M K Stalin

"அறிவுச் சக்தியை உருவாக்குவதை தமிழ்நாடு அரசு தனது கடமையாகக் கருதுகிறது" -முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் !

இந்தியாவிலேயே முதல் முறையாக சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற்றது. கோலாகலமாக நடைபெற்ற இந்த கண்காட்சி இன்றோடு முடிவுக்கு வந்துள்ளது. இதன் நிறைவு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்று சிறப்புரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "உலகளாவிய அறிவுப் பரிமாற்றமே சென்னை பன்னாட்டு புத்தகக் காட்சியின் நோக்கம் ஆகும். இக்கண்காட்சியில் பங்கேற்கும் வெளிநாட்டு பதிப்பாளர்கள் மற்றும் தமிழக பதிப்பாளர்கள் தமிழ் இலக்கியத்தை மையமாகக் கொண்டு காப்புரிமைகளைப் பரிமாறிக் கொள்ள வசதி செய்யப்பட்டுள்ளது.இதனால் உலகளாவிய பதிப்புத்துறையினருடன் ஒரு சிறந்த தொடர்பை ஏற்படுத்த இயலும்.இந்த பன்னாட்டுப் புத்தகக் காட்சியில் பிரிட்டன், அமெரிக்கா, ஜெர்மனி, பிரான்ஸ், ஜப்பான், சுவீடன், கொரியா, சிங்கப்பூர், மலேசியா, தாய்லாந்து, பங்களாதேஷ், அஜர்பைஜான், இஸ்ரேல், உகாண்டா, அர்மேனியா, அர்ஜெண்டினா, கனடா, துருக்கி கென்யா, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட நாடுகளைச் சேர்ந்த பதிப்பாளர்கள், விற்பனையாளர்கள் வருகை தந்துள்ளார்கள்.'இவர்கள் அனைவரையும் தமிழ்நாட்டு முதலமைச்சர் என்ற அடிப்படையில் வருக வருக என வரவேற்கிறேன்.

இங்கு வந்துள்ள பன்னாட்டு பதிப்பாளர்கள் தமிழ் பதிப்பாளர்களுடன் நம்பகமான வணிகத் தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்ளலாம்.இங்குள்ள பதிப்புரிமை பரிமாற்று மையத்தில் (Rights table) பங்கேற்கும் நாடுகள், பிற புத்தக வெளியீட்டாளர்கள், இலக்கிய முகவர்கள், புத்தக வெளியீட்டு அமைப்புகள், எழுத்தாளர்கள், மொழிபெயர்ப்பாளர்கள் ஆகியோருடன் பதிப்புரிமையினை விற்கவும் வாங்கவும் வசதி செய்யப்பட்டுள்ளது.

தினந்தோறும் எழுத்தாளர்களுடன் சந்திப்பு, தமிழ் மற்றும் பிற மொழிகளில் மொழிபெயர்ப்பு, உலக புத்தகச் சந்தையில் பதிப்புத்துறையின் எதிர்காலம், மொழிபெயர்ப்பு தொழில்நுட்பம் போன்ற பல தலைப்புகளில் அறிஞர்களின் உரைகள் இருக்கிறார்கள்.இது அறிவுலகச் செயல்பாட்டுக்கு மிக மிக முக்கியம் ஆகும்.எழுத்தாளர்களுக்கு - பதிப்பாளர்களுக்கு - மொழிபெயர்ப்பாளர்களுக்கு இது மிகப்பெரிய வாய்ப்பு ஆகும்.இதனை நீங்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கடந்த 16 ஆம் தேதி தொடங்கி மூன்று நாட்கள் நடந்துள்ளது. அடுத்தடுத்த ஆண்டுகளில் இன்னும் பல நாட்கள் நடத்துவதற்கான ஏற்பாடுகளை அரசு செய்யும். இந்த ஆண்டு நடைபெறும் இந்த காட்சிக்காக 6 கோடி ரூபாயை அரசு ஒதுக்கீடு செய்தது.

பள்ளிக்கல்வித்துறையின் பொது நூலக இயக்ககமும், தமிழ்நாடு பாடநூல் மற்றும் கல்வியியல் கழகமும், தென்னிந்திய பதிப்பாளர்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் சங்கமும் (BAPASI) இணைந்து நடத்தும் இந்த சென்னை பன்னாட்டுப் புத்தகக் காட்சி தமிழ் மொழியையும் தமிழ் இலக்கியத்தையும் உலக அரங்கில் உயர்ந்த நிலையில் நிலைநிறுத்தும் என்ற நோக்கத்துக்காகவே அரசு இந்த நிதி ஒதுக்கீட்டைச் செய்தது.

அறிவுலகத்துக்குச் செலவு செய்வதை செலவாக நாங்கள் நினைப்பது இல்லை. அறிவுச் சக்தியை உருவாக்குவது என்பதை ஆக்கபூர்வமான பணியாகவே நினைக்கிறோம்.அறிவுலகத் தொண்டாகக் கருதிச் செய்து வருகிறோம். இதனை தமிழ்நாடு அரசு தனது கடமையாகக் கருதுகிறது. யாரும் கோரிக்கை வைத்து இதனை நாங்கள் செய்யவில்லை.

இப்படிச் செய்வது தான் எங்களது வாடிக்கை என்பதை தமிழ்நாட்டு எழுத்தாளர்கள், பதிப்பாளர்கள் நன்கு அறிவார்கள். இந்த அறிவுலகப் பணிக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

இது தொடர்பான ஆலோசனைகள் இருந்தால் அதனை ஏற்றுக் கொள்ள திறந்த மனத்தோடு தமிழ்நாடு அரசு தயாராகவும் இருக்கிறது.

இலக்கியம் படிப்போம்.

இலக்கியம் படைப்போம்!

உலக இலக்கியங்களை தமிழுக்குக் கொண்டு வருவோம்.

தமிழ் இலக்கியங்களை உலக மொழிகளுக்கு கொண்டு சேர்ப்போம்.

உலக அறிவுலகத்தை நாம் அறிவோம்.

உலக அறிவுலகத்துக்கு தமிழை அறிமுகம் செய்வோம்" எனக் கூறினார்.

Also Read: "தமிழ்நாட்டில் தமிழாட்சி நடக்கும் போது புத்தகக் கண்காட்சி நடப்பது வியப்பல்ல!" -முதல்வர் மு.க.ஸ்டாலின் !