M K Stalin
10 ஆண்டுகள் இழந்த பெருமைகளை மீட்டு தமிழ்நாட்டை உயரத்திற்கு கொண்டு வந்த திமுக அரசு: முதலமைச்சர் பெருமிதம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (29.11.2022) அரியலுார் மாவட்டம், கொல்லாபுரத்தில் நடைபெற்ற அரசு விழாவில், அரியலூர் மற்றும் பெரம்பலூர் மாவட்டத்திற்கான முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி, பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி ஆற்றிய உரை:-
அரியலூர் மாவட்டம் என்பது அரிய மாவட்டம்! கொள்ளிடத்திற்கு வடக்கே - வெண்ணாற்றுக்கு தெற்கே - ஊடாற்றுக்கு வடக்கே - சிதம்பரத்துக்கு மேற்கே – இந்த அரியலூர் உருவாக்கப்பட்டது.
கங்கையை வென்ற முதலாம் இராசேந்திர சோழன் இங்கே கங்கை கொண்ட சோழபுரத்தை உருவாக்கினான். தனது ஆட்சிக் காலத்தில் தலைநகரைத் தஞ்சையில் இருந்து இந்த சோழபுரத்துக்கு மாற்றினான்.
தமிழ்காக்க - தமிழர்தம் நலம் காக்க, டால்மியாபுரம் என்ற பெயரை மாற்றிக் கல்லக்குடி என்று பெயர் சூட்டுவதற்காக தண்டவாளத்தில் தலைவைத்து, கல்லக்குடி கொண்டானாகப் படுத்து – தமிழ்க்குடி தொண்டனாக எழுந்த நமது கலைஞரைத் தலைவராக எழ வைத்த மாவட்டம்தான் இந்த அரியலூர் மாவட்டம்.
கலிங்கச் சிற்பங்கள்,
மாளிகை மேடு,
யானை சுதை சிற்பம்,
இரட்டைக் கோயில்
என்று எங்கு திரும்பினாலும் பொக்கிஷங்கள் - பொக்கிஷங்கள்!
கனிம வளங்கள் நிறைந்த மாவட்டம் இது. சுண்ணாம்புக் கல், மணற்கற்கள், பாஸ்பேட் முண்டுகள் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் கனிமங்கள் நிறைந்த பகுதிகளாக விளங்கிக் கொண்டிருக்கிறது. ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி, எண்ணெய் மற்றும் எரிவாயு வளங்கள் சொரிந்த பகுதியாக விளங்குகிறது. இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். கனிமங்கள் நிறைந்த இந்தப் பகுதியில் கழகத்துக்கு, நமது ஆட்சிக்குக் கிடைத்த வைரக்கல்தான் நம்முடைய மாண்புமிகு அமைச்சர் எஸ்.எஸ்.சிவசங்கர் அவர்கள். அப்பாவுக்குத் தப்பாமல் பிறந்த பிள்ளையாக எஸ்.எஸ்.சிவசுப்பிரமணியம் அவர்கள் பெயரைக் காப்பாற்றக்கூடிய பிள்ளையாக நம்முடைய சிவசங்கர் செயல்பட்டுக் கொண்டிருக்கிறார்.
1996-ஆம் ஆண்டு பெரம்பலூர் மாவட்ட ஊராட்சி மன்றத் துணைத்தலைவராக பொறுப்பேற்று – இப்போது மூன்றாவது முறையாகச் சட்டமன்றத்துக்கு வெற்றி பெற்றவர். போக்குவரத்துத் துறையின் அமைச்சர். குன்னம் தொகுதியில் நூலகம் கேட்ட மாணவி செம்பருத்தியின் கோரிக்கையை நிறைவேற்றி வைத்து அவரது கையாலேயே நூலகத்தைத் திறக்க வைத்தவர்.
மாணவி அனிதாவை யாராலும் மறக்க முடியாது. அவர் உச்சநீதிமன்றம் வரை சென்று தனது கல்வியுரிமையை போராட அதற்குத் துணையாக இருந்தவர்.
சட்டமன்றமாக இருந்தாலும் சரி, மக்கள் மன்றமாக இருந்தாலும் சரி, சமூக வலைத்தளங்களாக இருந்தாலும் சரி, கட்சி மீதோ, தலைமை மீதோ ஒரு விமர்சனம் வைக்கப்பட்டால் முன்னின்று வந்து தடுக்கக்கூடிய களப்போராளிதான் நம்முடைய சிவசங்கர் அவர்கள்.
போக்குவரத்துத் துறை அமைச்சராக பொறுப்பேற்ற நாள் முதல் கடந்த அதிமுக ஆட்சியில் மூன்று ஆண்டுகளுக்குள் முடிக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட போக்குவரத்து ஊழியர்களுக்கான 14-ஆவது ஊதிய ஒப்பந்த பேச்சுவார்த்தை வெற்றிகரமாக இவரால் முடிக்கப்பட்டிருக்கிறது.
சென்னை மாநகரத்தில் இயங்கக்கூடிய பேருந்துகள் குறித்து தகவல் அறிய சென்னை பஸ் செயலி அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்காக ஒன்றிய அரசு சிறந்த நுண்ணறிவு போக்குவரத்து அமைப்பு கொண்ட நகரம் என்று விருதினை அளித்திருக்கிறது.
சென்னை பேருந்துகளில் பெண்களுடைய பாதுகாப்பை உறுதி செய்ய சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது.
பயணிகளுடைய வசதிக்காக whatsapp இணையதளங்கள் உருவாக்கப்பட்டுள்ளன.
அரசுப் பேருந்துகளில் 3 வயது வரை இலவசமாகப் பயணிக்கலாம் என்று இருந்ததை 5 வயது வரை என்று உயர்த்தி இருக்கிறோம்.
ஓட்டுநர் உரிமத்திற்காக இணையத்தில் பதிவு செய்யக்கூடிய வசதி ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது.
இப்படி எத்தனையோ சாதனைகளைத் தொடர்ந்து ஆற்றிக் கொண்டிருக்கக்கூடியவர்தான் நம்முடைய அமைச்சர் சிவசங்கர் அவர்கள்.
பெரம்பலூர் மாவட்டத்திலிருந்து அரியலூர் என்ற புதிய மாவட்டத்தை
2007-ஆம் ஆண்டு நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்தான் உருவாக்கினார்.
அரியலூர் மாவட்டத்தில் அகழ்வாராய்ச்சியின்போது கிடைக்கப்பெறும் புதைபடிவங்கள் கொண்டு அருங்காட்சியகம் ஒன்று வாரணவாசி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ளது.
ரூபாய் 10 கோடி மதிப்பிலான புதைபடிவப் பூங்கா (Fossil Park) அமைப்பதற்காகவும், வாரணவாசி அருங்காட்சியகத்தின் பாதுகாப்பிற்காகவும் சுற்றுச்சுவர் அமைக்கக்கூடிய பணிகள் நடைபெறுகின்றது.
வாரணவாசி கிராமத்தில் உள்ள 120 ஏக்கர் நிலப்பகுதியினைப் (களர் நிலப்பரப்பு) பாதுகாத்திட, பாதுகாப்புக் கொள்கை (Conservation Policy) வெளியிட தொடர் முயற்சிகள் மேற்கொள்ளப்படுகிறது.
தமிழ்நாட்டினுடைய வரலாற்றுக் கருவூலமான அரியலூரில் ஏராளமான பணிகள் நடைபெற்று வருகிறது.
தமிழ்நாட்டின் வரலாற்றில் இதுவரையில் இல்லாத அளவிற்கு, அகழ்வாராய்ச்சிப் பணிகளுக்கென ஐந்து கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்திருக்கிறோம்.
அறிவியல் அடிப்படையிலான ஆய்வுகள் மற்றும் தரவுகளின் வாயிலாக மூவாயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட தமிழினுடைய தொன்மையையும், தமிழ்ச் சமூகத்தினுடைய பண்பாட்டு விழுமியங்களையும் அறிந்து கொள்ளக்கூடிய வகையில் தொல்லியல் துறையில் ஒரு மறுமலர்ச்சியையே உருவாக்கியிருக்கிறோம்.
நேற்று கங்கைகொண்ட சோழபுரம் மாளிகைமேட்டில் நடைபெற்று வரக்கூடிய அகழாய்வு அந்த பணிகளை எல்லாம் நாங்கள் நேரடியாக சென்று பார்வையிட்டோம். கங்கைகொண்ட சோழன், மும்முடிச் சோழன், உத்தமச் சோழன், பண்டிதச் சோழன், வீரசோழன் போன்ற பட்டங்களுக்குச் சொந்தக்காரரான சோழ மாமன்னர் இராஜேந்திர சோழன். தெற்காசிய நாடுகளை வென்று, அரியலூர் மாவட்டம் கங்கைகொண்ட சோழபுரத்தை தனது தலைமையிடமாகக் கொண்டு ஆட்சி செய்தவர். தனது ஆட்சிக் காலத்தில் பல நாடுகளைக் கடல் கடந்து சென்று வென்றதோடு, கிழக்கிந்தியத் தீவுகள், சீனா போன்ற நாடுகளுடன் வணிகத் தொடர்புகளையும் கொண்டிருந்தவர்.
இத்தகைய பெருமை வாய்ந்த மாமன்னர் இராஜேந்திர சோழனுக்குச் சிறப்பு சேர்க்கக்கூடிய வகையில், கடற்பயணம், கடல் வாணிகம் மற்றும் கப்பல் கட்டும் தொழில்நுட்பத்தில் தமிழர்கள் சிறந்து விளங்கியதையும், மேலை நாடுகளுடனும், கீழை நாடுகளுடனும் சிறந்த வணிகத் தொடர்பு கொண்டிருந்ததையும், உலகுக்குப் பறைசாற்றும் வகையில், நான் நேற்று பார்த்து, கண்டு வியந்ததை மக்கள் அனைவரும் காணவேண்டும் என்பதற்காக கங்கைகொண்ட சோழபுரத்தில் ஓர் அருங்காட்சியகம் உருவாக்கப்படும் என்பதை மகிழ்ச்சி பொங்க நான் அறிவிக்கின்றேன்.
சில மாதங்களுக்கு முன்பே, தஞ்சையில் மாமன்னர் ராஜராஜனுக்கு ஆண்டுதோறும் சதய விழா கொண்டாடப்படுவதைப்போல, மாமன்னர் ராஜேந்திர சோழனுக்கு அரசு விழா கொண்டாடப்பட வேண்டும் என்பது அரியலூர் மாவட்டத்தைச் சார்ந்த பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடைய நீண்ட கால கோரிக்கையை ஏற்று மாமன்னர் ராஜேந்திர சோழனின் பிறந்தநாள் விழாவான ஆடி திருவாதிரை விழாவினை அரசு விழாவாக ஆண்டுதோறும் கொண்டாடிட ஆணையிடப்பட்டதையும் நான் இந்த நேரத்தில் நினைவு கூறுகிறேன்.
நேற்று இரவு நான் ஆசிய கோப்பைக்கான ஹாக்கிப் போட்டியில் 20 ஆண்டுகளுக்குப் பிறகு தமிழகத்திலிருந்து இந்த மாவட்டத்தைச் சார்ந்த திரு.கார்த்திக் இந்திய அணிக்காகத் தேர்வு செய்யப்பட்டு வெண்கலப் பதக்கம் வென்று சாதனை படைத்திருந்தார். அவர்களுடைய ஏழ்மை நிலையை தொலைக்காட்சி பேட்டியின் மூலமாக பார்த்த நான் உடனே நம்முடைய அமைச்சர் சிவசங்கரை அங்கே அனுப்பி வைத்தேன். அதனுடன் குடும்பத்தார் வைத்த கோரிக்கையை நிறைவேற்றக்கூடிய வகையில் தமிழ்நாடு வாழ்விட மேம்பாட்டு வாரியத்தின் மூலமாக கட்டப்பட்டிருக்கக்கூடிய அடுக்கு மாடி குடியிருப்பில் வீடு ஒதுக்கீட்டிற்கான ஆணையை அவரது குடும்பத்தினரிடம் சென்று நானே நேரடியாக வழங்கினேன்.
இதேபோல ஹாக்கி போட்டியில் இந்திய அணிக்காக விளையாடிய வீரர் ரஜினி அரியலூர் மாவட்டத்தினை சேர்ந்தவர்.
உடையார்பாளையத்தைச் சேர்ந்த மாணவி சர்வானிகா, குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் நடைபெற்ற 35-ஆவது தேசிய சதுரங்கப் போட்டியில் பங்குபெற்று தமிழகத்தின் சார்பில் 7-வயதிற்குட்பட்டோர் போட்டியில் கலந்துகொண்டு இந்திய அளவில் முதலிடம் படைத்து சாதனை படைத்துள்ளார். இந்த மாவட்டத்தைச் சார்ந்த இத்தகைய பெருமை வாய்ந்த விளையாட்டு வீரர்களுக்கு என்னுடைய வாழ்த்துகளைத் இந்த நிகழ்ச்சியின் மூலமாக நான் தெரிவித்துக்கொள்கிறேன்.
இன்று இந்த விழாவில், அரியலூர் மாவட்டத்தில் 30 கோடியே 26 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 51 முடிவுற்ற திட்டப் பணிகளை திறந்து வைத்துள்ளேன்.
ஒரு கோடியே 56 லட்சம் ரூபாய் மதிப்பீட்டிலான 3 புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டி இருக்கிறேன்.
இந்த மாவட்ட மக்கள் பயன்பெறக்கூடிய வகையில் பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 27 ஆயிரத்து 70 பயனாளிகளுக்கு 52 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அரியலூருக்கு இத்தனை சிறப்புகள் என்றால், அரியலூருக்கு அருகில் இருக்கக்கூடிய பெரம்பலூரும் ஏராளமான சிறப்புகளைப் பெற்றுள்ளது.
ஒரு காலத்தில் பெரும்புலியூர் என்று அழைக்கப்பட்ட இடம்தான் பெரம்பலூர். அழகிய மலைகளும், அதில் அரிய வகையான விலங்குகளும் இருந்த பகுதி இது. ஆயிரம் ஆண்டிற்கு முந்தைய கோவில்கள் உள்ள பகுதி இது. மூன்றாம் குலோத்துங்க சோழன் காலம் முதல் மூன்றாம் இராசராசன் காலம் வரையிலான கல்வெட்டுகள் பெருநெற்குன்றம் கோவிலில் இருந்திருக்கிறது.
சோழர்கள் காலத்தில் வெண்பாவூர் என்பது வணிக மையமாக விளங்கி வருகிறது. சமணம் மற்றும் பவுத்த சமயம் தழைத்தோங்கிய இடமாகவும் இது இருந்துள்ளது. இத்தகைய வரலாற்றுச் சிறப்புமிக்க மாவட்டமாக பெரம்பலூர் மாவட்டம் அமைந்துள்ளது.
இன்றைக்கு நீலகிரி மாவட்டத்தினுடைய ஒரு அங்கமாக ஏன் பெம்பலூரிலே பிறந்து நீலகிரியினுடைய தத்துப்பிள்ளையாக, நாடாளுமன்ற உறுப்பினராக, இந்த பெரம்பலூர் மாவட்டத்தினுடைய மண்ணின் மைந்தரான, ஒன்றிய அரசின் முன்னாள் அமைச்சர் ஆ.ராசா அவர்களுக்கும் நான் இந்த நேரத்தில் மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
இது அரசு விழாவாக இருந்தாலும், தன்னுடைய விழாவைப் போலக் கருதி பணியாற்றி இருக்கிறார் ஆ.ராசா அவர்கள். ஆகவே, அவர் இந்த மாவட்டத்து மக்கள் மீது எந்த அளவிற்கு அன்பு வைத்திருக்கிறார் என்பதற்கு இதுவே ஒரு சாட்சி.
வேறு ஒன்றும் வேண்டாம், தலைவர் கலைஞர் அவர்களால் ‘தகத்தகாய சூரியன்’ என்று போற்றப்பட்ட சொற்களை மீறி அவரைப் பற்றி நான் சொல்வதற்கு என்ன இருக்கிறது. எதுவும் இல்லை.
பெரம்பலூர் மாவட்டத்தில் 221 கோடி ரூபாய் மதிப்பீட்டில் 23 முடிவுற்ற திட்டப்பணிகள் திறந்து வைத்திருக்கிறேன்.
31 கோடியே 38 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 54 புதிய திட்டப்பணிகளுக்கு அடிக்கல் நாட்டியிருக்கிறேன்.
பல்வேறு துறைகளின் சார்பில் மொத்தம் 9 ஆயிரத்து 621 பயனாளிகளுக்கு
26 கோடியே 3 லட்சம் ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
அந்த வகையில், மிகுந்த சிறப்புக்குரிய அரசு விழாவாக மட்டுமல்ல – இது ஒரு மக்கள் விழாவாக – மக்கள் மகிழ்ச்சி அடையும் விழாவாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
இதை எழுச்சியோடு ஏற்பாடு செய்திருக்கக்கூடிய நம்முடைய அமைச்சர் சிவசங்கர் அவர்களுக்கும், அவருக்கு எல்லா வகையிலும் துணை நிற்கக்கூடிய என்னுடைய நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசா அவர்களுக்கும், அதை போல நம்முடைய நாடாளுமன்ற உறுப்பினர் தொல்.திருமா அவர்களுக்கும், சட்டமன்ற உறுப்பினர்கள், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரியலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி பெ.ரமண சரஸ்வதி, இ.ஆ.ப., அவர்களுக்கும், பெரம்பலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் திருமதி ப. ஸ்ரீ வெங்கட பிரியா, இ.ஆ.ப., அவர்களுக்கும், இந்த இரு மாவட்ட நிர்வாகங்களைச் சார்ந்திருக்கக்கூடிய அரசு அதிகாரிகள், அலுவலர்கள் ஆகிய அனைவருக்கும் எனது மனமார்ந்த வாழ்த்துகளை, பாராட்டுக்களை நான் தெரிவித்துக் கொள்கிறேன்.
உங்கள் முயற்சியின் காரணமாக, வழங்கப்பட இருக்கக்கூடிய உதவிகள் மூலமாக, இலட்சக்கணக்கான குடும்பங்கள் இன்றைக்கு பயனடைய இருக்கின்றன.
இன்று காலை என்னிடம் வைத்திருக்கக்கூடிய கோரிக்கைகளின் அடிப்படையில் கனரக வாகனங்கள் அதிகம் செல்வதால், மக்கள் பயன்படுத்தக்கூடிய சாலைகள் சேதமாவதை தடுக்கும் பொருட்டு, சிமெண்ட் காரிடர் திட்டம் செயல்படுத்தப்படும் என்பதையும் நான் இந்த நிகழ்ச்சியில் மகிழ்ச்சியோடு அறிவிக்கிறேன்.
தேர்தல் வாக்குறுதியில் அறிவித்தபடி, ஜெயங்கொண்டம் பழுப்பு நிலக்கரி மற்றும் அனல்மின் உற்பத்தித் திட்டத்திற்காக 13 வருவாய் கிராமங்களில் நிலம் கையகப்படுத்தப்பட்ட 11 கிராமங்களில் உள்ளடங்கிய நிலங்களை, சிவசங்கள் குறிப்பிட்டுச் சொன்னாரே, மீண்டும் உரிய உடமையாளர்களிடம் ஒப்படைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டு, 306 உடமையாளர்களின் விபரங்கள் கண்டறியப்பட்டு, அவர்களுக்கு உறுதிமொழி ஆணை இன்று வழங்கப்பட்டுள்ளது.
நிலுவையில் உள்ள மேலூர் மற்றும் இலையூர் மேற்கு ஆகிய 2 கிராமங்களுக்கும் கையகப்படுத்தப்பட்ட நிலங்களை உடமையாளர்களிடம் ஒப்படைக்கத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் விரைவாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அரியலூர் - பெரம்பலூர் மாவட்டப் பகுதியில் 10 கோடி ரூபாய் செலவில் புவியியல் புதைபடிவப் பூங்கா அமையப் போகிறது.
அரியலூர் நகரில் புதிதாக பேருந்து நிலையம் அமைக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
ஜெயங்கொண்டம் அரசு பொது மருத்துவமனை, மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையாக தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
செந்துறை நகருக்கு புறவழிச்சாலை
அரியலூர் - ஆண்டிமடம் அரசு தொழில் பயிற்சி நிலையத்தில் கல்வித் தரத்தை மேம்படுத்த 7 கோடியே 46 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிய கட்டுமானப் பணிகள்
அரியலூர் முதல் செந்துறை வரை நான்கு வழிச்சாலையாக 129 கோடி ரூபாய் மதிப்பீட்டில் விரிவாக்கம்
அரியலூர் - மழவராய நல்லூர் சாலையில் மருதையாற்றின் குறுக்கே புதிய பாலம்
தேளூர் ஊராட்சியில் நெல் சேமிப்பு மையம் அமைப்பது எனப் பல்வேறு பணிகள் நடைபெற்று வருகின்றன.
எல்லாத் துறைகளின் சார்பிலும் இன்றைக்கு நடைமுறையில் இருந்து வரக்கூடிய அல்லது திட்டமிடப்பட்டு வரும் அனைத்துப் பணிகளையும் சொன்னால் பல மணிநேரம் ஆகும்.
மக்கள் தொண்டைத் தவிர மாற்றுச் சிந்தனை இல்லாத மக்கள் நல அரசாக திராவிட முன்னேற்றக் கழக அரசு செயல்பட்டுக் கொண்டிருக்கிறது.
பத்து ஆண்டு காலம் பாழ்படுத்தியதை மீட்டெடுப்பது என்பது சாதாரண காரியம் அல்ல!
அதனை உடனே நடத்தி விட முடியுமா என்ற மலைப்பு கூட எங்களுக்கு முதலில் இருந்தது. ஆனால் அத்தகைய பாதாளத்தில் இருந்து தமிழகத்தை பல்வேறு வகைகளில் மீட்டெடுத்துவிட்டோம் என்பதுதான் உண்மை.
போட்டி போட்டுக்கொண்டு தொழில் நிறுவனங்கள் இன்றைக்கு தமிழகத்திற்கு வருகிறது.
ஏற்றுமதியில் முன்னணி மாநிலமாக உயர்ந்து நிற்கிறோம்.
அனைத்துத் துறைகளிலும் முன்னேற்றப் பாதைக்கு நாம் போய்க்கொண்டு இருக்கிறோம்.
வேளாண்மை உற்பத்தி அதிகமாகி இருக்கிறது.
வேளாண் பாசனப் பரப்பு வசதி அதிகமாகி இருக்கிறது.
உயர்கல்வியிலும், பள்ளிக் கல்வியிலும் பல்வேறு விருதுகளைப் பெற்று வருகிறோம்.
மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதி ஏற்படுத்தித் தந்ததன் மூலமாக பெண்களுக்கு நிரந்தரமான வருமானத்தை ஈட்டித் தந்திருக்கிறோம்.
சில நாட்களுக்கு முன்னால் மாநிலத் திட்டக்குழுவின் துணைத் தலைவராக இருக்கக் கூடிய பேராசிரியர் ஜெயரஞ்சன் அவர்கள் என்னிடத்தில் ஒரு அறிக்கையைக் கொண்டு வந்து கொடுத்தார்கள்.
கழக ஆட்சி மலர்ந்ததும் மகளிருக்கு கட்டணமில்லா பேருந்து வசதியை ஏற்படுத்திக் கொடுத்தோம். அந்த திட்டத்தின் மூலமாக மகளிர் சமுதாயம் எத்தகைய பயனை அடைந்து வருகிறது என்பது குறித்த அந்த ஆய்வறிக்கையை கொண்டு வந்து கொடுத்தார்கள்.
அதில் குறிப்பிட்டிருந்தார்கள். பேருந்துகளில் கட்டணம் செலுத்தத் தேவையில்லை என்பதால் மாதத்துக்கு சுமார் தொள்ளாயிரம் ரூபாய் சேமிக்க முடிகிறது என்று அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கிறது. இதன் மூலமாக ஏழை எளிய பெண்கள் மிகுந்த மகிழ்ச்சியை அடைகிறார்கள். இதனால், மாத வருமானத்தில் பெருமளவு பணத்தை சேமிக்க முடிகிறது என்றும் - இந்த சேமிப்புப் பணத்தை குடும்பத்தின் வளர்ச்சிக்காகச் செலவு செய்ய முடிகிறது என்றும் அவர்கள் சொல்லி இருக்கிறார்கள்.
சில்லறை பணவீக்கத்தில் இருந்து பெண்கள் தங்களைத் தாங்களே பாதுகாக்க இத்திட்டம் உதவுவதாக பிரபலமான 'டைம்ஸ் ஆப் இந்தியா' ஆங்கில நாளேடு எழுதி இருக்கிறது. ஒரே ஒரு கையெழுத்தின் மூலமாக கோடிக்கணக்கான மகளிர் சமுதாயத்தின் மனதில் மகிழ்ச்சியை விதைக்க முடிந்திருக்கிறது.
பதினைந்து மாத காலத்தில் ஒன்றரை இலட்சம் இலவச வேளாண் மின் இணைப்பு தரப்பட்டுள்ளது.
ஒன்றிய அரசிடம் இருந்து தமிழ்நாட்டு உரிமைகளைக் காப்பாற்ற அனைத்தையும் செய்திருக்கிறோம்.
கொரோனாவை வென்று காட்டினோம்.
மழை- வெள்ளத்தில் இருந்து மக்களை காத்தோம்.
நேற்றுகூட, பெரம்பலூர் மாவட்டத்தில், காலணி உற்பத்தித் தொழிற்சாலைக்கு அடிக்கல் நாட்டி, புதிய சிப்காட் தொழிற்சாலையை திறந்து வைத்தேன்.
நம்முடைய அருமை சகோதரர் திருமாவளவன் அவர்கள் பேசும்போது குறிப்பிட்டாரே, அந்தத் தொழிற்சாலை மூலம், 50 ஆயிரம் பேர் அதிலும் பெரும்பாலும் பெண்கள் வேலைவாய்ப்பு பெற இருக்கிறார்கள்.
அண்மையில் ரிசர்வ் வங்கி வெளியிட்ட ஒரு புள்ளிவிவரத்தின்படி, இந்தியாவிலேயே அதிக தொழிற்சாலைகள் கொண்ட மாநிலமாக முதலிடத்தில் தமிழ்நாடு இருக்கிறது. நம்மைவிட மக்கள்தொகையிலும், பரப்பளவிலும் பெரிய மாநிலங்கள் கூட தொழில்வளர்ச்சியில் நமக்குக் கீழேதான் இருக்கிறது.
கடந்த ஆட்சியில், பத்தாண்டு காலம் தொழில் வளர்ச்சியில் தேக்க நிலை நிலவினாலும், அதற்கு முன்பு, தலைவர் கலைஞர் தலைமையிலான கழக அரசு போட்ட அடித்தளத்தாலும், கடந்த 18 மாதங்களாக எட்டு கால் பாய்ச்சலில் நாம் ஈர்த்து வரும் முதலீடுகளாலும் பெற்ற பெருமைதான் என்பதை நீங்கள் மறந்துவிட வேண்டாம்.
நான் இப்போது கூறிய இரண்டுமே தனித்தனி நிகழ்வுகள் அல்ல. ஒன்றோடு ஒன்று தொடர்பு உடையது.
2030-க்குள் ஒரு ட்ரில்லியன் டாலர் பொருளாதாரமாகத் தமிழ்நாட்டை உயர்த்துவோம் என்ற இலக்கின் வெவ்வேறு பரிமாணங்கள்தான் இவை.
நான் முதல்வன் திட்டமானாலும்; ஐ.டி.ஐ தொழிற்பயிற்சி நிலையங்களை
2 ஆயிரத்து 200 கோடி ரூபாயில் தொழில்நுட்ப மையங்களாக மேம்படுத்துவதானாலும்; பள்ளிக்கல்வியிலும், உயர்கல்வியிலும், நாம் மேற்கொண்டு வரும் முயற்சிகளானாலும்;
புதிதாக வளர்ந்து வரும் உற்பத்தித் துறைகளில் முதலீடுகளை ஈர்ப்பதானாலும்; நான்காம் தொழிற்புரட்சியை ஒட்டிய முயற்சிகள் ஆனாலும் – அனைத்துமே நம் இலக்கை நோக்கிய ஒருங்கிணைந்த திட்டமிடலின் அங்கங்கள்தான். இத்தகைய தொலைநோக்குப் பார்வையோடு திட்டமிட்டால்தான், இலக்கை அடையமுடியும்.
இதில் அரியலூர், பெரம்பலூர் என அனைத்து மாவட்டங்களின் பங்களிப்பும் இருக்கவேண்டும். அனைத்துத் தரப்பினரும் பயன்பெற வேண்டும். அடுத்த சில ஆண்டுகளில் பின்தங்கிய பகுதி, மாவட்டம் என்று எதுவும் தமிழ்நாட்டில் இருக்கக் கூடாது. அதை நோக்கித்தான் உழைத்து வருகிறோம்.
இவை அனைத்தும், ஒரு ஆட்சி எப்படி நடக்க வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக திராவிட முன்னேற்றக் கழக அரசு நடத்திக் காட்டும் செயல்கள்!
ஒரு ஆட்சி எப்படி நடக்கக் கூடாது – ஒரு முதலமைச்சர் எப்படி நடந்து கொள்ளக் கூடாது என்பதற்கு எடுத்துக்காட்டுதான் கடந்த கால ஆட்சி!
தனது கையில் அதிகாரம் இருந்தபோது - கைகட்டி வேடிக்கை பார்த்து -தனது கையாலாகாத தனத்தை வெளிப்படுத்தி – பத்தாண்டு காலத்தை நாசமாக்கியவர்கள். இன்று இதையெல்லாம் மக்கள் மறந்திருப்பார்கள் என்று நினைத்து புகார்கள் கொடுக்கிறார்கள் போய், யாரிடம், உங்களுக்கு தெரியும், பேட்டிகள் அளிக்கிறார்கள். அதையெல்லாம் மக்கள் பார்த்து சிரிக்கிறார்கள்.
'உங்கள் யோக்கியதைதான் எங்களுக்குத் தெரியுமே' என்று ஏளனமாகச் சிரிக்கிறார்கள்.
நாட்டில் சட்டம் ஒழுங்கு கெடவில்லை. ஆனால், கெடுக்கலாமா என்று சிலர் சதி செய்கிறார்கள்.
ஐயகோ கெடவில்லையே என்று சிலர் வருத்தப்படுகிறார்கள்.
ஐயோ, தமிழ்நாடு அமைதியாக இருக்கிறதே என்று வயிறு எரிகிறது இவர்களுக்கெல்லாம்.
“புலிக்கு பயந்தவன், என் மேல வந்து படுத்துக்கோ” என்று சொல்வார்களே, அதுபோல சிலர் “ஆபத்து – ஆபத்து” என்று அலறிக் கொண்டு இருக்கிறார்கள்.
இப்படிச் சொல்லும் சிலருக்கு, ’இருக்கும் பதவி நிலைக்குமா’ என்று பயமாக இருக்கிறது. அதனால்தான் மக்களைப் பார்த்து ஆபத்து ஆபத்து என அலறுகிறார்கள்.
மக்களுக்கு எந்த ஆபத்தும் இல்லை. மக்களுக்கு ஆபத்பாந்தவனான ஆட்சிதான் இந்த ஆட்சி. உங்கள் ஆட்சி நடக்கிறது, கவலைப்படாதீர்கள்.
விமர்சனங்களுக்கு எதிரானவர்கள் அல்ல நாங்கள். விமர்சனங்களை நான் உள்ளபடியே வரவேற்கிறேன். ஆனால் விஷமத்தனம் கூடாது. விமர்சனம் செய்பவர்களுக்கு அதற்கான அருகதை அவர்களுக்கு இருக்க வேண்டும்.
தங்கள் கையில் ஆட்சி இருந்தபோது எதையும் செய்யாமல் இருந்துவிட்டு, இன்று மகா யோக்கியரைப் போல, உலக மகா உத்தமனைப் போல பேசுபவர்களுக்கு விமர்சனம் செய்வதற்கான யோக்கியதை இல்லை.
தமிழகம் இழந்த பெருமைகளை மீட்பது மட்டுமல்ல, இதுவரை அடையாத பெருமைகளையும் உயரத்தையும் அடையத்தான் நமது ஆட்சியின் குறிக்கோள். அந்தக் குறிக்கோளோடு நான் பணியாற்றுகிறேன். அந்தக் குறிக்கோளை அடைய என்னை ஒப்படைத்துக் கொண்டு நான் செயல்பட்டுக் கொண்டிருக்கிறேன்.
இந்த மேடையில் அமர்ந்திருக்கக்கூடிய மாண்புமிகு அமைச்சர் பெருமக்களை பார்க்கிறீர்கள், மக்கள் பிரதிநிதிகளை பார்க்கிறீர்கள், இவர்கள் எல்லோருடைய ஒத்துழைப்போடு, இவர்களுடைய உழைப்பால், தமிழகம் அத்தகைய உயரத்தை விரைவில் அடையும் என்பதை உறுதியோடு சொல்லி வாய்ப்புக்கு நன்றி கூறி விடைபெறுகிறேன்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
திருவள்ளூரில் ரூ.330 கோடியில் 21 தளங்களுடன் மாபெரும் டைடல் பூங்கா! : முதலமைச்சர் திறந்து வைத்தார்!
-
கடற்கரை - தாம்பரம் இடையே இயக்கப்படும் 28 மின்சார ரயில்கள் இன்று ரத்து! : கூடுதல் பேருந்துகள் இயக்கம்!
-
ரூ.58 கோடி மதிப்பீட்டில் சுற்றுச்சூழல் பூங்காவாக மாறும் கடப்பாக்கம் ஏரி! : சென்னை மாநகராட்சி அறிவிப்பு!
-
“மூன்று வேளாண் சட்டங்களால் என்ன தீமை?” என்று கேட்டவர் எடப்பாடி பழனிசாமி! : முரசொலி கண்டனம்!
-
விவேகானந்தர் நினைவு மண்டபம் முதல் திருவள்ளுவர் சிலை வரை கண்ணாடி பாலம் : 85% பணிகள் நிறைவு!