M K Stalin
அனைத்து சாதியினரும் அர்ச்சகர் ஆகும் திட்டம் ஏன்? - அதற்கு பின்னால் உள்ள அரசியலை உடைத்த முதலமைச்சர் !
சென்னை வில்லிவாக்கத்தில் இந்து சமய அறநிலையத்துறைக்கு சார்பில் திருக்கோவில்களில் திருப்பணிக்கு நிதி வழங்கும் விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டு உரையாற்றினார். அப்போது பேசிய அவர், "கடந்த ஓராண்டு காலத்தில் மட்டும் 647 நிகழ்ச்சிகளில் நான் பங்கெடுத்துள்ளேன். மொத்தமாகச் சொல்வதாக இருந்தால் கடந்த ஆண்டில் மட்டும் தமிழ்நாட்டில் 8 ஆயிரத்து 549 கிலோ மீட்டர் தூரம் நான் சுற்றி வந்திருக்கிறேன்.இதில் அதிக பட்சமாக கடந்த செப்டம்பர் மாதம் மட்டும் 1,695 கிலோ மீட்டர் சுற்றி வந்துள்ளேன்.மக்களுக்கு நேரடியாக வழங்கப்பட்ட உதவிகள் மூலமாக ஒரு கோடியே 3 லட்சத்து, 74 ஆயிரத்து 355 பேர் பயனடைந்துள்ளார்கள். தமிழ்நாடு முழுவதும் பல்வேறு மாவட்டங்களில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டதன் மூலமாக பயனடைந்தவர்கள் இவர்கள்.
எந்த துறை சார்பிலான நிகழ்ச்சிகள் நான் அதிகம் கலந்து கொண்டுள்ளேன் என்ற விபரம் அது.அதனை இப்போது சொல்ல விரும்புகிறேன்.அதிகமான நிகழ்ச்சிகள் எனது உள்துறை சார்ந்த நிகழ்ச்சிகள் தான். மொத்தம் 32 நிகழ்ச்சிகளில் பங்கெடுத்து இருக்கிறேன். இந்து சமய அறநிலையத் துறை சார்பில் நடந்த 25 நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டுள்ளேன் என்பதை மகிழ்ச்சியோடு தெரிவித்து எனது துறையை கழித்துவிட்டுச் சொன்னால் மூன்றாவது இடத்தில் இருக்கிறது இந்து சமய அறநிலையத் துறை ஆகும். இந்த வெற்றிக்குக் காரணமான அமைச்சர் - செயல்பாபு எனப் போற்றப்படும் சேகர் பாபுவை பாராட்டுகிறேன்.
அனைத்து துறையும் வளர்வது தான் திராவிட மாடல் வளர்ச்சி என்று நாங்கள் சொல்லி வருகிறோம்.திராவிடம் என்ற சொல்லைப் பிடிக்காதவர்கள், எங்களை மதத்தின் விரோதிகளாகச் சித்தரிக்க முயற்சிகள் மேற்கொள்கிறார்கள். நாங்கள் மதவாதத்தின் எதிரிகளே தவிர, மதத்தின் எதிரிகள் அல்ல.என்பதை இத்தகைய விழாக்களின் மூலமாக அறியவேண்டியவர்கள் அறிய வேண்டும்.அறிவார்கள் என நினைக்கிறேன்.
தமிழகத்தில் உள்ள மிக முக்கியமான ஆன்மிகப் பெரியவர்கள், அருள் நெறியாளர்கள் முன்னிலையில் திருக்கோயில்களுக்கான நிதியை அரசின் சார்பில் நான் வழங்கி இருக்கிறேன்.கழக ஆட்சி மலர்ந்த பிறகு திருக்கோயில்களுக்கு ஏராளமான திருப்பணிகள் செய்யப்பட்டுள்ளன.அதன் தொடர்ச்சியாகத் தான் இவை வழங்கப்படுகின்றன.
திருக்கோயில் பணிகளைப் பொறுத்தவரையில் நாங்களாக எதையும் செய்யவில்லை.இதற்கான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஆலோசனைப் படி தான் நாம் செய்கிறோம்.தமிழ்நாட்டில் இந்து சமய அறநிலையத் துறை திருக்கோயில் பணிகளை மேற்கொள்ள மண்டல, மாநில அளவிலான வல்லுநர் குழு அமைக்கப்பட்டுள்ளது. அவர்களது ஒப்புதல் பெற்ற பிறகுதான் செயல்கள் செய்யப்படுகின்றன.
தற்போது வரை 3986 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்வதற்கு வல்லுநர் குழுவால் அனுமதி வழங்கப்பட்டுள்ளன. 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட பழமையான, வரலாற்றுச் சிறப்புமிக்க 112 திருக்கோயில்களை பழமை மாறாமல் சீர்செய்வதற்கு ரூ. 100 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது.
திருக்கோயில்களுக்கு சொந்தமான திருக்குளங்களை சீரமைக்கும் வகையில் கருத்துருக்களை வழங்குவதற்கு சென்னை. கோவை, திருச்சி மற்றும் மதுரைஆகிய இடங்களை தலைமையிடமாக கொண்டு 4 ஆலோசகர்களும், திருக்கோயில்களிலுள்ள பழமையான மூலிகை ஓவியங்களை பாதுகாக்கும் வகையிலான வழிமுறைகளை வழங்குவதற்கு தனி ஆலோசகரும்நியமிக்கப்பட்டு அதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்து சமய அறநிலையத்துறை மானியக் கோரிக்கையின்போது அமைச்சர் சேகர் பாபு அவர்கள் ஏராளமான அறிவிப்புகளைச் செய்தார்.சட்டமன்றத்தில் அறிவிக்க நேரம் இல்லாமல் - முக்கியமானதை மட்டும் அறிவித்தார். மற்றவைகளை, பேசியதாக பதிவு செய்து கொள்ளச் சொன்னார்.இந்த நிகழ்ச்சிக்கு தயாராகும் போது, அப்படி அறிவிக்கப்பட்டதில் எத்தனை நிறைவேற்றப்பட்டுள்ளது என்று அமைச்சர் சேகர்பாபுவிடம் கேட்டேன்.2021-2022 ஆம் ஆண்டில்வெளியிடப்பட்ட 112 அறிவிப்புகளில் 91 அறிவிப்புகளின் மூலம் 3769 திருக்கோயில்களில் திருப்பணிகளும் பக்தர்களுக்கான அடிப்படை வசதிகளை மேம்படுத்தும்பணிகளும் நடைபெற்று வருகின்றன.
2022-2023 ஆம்ஆண்டிற்கான 165 அறிவிப்புகளில் 135 அறிவிப்புகளின் மூலம்2578 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டுவருகிறது. என்று சொன்னார். இதற்காகவே அவரையும், அவரது துறையின் செயலாளர், ஆணையர், மற்றுமுள்ள அதிகாரிகள் அனைவரையும் பாராட்டுகிறேன்.2022 – 2023 ஆம் ஆண்டிற்கான சட்டமன்ற அறிவிப்பில் இடம் பெறாத அறிவிப்பு தான் இப்போது செயல்படுத்தப்படுகிறது.சொன்னதை மட்டுமல்ல,'சொல்லாததையும் செய்வோம் என்று சொன்னேன் அல்லவா?அது இதுதான்!
1250 ஆதிதிராவிடர் மற்றும்பழங்குடியினர் வசிக்கும் பகுதியிலுள்ள திருக்கோயில்கள் மற்றும் 1250 கிராமப்புறத் திருக்கோயில்களின்திருப்பணிகளையும் சேர்த்து இந்த நிதியாண்டில் மட்டும் 5078 திருக்கோயில்களில் திருப்பணிகள் மேற்கொள்ளப்படஉள்ளன.திருவாரூரில் பல்லாண்டுகளாக ஓடாத தேரை ஓட்டினார் முதல்வர் கலைஞர் அவர்கள். அப்போது தேர் வரும் பாதையைச் சுற்றிலும் சாலைகள் அமைக்கப்பட்டன.தேர் ஓடுவது சில நாட்கள் தான், ஆனால் மக்கள் 365 நாளும் நடந்து செல்லப் பயன்படுகிறது சாலைகள் என்று தந்தைப் பெரியார் அவர்களை மேடையில் வைத்துக் கொண்டே முதல்வர் கலைஞர் அவர்கள் சொன்னார்கள்.
கோயில்கள் நமது கலைச் சின்னங்களாக, பண்பாட்டுச் சின்னங்களாக இருக்கின்றன.நமது சிற்பத்திறமைக்கான சாட்சியங்களாக இருக்கின்றன.நமது கலைத் திறமைகளுக்கு எடுத்துக்காட்டுகளாக அமைந்திருக்கின்றன.எனவே தான் அதனை காப்பதில் கண்ணும் கருத்துமாக இருக்கிறோம்.அத்தகைய கோயில்கள் சமத்துவம் உலவும் இடங்களாக அமைய வேண்டும் என்பதுதான் நமது முழுமுதல் கொள்கையாகும்.
* எந்த மனிதரையும் ஜாதியின் பேரால் தள்ளி வைக்கக் கூடாது. அதற்குத் தான் அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சட்டத்தைக் கொண்டு வந்தோம்.
* அன்னைத் தமிழ் மொழி ஆலயங்களில் ஒலிக்க வேண்டும் என்ற உத்தரவையும் போட்டு இருக்கிறோம்.
சமூக சமத்துவம் கொண்டவைகளாக நமது ஆலயங்கள் திகழ வேண்டும். மனிதர்களில் மட்டுமல்ல கோயில்களிலும் நகரக் கோவில் - கிராமக் கோவில் என்றும்-பணக்காரக் கோயில் - ஏழ்மையான கோவில் என்றும் வேறுபடுத்திச் சொல்லப்படுகிறது.
கிராமப் புறக் கோயிலாக இருந்தாலும் -ஏழ்மையான கோயிலாக இருந்தலும் -ஆதிதிராவிடர் பகுதியில் இருக்கும் கோயிலாக இருந்தாலும் -அவற்றையும் ஆலயமாகவே கருதி, அதற்கு உதவி செய்யும் அரசு தான் இந்த திராவிட மாடல் அரசாகும்.மதம் - ஜாதி - வேற்றுமை மட்டுமல்ல -கோவில் - சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. மதம் - ஜாதி - வேற்றுமை மட்டுமல்ல -கோவில் - சாமி வேற்றுமையும் இந்த அரசுக்கு இல்லை. அனைத்து இறையியல் தலங்களையும் கண்ணும் கருத்துமாக கவனித்து வருகிறோம். அதனால் தான் இம்மேடையில் அமர்ந்திருக்கும் சமயச் சான்றோர்கள் மட்டுமல்ல, பலரும் இந்த அரசை ஆதரித்துக் கொண்டு இருக்கிறார். உங்களது பாராட்டுகள் எங்களுக்கு உற்சாகம் அளிக்கும். நீங்கள் ஊக்கப்படுத்துங்கள்.நாங்கள் எந்நாளும் உழைப்போம் என்பதைச் சொல்லி விடை பெறுகிறேன்." எனக் கூறினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!