M K Stalin
“திராவிட மாடல் அரசு எந்த மதத்திற்கு எதிரானது கிடையாது..” - கிறிஸ்துமஸ் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின்!
நாளை மறுநாள் நாடு முழுவதும் கொண்டாடப்படும் கிறிஸ்துமஸ் விழாவை முன்னிட்டு சென்னை பெரம்பூர் டான் பாஸ்கோ பள்ளியில் கிறிஸ்துமஸ் பெருவிழா நிகழ்ச்சி நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் சேகர் பாபு, அமைச்சர் திரு. கே.என்.நேரு, மேயர் பிரியா, தவத்திரு பொன்னம்பல அடிகளார், பேராசிரியர் பர்வீன் சுல்தானா, அருட்தந்தை அந்தோணிராஜ், அருட்சகோதரி அமலா ரஜினி, ராஜேந்திர சோர்டியா, சட்டப்பேரவையின் முன்னாள் உறுப்பினர் ரங்கநாதன், கொளத்தூர் தொகுதி கழகத்தின் செயலாளர்கள் நாகராஜன், ஐ.சி.எஃப் முரளி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.
தொடர்ந்து இந்த விழாவில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், மதத்தின் பெயரால் வன்முறைகளை தூண்டி அதில் லாபம் பெறலாம் என்று நினைக்கக் கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இது என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், “ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் இந்த கிறிஸ்துமஸ் விழாவை நாம் தொடர்ந்து கொண்டாடி வருகிறோம். அதிலும் குறிப்பாக என்னை, தொடர்ந்து மூன்றாவது முறையாக சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுத்து எதிர்க்கட்சி வரிசையில் அமையக்கூடிய வாய்ப்பையும், ஆளுங்கட்சி வரிசையில் உட்காரக்கூடிய வாய்ப்பையும், இன்றைக்கு தமிழகத்தின் முதல்வராக அமரக்கூடிய வாய்ப்பையும் எனக்கு வழங்கிக் கொண்டிருக்கக்கூடியவர்கள் நீங்கள், இந்தத் தொகுதி மக்கள்.
அப்படிப்பட்ட இந்த கொளத்தூர் தொகுதியில் ஒன்பதாவது ஆண்டாக இந்த கிறிஸ்துமஸ் விழா தொடர்ந்து நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட இந்த இனிய விழாவில் உங்களுடன் நான் பங்கேற்பதில் மிகுந்த மகிழ்ச்சியடைகிறேன்.
இந்த ஒன்றரை ஆண்டுகாலமாக ஆட்சிப் பொறுப்பேற்று, முதலமைச்சர் என்கிற பொறுப்பை உங்களுடைய துணையோடு, உங்களுடைய ஆதரவோடு பொறுப்பை ஏற்று இடைவிடாமல் ஆற்றிக் கொண்டிருக்கிற பல்வேறு பணிகளுக்கிடையில் சற்று இனிமை, ஒரு இன்பம், ஒரு மகிழ்ச்சி, ஏன், அதையும் தாண்டி ஒரு ஊக்கம், ஒரு உற்சாகம் வழங்குவதற்கு நான் இந்த கொளத்தூரைத்தான் எப்போதும் நாடுவதுண்டு, தேடுவதுண்டு.
ஆகவே, அந்த வகையில் எனக்கு உற்சாகத்தை, ஊக்கத்தை, நீ தொடர்ந்து பணியாற்ற வேண்டும் என்கிற அந்த வேகத்தை எனக்கு வழங்கிக் கொண்டிருக்கக்கூடிய உங்களுக்கு நான் மீண்டும் மீண்டும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்களோடு இப்படிப்பட்ட ஒரு விழாவில் கலந்துகொள்வது என்பது எனக்கு புதிதல்ல. ஆண்டுக்கொரு முறை வரக்கூடிய கிறிஸ்துமஸ் விழாவிலே நான் கலந்து கொள்வதுண்டு. இது ஆண்டாண்டுதான் வரவேண்டுமா? அடிக்கடி வரக்கூடாதா என்ற ஏக்கம் கூட எனக்கு வருவதுண்டு. அந்த அளவிற்கு ஒரு மகிழ்ச்சி தரக்கூடிய விழாவாக இந்த விழா அமைந்து கொண்டிருக்கிறது. இங்கே எல்லோரும் எடுத்துச் சொன்னார்கள்.
இதை ஒரு மதத்தின் விழாவாக நாம் நினைக்க வேண்டிய அவசியமில்லை. அனைத்து மதத்திற்கும் நல்லிணக்கமாக நடைபெறக்கூடிய விழாவாக இந்த விழா நடந்து கொண்டிருக்கிறது. அப்படித்தான் எல்லோரும் இங்கு ஒன்று கூடியிருக்கிறோம்.
திராவிட மாடல் அரசு என்பது எந்த மதத்தினுடைய நம்பிக்கைகளுக்கும் எதிரானது அல்ல. இன்றைக்கு மதத்தின் பெயரால் அரசியல் நடத்திப் பிழைக்கலாம் என்று நினைக்கக்கூடியவர்களுக்கு மதத்தின் பெயரால் வன்முறையைத் தூண்டி அதிலே லாபம் பெறலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கக்கூடியவர்களுக்கு எதிரான அரசுதான் இன்றைக்கு உங்களால் உருவாக்கப்பட்டிருக்கிறது. மனிதநேயத்தை வளர்ப்பது தான் திராவிடத்தினுடைய கொள்கை.
தந்தை பெரியாருடன் குன்றக்குடி அடிகளார் இணைந்து செயல்பட்டார். பேரறிஞர் அண்ணாவோடு, நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களோடு, கண்ணியத்திற்குரிய காயிதே மில்லத் அவர்களோடு இணைந்து நின்றார்.
அண்மையிலே நாம் இனமானப் பேராசிரியர் பெருந்தகை அவர்களுடைய நூற்றாண்டு விழாவை, நிறைவு விழாவை கொண்டாடிக் கொண்டிருக்கிறோமே, அந்த பேராசிரியர் பெருந்தகை அவர்கள், வள்ளலார் விழாக்களில் பங்கேற்று ஆற்றியிருக்கக்கூடிய உரைகளை யாரும் மறக்க முடியாது. ஏன், அன்று முதல் இன்றுவரை பேராயர் எஸ்றா சற்குணம் உள்ளிட்டவர்கள் எங்களுடன் மேடைகளைப் பகிர்ந்து கொள்கிறார்கள்.
ஒவ்வொருவரும் அவர்களுடைய கடவுளை வணங்கக்கூடியவர்கள்தான், அடுத்தவர்களின் நம்பிக்கையை மதிப்பவர்கள்தான். ஆனால் அதே நேரத்தில், ‘ஒன்றே குலம் ஒருவனே தேவன்’ என்பது திருமூலர் வாக்கு. அதைத்தான் திராவிட முன்னேற்றக் .கழகத்தின் பார்வையாகப் பேரறிஞர் அண்ணா அவர்கள் முன்வைத்து, சமத்துவ சமுதாயத்திற்கான சகோதரத்துவ உணர்வை வளர்த்து, சமூகநீதிப் பாதையில் பயணிக்கச் செய்தார்” என்று பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!