M K Stalin
”வீட்டையும் நாட்டையும் சேர்த்து பாதுகாக்கும் பெண் காவலர்களுக்கு 2 சல்யூட்” .. முதலமைச்சர் பாராட்டு!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (17.3.2023) சென்னை, நேரு உள்விளையாட்டரங்கில் நடைபெற்ற ‘‘மகளிர் காவலர்கள் பொன்விழா ஆண்டு‘‘ நிகழ்ச்சியில் ஆற்றிய உரை:-
உங்கள் அனைவருக்கும் என்னுடைய அன்பான வணக்கம். என்னுடைய மகளிர் தின வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டேன். பெண்களுக்கு நீங்கள் சொல்லும் அறிவுரை என்ன என்ற கேள்விக்கு நான் சொன்னேன், பெண்களுக்கு இல்லை, ஆண்களுக்கு ஒரு அறிவுரை சொல்ல விரும்புகிறேன் என்று சொல்லி ஆண்கள், பெண்கள் மீதான தன் பார்வையை மாற்றிக் கொள்ள வேண்டும் என்றேன். அதனை மெய்ப்பிக்கக்கூடிய வகையில் இங்கு நான் வந்ததிலிருந்து பெண்கள் செய்த வீரச் செயல்களைப் பார்த்து நானும் சரி, இங்குள்ள அனைத்து ஆண்களின் பார்வையும் மாறிவிட்டது. அத்தனை பேருக்கும் என்னுடைய வாழ்த்துகளையும் வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பொன்விழா என்று சொல்லப்பட்டாலும் இது பெண் விழா. மிக மிக கம்பீரமாகச் சிங்கப் பெண்களைப் போல உட்கார்ந்திருக்கும் உங்களை எல்லாம் பார்க்கும் போது, இதைப் பார்க்க தந்தை பெரியார் இல்லையே! பேரறிஞர் அண்ணா இல்லையே! முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே! என்ற ஏக்கம்தான் எனக்கு முதலில் வந்தது.
பெண்களின் கையில் இருக்கும் கரண்டியைப் பறித்து புத்தகங்களைக் கொடுத்தால் போதும் என்று சொன்னவர் தந்தை பெரியார் அவர்கள். படிக்க மட்டுமல்ல, அதிகாரம் பொருந்திய பொறுப்புக்கும் பெண்கள் வரவேண்டும் என்று மனதார விரும்பியவர் அவர். ஆண்களைப் போலவே பெண்கள் "கிராப்" வைத்துக் கொள்ள வேண்டும், பேண்ட் சட்டை போட்டுக் கொள்ள வேண்டும் என்று சொன்னவர் தந்தை பெரியார்.
பெண்கள் அதிகளவில் அரசியலுக்கு வரவேண்டும், அவர்கள் மேடைகளில் முழங்க வேண்டும் என்று ஊக்கப்படுத்தியவர் பேரறிஞர் பெருந்தகை அறிஞர் அண்ணா அவர்கள்.பெண்கள் உயர்கல்வியைக் கற்று, தகுதிக்கேற்ற வேலைகளுக்குச் செல்ல வேண்டும் என்று ஆசைப்பட்டவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். பெண்களுக்கு சொத்துரிமை உண்டு என்பதை சட்டம் ஆக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்.
அவர்தான் தமிழ்நாட்டு வரலாற்றில் முதன்முதலாக பெண்களும் காவலர் ஆகலாம் என்பதை உருவாக்கி, காக்கி பேண்ட் சட்டை அணிய வைத்து பெண்கள் கையில் துப்பாக்கியையும் ஏந்த வைத்தார். அந்த துப்பாக்கியை ஏந்த வைத்தது மட்டுமல்ல, இன்றைக்கு தமிழ்நாட்டில் 35 ஆயிரத்து 329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர் என்றால், இதற்கான விதையை விதைத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள். அவரை நினைத்துப் பார்ப்பதை என்னுடைய கடமையாக நான் கருதிக்கொண்டு இருந்தாலும், இங்கு வந்திருக்கக்கூடிய அனைத்து பெண் காவலர்களின் கடமையாகவும் நான் கருதுகிறேன்.
ஐம்பதாவது பொன்விழாவைக் கொண்டாடும் இந்த நேரத்தில், தமிழ்நாடு காவல்துறையில் பணியாற்றும் பெண் காவலர்கள் அனைவருக்கும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளை நன்றி உணர்வோடு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
இந்த நாட்டைக் காத்துக் கொண்டு இருக்கும் காவல் அரண்கள் நீங்கள். கோடிக்கணக்கான மக்களின் உயிரும் உடமையும் உங்களை நம்பி ஒப்படைக்கப்பட்டு இருக்கிறது. இன்னும் சொன்னால், முதலமைச்சர் என்ற முறையில் எனக்கான பாதுகாப்புப் படையிலும் பெண் காவலர்கள் இருக்கிறார்கள்.
முதலமைச்சர் செல்லும் பாதையில் பாதுகாப்புப் பணிக்காக காவலர்கள் நிறுத்தப்படுவது வழக்கம். நான் வேண்டாம் என்று சொன்னாலும், பாதுகாப்பு அதிகாரிகள் அதை ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஆனாலும் அவர்களுக்கு, நான் முதலமைச்சர் என்கிற முறையில், முதலமைச்சர் ஆனதும் ஒரு வேண்டுகோளை வைத்தேன். பெண் காவலர்களை ரொம்ப நேரம் வெயிலில் நிற்க வைக்க வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன். அதனை ஏற்று, பெண் காவலர்கள் சாலைகளில் இருபுறமும் நிற்க வைப்பது தவிர்க்கப்பட்டது, இது எல்லாம் உங்களுக்குத் தெரியும். பெண் காவலர்கள் மீது எனக்கு உள்ள ஒரு உணர்வுபூர்வமான, அக்கறையான வெளிப்பாடு.
பெண் காவலர்களுக்கான சீருடையில் திருத்தம் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தபோது, சட்டமன்ற உறுப்பினர் பொன்னம்மாள் தலைமையில் ஒரு குழு அமைக்கப்பட்டது. அவர்களது பரிந்துரைப்படி உடை தேர்வு செய்யப்படும் என்று தாயுள்ளத்தோடு முடிவெடுத்தார் அன்றைக்கு இருந்த முதலமைச்சர் தலைவர் கலைஞர் அவர்கள்.
மக்களைக் காக்கும் உங்களை நாங்கள் எப்போதும் காப்போம் என்பதற்கு எடுத்துக்காட்டுகள் இவை. 1967-ஆம் ஆண்டு கழக ஆட்சி முதன்முதலாக மலர்வதற்கு முன்பே காவலர்களின் பிரச்சினைக்காக குரல் கொடுத்தவர் முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்.
'உதயசூரியன்' என்ற நாடகத்தை எழுதி அதில் தலைவர் கலைஞர் அவர்களே நடித்தார்கள். அந்த நாடகத்தில் போலீஸ்காரர்களின் நிலைமையைச் சுட்டிக் காட்டும் வகையில் ஒரு பாடல், அதை கலைஞரே எழுதினார்... அந்தப் பாட்டுக்காகவே அந்தக் காலத்தில் அந்த நாடகம் தடை செய்யப்பட்டது.
இதை மனதில் வைத்திருந்த கலைஞர் அவர்கள் ஆட்சிக்கு வந்ததும், காவலர்களுக்காக தனியாக ஆணையம் அமைத்து ஊதியங்களை உயர்த்தினார்.
அந்தக் காலத்தில் காவலர்கள் அனைவரும் அரைக்கால் சட்டைதான் போட்டிருப்பார்கள். அதனை 'பேண்ட்' ஆக ஆக்கியவர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.
1973-ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் பெண் காவல் உதவி ஆய்வாளர் மற்றும் பெண் காவலர்களை காவல் பணியில் சேர்க்க வேண்டும் என்ற வரலாற்றுச் சிறப்புமிக்க உத்தரவை அதாவது அரசாணை எண் 2382, நாள் 5.9.1973-ன் மூலம் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அதை வெளியிட்டார்கள். அதன் விளைவாக, ஓர் உதவி ஆய்வாளர் மற்றும் 21 பெண் காவலர்கள் 27-12-1973 அன்று பணியில் சேர்க்கப்பட்டார்கள். சேத்துப்பட்டு சேவா சதன் பள்ளியில் ஓராண்டு அடிப்படைப் பயிற்சி வழங்கப்பட்டது. சிறப்பான பயிற்சி முடித்த நிலையில் 01.11.1974 அன்று ராஜரத்தினம் விளையாட்டு அரங்கத்தில் அப்போதைய ஐ.ஜி F.V.அருள் அவர்களது தலைமையில், பயிற்சி நிறைவு அணிவகுப்பு விழா சிறப்பாக நடைபெற்றது. அதைத் தொடர்ந்து மகளிர் காவல் ஆணையரும், சென்னை மாநகரத்திலேயே பணியில் அமர்த்தப்பட்டார்.
தி.மு.கழக ஆட்சியில் பெண்கள், காவலர்கள் தொடங்கி எஸ்.பி, டி.ஐ.ஜி, ஐ.ஜி, காவல்துறை கூடுதல் இயக்குநர், காவல்துறை இயக்குநர் மற்றும் படைத்தலைவர் என எல்லா நிலைகளிலும், தமிழ்நாடு காவல் துறையில் இன்று 35,329 பெண் காவல் ஆளினர்கள் பணியாற்றி வருகின்றனர்.
"தலைவர் கலைஞர் அவர்கள் தொடங்கி வைத்த ஒரு சகாப்தத்தின் ஐம்பதாம் ஆண்டு பொன்விழாவில், அவரது மகனான நான் முதலமைச்சராக வந்து கலந்துகொள்வது எனக்குக் கிடைத்திருக்கக்கூடிய பெரும் பெருமையாக, பெரும் பேறாக நான் கருதுகிறேன்.
இந்த பொன்விழாவை மிகச் சிறப்பாக ஏற்பாடு செய்திருக்கக்கூடிய காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு அவர்களையும் காவல்துறை அதிகாரிகளையும் நான் பாராட்டுகிறேன்.
நேரம் காலம் -வெயில் மழை -இரவு பகல் பாராமல் ஊருக்காக உழைக்கும் காவலர்களைப் பாராட்டுவதற்கான விழா இது. பெண்களுக்கான விழா இது. பெண் காவலர் திட்டத்தை உருவாக்கியதன் பொன்விழா வருகிறது என்று சொன்னபோது, இதை மிகப்பெரிய விழாவாக நடத்த வேண்டும் என்று நான் உத்தரவிட்டேன். காரணம், பெண்களின் தியாகத்தை மதிக்க வேண்டும் என்பதற்காகத்தான் இதைச் சொன்னேன்.
ஆண் காவலர்கள் - பெண் காவலர்கள் என்று பிரித்துப் பார்ப்பதாக ஆண் காவலர்கள் தயவு செய்து நினைத்துவிடக் கூடாது. காவல் பணியோடு சேர்த்து குடும்பப் பணிகளையும் செய்தாகவேண்டிய நெருக்கடி பெண் காவலர்களுக்கு இருக்கிறது என்பதை நீங்கள் உணர்ந்திட வேண்டும். அதனால்தான் பெண்களைப் பொறுத்தவரைக்கும் வீட்டையும் நாட்டையும் சேர்த்துக் பாதுகாக்கிறார்கள் நம்முடைய பெண் காவலர்கள். அதனால்தான் அவர்களை மனந்திறந்து பாராட்ட வேண்டும் என்று நான் சொன்னேன்.
ஆண் காவலர்களுக்கு ஒரு சல்யூட் என்றால், பெண் காவலர்களுக்கு இரண்டு சல்யூட். அதனால்தான் எல்லா நிலையிலும் பணியாற்றும் பெண் காவலர்களுக்கு முழு மரியாதை தர வேண்டும் என்று நான் எல்லோரையும் கேட்டுக் கொள்கிறேன்.
பெண் காவலர், பெண் உதவி ஆய்வாளர், பெண் ஐ.பி.எஸ் அதிகாரி என காவல் பணியில் சேர்ந்தநிலையில், தமிழ்நாடு தேர்வாணையம் நடத்தும் நேரடி நியமன டி.எஸ்.பி. பதவியில் மட்டும் எந்த ஒரு பெண்ணும் பணியில் சேர இயலாத சூழல் இருந்து வந்தது.
இந்நிலையில் 1989-ல் கழக ஆட்சி அமைந்தபோது, இத்தகைய குரூப்-1 தேர்வு உயர் பதவிகளை பெண்கள் அடைய வேண்டும் என்பதற்காகவே, அரசுப் பணியில் பெண்களுக்கு 30 விழுக்காடு
இடஒதுக்கீட்டை முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் அன்றைக்கு அமல்படுத்தினார். இதன் விளைவாக, குரூப்-1 தேர்வில் பணியில் சேர்ந்த பெண் அதிகாரிகள் பலர், இன்றைக்குக் கூடுதல் காவல்துறை இயக்குநராகவும், காவல்துறைத் தலைவர்களாகவும், காவல் துணைத் தலைவர்களாகவும், காவல் கண்காணிப்பாளர்களாவும், கூடுதல் காவல் கண்காணிப்பாளர்களாகவும், காவல் துணைக் கண்காணிப்பாளர்களாகவும் பணிபுரிந்து வருகின்றனர் என்பதை நான் பெருமையுடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
* பெண்கள் இன்றைக்குக் காவல்துறையின் அனைத்துப் பிரிவுகளிலுமே அதாவது, சட்டம்-ஒழுங்கு குற்றப்பிரிவு, இரயில்வே துறை, சி.பி.சி.ஐ.டி., போக்குவரத்து, உளவுத்துறை. லஞ்ச ஒழிப்புத் துறை, சிறப்பு காவல் படை, இணைய குற்றப் பிரிவு, கமாண்டோ படை - ஏன்? முதலமைச்சர் பாதுகாப்பு படை என அனைத்துப் பிரிவுகளிலுமே மிகச் சிறப்பாகச் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்.
* சட்டம்-ஒழுங்கு காவல் நிலையங்களில் உள்ள 1,356 ஆய்வாளர் பணியிடங்களில், 503 காவல் ஆய்வாளர்கள் பெண்கள்தான். அதாவது, சட்டம்-ஒழுங்குப் பாதுகாப்பில் 37 விழுக்காடு பெண் காவல் ஆய்வாளர்கள் திறம்பட நம்முடைய திராவிடமாடல் ஆட்சியில் பணியாற்றி வருகின்றனர்
* காவல் பணிகளில், நிலைய எழுத்தர், சி.சி.டி.என்.எஸ். பணி, கணினிப் பிரிவு, நீதிமன்ற அலுவல், காப்புப் பணி, காணாமல் போனவர்களை இணைய உதவியுடன் கண்டறியும் பணி போன்றவற்றில் அளப்பரிய பங்களிப்பினை பெண் காவலர்கள் செய்து வருகின்றனர்.
இந்த ஆண்டு பணியில் சேர்ந்த 21 காவல்துறை துணைக் கண்காணிப்பாளர்களில், 17 பேர் பெண்கள் என்றால், முதலமைச்சர் கலைஞர் அவர்களின் தொலைநோக்குப் பார்வையை நம்மால் இன்றைக்கு தெளிவாக புரிந்து கொள்ள முடியும்.
காவல் துறையில் பெண்களுக்கு பல முதன்மையான திட்டங்களைத் தந்ததும் கழக அரசுதான்!
* 160 ஆண்டுக் கால பெருமைமிகு சென்னை மாநகர காவல் ஆணையரகத்தில், முதல் பெண் காவல் ஆணையரை நியமித்ததும், முதல் பெண் காவல்துறை தலைமை இயக்குநரை / படைத்தலைவரை (HoPF) பணியமர்த்தி அழகு பார்த்ததும் நம்முடைய கழக அரசுதான்.
* தற்போது கழக அரசு அமைந்தவுடன், கொரோனா தொற்றுக் காலத்தில் காலமான காவலர்கள் உட்பட, பணியின்போது உயிர் துறந்திருக்கக்கூடிய காவலர்களின் வாரிசுகளுக்கு அரசு வேலை அளிக்கும் விதமாக, காவல் நிலைய வரவேற்பாளர் பணியிடங்களை உருவாக்கி 1,025 நபர்கள் பணியமர்த்தப்பட்டனர். அதிலும், 501 பணியிடங்கள் பெண்களுக்கு வழங்கப்பட்டது.
* பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்க, இளஞ்சிறார்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைக் கையாள, அனைத்து மகளிர் காவல் நிலையம் என்பது அனைத்துக்காவல் உட்கோட்டங்களிலும் அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால், 41 உட்கோட்டங்களில் இத்தகைய மகளிர் காவல் நிலையங்கள் இல்லாத நிலையில், 2021-ஆம் ஆண்டு நமது அரசு அமைந்தவுடன், 20 புதிய மகளிர் காவல் நிலையங்கள் அமைக்கப்பட்டன.
பெண்கள் நலன் காக்கும் விதமாக, இந்த ஆண்டு கோயம்பேடு, கோட்டூர்புரம், புழல் உட்பட 19 இடங்களில் புதிய அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் அமைப்பதற்கான ஆணை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆண்டு ஐ.நா.அவை, மகளிர் தினத்தை உலக அளவில், “புதுமைகளும், தொழில்நுட்பமும் பாலின சமத்துவத்தை நோக்கியதாக இருக்க வேண்டும்" (DigitALL: Innovation and Technology for gender equality) என்ற தலைப்பில் கொண்டாடப்படுகிறது. இந்த இலக்கை நாம் எப்போதோ எட்டிவிட்டோம்.
நமது காவல் துறையைப் பொறுத்தவரையில், இணைய தொழில்நுட்பத்தை 70 விழுக்காடு பெண்கள்தான் செயல்படுத்துகிறார்கள். காவல் தொழில்நுட்பப் பிரிவில் 140 பெண் உதவி ஆய்வாளர்கள் பணிபுரிகின்றனர். விரல் ரேகைப் பிரிவில் புதிய தொழில்நுட்பமான நஃபிஸ் (NAFIS) மற்றும் ஃபேக்ட் 7 எனும் புதிய தொழில்நுட்பத்தைச் செயல்படுத்தும் விதமாக விரல்ரேகைப் பிரிவில், 72 பெண் அதிகாரிகள் பணிபுரிந்து வருகின்றனர்.
இந்த வரிசையில் இந்த பொன்விழா கொண்டாடும் நாளில் பெண் காவலர்களுக்கு நவரத்தினம் போன்று ஒன்பது வரலாற்றுச் சிறப்புமிக்க அறிவிப்புகளை தற்போது வெளியிடுவதில் நான் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
1. பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் இருந்து கொண்டு கடினமான காவல் பணியையும் செய்து வருவதால், அவர்களின் நீண்ட நாள் கோரிக்கையான, ‘ரோல்-கால்’எனப்படும் காவல் வருகை அணிவகுப்பு, இனிமேல் காலை ஏழு மணி என்பதற்கு பதிலாக, எட்டு மணி என்று மாற்றியமைக்கப்படும்.
2. சென்னை மற்றும் மதுரை ஆகிய பெருநகரங்களில் பெண் காவலர்கள் தங்கும் விடுதிகள் விரைவில் அமைக்கப்படும்.
3. அனைத்துக் காவல் நிலையங்களிலும், பெண் காவலர்களுக்கென கழிவறை வசதியுடன் தனி ஓய்வறை கட்டித் தரப்படும்.
4. பெண் காவலர்கள், காவல் நிலையங்களில் பணிக்கு வரும்போது, தங்களது குழந்தைகளை தனியாக விட்டுவிட்டு வரக்கூடிய சூழலை உணர்ந்து, சில மாவட்டங்களில் காவல் குழந்தைகள் காப்பகம் தொடங்கப்பட்டது. அதை முழு அளவில் மேம்படுத்திச் செயல்படுத்தும் விதமாக, விரைவில் தேவையான அனைத்து இடங்களிலும், காவல் குழந்தைகள் காப்பகம்" அமைக்கப்படும்.
5. பெண் காவல் ஆளினர்களின் திறமையை முழுமையாக அங்கீகரிக்கும் விதமாக, பெண்களை முதன்முறையாக காவல் பணியில் ஈடுபடுத்திய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களது நினைவாக, அவரது பெயரில் “கலைஞர் காவல் பணி விருதும், கோப்பையும்" ஆண்டுதோறும் வழங்கப்படும்.
6. ஆண் காவலர்களுடன் போட்டியிட்டு வெற்றிபெறும் இன்றைய சூழ்நிலையில், பெண் காவலர்கள், குடும்பத் தலைவிகளாகவும் பல பொறுப்புகளை ஆற்ற வேண்டியிருப்பதால், அவர்களது குடும்பச் சூழலுக்கு ஏற்ப, விடுப்பு, பணியிட மாறுதல் வழங்குமாறு, காவல் உயர் அலுவலர்களுக்கு உரிய உத்தரவுகள் வழங்கப்படும்.
7. பெண் காவலர்களுக்கு துப்பாக்கிச் சுடும்போட்டி தனியாக ஆண்டுதோறும் நடத்தப்பட்டு, விருதுகளும் பரிசுகளும் வழங்கப்படும். அதேபோல், தேசிய பெண் காவலர்களுக்கு இடையேயான துப்பாக்கிச்சுடுதல் போட்டியைத் தமிழ்நாட்டில் நடத்திட ஏற்பாடு செய்யப்படும்.
8. பெண் காவல் ஆளினர்களின் தேவைகள், பிரச்சினைகள், செயல்திறன் பற்றி கலந்தாலோசனை செய்யும் விதமாக, "காவல்துறையில் பெண்கள்" எனும் தேசிய மாநாடு ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் நடத்தப்படும்.
9. பெண் காவல் ஆளினர்கள் தங்கள் பணிமுறையை மேலும் செம்மைப்படுத்திக்கொள்ளும் விதமாகவும், குடும்பம் மற்றும் வாழ்க்கையை மேம்படுத்திக் கொள்ளும் விதமாக, டி.ஜி.பி. அலுவலகத்தில் "பணி வழிகாட்டும் ஆலோசனைக் குழு" (Career Counselling) ஒன்று அமைக்கப்படும்.
இந்த அறிவிப்புகள் உங்கள் அனைவருக்கும் பெரு மகிழ்ச்சியை ஏற்படுத்தித் தரும் என்று நம்புகிறேன். உங்களுடைய கரகொலியின் மூலமாக அதை நான் உணருகிறேன்.
சட்டம்தான் உங்களுக்கு வழிகாட்டும் ஒளிவிளக்கு. அந்த சட்டத்தை நிலைநாட்ட உங்களது திறமையும், வீரமும், கருணையும் பயன்படட்டும்.
தமிழ்நாடு காவல் துறையின் செயல்பாடுகள், மாநிலத்தின் பொருளாதார வளர்ச்சி மற்றும் தொழில் முன்னேற்றத்திற்கான தேவையான பங்களிப்பையும் தொடர்ந்து வழங்கி வருகிறது. இதன் மூலம் அமைதியான தமிழ்நாடு உருவாக உங்களது பணி உதவி செய்து வருகிறது.
குற்றங்களை குறைக்கும் துறையாக மட்டுமல்லாமல், குற்றங்கள் நடைபெறாத சூழலை உருவாக்கும் துறையாக நீங்கள் இருக்க வேண்டும். அதற்குப் பெண் காவலர்கள் பெரும் பங்கை ஆற்ற வேண்டும் என்று கேட்டு, பொன்விழா கொண்டாடும் அனைத்து பெண் காவலர்களுக்கும் மீண்டும் என்னுடைய மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!