M K Stalin
10 ஆண்டுகள்.. தமிழ்நாட்டை அடகுவைத்த அதிமுக: பழனிசாமி துரோக வரலாற்றை பட்டியலிட்ட முதல்வர் மு.க.ஸ்டாலின்!
திருவள்ளூரில் மொழிப்போர் தியாகிகள் வீரவணக்க நாள் பொதுக்கூட்டம் நடைபெற்றது. இதில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியது வருமாறு:-
பத்து ஆண்டுகால அ.தி.மு.க. ஆட்சியில் தமிழ்நாடு பல்வேறு வழிகளில் பாதாளத்துக்குப் போனது. அன்றைய ஆட்சியாளர்களுக்கு மக்களைப் பற்றிய எந்த அக்கறையும் இல்லை. ஒருவருக்கொருவர் சண்டை போட்டுக்கொண்டு தங்களது நாற்காலி நிலைத்தால் போதும் என்று இருந்தார்கள். அதனால் மக்களை மறந்தார்கள். அதனால் அனைத்து துறைகளிலும் தமிழ்நாட்டின் ஆட்சி நிர்வாகமானது தரை தட்டி நின்றது.
*கல்வியில் *மருத்துவத்தில் *உள்கட்டமைப்பில் *வேளாண்மையில் *பொருளாதார வளர்ச்சியில் *சட்டம் ஒழுங்கில் மிகமிக மோசமான நிலையில் இருந்தது தமிழ்நாடு. இவை அனைத்தையும் கடந்த மாற்றியது மட்டுமல்ல- தூக்கி நிறுத்தியது மட்டுமல்ல- முன்னேற்றியும் இருக்கிறோம்! இனால்தான் முன்னணி ஊடகங்கள் தமிழ்நாடு நம்பர் ஒன் மாநிலம் என்ற பெருமையை நமக்குக் கொடுத்திருக்கின்றன.
அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழ்நாடு ஒவ்வொரு துறையிலும் எத்தனையாவது இடத்தில் இருந்தது என்பதை தமிழ்நாட்டு மக்கள் அறிவார்கள். தூத்துக்குடியில் ஸ்டெர்லைட் ஆலையை மூட கோரி, அமைதியாக ஊர்வலம் சென்று கொண்டிருந்தவர்களைக் கலைத்து துப்பாக்கிச் சூடு நடத்தி, பொள்ளாச்சியில் பெண்களை பாலியல் வன்முறை செய்து படம் எடுத்து மிரட்டியவர்களைக் காப்பாற்றியதும்- அ.தி.மு.க. பிரமுகர்களான அவர்கள் துணிச்சலாக மாவட்ட எஸ்.பி.அலுவலகத்துக்கே வந்து பேட்டி அளித்ததும், அந்த விவகாரத்தையே அமுக்கியதும்தான் அதிமுக ஆட்சியின் சாதனை!
13 பேரைத் துள்ளத் துடிக்கச் சுட்டுக் கொன்றதும், 'அதனை டிவியை பார்த்துதான் நானே தெரிந்து கொண்டேன்' என்று அன்றைய முதலமைச்சர் பழனிசாமி சொன்னதும்தான் அதிமுக ஆட்சியின் சாதனை!
*அம்மையார் ஜெயலலிதாவின் கொடநாடு பங்களாவில் நடந்த கொள்ளைகள் - அதை ஒட்டி நடந்த கொலைகள் - தற்கொலைகள் - மர்ம மரணங்கள்தான் அதிமுக ஆட்சிக்காலத்து சாதனைகள்!
*ஊழல் வழக்கில் பழனிசாமிமீது சிபிஐ விசாரணை நடத்தலாம் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டதும்- அது பற்றி செய்தியாளர்கள் கேட்டபோது, 'யார் மீது தான் ஊழல் புகார் இல்லை' என்று டெல்லியில் பழனிசாமி பேட்டி அளித்ததும், உச்சநீதிமன்றத்திற்கு ஓடிச் சென்று தடை உத்தரவு பெற்றதால் பழனிசாமி பதவியில் தொடர்ந்ததும்தான் அதிமுக ஆட்சியின் சாதனைகள்!
*குட்கா விற்பனையை இரண்டு அமைச்சர்கள். சில காவல்துறை அதிகாரிகள் துணையோடு நடத்தியதும்தான் கடந்த கால அ.தி.மு.க ஆட்சியின் மறக்க முடியாத சாதனைகள்! இதை எல்லாம் மக்கள் மறக்கவில்லை! இதற்கான தக்க பாடத்தைத்தான் கடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு மக்கள் கற்பித்தார்கள். ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலிலும் அந்தக் கட்சிக்கு மக்கள் பாடம் கற்பிப்பார்கள். அடுத்து நடக்க இருக்கின்ற நாடாளுமன்றத் தேர்தலிலும் மக்கள் பாடம் கற்பிப்பார்கள். தமிழுக்கும் தமிழ்நாட்டுக்கும் விரோதமான சக்திகள் யாராக இருந்தாலும்தேர்தல் களத்தில் மட்டுமல்ல அரசியல் களத்திலும் தோற்கடிக்கப்பட வேண்டும்.
முந்தைய அதிமுக ஆட்சியில் அனைத்து விதங்களிலும் தமிழ்நாட்டின் உரிமையை அடகு வைத்துவிட்டு ஆட்சி நடத்தினார்கள். கழக ஆட்சியில் தலைவர் கலைஞர் ஆட்சியில் இருக்கும் வரை நீட் தேர்வு நுழையவில்லை. இன்னும் சொன்னால் அம்மையார் ஜெயலலிதா முதலமைச்சராக இருக்கும் வரையிலும் நீட் நுழையவில்லை. அவர் மறைவுக்குப் பிறகு, பழனிசாமி ஆட்சிக்கு வந்ததில் இருந்து தான் நீட் நுழைந்தது.
விவசாயிகளை ஒட்டுமொத்தமாக விளைநிலத்தில் இருந்து வெளியேற்றும் தந்திரமாக மூன்று வேளாண் சட்டங்களையும் அதிமுக ஆட்சியாளர்கள் தலையை ஆட்டி ஆதரித்தார்கள். பச்சைத் துண்டை போட்டுக் கொண்டு - நானும் விவசாயி தான் என்று சொல்லிக் கொண்டே - பச்சைத் துரோகத்தை விவசாயிகளுக்குச் செய்தார்கள்.
காவிரிப் பிரச்னையில் செய்த துரோகம் கொஞ்சமா? காவிரி இறுதி விசாரணை உச்சநீதிமன்றத்தில் வந்தபோது அதிமுக ஆட்சியில் சரியான வாதங்களை வைத்து வாதாடவில்லை. தமிழகத்துக்கு நிலத்தடி நீர்வளம் உள்ளதாகச் சொல்லி10 டி.எம்.சி குறைக்கப்பட்டதை தமிழக அரசு கேள்வி எழுப்பவில்லை இவை அனைத்தையும் விட குடியுரிமைச் சட்டத்தை ஆதரித்து சிறுபான்மையினருக்கும் ஈழத்தமிழர்க்கும் அதிமுக ஆட்சியாளர்கள் துரோகம் இழைத்தார்கள்.குடியுரிமைச் சட்டம் மக்களவையில் தாக்கல் ஆனபோதும் அதிமுக உறுப்பினர், அந்த சட்டத்தை ஆதரித்து வாக்களித்தார்.
மாநிலங்களவையில் தாக்கல் ஆனபோதும் அதிமுக உறுப்பினர்கள் ஆதரித்து வாக்களித்தார்கள். மக்களவையில் பாஜகவுக்கு பெரும்பான்மை இருக்கிறது. மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லை.அன்று அதிமுக உறுப்பினர்கள் அளித்த
11 வாக்குகளால் அது பெரும்பான்மையைப் பெற்று வெற்றி பெற்றுவிட்டது. இந்தி திணிக்கப்படும் போதும் - நிதி உரிமைகள் பறிக்கப்படும் போதும் - நமக்குத் தர வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகைகளைத் தராமல் காலதாமதம் செய்யும் போதும் - அதனைத் தட்டிக் கேட்க முதுகெலும்பு இல்லாமல் அதிமுக ஆட்சியாளர்கள் அப்போது இருந்ததை தமிழ்நாடு பார்த்தது. இப்படி வரிசையாக தமிழ்நாட்டுக்கு தனது ஆட்சி காலத்தில் துரோகம் இழைத்த கட்சி தான் அதிமுக என்பதை மக்கள் மறக்க மாட்டார்கள்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஒரு லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?