டு கொண்டே
போகும் பட்டியல்.
❖ ஜப்பான் - இந்தியா முதலீடு மேம்பாட்டுக் கூட்டாண்மை
திட்டத்தின்கீழ் இந்தியாவில் நிறுவப்பட்டுள்ள 12 தொழில்
நகரியங்களில், 3 நகரியங்கள் தமிழ்நாட்டில் அமைந்துள்ளது.
❖ தமிழ்நாட்டில், அதிக அளவில் ஜப்பானியர்கள் வசித்து வருகின்றனர்
என்ற மகிழ்ச்சியான செய்தியை இங்கே தெரிவிக்க விரும்புகிறேன்.
❖ பொருளாதார, வர்த்தக மற்றும் தொழில் அமைச்சகத்துடன் (METI)
ஒரு புரிந்துணர்வு ஒப்பந்தம் - JETRO நிறுவனத்துடன் புரிந்துணர்வு ஒப்பந்தம் - ஜப்பான் வணிக மற்றும் தொழில் பேரவை (JCCI) ஆகிய நிறுவன ஒப்பந்தங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
❖ கனகாவா, ஹிரோஷி மாகாணங்களுடன் பொருளாதார புரிந்துணர்வு
ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளது.
❖ ஜப்பானிய நாட்டின் மிகப் பெரும் வங்கிகளான, பேங்க் ஆஃப்
டோக்கியோ, உள்ளிட்ட மூன்று வங்கிகளுடன் புரிந்துணர்வு ஒப்பந்தம்
மேற்கொள்ளப்பட்டுள்ளது.
❖ மேலும் பல மாகாணங்களுடன் பேச்சுவார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு
வருகிறது.
இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வடிவமைத்திடுவதில் முக்கியப் பங்காற்றிடும் விதமாக, 2030 நிதியாண்டிற்குள், 1 டிரில்லியன் அமெரிக்க டாலர் பொருளாதாரமாக மாற்றுவதற்கான ஒரு இலட்சிய இலக்கினை நிர்ணயித்து, அந்தப் பாதையில் பயணித்து வருகிறோம். கடந்த இரண்டு ஆண்டுகளில் மட்டுமே இதுவரை 5 ஆயிரத்து 596 கோடி ரூபாய் முதலீடு மற்றும் 4244 நபர்களுக்கு வேலைவாய்ப்பு என்ற வகையில், 5 ஜப்பானிய நிறுவனங்கள் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டுள்ளது.
❖ டைசல் கார்ப்பரேஷன்,
❖ மிட்சுபிஷி,
❖ மதர்சன் ஆட்டோ சொல்யூஷன்ஸ்,
❖ ரெனோ-நிஸ்ஸான் விரிவாக்கத் திட்டம் மற்றும்
❖ மக்கினோ போன்ற பல நிறுவனங்கள் தங்கள் திட்டங்களை நிறுவுவதற்காக,
சமீபத்தில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மேற்கொண்டுள்ளன.
இன்னும் பல நிறுவனங்களுடன் பேச்சு வார்த்தைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதற்குத் தேவையான பல்வேறு தொழிற் கொள்கைகளையும் நாங்கள் வெளியிட்டுள்ளோம்.
❖ நிதிநுட்பக்கொள்கை,
❖ ஏற்றுமதி மேம்பாட்டுக் கொள்கை,
❖ உயிர் அறிவியல் கொள்கை,
❖ ஆராய்ச்சி & மேம்பாட்டுக் கொள்கை,
❖ விண்வெளி & பாதுகாப்புக்கொள்கை,
❖ காலணி மற்றும் தோல்பொருட்கள் கொள்கை மற்றும்
❖ தொழில்நுட்ப ஜவுளிகளுக்கான ஒரு சிறப்பு ஊக்குவிப்புத் திட்டம் என்று பல
கொள்கைகளை வெளியிட்டு இருக்கிறோம்.
❖ ஒவ்வொரு திட்டத்திற்கும் தேவைப்படும் அனுமதிகளை விரைவாகப்
பெற்றிடும் பொருட்டு, Single Window Portal 2.0 மற்றும் TNSWP App
ஆகியவற்றையும் அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.
இதன் பொருட்டே, முதலீட்டாளர்கள் விரும்பும் மாநிலமாக, தமிழ்நாடு சிறந்து விளங்கி வருகிறது. அதனால்தான் எங்களுடன் இணைந்திடுமாறு, உங்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம். ஜப்பானிய நிறுவனங்கள் பெரும்பாலும் உற்பத்தி சார்ந்த துறைகளில் மட்டுமே முதலீடு மேற்கொள்ள விழைகின்றன.
இந்நிலையை சற்றே விரிவுபடுத்தி, மேம்பாட்டு திட்டங்களிலும் முதலீடு மேற்கொள்ள வருமாறு, இத்தருணத்தில் உங்களுக்கு நான் அழைப்பு விடுக்கிறேன். மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில், புதிய தொழில் பூங்காக்களை அமைத்து வருகிறோம்.
மேலும்,
❖ மருத்துவ சாதனங்கள் பூங்கா,
❖ உணவுப் பூங்காக்கள்,
❖ மின் வாகனங்களுக்கான பூங்கா மற்றும் வருங்கால நகர்
திறன் பூங்கா,
❖ மின்னணுவியல் உற்பத்தித் தொகுப்புகள்,
❖ ஒருங்கிணைந்த ஆடை மற்றும் ஜவுளி பூங்கா,
❖ தோல் காலணிகள் மற்றும் உப பொருட்களின் உற்பத்தித்
தொகுப்புகள் மற்றும் நிதிநுட்ப நகரம் என்று பல்வேறு துறை சார்ந்த
உட்கட்டமைப்புகளை நாங்கள் வலுப்படுத்தி வருகிறோம்.
இத்துறைகளில், உங்களின் மேலான முதலீடுகளை நாங்கள் வரவேற்கிறோம். உலகின் மிகப்பெரிய பொருளாதார நாடாக ஜப்பான் இன்று திகழ்ந்து வருகிறது.
இன்று உலக நாடுகள் தனித்து வளர்ந்துவிட முடியாது. பரஸ்பர நட்பின் மூலமாக நல்லுறவின் மூலமாகத் தான் வளர முடியும். இந்தியாவுடன் உள்ள அந்த நல்லுறவை குறிப்பாகத் தமிழ்நாட்டு முன்னேற்றத்துக்கு பயன்படுத்திட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். உயர்ந்த மனித வாழ்வியல் நெறியைக் கொண்ட நாடு ஜப்பான். அந்த அடிப்படையோடு தமிழ்நாட்டின் தொழில் மற்றும் பொருளாதார மேம்பாட்டுக்கு நீங்கள் பங்களிக்க முதலீட்டாளர்களை சிவப்புக் கம்பளம் விரித்து தமிழ்நாடும், வரவேற்கிறது என்று சொல்லி விடை பெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!