M K Stalin
திராவிட மாடல் ஆட்சி மகளிர் நலனின் பொற்காலம்.. பெண்களுக்கு முதலமைச்சர் கொண்டுவந்த 13 மகத்தான திட்டங்கள்!
பெண்களின் முன்னேற்றத்திற்கு வேண்டிய சட்டங்களை இயற்றி திட்டங்களை நிறைவேற்றி பெண்கள் கல்வி, வேலைவாய்ப்பு உரிமைகளும் பெற்று முன்னேறி அவர்கள் பல பதவிகளை அடைய திராவிட முன்னேற்றக் கழக அரசு பெரும் பங்கு ஆற்றியது. பெண் முன்னேற்றத்திற்கு தி.மு.க அரசும் முத்தமிழ் அறிஞர் கலைஞர் அவர்களும் ஆற்றிய பணிகள் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும் பணிகளாக அமைந்துள்ளன. மகளிர் முன்னேற்றதில் தி.மு.கவின் பங்கு மகத்தானது.
குறிப்பாக, திமுகவின் முன்னோடி இயக்கமான நீதிக்கட்சியும் நீதிக்கட்சி அரசும் பெண்கள் முன்னேற்றத்திற்கு பெரும்பங்கு ஆற்றின. 10-5-1921 அன்று சட்டம் இயற்றி பெண்களுக்கு வாக்குரிமை வழங்கியது நீதிக்கட்சி அரசு. இது பெண்மைக்கு நீதிக்கட்சி சூட்டிய பொன் மகுடம் ஆகும்.
அதனைத் தொடர்ந்து தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் பெண் கல்வி, பெண் விடுதலை, பெண் உரிமை, பெண்கள் முன்னேற்றம் ஆகியவற்றில் மிகுந்த அக்கறை கொண்ட தலைவராக உள்ளார். அவர் சென்னை மாநகராட்சியின் மேயராக, தமிழக அரசின் உள்ளாட்சித்துறை அமைச்சராக, துணை முதலமைச்சராக பதவி வகித்த காலங்களில் மகளிர் சுய உதவிக் குழுக்கள் மூலம் மகளிர் முன்னேற்றம் அடைய பெரும் பங்காற்றினார்.
பின்னர் சட்டமன்றத் தேர்தலில் மாபெரும் வெற்றியை பெற்று ஆட்சி அமைத்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பதவியேற்றவுடனே பெண்கள் மற்றும் குழந்தைகளை நலனில் அக்கறைக் காட்டி சிறப்புத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதுமட்டுமல்லாது கல்வி, உயர்பதவி, தொழில் துறை ஆகியவற்றில் பெண்கள் மேன்மை பெறவும், பெண்கள் அதிகமான அளவில் வேலைவாய்ப்பு பெறவும், ஏழ்மையில் உள்ள பெண்கள் ஏற்றம் பெறவும் பல திட்டங்களை நிறைவேற்றி பாடுபட்டு வருகிறார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆட்சியில் பெண்களுக்கு பொற்காலமாக பார்க்கப்படுகிறது. இதற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெண்களுக்காக கொண்டுவந்த சிறப்புத் திட்டங்கள் பின்வருமாறு :-
1. புதுமைப்பெண் திட்டம்
பெண்களுக்கு உயர்கல்வி அளித்து, பாலின சமத்துவத்தை ஏற்படுத்துதல், குழந்தை திருமணத்தைத் தடுத்தல், குடும்பச் சூழ்நிலை மற்றும் வறுமை காரணமாக மேற்படிப்பு படிக்க இயலாத மாணவிகளுக்கு பொருளாதார ரீதியாக உதவுதல், பெண் குழந்தைகளின் இடைநிற்றல் விகிதத்தை குறைத்தல், பெண் குழந்தைகளின் விருப்பத் தேர்வுகளின்படி அவர்களின் மேற்படிப்பை தொடர ஊக்குவித்தல், பெண்களுக்கான தொழில் வாய்ப்புகளை அதிகரித்தல், பெண்களின் சமூக மற்றும் பொருளாதார பாதுகாப்பை உறுதி செய்தல் போன்றவற்றின் மூலம் அறிவார்ந்த சமுதாயத்தை உருவாக்க வழிவகை செய்ய புதுமைப்பெண் திட்டத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கொண்டுவந்துள்ளார்.
2. கட்டணமில்லா பேருந்து பயணம்.
தி.மு.க தேர்தல் வாக்குறுதியில் இடம்பெற்றிருக்கும் அறிவிப்பினை செயலாக்கும் வகையில், தமிழ்நாடு முழுவதும் உள்ள அரசுப் போக்குவரத்துக் கழகக் கட்டுப்பாட்டில் இயங்கும் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் பயணம் செய்யும் பணிபுரியும் மகளிர், உயர்கல்வி பயிலும் மாணவியர் உள்ளிட்ட அனைத்து மகளிரும் கட்டணமில்லாமலும், பேருந்துப் பயண அட்டை இல்லாமலும் பயணம் செய்ய முதலமைச்சர் உத்தரவிட்டார்.
3. புதிய மகளிர் கல்லூரிகள்.
இந்து சமய அறநிலையத்துறை சார்பில் சென்னையில் பெண்களுக்காக 2 மகளிர் கலை கல்லூரிகளை தொடங்கி வைத்தார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.
4. பெண் பாதுகாப்பு ‘அவள்’ திட்டம்
“அவள்” திட்டத்தின் மூலம் பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தவும், தற்காப்பு பயிற்சிகள் அளிக்கவும், பெண்கள் மற்றும் குழந்தைகள் தொடர்பான பிரச்சனைகளில் காவல்துறை அதிகாரிகள் மற்றும் ஆளிநர்களின் அணுகுமுறை மற்றும் திறனை மேம்படுத்தவும் திட்டமிடப்பட்டுள்ளது.
மேலும், 8.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் நான்கு அம்ச பயிற்சி மற்றும் உள்கட்டமைப்புகள் ஏற்படுத்தி, “அவள்” திட்டம் சென்னை பெருநகர காவலில் செயல்படுத்தப்படவுள்ளது.
5. மகளிருக்கு ரூ.25000 கோடி கடன்!
கூட்டுறவுக் கடன் சங்கங்கள் மூலம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு வழங்கப்பட்ட கடன் தொகை 2,756 கோடி ரூபாய் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
6. அரசு பணிகளில் 40% இட ஒதுக்கீடு
மாற்றத்தை ஊக்குவிப்பதில் பாலின சமத்துவம் முக்கியம் என்பதை அடிப்படையாகக் கொண்டு, நேரடி நியமனம் மூலம் நடைபெறும் அரசுப் பணி நியமனங்களில் பெண்களுக்கான ஒதுக்கீடு 40 சதவீதமாக உயர்த்தி அறிவிக்கப்பட்டுள்ளது.
7. புதிய மகளிர் காவல் நிலையம்
சமூகத்தில் பெண்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளைக் கையாள்வதில் காவல் துறைக்கு உதவி செய்யும் முதன்மை நோக்கத்துடன் மறைந்த முன்னாள் முதல்வர் கருணாநிதியால், 1973-ஆம் ஆண்டு தமிழ்நாடு காவல்துறையில் முதன்முதலில் மகளிர் காவல் பணியில் நியமிக்கப்பட்டனர்.
பெண்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், அனைத்து உட்கோட்டங்களிலும் ஒரு அனைத்து மகளிர் காவல் நிலையம் என்ற வகையில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று 2021-22ஆம் ஆண்டு காவல்துறை மானியக் கோரிக்கையில் அறிவிக்கப்பட்டது. அதன்படி, புதிதாக 20 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது. தற்போது மாநிலத்தில் 202 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் செயல்படுகின்றன.
8. பணிபுரியும் பெண்கள் விடுதிகள்
தமிழ்நாடு அரசு மகளிர் விடுதி தமிழகத்தில் பணிபுரியும் ஏழை எளிய மக்களின் நலனுக்காக தமிழக அரசாங்கத்தின் சார்பாக வேலைக்குச் செல்லும் மகளிருக்கு தங்கும் விடுதி வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது. பணி நிமித்தம் தங்கள் குடும்பங்களையும் உறவினர்களையும் பிரிந்து வெளியூர்களில் வேலை புரியும் மகளிர் இதன் மூலம் பயன் பெறுவர்.
9. நீண்ட நேரம் நிற்கும் பெண் காவலருக்கு விலக்கு!
சாலை பாதுகாப்பு பணியில் பெண் காவலர்களை ஈடுபடுத்த வேண்டாம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியதை அடுத்து பெண் காவலர்கள் நீண்ட நேரம் நிற்பதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
10. உள்ளாட்சி தேர்தலில் 50 சதவீத இடஒதுக்கீடு!
உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான இடஒதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதில், பெண்களுக்கென 50 சதவிகிதம் இடஒதுக்கீடு வழங்கப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் தி.மு.க ஆட்சியின் போது, உள்ளாட்சித் தேர்தலில் 50 சதவீத இடங்கள் பெண்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன.
11. ஓராண்டு கால பேறுகால விடுப்பு !
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் ஆட்சி பொறுப்பேற்றுள்ள திமுக அரசு 9 மாத பேறு கால விடுப்பை ஓராண்டாக உயர்த்தி வழங்கியது. பச்சிளம் குழந்தைகளுக்கு ஓராண்டுக்கு கட்டாயம் தாய்ப்பால் கொடுக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் அறிவுரையாக இருக்கிறது. அந்த வகையில் அரசு ஊழியர்களுக்கான பேறு கால விடுப்பை உயர்த்தி வழங்கியுள்ளது திமுக அரசு. இதை பலரும் வரவேறனர்.
12. மாநகராட்சியில் பெண் மேயர்
தமிழ்நாட்டில் நடந்து முடிந்த நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் சென்னை மாநகராட்சியில் மொத்தமுள்ள 200 வார்டுகளில் 153 வார்டுகளில் தி.மு.க வெற்றி பெற்று, மாநகராட்சியை தனிப்பெரும்பான்மையுடன் கைப்பற்றியது.
தமிழகத்தில் தற்போது புதிதாக உருவாக்கப்பட்டுள்ள 6 மாநகராட்சிகள் உட்பட 21 மாநராட்சிகள், 138 நகராட்சிகள், 649 பேரூராட்சிகள் உள்ளன. அதில், மேயர் பதவிகள் இட ஒதுக்கீடு அடிப்படையில் பிரிக்கப்பட்டு, 11 மேயர் பதவிகள் பெண்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளன.
13. மகளிருக்கு மாதம் ரூ.1000 உரிமைத் தொகை
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையில் இருந்த மிக முக்கியமான வாக்குறுதி, குடும்பத் தலைவியர்க்கு 1000 ரூபாய் உரிமைத் தொகை வழங்கப்படும் என்பது ஆகும். அந்த வாக்குறுதியை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிறைவேற்றி இருக்கிறார். இத்திட்டத்திற்காக, இந்த வரவுசெலவுத் திட்டத்தில் 7,000 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
மாநில முன்னேற்றத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிக்க செய்ய புதுமைப்பெண் திட்டம், இலவச பேருந்து பயணத் திட்டம், மற்றும் உள்ளாட்சியில் பெண்களுக்கு 50% இடஒதுக்கீடு என மேல குறிப்பிட்டுள்ள திட்டங்கள் அனைத்தும் மகளிர் மேம்பாட்டிற்கு அடித்தளமிட்டுள்ளது திராவிட மாடல் ஆட்சி.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!