M K Stalin
முதலமைச்சர் தொடங்கி வைத்த ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’: 7 திட்டங்களின் சிறப்புகள் என்னென்ன? முழு விபரம் இதோ!
தமிழ்நாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் திமுக ஆட்சி பொறுப்பேற்றதில் இருந்தே பல்வேறு நலத்திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகிறது. அந்த வகையில் இன்று சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ‘ஏற்றமிகு ஏழு திட்டங்கள்’ தொடக்க விழா நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர்கள் என பலரும் கலந்துகொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் 7 மகத்தான திட்டங்களை தொடங்கி வைத்து சிறப்புரை ஆற்றினார். அப்போது முதலமைச்சர் தொடங்கி வைத்துள்ள அந்த 7 திட்டங்கள் என்னென்ன? என்பதையும், அதன் சிறப்புகள் என்ன என்பதையும் அவர் விளக்கினார்.
ஏழு திட்டங்கள் :
1. ஊட்டச்சத்து குறைபாடுகள் உள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் .
2. திருநங்கைகளுக்கான மாதாந்திர உதவித்தொகை ரூ.1,500 ஆக உயர்த்தி வழங்கும் திட்டம் .
3. முதலமைச்சரின் காலை உணவு திட்டம் மாநகராட்சி மற்றும் நகராட்சி பகுதிகளில் விரிவாக்கம்.
4. தூய்மை பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரை தொழில் முனைவோர்களாக்க சிறப்பு திட்டம்.
5. மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்டங்களை முதலமைச்சர் வழங்கினார்.
6. ரூ.1,136 கோடியில் 44 புதிய மருத்துவமனைகளுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் காணொளி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.
7. பல்வேறு அரசு பணிகளில் தேர்வானவர்களுக்கு பணி நியாமான ஆணைகளைய் வழங்கினார் முதலமைச்சர்.
இந்த திட்டங்கள் குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் குறிப்பிட்டு பேசுகையில்,
=> முதல் திட்டம் :
மனிதக் கழிவுகளை மனிதர்களே அகற்றும் நிலைக்கு முற்றுப்புள்ளி வைக்க DICCI அமைப்புடன் ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டுள்ளது.
பல்வேறு துறைகளில் நாட்டிற்கே முன்னோடியாக நமது மாநிலம் திகழ்ந்து வருகிறது. அந்த வகையில் இதுவும் முன்னோடி திட்டமாக அமையப் போகிறது. தூய்மைப்பணியில் ஈடுபடும் பணியாளர்கள் பலர் இப்பணியில் சந்திக்க நேரிடும் ஆபத்துகளால் உயிரிழக்க நேரிடுவதை இன்றும் நாம் பார்க்கிறோம்.
மக்களின் சுகாதாரத்தைப் பேணிட தம் வாழ்வு முழுவதும் பணியாற்றிய இந்த பணியாளர்களின் குடும்பங்கள், தமது குடும்பத் தலைவரையோ, வாரிசையோ இழந்து, தமது வாழ்வாதாரத்தையும் எதிர்காலத்தையும் தொலைத்து நிற்கும் அவலநிலை நம் அனைவரையும் மனம் கலங்க வைக்கின்றது.
இந்த இன்னல்களை களைந்திட பல முயற்சிகளை இந்த அரசு கடந்த இரண்டு ஆண்டுகளில் எடுத்துள்ளது. தூய்மைப் பணியில் ஈடுபடும் அனைத்து பணியாளர்களையும் கண்டறிந்து, அவர்களுக்கு தகுந்த பாதுகாப்பு வசதிகளை உறுதி செய்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக, தமிழ்நாடு தூய்மைப் பணியாளர் மேம்பாட்டு திட்டத்தை ஏற்கனவே மதுரையில் நான் தொடங்கி வைத்துள்ளேன். இத்திட்டப் பணிகள் முழு வீச்சில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இதன் அடுத்த கட்டமாக, பாதாளச் சாக்கடைப் பராமரிப்பு மற்றும் கழிவுநீர் அகற்றும் பணிகளை நவீன இயந்திரங்கள் மூலம் மேற்கொண்டு, உயிரிழப்புகளை முற்றிலும் தவிர்க்கத் திட்டமிட்டுள்ளோம். தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பங்களை தொழில் முனைவோர்களாக ஒருங்கிணைத்து செயல்படுத்துவதற்கான ஒரு முன்னோடித் திட்டம் சென்னை பெருநகர பகுதியில் செயல்படுத்தப்படும்.
தூய்மைப் பணியில் ஈடுபடும்போது உயிரிழந்தோரின் வாரிசுகளுக்கும், தற்போது தூய்மைப் பணியில் ஈடுபட்டு வருபவர்களுக்கும் முன்னுரிமை அளித்து, தூய்மைப் பணியை மேற்கொள்ளும் தொழிலாளர்கள் என்ற நிலையில் இருந்து அவர்களை உயர்த்தி, இப்பணிகளை அனைத்து நவீன இயந்திரங்களோடு மேற்கொள்ளக்கூடிய தொழில் முனைவோர்களாக அவர்களை மாற்றிடுவதற்காக, தலித் சேம்பர் ஆஃப் காமர்ஸ் (DICCI) அமைப்புடன் இணைந்து இத்திட்டம் செயல்படுத்தப்படும்.
இத்திட்டத்தின் கீழ், தேர்வு செய்யப்படும் தூய்மை பணியாளர் குடும்பத்தினருக்கு, நவீனக்கருவிகளும், வாகனங்களும் வழங்கப்படுவதோடு, திறன் மேம்பாட்டு பயிற்சிகளும் அளிக்கப்படும். சென்னை குடிநீர் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் வாரியம் மூலமாக சென்னை மாநகரப் பகுதியில் செயல்படுத்தப்பட உள்ள இந்த திட்டம், படிப்படியாக மாநிலத்தின் மற்ற நகர்ப்புற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
=> இரண்டாவது திட்டம் :
சத்துக் குறைபாடுள்ள குழந்தைகளுக்கு சிறப்பு ஊட்டச்சத்து வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
'சுவர் இருந்தால் தான் சித்திரம்' என்று சொல்வார்கள். குழந்தைகள் பிறக்கும் போதே ஆரோக்கியமாகப் பிறக்க வேண்டும், வளரும் போதும் ஆரோக்கியமாக வளர வேண்டும். அப்படி வளர்ந்தால் தான் அவர்களது எதிர்காலம் சிறப்பானதாக இருக்க முடியும்.
நாம் ஆட்சிக்கு வந்த பிறகு எடுக்கப்பட்ட ஒரு புள்ளிவிபரம் மிகமிக மனவேதனையை அளிப்பதாக தமிழ்நாடு சட்டமன்றத்தில் கடந்த ஆண்டு மே 7 ஆம் நாள் நான் சொன்னேன். தமிழ்நாட்டில் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தைகளைப் பரிசோதித்ததில் பெரும்பாலானவர்கள் ஊட்டச்சத்துக் குறைபாடு உள்ளவர்களாக இருந்தார்கள் என்பதும், வயதுக்கு ஏற்பட்ட எடையும் உயரமும் இல்லை என்றும் புள்ளிவிபரங்கள் தெரிவித்தது.
இதனைக் கருத்தில் கொண்டு தமிழ்நாட்டில் உள்ள குழந்தைகள் அனைவரும் திடமான ஊட்டச்சத்து குறைபாடில்லாதவர்களாக மாற்றுவதற்கான திட்டம் தீட்டப்படும் என்று அப்போது நான் அறிவித்தேன். இதனைக் கண்டறிய கண்காணிப்பு இயக்ககம் ஆரம்பிக்கப்பட்டது.
தமிழ்நாடு முழுவதும் 37 லட்சம் குழந்தைகளைப் பரிசோதனை செய்தோம். அதில் ஊட்டச் சத்து தேவைப்படுவோர் கண்டறியப்பட்டனர். 6 மாதம் முதல் ஆறு வயது வரையிலான குழந்தைகளுக்கு சிகிச்சை உணவு ( RUTF) தரப்படும். 6 மாதம் வரையுள்ள குழந்தைகளின் தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து நிலை மேம்படுத்தப்படும்.
இந்த தாய்மார்களுக்கு ஊட்டச்சத்து பெட்டகங்களும் வழங்கப்படும். குழந்தைகளுக்கு வாரம் ஒரு முட்டை என்பதை 3 முட்டையாக வழங்க ஆணையிடப்பட்டுள்ளது. பிஸ்கெட்டும் வழங்கப்படுகிறது. அந்த குழந்தைகள் தொடர்ந்து பரிசோதிக்கப்பட்டு வருவார்கள். இதன் மூலமாக அனைத்துக் குழந்தைகளும் சத்துள்ள குழந்தைகளாக வளர்வார்கள்.
=> மூன்றாவது திட்டம் :
மாற்றுத் திறனாளிகளுக்கு ஏராளமான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது. அதன் தொடர்ச்சியாக அவர்களுக்கு இலவச வீட்டுமனைப் பட்டா முன்னுரிமை அடிப்படையில் வழங்க இருக்கிறோம்.
வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மாற்றுத்திறனாளிகளுக்கு முன்னுரிமை அடிப்படையில் வீடுகள் அமைத்துத் தருவதற்கு ஏதுவாக, வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறையின் மூலம் வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்படுகின்றன.
=> நான்காவது திட்டம் :
திருநங்கையர்க்கும் ஏராளமான திட்டங்களை இந்த அரசு செயல்படுத்தி வருகிறது.
திருநங்கைகள் நலவாரியத்தை 2008 ஆம் ஆண்டு உருவாக்கியதே திமுக அரசு தான்.
1,311 திருநங்கைகளுக்கு மாதம் தோறும் வழங்கும் உதவித் தொகை ஆயிரத்தில் இருந்து 1500 ரூபாயாக உயர்த்தி வழங்கப்பட இருக்கிறது.
=> ஐந்தாவது திட்டம் :
பல்வேறு துறைகளில் உள்ள அரசு பணியிடங்களில் இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு உருவாக்கப்பட்டு 1000 பேருக்கு பணி ஆணை வழங்கப்படுகிறது.
=> ஆறாவது திட்டம் :
இந்தியாவிற்கே முன்னோடித் திட்டமாக இருக்கக்கூடிய முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் விரிவாக்கம் செய்யப்படுகிறது. 1-ஆம் வகுப்பு முதல் 5-ஆம் வகுப்பு வரை பயிலும் குழந்தைகளுக்கான காலை உணவுத்திட்டம் கடந்த செப்டம்பர் 15-ஆம் நாள் பேரறிஞர் அண்ணா பிறந்தநாளில் மதுரையில் வைத்துதான் நான் துவக்கி வைத்தேன்.
தற்போது, 15 மாநகராட்சிகள் மற்றும் 23 நகராட்சிகள் உள்ளடக்கிய 38 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் அமைந்துள்ள 539 பள்ளிகளில் பயிலும் 50 ஆயிரத்து 306 மாணவர்கள் இப்போது இந்தத் திட்டத்தின்கீழ் காலை உணவு உண்டு வருகிறார்கள்.
இந்தத் திட்டத்திற்காகச் சிறப்பாக அமைக்கப்பட்ட 46 ஒருங்கிணைப்பு சமையற்கூடங்களில் நாள்தோறும் உணவு சமைக்கப்பட்டு, அந்த உணவு சூடாக Hotbox-ல் நிரப்பப்பட்டு, சிறப்பு வாகனங்கள் மூலமாக ஒவ்வொரு பள்ளிக்கும் உரியநேரத்தில் கொண்டுபோய் சேர்த்து, மாணவர்களுக்கு காலை உணவு ஒவ்வொரு நாளும் வழங்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கு மாணவர்கள், பெற்றோர்களிடம் பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. எனவே இதனை விரிவுபடுத்துவதற்காகத் திட்டமிட்டு, அடுத்த கட்டமாக, தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் 36 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 433 பள்ளிகளுக்கு நாளை முதல் விரிவாக்கம் செய்யப்பட்ட திட்டமிட்டுள்ளோம்.
இதன் மூலம் 56 ஆயிரத்து 98 மாணவர்கள் கூடுதலாகப் பயனடைவார்கள். இதன்படி, நாளை முதல் காலை உணவு சாப்பிடக்கூடிய மாணவச் செல்வங்களின் எண்ணிக்கை 1 லட்சத்து 6 ஆயிரத்து 404 ஆகும். ஒரு லட்சத்துக்கும் மேற்பட்ட குடும்பங்களுக்கு நல்வாழ்வு அளிக்கும் திட்டமாக இது உயரப் போகிறது.
=> ஏழாவது திட்டம் :
ரூ.1,136.32 கோடி மதிப்பீட்டில் 44 இடங்களில் புதிய மருத்துவமனைக் கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. - இப்படி ஏழு திட்டங்களைப் பார்த்தால்,
* கல்வி
* சுகாதாரம்
* விளிம்பு நிலை மக்கள்
* குழந்தைகள்
* சமூக மேம்பாடு
* சமூகநீதி - ஆகிய அனைத்துக் கருத்தியல்களும் உள்ளடக்கிய திட்டங்களாக தீட்டப்பட்டுள்ளன.
இந்த வரிசையில் இன்னும் பல திட்டங்கள் வர இருக்கின்றன. இந்தத் திட்டங்களை துறையினுடைய அமைச்சர்கள், துறையினுடைய செயலாளர்கள், அரசுச் செயலாளர்கள் உள்ளிட்ட கடைநிலை ஊழியர்களை வரை இதனுடைய நோக்கம் சிதைந்துவிடாமல் நிறைவேற்றிக் காட்ட வேண்டும் என்று அன்போடு நான் கேட்டுக் கொள்கிறேன்." என்றார் .
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!