M K Stalin
“என் கல்லூரி நண்பர் மறைவு வேதனை அளிக்கிறது..” - டிபி கஜேந்திரன் மறைவுக்கு முதலமைச்சர் இரங்கல் !
தமிழ் திரையுலகில் கடந்த சில வருடங்களுக்கு முன்னால் பிரபல இயக்குநர்களில் ஒருவர்தான் இயக்குநர் டி.பி.கஜேந்திரன். தமிழில் பழம்பெரும் நடிகையான டி.பி.முத்துலட்சுமி இவருக்கு அண்ணி ஆவார். இவரது ஆரம்ப காலகட்டத்தில் நடிகரும் இயக்குநருமான விசுவுடன் உதவி இயக்குநராக பணி புரிந்தார்.
நாளடைவில் இவரும் விசுவை போலவே குடும்ப சம்பவங்களை மையமாக கொண்டு கதைகளை உருவாக்கினார். தமிழ் சினிமாவில் கடந்த 1988-ம் ஆண்டு விசு நடிப்பில் வெளியான 'வீடு மனைவி மக்கள்' என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். ரசிகர்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த படத்தை தொடர்ந்து படங்களை இயக்கத் தொடங்கினார்.
தொடர்ந்து, 'எங்க ஊரு காவல்காரன்', 'தாயா தாரமா', 'பட்ஜெட் பத்மநாபன்', 'சீனா தானா' உள்ளிட்ட பல படங்ளை இயக்கியுள்ளார். கடைசியாக விவேக் நடிப்பில் வெளியான 'மகனே என் மருமகனே' என்ற படத்தை இயக்கியிருந்தார்.
இயக்குநராகும் முன்பே இவர், திரையில் தோன்றிய இவர், ஆரம்பத்தில் சின்ன சின்ன கதாபாத்திரங்களில் நடித்தார். அதன்பிறகு இவரது இயக்கங்களில் வெளியான படங்களிலும் சின்ன சின்ன ரோலில் நடித்தார். பிரபுவை வைத்து மட்டுமே பட்ஜெட் பத்மநாபன், மிடில் கிளாஸ் மாதவன், பந்தா பரமசிவம் ஆகிய படங்களை இயக்கினார். மக்கள் மத்தியில் வரவேற்பு பெற்ற இந்த படங்கள் இவரும் ஒரு நல்ல பெயரை கொடுத்தது.
தொடர்ந்து படங்களில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்து மேலும் பிரபலமானார். இயக்குநராக இவர் பெரிய அளவில் அறியாவிட்டாலும், நடிகராக மக்கள் மனதில் பெரிய அளவில் இடம்பிடித்தார். குறிப்பாக சீனா தானா, வில்லு, குசேலன், சந்திரமுகி, வேலாயுதம், பேரழகன் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார். முக்கிய கதாபாத்திரம் இல்லை என்றாலும், இவர் வரும் சீன் முக்கியமானவையாகவே இருக்கும்.
தொடர்ந்து சில படங்களில் நடித்து வந்த இவர், கடந்த ஆண்டு யோகி பாபு நடிப்பில் வெளியான 'பன்னி குட்டி' படத்திலும் நடித்துள்ளார். இப்படி படங்களில் நடித்து வந்த இவருக்கு கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் காணப்பட்டது.
இந்த நிலையில் இன்று தனது 68-வது வயதில் காலமானார். அவரது உடல் சென்னை, சாலிகிராமத்தில் உள்ள அவரது இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டுள்ளது. இவரது மறைவிற்கு திரையுலகினர், ரசிகர்கள், நட்சத்திரங்கள் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.
இவரது மறைவு குறித்து தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட இரங்கல் செய்தி குறிப்பில், "பிரபல இயக்குநரும், நடிகரும், எனது கல்லூரித் தோழருமான இனிய நண்பர், திரு. டி.பி.கஜேந்திரன் அவர்கள் மறைவுற்ற செய்தி, மிகுந்த வருத்ததையும், அதிர்ச்சியையும் அளிக்கிறது.
எங்க ஊரு காவல்காரன், பாண்டி நாட்டுத் தங்கம் போன்ற பல வெற்றிப் படங்களை இயக்கியதுடன், பல்வேறு திரைப்படங்களில் நடிகராகவும் தோன்றி, கலையுலகிற்கு தமது சிறப்பான பங்களிப்பை வழங்கி வந்தவர். கடந்த 2021 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் அவர் உடல்நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் நேரில் சென்று நலம் விசாரித்து வந்தேன்.
தற்போது எதிர்பாராத விதமாக அவர் உடல்நலக் குறைவால் காலமாகி இருப்பது வேதனையளிக்கிறது. திரு. டி.பி. கஜேந்திரனை இழந்து வாடும் அவரது குடும்பத்தினர், திரையுலக நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், ஆறுதலையும் தெரிவித்துக் கொள்கிறேன்" என்று குறிப்பிட்டுள்ளார்.
தூத்துக்குடியை சேர்ந்த இவர், தனது சிறு வயதிலே சென்னையில் குடியேறினார். தொடர்ந்து சென்னையில் உள்ள கல்லூரியில் தனது மேற்படிப்பை தொடர்ந்தார். அப்போது இவருக்கும், தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கும் நட்பு ஏற்பட்டது. இவர்களது நட்பு பல ஆண்டுகளாக தொடர்ந்தது.
கடந்த 2021-ம் ஆண்டு இவருக்கு உடல்நிலை சரியில்லை என்பதால் தமிழ்நாட்டின் முதலமைச்சரும், டிபி கஜேந்திரனின் கல்லூரி நண்பருமான மு.க.ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்தார். அதற்கு இவர் கவிதை நடையில் நன்றியும் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
Also Read
-
”நம்பிக்கையுடன் இருங்கள்” : கோரிக்கை வைத்த சில மணி நேரத்திலேயே ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
-
அவதூறு பேச்சு : கஸ்தூரி மீது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு!
-
2 புதிய கூடுதல் அரசு தலைமை வழக்கறிஞர்கள் நியமனம்! : யார் அவர்கள்?
-
தமிழ்நாடு மீனவர்களின் தண்டனைக் காலம் குறைப்பு! : முதலமைச்சரின் கடிதத்தை அடுத்து நடவடிக்கை!
-
”தெலுங்கர்களை மட்டுமல்ல பெண் இனத்தையே கேவலப்படுத்தியிருக்கிறார்” : கஸ்தூரிக்கு ஆ. ராசா MP பதிலடி!