M K Stalin

”எம்.ஜி.ஆர்-ஜானகி கல்லூரி உருவாக காரணமாக இருந்தவர் முத்தமிழறிஞர் கலைஞர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை!

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று சென்னை, டாக்டர் எம்.ஜி.ஆர்.-ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் நடைபெற்ற அன்னை ஜானகி எம்.ஜி.ஆர். நூற்றாண்டுத் துவக்க விழாவில் கலந்து கொண்டு ஆற்றிய உரை.

"இந்த விழாவில் நான் பங்கேற்க முக்கிய காரணமே இந்தக் கல்லூரியின் மாணவிகளாக இருக்கக்கூடிய நீங்கள்தான். ஆர்வத்தோடு, மகிழ்ச்சியோடு நான் ஒப்புக் கொண்டதற்குக் காரணம், இதோ பக்கத்தில் இருக்கக்கூடிய தியோசபிக்கல் சொசைட்டியில் நான் ஒவ்வொரு நாளும் மாலையின் நேரம் கிடைக்கிறபோதெல்லாம் நடைப்பயிற்சி வருவது உண்டு. அங்கே வீட்டிலிருந்து கிளம்பி வருகிறபோது அருகாமையில் பேருந்து நிலையம் இருக்கிறது. அப்போது கல்லூரி விட்டு வரக்கூடிய மாணவிகளெல்லாம் பேருந்திற்காக இரண்டு பக்கமும் காத்திருப்பார்கள். என் காரைப் பார்த்தவுடன், அவர்களை கிராஸ் செய்கிறபோது, அப்படியே ஒரு உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு, எழுச்சியோடு ஒரு கூக்கூரல், ஒரு சத்தம், அந்த சத்தத்தைப் பொறுத்தவரைக்கும் ஏதோ சத்தம் நினைத்துவிடக் கூடாது, அது உங்களுடைய பாஸிட்டிவ் வைப் (Positive Vibe) அப்போது எனக்கு ரொம்ப எனர்ஜெட்டிக்காக இருக்கும்.

Physical Fitness எந்த அளவுக்கு முக்கியமோ, அதே அளவுக்கு Mental Fitness-ம் மிக மிக முக்கியம். அதற்குத் தேவையான பாஸிட்டிவ் வைப் உங்களிடம் இருக்கிறது. அதனால்தான் கல்லூரி நிகழ்ச்சிகள் என்றால் உற்சாகமாக கிளம்பி விடுகிறேன்.

தமிழ்நாட்டினுடைய முதல் பெண் முதலமைச்சர் என்ற சிறப்புக்குரியர் யார் என்று கேட்டீர்களானால், அம்மையார் ஜானகி எம்.ஜி.ஆர் அவர்கள்தான். அவருடைய நூற்றாண்டு விழாவில் கலந்து கொள்வதில் நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன். இது சிலருக்கு வியப்பாக இருக்கும், அதிர்ச்சியாக இருக்கும், ஆச்சரியமாக இருக்கும். ஆனால், வரலாற்று உண்மையை மனச்சாட்சிப்படி சிந்திக்கும் யாருக்கும் இது அதிர்ச்சியாக இருக்காது.

நம்முடைய மதிப்பிற்குரிய 'மக்கள் திலகம்' எம்.ஜி.ஆர் அவர்கள் இருபதாண்டு காலம் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இருந்தார். திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய சமத்துவ - பொதுவுடைமை கருத்துகளை மக்களிடம் எடுத்துப்போகிற அளவிற்கு சினிமாவில் ஒரு பெரிய ஹீரோவாக நடித்து, ஒரு பெரிய உந்துசக்தியாக இருந்தார். அதற்குப் பின்னால், காலத்தின் சூழ்நிலை கருதி, காலத்தினுடைய சூறாவளி, ஒரு தனி இயக்கம் அவர் கண்டார். அந்த இயக்கத்தைப் பொறுத்தவரைக்கும் அவருடைய பங்களிப்பு என்பது பதினைந்து ஆண்டுகள்தான்.

அந்த வகையில் பார்த்தால் ‘மக்கள் திலகம்’ எம்.ஜி.ஆர் அவர்கள் அதிக ஆண்டுகள், அதாவது 1952-ஆம் ஆண்டு முதல் 1972 வரை தி.மு.க.வில்தான் இயங்கிக் கொண்டிருந்தார். இதை அவரே சுட்டிக்காட்டி எழுதி இருக்கிறார். பல கட்டுரைகளில் அவர் எடுத்துச் சொல்லியிருக்கிறார். எம்.ஜி.ஆர் சொல்கிறார், “நான் கோவையில் இருந்தபோது எனது இல்லத்தில் கலைஞர் அவர்களும் சிறிது காலம் என்னோடு இருந்தார், அப்போது தேசிய இயக்கத்தைச் சார்ந்தவராக நான் இருந்தேன். ஆனால் கலைஞர் அவர்கள் ஒரு சுயமரியாதை கொள்கை பேசுபவராக இருந்தார். அவரை எப்படியாவது எனது கொள்கைக்கு இழுக்க நான் முயற்சித்தேன். ஆனால், இறுதியில் கலைஞர் அவர்கள்தான் வென்றார். நான் தி.மு.க.வில் இணைந்தேன். இதுதான் வரலாறு. ஆக, இன்றைக்கு தி.மு.க.வின் தலைவராக கலைஞரும், நான் பொருளாளராகவும் நானும் இருக்கிறேன்"- என்று எம்.ஜி.ஆர். எழுதி இருக்கிறார். இதெல்லாம் தெரிந்தவர்களுக்கு நான் இந்த நிகழ்ச்சியில் பங்கெடுப்பது யாருக்கும் வியப்பாக இருக்காது.

இன்றைக்கு இந்த இடத்தில் இவ்வளவு பெரிய கல்லூரி உருவாகியிருக்கிறது என்றால், பல்லாயிரக்கணக்கான மாணவிகள் இங்கே கல்வி பெறவும் அரசின் அனுமதியை வழங்கியவர் யார் தெரியுமா? முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள்தான்.

1996-ஆம் ஆண்டு தலைவர் கலைஞர் அவர்கள் நான்காவது முறையாக ஆட்சிக்கு வந்தார். அப்போதுதான் அம்மையார் ஜானகி அவர்கள், முதலமைச்சர் கலைஞர் அவர்களுக்கு போன் செய்து வாழ்த்து சொன்னார்கள். வாழ்த்து சொல்லிவிட்டு ஒரு கோரிக்கை வைத்தார்கள். "சத்யா ஸ்டுடியோ இருக்கும் இடத்தில் ஒரு காலேஜ் தொடங்கலாம் என்று இருக்கிறேன். அதற்கு நீங்கள் அனுமதி தர வேண்டும்"-என்று ஜானகி அம்மையார் அவர்கள் கோரிக்கை வைத்தார்கள். உடனே தலைவர் கலைஞர் அவர்கள், “நிச்சயம் அனுமதி தருகிறேன்... என்று சொல்லிவிட்டு உங்கள் உடல் நலம் எப்படியிருக்கிறது, உங்களை சந்திக்க நானே விரைவில் வந்து பார்க்கிறேன்''-என்று அவர் சொல்லியிருக்கிறார், சொல்லி இரண்டு நாட்களில் அம்மையாரின் உடல்நலம் மிகவும் பாதிக்கப்பட்டு அவர் மறைந்து விட்டார். மறைந்த செய்தி கேட்டு உடனடியாக ராமாவரம் தோட்டத்திற்கு தலைவர் கலைஞர் அவர்கள் சென்றார்கள், அஞ்சலி செலுத்திவிட்டு, பக்கத்தில் இருந்தவர்களிடத்தில் சொல்லியிருக்கிறார், “அம்மையார் ஜானகி அவர்கள் ஒரு கோரிக்கை வைத்திருக்கிறார்கள், அந்தக் கோரிக்கையை நான் நிறைவேற்றி கொடுத்திருக்கிறேன். 'யார் அந்தக் கல்வி நிறுவனத்தை நடத்தப் போகிறீர்கள்?' என்று ஒரு கேள்வியையும் தலைவர் கலைஞர் அவர்கள் அப்போது கேட்டிருக்கிறார்கள். அப்படி அக்கறையோடு கேட்டு உருவான கல்லூரிதான் இந்தக் கல்லூரி என்பதை நினைக்கும்போது, நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன்.

டாக்டர் எம்.ஜி.ஆர். ஜானகி மகளிர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி இவ்வளவு பிரம்மாண்டமாக உருவாகுவதற்கு எல்லோரும் காரணமாக இருந்திருக்கிறீர்கள், மறுக்கவில்லை. ஆனால் அதற்கு அடித்தளம் அமைத்த நேரத்தில் துணை நின்றவர் தலைவர் கலைஞர் என்று நினைக்கிறபோது, அதுவும் நான் வருவதற்கு முக்கியக் காரணம்”.

Also Read: "என் மீது அளவு கடந்த பாசம் கொண்டிருந்தவர்"- MGR குறித்த நினைவலைகளை பகிர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!