M K Stalin
"மகனை இழந்த கனத்த இதயத்தோடு களத்தில் நிற்கும் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்": முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உருக்கம்!
2021ம் ஆண்டு நடந்த சட்டப்பேரவை தேர்தலில் காங்கிரஸ் கட்சி சார்பில் ஈரோடு கிழக்கு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற திருமகன் ஈவெரா சில நாட்களுக்கு முன்பு மாரடைப்பால் உயிரிழந்தார்.
இதையடுத்து அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டு, பிறகு பிப்ரவரி 27ம் தேதி இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது. இந்த அறிவிப்பை அடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் இடைத்தேர்தலுக்கான பிரச்சாரத்தில் அரசியல் கட்சிகள் ஈடுபட்டு வருகின்றன.
தி.மு.க தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சிக்குத் தொகுதி ஒதுக்கப்பட்டது. வேட்பாளராக ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் அறிவிக்கப்பட்டார். இதையடுத்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு பெற்றார்.
பின்னர் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசனை சந்தித்து ஈ.வி.கே.எஸ் இளங்கோவன் ஆதரவு கோரினார். இதையடுத்து இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சிக்கு நிபந்தனையற்ற ஆதரவு வழங்குவதாக கமல்ஹாசன் அறிவித்தார்.
இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவனை ஆதரித்து கூட்டணிக் கட்சி தலைவர்கள் தினமும் பிரச்சாரம் செய்து வாக்குகளைச் சேகரித்து வருகின்றனர். இந்நிலையில் மகனை இழந்த நிலையில் கனத்த இதயத்தோடு களத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிற்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திராவிடவியல் கோட்பாடுகள், திராவிட மாடல் ஆட்சி நிர்வாகம் உள்ளிட்டவை குறித்து சமூகவலை தங்களிலும் மக்கள் உள்ளங்களிலும் எழும் கேள்விகளுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளிக்கும் 'உங்களில் ஒருவன் பதில்கள்' தொடரின் இரண்டாம் பாகம் இன்று ஒளிபரப்பானது. அதில் கேட்கப்பட்ட ஒரு கேள்விக்குத்தான் மகனை இழந்த நிலையில் கனத்த இதயத்தோடு களத்தில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் நிற்கிறார் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
கேள்வி: ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி இடைத் தேர்தல் களத்தினுடைய நிலவரம் எவ்வாறு இருக்கிறது?
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: இந்த இடைத்தேர்தலே ஒரு துயரமான சூழலில்தான் வந்திருக்கிறது. அந்தத் தொகுதி எம்.எல்.ஏ. தம்பி திருமகன் ஈ.வெ.ரா மறைவு எதிர்பாராதது. அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கிய நிகழ்வு. நான் ஈரோட்டுக்கு நேரில் சென்று, அஞ்சலி செலுத்தியபோது, இளங்கோவன் அவர்களின் மனநிலையைப் பார்த்து கலங்கினேன்.
அரசியலில் தந்தை மறைவுக்கு பிறகு மகனுக்கு வாய்ப்பு வருவதைப் பார்த்திருக்கிறோம். ஆனால், இங்கு திருமகன் ஈ.வெ.ரா. மறைந்து, அவரது தந்தை போட்டியிட இத்தகைய சூழலில், கனத்த இதயத்தோடுதான், ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் களத்தில் நிற்கிறார்.
எப்படி இருந்தாலும் இது தேர்தல்களம். இந்த இடைத்தேர்தலில் தி.மு.கழகத்தின் தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி நிச்சயம் வெற்றி பெறும். தி.மு.கழக அரசின் சாதனைகளும், நிறைவேற்றி வருகின்ற மக்கள் நலத்திட்டங்களும், கூட்டணிக் கட்சிகளின் ஒத்துழைப்பும் வரலாற்றுச் சிறப்புமிக்க வெற்றியைப் பெற்றுத் தரும். இந்த இடைத்தேர்தலில் மட்டுமல்ல, இனி வரும் எந்தத் தேர்தலிலுமே தி.மு.கழக கூட்டணிதான் வெல்லும் என்பது உறுதி!
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?