M K Stalin
"அதிமுக டெபாசிட் இழக்கக்கூடிய அளவிற்கு EVKS இளங்கோவன் வெற்றி இருக்க வேண்டும்" : முதலமைச்சர் வேண்டுகோள்!
திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (25-02-2023) ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலையொட்டி தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டு வருகிறார். சம்பத் நகர் பகுதியில் அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
உங்களைத் தேடி வந்திருக்கிறோம். உங்களை நாடி வந்திருக்கிறோம். உங்களிடத்தில் கை சின்னத்திற்கு வாக்கு கேட்க வந்திருக்கிறேன்.
மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்றிருக்கும் வேட்பாளராக உங்களிடத்தில் ஒப்படைக்கப்பட்டிருக்கக்கூடிய நம்முடைய மதிப்பிற்குரிய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களை கை சின்னத்தில் ஆதரித்து பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்ற வேண்டுகோளை எடுத்து வைப்பதற்காக உங்களை தேடி, நாடி வந்திருக்கிறோம்.
"பாராட்டிப் போற்றி வந்த பழமை லோகம், ஈரோட்டு பூகம்பத்தால் இடியுது பார்" என்று தலைவர் கலைஞர் அவர்கள், தந்தை பெரியார் பிறந்த இந்த ஈரோட்டைப்பற்றி எடுத்துச் சொல்கிறபோது பெருமையோடு குறிப்பிட்டுக் காட்டியிருக்கிறார். அப்படிப்பட்ட ஈரோட்டினுடைய மைந்தராக இருக்கக்கூடியவர்தான் நம்முடைய வேட்பாளர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். என்னுடைய உயிரோடு கலந்த ஊர்தான் இந்த ஈரோடு. பெரியார் பிறந்த மண் இந்த ஈரோடு. பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் வாழ்ந்த ஊர் இந்த ஈரோடு. தலைவர் கலைஞர் அவர்கள் குடியிருந்த ஊர் இந்த ஈரோடு. ஏன் தி.மு.க.வினுடைய அடித்தளமே இந்த ஈரோடுதான். கலைஞர் பிறந்த ஊர் திருவாரூராக இருந்தாலும், தலைவர் கலைஞருடைய குருகுலமாக இருந்த ஊர்தான் இந்த ஈரோடு. தலைவர் கலைஞர் அவர்களுடைய பெற்றோர்கள் தலைவர் கலைஞர் அவர்களை படி, படி என்று சொல்லிக் கொண்டிருந்தாலும், தலைவர் கலைஞர் அவர்கள் பள்ளிப் படிப்பை முடித்தது இந்த ஈரோட்டில்தான். தலைவர் கலைஞர் அவர்கள் கல்லூரிப் படிப்பை முடித்தது காஞ்சிபுரத்திலேதான். அப்படிப்பட்ட வரலாற்றுக்குரிய இந்த ஈரோட்டில், நடைபெறவிருக்கக்கூடிய இந்த இடைத்தேர்தலில், நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்கு கை சின்னத்தில் ஆதரித்து, பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றியைத் தேடி தர வேண்டும் என்று கேட்டுக் கொள்வதற்காக உங்களை தேடி, நாடி வந்திருக்கிறேன்.
ஊர் ஊராகச் சென்று தலைவர் கலைஞர் அவர்கள் பிரச்சாரத்தை நடத்தி தன்னுடைய இளமை வயதில் கழகத்தினுடைய பிரச்சார நாடகங்களை நாடு முழுவதும் சென்று நடத்திக் கொண்டிருந்த நேரத்தில், அப்போது நம்முடைய தலைவர் கலைஞர் நாடகத்தை நடத்துவதற்காக புதுச்சேரிக்கு செல்கிறார். அந்த நாடகத்தின் பெயர் “சாந்தா அல்லது பழனியப்பன்”. அந்த நாடகத்தை நடத்தவிடாமல், அங்கிருந்த கலகக்காரர்கள் ஒரு பெரிய கலவரத்தில் ஈடுபட்டு நாடகத்தை நடத்தவிடாமல் தடுத்து நிறுத்துகிறார்கள். நாடகம் நடத்த முடியாத சூழ்நிலைக்கு ஆளாகி தலைவர் கலைஞர் அங்கிருந்து கிளம்புகிறபோது அங்கிருந்த கலவர கும்பல் தலைவர் கலைஞர் அவர்களை கடுமையாக தாக்கி கொலைவெறித் தாக்குதலை நடத்தி தலைவர் கலைஞர் அவர்கள் இறந்துவிட்டார் என்று கருதி ஒரு சாக்கடையில் தூக்கி வீசிவிட்டுப் போய்விட்டார்கள். இந்த செய்தி அன்றைக்கு புதுச்சேரியில் இருந்த தந்தை பெரியாருக்கு கிடைக்கிறது. உடனடியாக தந்தை பெரியார் அவர்கள் ஓடோடி அந்த பகுதிக்கு வந்து தலைவர் கலைஞர் அவர்களை காப்பாற்றி தன்னுடைய மடியில் படுக்க வைத்து காயம் ஏற்பட்டிருக்கக்கூடிய இடங்களுக்கெல்லாம் மருந்து போடுகிறார். மருந்து போட்டது மட்டுமல்லாமல், “நீ இங்கிருக்க வேண்டாம், நீ என்னோடு ஈரோட்டிற்கு வா” என்று சொல்லி அழைத்துக் கொண்டு வந்து தன்னுடைய குடியரசு பத்திரிகையில் துணையாசிரியராக பணியாற்று என்று சொல்லி அந்த வாய்ப்பை தலைவர் கலைஞருக்கு தந்தை பெரியார் அவர்கள் வழங்கினார்கள். திராவிட இயக்கத்தினுடைய மிகச் சிறந்த சொல்லின் செல்வராக விளங்கியவர்தான் நம்முடைய ஈ.வி.கே.சம்பத் அவர்கள். இந்தப் பகுதிக்கு பெயர் சம்பத் நகர் என்று நான் கேள்விப்பட்டேன். சம்பத் நகரில் சம்பத் மகன் இளங்கோவனுக்கு நான் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். ஈ.வி.கே.சம்பத் அவர்கள் ஒரு மிகப் பெரிய சொற்பொழிவாளர். சொல்லின் செல்வர் என்று அண்ணாவால் பாராட்டப்பட்டவர். கம்பீரக்குரலை பெற்றிருந்தவர். தந்தை பெரியாருடைய அண்ணன் மகன் சம்பத் அவர்கள். அந்த ஈ.வி.கே.சம்பதினுடைய திருமகன்தான் நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் என்பது உங்களுக்கு நன்றாக தெரியும். ஈ.வி.கே.சம்பத்தினுடைய மைந்தனுக்கு கலைஞருடைய மைந்தன் ஓட்டு கேட்க வந்திருக்கிறேன். இதுதான் வரலாறு.
இந்த இடைத்தேர்தல் ஏன் வந்தது. எந்த சூழ்நிலையில் வந்திருக்கிறது. எப்படிப்பட்ட சூழ்நிலையில் வந்திருக்கிறது என்று நான் சொல்ல வேண்டிய அவசியமில்லை. ஏற்கனவே, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் இந்த ஈரோடு கிழக்கு தொகுதியில், நம்முடைய மதச்சார்பாற்ற முற்போக்குக் கூட்டணியின் சார்பில் வேட்பாளராக நின்ற நம்முடைய அருமைத் தம்பி திருமகன் ஈ.வெ.ரா அவர்களை நீங்கள் எல்லாம் பெருவாரியான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற வைத்து சட்டமன்றத்திற்கு அனுப்பி வைத்தீர்கள். அவர் சட்டமன்றத்தில் ஆற்றிய பணி - அவர் தொகுதி மக்களுக்காக அவையிலே பேசிய பேச்சு - இந்தப் பகுதிக்கு பாடுபட்டிருக்கக்கூடிய பல்வேறு நல்ல காரியங்கள், நலத் திட்டங்கள் இவையெல்லாம் நீங்கள் மறந்திருக்க மாட்டீர்கள். 46 வயதிலே ஒரு இளைஞன், மிகத் தீவிரமாக பணியாற்றிக் கொண்டிருந்தபோது, சிறப்பாக கட்சிக்கு மட்டுமல்ல, இந்தப் பகுதி மக்களுக்கு, இந்தச் சமுதாயத்திற்கு அவர் பணியாற்றிக் கொண்டிருந்த நேரத்தில், திடீரென்று அவர் அகால மரணமடைந்துவிட்டார். அந்தச் செய்தி கேட்டு அவருடைய தந்தை நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் மட்டுமல்ல, நாங்கள் மட்டுமல்ல, இந்த பகுதியில் இருக்கக்கூடிய மக்கள் எல்லாம் மிகுந்த வேதனைக்கு ஆளானவர்கள் என்பதை நன்றாக அறிவேன்.
இப்படிப்பட்ட சூழ்நிலையிலேதான், இந்த இடைத்தேர்தலை சந்திக்க வேண்டிய சூழ்நிலைக்கு நாம் ஆளாகியிருக்கிறோம். எப்போதுமே தந்தை இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு மகன் வருவான். ஆனால் நம்முடைய சூழ்நிலை என்னவென்று கேட்டால், இது யாருக்கும் வரக்கூடாத ஒரு சூழ்நிலை. மகன் இறந்து அந்த இடத்தை பூர்த்தி செய்வதற்கு அவருடைய தந்தையாக இருக்கக்கூடிய நம்முடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள் இன்றைக்கு உங்களிடத்தில் வந்திருக்கிறார். இதை புரிந்துகொண்டு நீங்கள் மாபெரும் வெற்றியைத் தேடி தர வேண்டுமென்று நான் உங்களை எல்லாம் கேட்டுக்கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வரவேண்டும், ஆட்சிப் பொறுப்புக்கு வருகிற நேரத்தில், இவையெல்லாம் எங்களுக்கு செய்து தர வேண்டும். தி.மு.க. அளித்த தேர்தல் வாக்குறுதிகள், உறுதிமொழிகள், அவைகளெல்லாம் நிறைவேற்றித் தரவேண்டும் என்ற நம்பிக்கையோடு நீங்கள் எல்லாம் வாக்களித்தீர்கள். வாக்களித்த நம்பிக்கையோடு, இன்றைக்கு நீங்கள் இருக்கிறீர்கள்.
திராவிட முன்னேற்றக் கழக ஆட்சிப் பொறுப்பேற்று இந்த இரண்டாண்டு காலத்தில், செய்திருக்கக்கூடிய சாதனைகளை சொல்ல வேண்டுமென்று சொன்னால், ஒரு மிகப்பெரிய பட்டியலை எடுத்துச் சொல்லவேண்டும். நான் அவற்றில் சிலவற்றை மாத்திரம் அதுவும் பொத்தாம் பொதுவாக அல்ல, ஆதாரத்தோடு குறிப்பிட்டுக் காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
தி.மு.க.வை பொறுத்தவரைக்கும், கலைஞர் அவர்கள் ஐந்து முறை தமிழகத்தில் ஆட்சிப் பொறுப்பில் இருந்தார். ஒவ்வொரு முறையும் ஆட்சிக்கு வருகிறபோது தேர்தல் அறிக்கையை அவர் வெளியிடுவார். அப்படி வெளியிடுகிறபோது அந்த தேர்தல் அறிக்கையினுடைய தலைப்பு செய்தியாக இரண்டு வரியில் சொல்லுவார். "சொன்னதைச் செய்வோம், செய்வதைச் சொல்வோம்" என்று சொல்வார். அதைத்தான் நான் இங்கே வழிமொழிகிறேன். அத்தோடு நான் இன்னொன்றையும் சொல்ல விரும்புவது, சொன்னதை மட்டுமல்ல, சொல்லாததையும் இந்த ஸ்டாலின் செய்வான் என்பதற்கு எத்தனையோ உதாரணங்கள் உங்களிடத்தில் நான் காட்டிடமுடியும்.
மகளிருக்கு இலவச பேருந்து பயண வசதி, தேர்தல் நேரத்தில் சொன்னோம். ஆட்சிக்கு வந்து பதவிப் பிரமாணம் எடுத்துக்கொண்டதுடன் கோட்டைக்குச் சென்று ஐந்து கையெழுத்துகளை நான் போட்டபோது, அந்த ஐந்து கையெழுத்துகளில் ஒரு கையெழுத்துதான் மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யலாம் என்ற அந்த திட்டத்திற்கான கையெழுத்து. இது உங்களுக்கெல்லாம் நன்றாக தெரியும்.
இன்றைக்கு, மகளிர் எல்லாம் பேருந்தில் போகிற காட்சியெல்லாம் நாம் பார்க்கிறோம். எவ்வளவு சந்தோஷமாக, எவ்வளவு மகிழ்ச்சியாக, அலுவலகத்திற்குப் போகக்கூடியவர்கள், கல்லூரிகளுக்கு போகக்கூடியவர்கள், தன்னுடைய தொழில் செய்யக்கூடிய இடத்திற்கு போகக்கூடியவர்கள், உறவினர்கள் இடத்திற்கு போகக்கூடியவர்கள், திருமண நிகழ்ச்சிக்குப் போகக்கூடியவர்கள், துக்க நிகழ்ச்சிக்குப் போகக்கூடியவர்கள், அந்த மகளிர் இன்றைக்கு இலவசமாக பயணம் செய்கிறபோது, அதில் மிச்சப்படக்கூடிய தொகையைப் பயன்படுத்திக் கொண்டு இன்றைக்கு குடும்பத்திற்கு வேறு செலவுகளை செய்யக்கூடிய ஒரு அபூர்வமான திட்டத்தை இன்றைக்கு நாம் நிறைவேற்றி இருக்கிறோம். பெருமையோடு சொல்கிறேன். இந்தியாவில் எந்த மாநிலத்திலும் கிடையாது, மகளிர் இலவசமாக பேருந்தில் பயணம் செய்யும் திட்டத்தை நம்முடைய தமிழ்நாட்டில்தான் நாம் நிறைவேற்றி இருக்கிறோம்.
அதேபோல், பள்ளிக்கூடத்தில் படித்துக் கொண்டிருக்கக்கூடிய மாணவர்கள் ஏற்கனவே அவர்களுக்கு மதிய உணவு என்ற ஒரு திட்டம் இருந்தாலும், ஆனால் காலையில், அவர்கள் உணவருந்தாமலேயே, பள்ளிக்கு வரக்கூடிய கொடுமைகளை நான் பல மாவட்டங்களில் சென்றபோது, அங்கே பள்ளிக்கூடத்திற்கு ஆய்வு செய்ய சென்றிருந்தேன். அங்கிருந்த மாணவர்களை பார்த்துக் கேட்டேன். “ஏன் தம்பி சோர்வாக இருக்கிறாய்?”. அதற்கு அவர், "அய்யா, நான் காலையில் எதுவும் சாப்பிடாமல் வந்திருக்கிறேன்" என்று ஒரு சோகத்துடன் சொன்னார். அதற்கு பிறகு பல மாணவர்களை விசாரித்தேன். அந்த பள்ளிக் கூடத்திற்கு வந்திருக்கக்கூடிய 80% மாணவச் செல்வங்கள் காலையில் எந்த உணவும் சாப்பிடாமல், அவர்கள் பள்ளிக்கூடத்திற்கு வரக்கூடிய சூழ்நிலையை பார்த்து நான் அதிர்ச்சி அடைந்தேன். உடனடியாக அதிகாரிகளை அழைத்து இதற்கு ஒரு திட்டத்தை உருவாக்க வேண்டுமென்று சொல்லி, காலை உணவு வழங்கக்கூடிய திட்டம் என்ற ஒரு திட்டத்தை அறிவித்து, "முதலமைச்சர் காலை உணவுத் திட்டம்" என்ற அந்தத் திட்டத்தை இன்றைக்கு நாம் நிறைவேற்றிக் கொண்டிருக்கிறோம். நாம் பெருமையோடு சொல்கிறேன். காலை உணவுத் திட்டம் என்பது இந்தியாவிலேயே எந்த மாநிலத்திலும் இல்லை. நமது தமிழ்நாட்டில்தான் நிறைவேற்றப்பட்டு இருக்கிறது.
வேளாண் பெருங்குடி மக்களுக்கு, உழவர்களுக்கு இலவச மின்சார திட்டம். இந்தத் திட்டத்திற்கு முதன்முதலில் இந்தியாவிலேயே முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது அறிமுகப்படுத்திய திட்டம்தான் இலவச மின்சார திட்டம். நீங்கள் மறந்து இருக்க மாட்டீர்கள். இதே இலவச மின்சாரத்தை பற்றி சொல்லும்போது உங்களுக்கு ஒன்றை நினைவுப்படுத்த விரும்புகிறேன். தமிழ்நாட்டிலே மறைந்த மதிப்பிற்குரிய எம்.ஜி.ஆர் அவர்கள் முதலமைச்சராக இருந்தபோது, விவசாயிகள் எல்லாம் சேர்ந்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினார்கள். மறைந்த விவசாய சங்கத்தினுடைய தலைவர் நாராயணசாமி நாயுடு அவர்கள் தலைமையில் போராட்டம் நடைபெற்றது. என்ன போராட்டம் என்றால், இலவச மின்சாரம் கேட்டு அல்ல, மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும் என்று சொல்லி ஒரு போராட்டம். அதுவும் எவ்வளவு குறைக்க வேண்டும் என்று சொல்லி கோரிக்கை வைத்தார்கள் தெரியுமா, ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லி போராட்டம் நடத்தினார்கள். அந்த போராட்டம் வெகுண்டு எழுந்தது. பலபேர் தடியடி பட்டு காயம்பட்டார்கள், பலபேர் உயிர் இழந்தார்கள். நாராயணசாமி நாயுடு அவர்களே திருச்சியில் போலீசாரால் தடியடிக்கு ஆளாக்கப்பட்டு, மருத்தவமனையிலே அனுமதிக்கப்பட்டார். இவ்வாறு பல கொடுமைகள் எல்லாம் நடந்தது.
1989-இல் நாம் ஆட்சிக்கு வருகிறோம். கலைஞர் அவர்கள் முதலமைச்சராக பொறுப்பேற்றவுடன் யாருடைய கோரிக்கையும் இன்றி, சட்டமன்றத்தில் இதுபற்றி யாரும் பேசவில்லை, விவசாய சங்கத்தை சார்ந்த யாரும் கோட்டைக்கு ஊர்வலமாக வந்து மனு கொடுக்கவில்லை, எந்தவித ஆர்ப்பாட்டமும் நடக்கவில்லை, உண்ணாவிரதம் நடைபெறவில்லை, எந்தவித கோரிக்கையும் வைக்காமலேயே கலைஞர் அவர்கள் முதலமைச்சர் பொறுப்பில் இருக்கும்போது சட்டமன்றத்தில் சொன்னார், விவசாய பெருங்குடி மக்களே நீங்கள் கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் ஒரு கோரிக்கை வைத்து மிகப்பெரிய போராட்டத்தை நடத்தினீர்கள். மின்சார கட்டணத்தை குறைக்க வேண்டும், அதுவும் ஒரு பைசா குறைக்க வேண்டும் என்று சொல்லி போராட்டம் நடத்தினீர்கள். தி.மு.க. ஆட்சியில் நீங்கள் எந்த கோரிக்கையும் வைக்கவில்லை, இருந்தாலும் நானே அதை நிறைவேற்ற முன்வருகிறேன். இனிமேல் இலவச மின்சாரம் என்று நாங்கள் அறிவித்துள்ளதால், இனி மின்சார கட்டணமாக ஒரு பைசா கூட தர வேண்டிய அவசியமில்லை என்று சொல்லி, இலவச மின்சார திட்டத்தை கலைஞர் அவர்கள் நிறைவேற்றினார். அது தொடர்ந்து நடந்தது.
இடையில் வந்த அ.தி.மு.க. ஆட்சி அதை எப்படியெல்லாம் தடுக்க வேண்டும் என்பதற்கான முயற்சியில் எல்லாம் ஈடுபட்டார்கள் என்பது உங்களுக்கு தெரியும்.
அதை தொடர்ந்துதான் இப்போது நாம் ஆட்சிக்கு வந்த பிறகு இந்த ஒன்றரை ஆண்டு காலத்திலே, ஒன்றரை இலட்சம் உழவர்களுக்கு இலவச மின் இணைப்புகள் வழங்கப்பட்டு இருக்கிறது என்பதை பெருமையோடு நான் குறிப்பி ட விரும்புகிறேன்.
அதேபோல, உலக செஸ் ஒலிம்பியாட் போட்டிகள். உலகத்திலேயே இப்படி ஒரு போட்டியை சிறப்பாக நடத்தியதாக வரலாறு கிடையாது. இந்திய நாட்டிற்கு மட்டுமல்ல, உலக அளவிலே பெருமைப்படத்தக்க வகையிலே செஸ் ஒலிம்பியாட் போட்டியை வெற்றிகரமாக நடத்தி, பல்வேறு பாராட்டுகளைப் பெற்றிருக்கிறோம்.
அதேபோல், ஒவ்வொரு சட்டமன்ற உறுப்பினர்கள், அது ஆளும்கட்சியாக இருந்தாலும் சரி, எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வாக இருந்தாலும், அல்லது கூட்டணி கட்சிகளாக இருந்தாலும் சரி, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 234 தொகுதிகளிலும் இருக்கக்கூடிய சட்டமன்ற உறுப்பினர்களின் கோரிக்கையை அவர்களிடத்திலே கேட்டு, ஒவ்வொரு ஆண்டும் பத்து கோரிக்கைகளை அவர்களிடமிருந்து பெற்று அதை நிறைவேற்றி தரவேண்டும் என்பதற்காக ஒரு திட்டத்தை நாம் அறிவித்து, அதை நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம், அதுதான் உங்கள் தொகுதியில் முதலமைச்சர் என்ற அந்த திட்டத்தை நாம் இப்போது நிறைவேற்ற தொடங்கி இருக்கிறோம்.
அதேபோல், நகர்ப்புற சாலைகள் மேம்பாட்டுத் திட்டம், இல்லம் தேடிக் கல்வி, மக்களைத் தேடி மருத்துவம், நான் முதல்வன் என்பது ஸ்டாலின் மட்டும் முதல்வராக இருக்க முடியாது, தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய மாணவர்கள் அத்தனைபேரும் முதல்வராக வரவேண்டும், நாட்டினுடைய முதலமைச்சராக வர வேண்டும் என்பது வேறு, தொழிலில், கல்வியிலே, வாழ்க்கை முன்னேற்றத்திலே அவர்கள் எல்லாம் முதல்வராக வரவேண்டும் என்பதற்காகத்தான் அந்த திட்டத்தை நாங்கள் அறிவித்திருக்கிறோம், அதை நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
வேலைவாய்ப்பை பெறுவதற்கு அவர்கள் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கக்கூடிய காலத்திலேயே அவர்களுக்கு உரிய திறன் பயிற்சியை அவர்களுக்கு வழங்கக்கூடிய அற்புதமான திட்டத்தை நான் முதல்வன் என்ற திட்டத்தின் மூலமாக நாங்கள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம்.
“நம்மை காக்கும் 48” என்ற அற்புதமான திட்டம், தந்தை பெரியார் கனவுத் திட்டமான சமத்துவபுரங்களை உருவாக்கி கொண்டு இருக்கக்கூடிய திட்டம், உழவர் சந்தைகள், அரசு முன்மாதிரிப் பள்ளிகள், பத்திரிகையாளர் நல வாரியம், எழுத்தாளர்களுக்கு கனவு இல்லம், இலக்கிய மாமணி விருது, கலைஞர் எழுதுகோல் விருது, பேராசிரியர் அன்பழகனார் பெயரிலே பள்ளிகள் மேம்பாட்டுத் திட்டம், பெருந்தலைவர் காமராசர் அவர்கள் பெயரிலே கல்லூரிகள் மேம்பாட்டுத் திட்டம், முதலீட்டாளர்களின் முதல் முகவரி தமிழ்நாடு, அதேபோல் தந்தை பெரியார் அவர்களின் பிறந்தநாளை சமூகநீதி நாளாக கொண்டாட வேண்டும் என்று அறிவித்தது மட்டுமல்ல, அதற்குரிய உறுதிமொழியையும் எடுக்க வேண்டும் என்ற சட்டத்தையும் கொண்டு வந்த ஆட்சிதான் நம்முடைய கழக ஆட்சி.
அதேபோல், இந்திய அரசியல் சட்டத்தை உருவாக்கித் தந்திருக்கக்கூடிய அண்ணல் அம்பேத்கர் அவர்களுடைய பிறந்தநாளையொட்டி சமத்துவநாள் உறுதிமொழி எடுக்க வேண்டும் என்று அறிவித்து, அதையும் நிறைவேற்றிக் கொண்டு இருக்கிறோம்.
வள்ளலார் பிறந்தநாளை தனிப்பெரும் கருணை நாளாக கொண்டாட வேண்டும் என்ற சட்டத்தை நிறைவேற்றி இருக்கிறோம். கலைஞர் நகர்ப்புர மேம்பாட்டுத் திட்டம், அன்னைத் தமிழில் அர்ச்சனை, அதேபோல் பெரியார் நெஞ்சிலே தைத்து கொண்டிருந்த முள், அது உங்களுக்கு தெரியும், அந்த முள்ளை அகற்றிட வேண்டும் என்பதற்காகத்தான் தலைவர் கலைஞர் அவர்கள், அவர் ஆட்சிப் பொறுப்பில் இருந்தபோது எல்லாம் அதற்காக பல்வேறு முயற்சிகளில் அவர் ஈடுபட்டார். அது என்னவென்று கேட்டால், அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆக முடியும் என்று அவர் எண்ணினார். நீதிமன்றமும் அதற்கு ஒரளவிற்கு சம்மதம் தந்தது. ஆனால் நிறைவேற்றப்பட்டதா என்றால் இல்லை. ஆனால் பெருமையோடு சொல்கிறேன், கலைஞர் அவர்கள் என்ன நினைத்தாரோ, தந்தை பெரியார் அவர்களின் நெஞ்சிலே தைத்த முள்ளை இன்றைக்கு நம்முடைய ஆட்சி, திராவிட மாடல் ஆட்சி அகற்றி இருக்கிறது என்பதை பெருமையோடு நான் குறிப்பிட்டு சொல்ல விரும்புகிறேன்.
மாவட்டந்தோறும் புத்தகக் கண்காட்சிகள். இருபது கலை அறிவியல் கல்லூரிகள் உருவாக்கப்பட்டு இருக்கிறது. புதிய தொழிற் பயிற்சி நிலையங்கள், காவல் ஆணையம், உயர்கல்வி வேலைவாய்ப்பு வழிகாட்டி, கல்லூரிக் கனவு, வேலைவாய்ப்பு முகாம்கள், தமிழ் பரப்புரைக் கழகம், சிறு, குறு புத்தாக்க நிறுவனங்கள், பொறுப்புமிக்க மாணவர்களை உருவாக்கிட சிற்பி திட்டம், ஆன்லைன் ரம்மி ஒழிப்புச் சட்டம்…
கல்லூரிக்கு செல்லக்கூடிய பெண்கள் பள்ளி படிப்பை முடித்துவிட்டு கல்லூரிக்கு செல்ல முடியவில்லை, என்ன காரணம் என்றால் வறுமை. படிப்பதற்கு வேண்டிய வசதி இல்லாத ஒரு சூழ்நிலை. அதை மனதில் வைத்துக் கொண்டு பள்ளிப் படிப்பை முடித்துவிட்டு, கல்லூரிக்கு செல்லும் மாணவிகளுக்கு மாதந்தோறும் 1000 ரூபாய் வழங்கக்கூடிய புதுமைப் பெண் திட்டம் என்கிற அருமையான திட்டத்தை நாங்கள் அறிவித்து அதையும் நாங்கள் இரண்டாண்டு காலமாக நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம்.
நீட் தேர்வு விலக்கு சட்ட மசோதாவை இரண்டு முறை சட்டமன்றத்தில் நிறைவேற்றி நாங்கள் அனுப்பி வைத்திருக்கிறோம். ஆனால் இதுவரை தமிழகத்தினுடைய ஆளுநரோ அல்லது ஒன்றிய அரசோ அதைப்பற்றி சிந்திக்கவில்லை, கவலைப்படவில்லை. ஆனால் என்னுடைய இலட்சியம் எல்லாம் என்னுடைய கொள்கை எல்லாம் குறுகிய காலத்திற்குள் நீட் தேர்விற்குரிய விலக்கை பெற்றே தீர வேண்டும் என்பதுதான். அதை நிறைவேற்றுவதற்கு எல்லா முயற்சிகளையும் நாங்கள் மேற்கொண்டு வருகிறோம்.
இப்படி எத்தனையோ திட்டங்களை நாங்கள் நிறைவேற்றி கொண்டு இருக்கிறோம். நான் சில நாட்களாக தொடர்ந்து சொல்லிக் கொண்டு இருக்கிறேன். நாங்கள் அறிவித்த திட்டங்களை எல்லாம் நாங்கள் நிறைவேற்றி விட்டோம் என்று தவறான தகவலை நாங்கள் உங்களுக்கு தெரிவிக்க விரும்பவில்லை. ஆனால் எதிர்க்கட்சியை சார்ந்தவர்கள், அதிலும் குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவராக இருக்கக்கூடியவர் தொடர்ந்து என்ன சொல்கிறார் என்று சொன்னால், தி.மு.க. ஆட்சிக்கு வந்த எதையும் செய்யவில்லை என்று சொல்லிக் கொண்டு இருக்கிறார். நான் இப்போது சொன்னேன், ஆதாரத்தோடு குறிப்பிட்டு சொன்னேன், ஆகையால் இதையெல்லாம் தயவுசெய்து எதிர்க்கட்சித் தலைவர் அவர்கள், ஒருவேளை இது உங்கள் கண்ணுக்கு தெரியவில்லை என்றால், கண் டாக்டரை பார்த்து, கண்ணாடி போட்டுக் கொண்டு அதை படித்துப் பாருங்கள். நான் பேசிய பேச்சையாவது கேட்டுப் பாருங்கள். இதையெல்லாம் உண்மையா, இல்லையா என்பதை சம்பந்தப்பட்டவர்களிடம் கேட்டு தெரிந்து கொள்ளுங்கள்.
85% பணிகளை நாங்கள் நிறைவேற்றி இருக்கிறோம். இன்னும் மிச்சம் இருக்கிறது, இல்லை என்று மறுக்கவில்லை. 5 ஆண்டு காலத்தில் செய்ய வேண்டிய பணிகளைத்தான் நாங்கள் தேர்தல் வாக்குறுதியாக சொல்லி இருக்கிறோம். 5 ஆண்டுகள் தேவையில்லை, இந்த ஆண்டுக்குள்ளாக எல்லா பணிகளையும் நிறைவேற்றி காட்டுவேன். நான் சாதாரண ஸ்டாலின் அல்ல, முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் என்பதை உங்களுக்கு தெரிவித்துக் கொள்கிறேன்.
அப்படி மிச்சம் இருக்கக்கூடிய அறிவிப்புகளில் ஒரு முக்கியமான ஒன்று இருக்கிறது. அதை நீங்கள் மறந்தாலும் நான் மறக்கவில்லை. எதிர்க்கட்சி தலைவர் மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். மக்களே மறந்தாலும் நான் மறக்க மாட்டேன். அதுதான் பெண்களுக்கு வழங்கக்கூடிய உரிமைத் தொகை. மாதம் 1000 ரூபாய் வழங்குவோம் என்று சொன்னோம். நிதிநிலையை மட்டும் ஒழுங்காக வைத்திருந்தீர்கள் என்றால், நாங்கள் வந்தவுடன் அதையும் நிறைவேற்றி இருப்போம். கொள்ளையடித்துவிட்டு போனீர்களே, கஜானாவை காலியாக மட்டுமல்ல, கடனையும் வைத்துவிட்டு போய் இருக்கிறீர்களே, அதை எல்லாம் இன்றைக்கு நாங்கள் சரி செய்து கொண்டு இருக்கிறோம். அவை எல்லாம் சரி செய்யப்பட்டவுடன் நிச்சயமாக சொல்கிறேன், உறுதியாக சொல்கிறேன், வருகிற மார்ச் மாதம் நிதிநிலை அறிக்கை தாக்கல் செய்யப்பட இருக்கிறது, அந்த நிதிநிலை அறிக்கையில் பெண்களுக்கு உரிமைத் தொகை ரூ.1000 எப்பொழுது வழங்கப்படும் என்று அறிவிக்க இருக்கிறோம். இது ஸ்டாலின் சொல்லும் வார்த்தை. எடப்பாடி சொன்ன வார்த்தையல்ல.
நீங்கள் எதற்கும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லை, சொன்னதை செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம், சொல்லாததையும் செய்வோம், சொன்னதையும் செய்து கொண்டே இருப்போம். இது மக்களுக்காக பாடுபடக்கூடிய ஆட்சி, இப்படிப்பட்ட ஆட்சிக்கு நீங்கள் எல்லாம் பக்கபலமாக இருக்க வேண்டும்.
இந்த இடைத்தேர்தலை இடைத்தேர்தலாக மட்டும் பார்க்காதீர்கள், இந்த ஆட்சி எப்படி இருக்கிறது, இந்த ஆட்சி என்ன செய்து கொண்டு இருக்கிறது, தேர்தல் நேரத்தில் சொன்னதை எல்லாம் செய்து கொண்டு இருக்கிறார்களா, முறையாக இந்த ஆட்சி நடக்கிறதா என்பதை எடைபோட்டு நீங்கள் வழங்க வேண்டிய தீர்ப்பு. அப்படி எடைபோட்டு தீர்ப்பளிக்க நீங்கள் தயாராகிவிட்டீர்களா, இல்லையா? உறுதியாக இருக்கிறீர்களா? அதில் எந்த சந்தேகமும் இல்லையே? கை சின்னத்திற்குத்தானே ஓட்டு போடப் போகிறீர்கள், உங்களுடைய ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்களுக்குத்தானே வெற்றியை தேடித்தர போகிறீர்கள். ஏற்கனவே அவருடைய திருமகன் ஈவெரா அவர்கள் ஒன்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்று இருக்கிறார். இங்கே வந்துள்ள இளைஞர் அணியின் செயலாளர் தம்பி உதயநிதி ஸ்டாலின் அவர்கள் இரண்டு நாட்கள் பிரச்சாரம் செய்த போது, அவர் சொல்லிவிட்டு போயிருக்கிறார், ஐம்பதாயிரம் வாக்கு வித்தியாசத்தில் நீங்கள் வெற்றியை தேடித் தர வேண்டும் என்று, நான் கேட்கிறேன், உதயநிதி சொன்னதையும் தாண்டி, அ.தி.மு.க.வை சார்ந்தவர்கள் டெபாசிட் இழக்கக்கூடிய அளவிற்கு உங்கள் ஆதரவு இருக்க வேண்டும், அதுதான் முக்கியம். அப்படிப்பட்ட வெற்றியை தேடி தருவீர்களா, நிச்சயமாக? உறுதியாக? சத்தியமாக? (மக்கள் “ஆம்” என்று உறுதியளிக்கிறார்கள்)
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!