M K Stalin

"பெண் கல்வியின் கலங்கரை விளக்கமாக இருக்கும் ராணி மேரி கல்லூரி".. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பாராட்டு!

தமிழ்நாடு முதலமைச்சர் திரு. மு.க. ஸ்டாலின் அவர்கள் இன்று (22.11.2022) இராணி மேரி கல்லூரியின் 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராகக் கலந்து கொண்டு ஆற்றிய உரை:-

பட்டம் பெறும் நாள் என்பது ஒவ்வொருவரின் வாழ்விலும் மிக முக்கியமான நாள். அதிலும் முதல் பட்டம் சிறப்பானது. முதல் தலைமுறையாகப் பட்டம் பெறுவது அதனைக் காட்டிலும் பரவசமானது. உணர்ச்சிபூர்வமான மனநிலையில்தான் இன்று பட்டம் பெற்ற நீங்கள் ஒவ்வொருவருமே இருக்கிறீர்கள். உங்கள் ஒவ்வொருவருடைய கண்களிலும் பல எதிர்காலக் கனவுகள் மின்னிக்கொண்டு இருக்கின்றன. உங்களது பட்டங்கள் உங்களை இன்னும் உயரத்திற்கு கொண்டு செல்லும்.

நம்முடைய உயர்கல்வித் துறை அமைச்சர் முனைவர் பொன்முடி அவர்கள் பேசும்போது குறிப்பிட்டுச் சொன்னார், வருகிறபோது நீங்களெல்லாம் ஆரவாரத்தோடு உங்களுடைய உணர்ச்சிகளை எழுச்சியோடு வெளிப்படுத்திக் காட்டினீர்கள். ஆனால், அது எனக்கு தந்த வரவேற்பு, எங்களை வரவேற்ற வரவேற்பு என்று நான் இப்போது முடிவு செய்துவிட்டேன். இப்போது இவ்வளவு அமைதியாக இருக்கக்கூடிய இந்தக் காட்சியைப் பார்க்கின்ற போது, இந்தக் கல்லூரியினுடைய கட்டுப்பாடு எந்த நிலையில் இருக்கிறது என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கிக் கொண்டிருக்கிறது.

நீங்கள் பெற்ற அறிவு, உங்களை மேலும் மேலும் உயர்த்தட்டும். நீங்கள் பெற்ற தன்னம்பிக்கை, உங்களை தலைநிமிர வாழ வைக்கட்டும். கல்லூரியில் இருந்து விடை பெறுகிறீர்களே தவிர, கற்பதில் இருந்து நீங்கள் விடைபெறவில்லை. அதைத்தான் பொன்முடி அவர்கள் சொன்னார், படியுங்கள், மேலும், மேலும் படியுங்கள். பாடங்களைப் படிப்பவர்களாக மட்டுமல்ல – பாடங்களை உருவாக்கக்கூடிய அளவிற்கு, உருவாக்கக்கூடியவர்களாக நீங்கள் உயர வேண்டும். நீங்களே மற்றவர்களுக்கு வழிகாட்டிகளாக ஆகுங்கள் என்று இந்த நேரத்தில் உங்களையெல்லாம் நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.

இராணி மேரி கல்லூரியினுடைய 104 -ஆவது பட்டமளிப்பு விழா இது. இராணி மேரி கல்லூரி என்பது இந்த பெயரைப் போலவே கம்பீரமான, பாரம்பரியமான கௌரவத்தைக் கொண்டிருக்கக்கூடிய கல்லூரி இந்தக் கல்லூரி.

பேசிய கல்லூரியினுடைய முதல்வரும் குறிப்பிட்டார், நம்முடைய அமைச்சர் அவர்களும் எடுத்துச் சொன்னார். 1915-ஆம் ஆண்டு "கேப்பர் இல்லம்" என்ற அந்தப் பெயரில் புகழ்பெற்ற அந்தக் கட்டடத்தில் இந்த இராணிமேரிக் கல்லூரி தொடங்கப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் முதன்முதலாகத் தொடங்கப்பட்ட மூன்று மகளிர் கல்லூரிகளில் இதுவும் ஒன்று. தமிழகத்தைப் பொறுத்தவரைக்கும் பார்த்தீர்களென்றால், முதல் மகளிர் கல்லூரி எது என்று கேட்டால், உங்கள் இராணி மேரிக் கல்லூரிதான். இது 104 ஆவது பட்டமளிப்பு விழா. இந்த நூறாண்டு காலத்தில் எத்தனை லட்சம் மகளிர் பட்டம் பெற்றிருப்பார்கள்! எத்தனை தலைமுறையினருக்குக் கல்வியை - அறிவை - ஆற்றலை - வேலைவாய்ப்பை - தன்னம்பிக்கையை - வாழ்க்கையை இந்தக் கல்லூரி உருவாக்கி இருக்கும் என்பதைக் கணக்கிட்டுப் பார்த்தால் வியப்பாக இருக்கிறது, மலைப்பாக இருக்கிறது, மகிழ்ச்சியாக இருக்கிறது. எனவே தான், இந்த இராணி மேரிக் கல்லூரியை வெறும் கல்லூரியாக மட்டும் சொல்ல முடியாது, பெருமையாக சொல்ல வேண்டுமென்றால், பெண்குலத்திற்கு ஒளிவிளக்கு என்றுதான் சொல்லவேண்டும்!

இந்தக் கல்லூரிக்கு முன்னால், கடற்கரைப் பகுதியில் கலங்கரை விளக்கு இருக்கிறது. இது பெண்கல்வியின் கலங்கரை விளக்காக இந்த இராணி மேரி கல்லூரி ஒளிவீசிக் கொண்டிருப்பதை நினைவுபடுத்துவது போல் அமைந்திருக்கிறது.

இந்த இராணி மேரி கல்லூரிக்குள் நுழைகிற போது எனக்கு பழைய சில நினைவுகள். எல்லோரும் சொன்னார்கள், அவர்கள் சொன்னாலும், சொல்லாவிட்டாலும் என் வாழ்க்கையில், என் வாழ்நாளில் அதை மறக்கவே முடியாது.

பழம்பெரும் பெருமை கொண்டிருக்கக்கூடிய இந்த பெரிய வரலாற்றைப் பெற்றிருக்கக்கூடிய இந்தக் கல்லூரியை இடிப்பதற்கு ஒரு திட்டம் தீட்டப்பட்டது. முன்னாள் முதலமைச்சராக இருந்த அம்மையார் ஜெயலலிதா அவர்கள் அதற்கான முயற்சிகளில் ஈடுபட்டார்கள். நான் இந்த நேரத்தில் அரசியல் எல்லாம் பேச விரும்பவில்லை, அது தேவையும் இல்லை, நான் எப்பொழுதும் அப்படி பேசுவதும் கிடையாது. ஆனால் அன்றைக்கு இந்தக் கல்லூரியை இடிக்கக் கூடாது என்று பொன்முடி சொன்னது போல, சட்டமன்றத்தில் நாங்கள் வாதிட்டோம், போரிட்டோம். இங்கு படித்துக் கொண்டிருந்த மாணவிகள், முன்னாள் மாணவிகள், பேராசிரியர்கள், முன்னாள் பேராசிரியர்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து, ஒரு மிகப்பெரிய போராட்டத்தை நடத்திக் கொண்டிருந்தார்கள். அதனுடைய உச்சகட்டமாக, உண்ணாவிரதப் போராட்டம் நடந்தது. இந்த வளாகத்திற்குள் உட்கார்ந்து மாணவிகளெல்லாம் ஒரு மிகப்பெரிய உண்ணாவிரதப் போராட்டத்தை தொடர்ந்து நடத்தினார்கள். அப்படிப்பட்ட போராட்டத்தை நடத்திய காரணத்தால் அன்றைக்கு இருந்த அரசு, கல்லூரிக்குள் வரக்கூடிய குடிநீர் சப்ளையை நிறுத்தியது, கழிப்பறைகளை பயன்படுத்தக்கூட தடையும் போட்டார்கள். கல்லூரியை மூடிவிட்டு, இங்கு பணியாற்றிய பேராசிரியைகளையெல்லாம் வேறு ஊர்களுக்கு இடமாற்றம் செய்தார்கள்.

அப்போது சட்டமன்றம் நடந்து கொண்டிருக்கிறது. கோபாலபுரத்திலிருந்து தலைவர் கலைஞர் அவர்கள், எங்களுக்கு சட்டமன்ற கட்சியின் அலுவலகத்திற்கு தொலைபேசியின் மூலமாக தொடர்பு கொண்டு, ஒரு செய்தியைச் சொன்னார்கள், சட்டமன்றம் முடித்துவிட்டு, வீட்டிற்கு வருகிற வழியிலே, கலைஞர் சொல்கிறார், வீட்டிற்கு வருகிற வழியில், இராணி மேரி கல்லூரியில் போராட்டம் நடத்திக் கொண்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் சென்று சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு வாருங்கள். உங்களுடைய போராட்டத்திற்கு "திராவிட முன்னேற்றக் கழகம் நிச்சயமாக ஆதரவு தரும்" என்ற செய்தியைச் சொல்லிவிட்டு வாருங்கள்” என்று எங்களுக்கு உத்தரவு போட்டார்.

அந்த உத்தரவை ஏற்றுக்கொண்டு நானும், பொன்முடி அவர்களும், இன்னும் சிலரும் இங்கே வந்தோம். வந்தவுடன் வாசலில் நிற்கின்ற காவலர்கள், கேட் மூடியிருக்கிறது அப்போது, வாசலில் நிற்கின்ற காவலர்கள், எங்களைப் பார்த்தவுடன் வணக்கம் வைத்து மரியாதையோடு கேட்டை திறந்துவிட்டார்கள். நீங்கள் நன்றாக கவனிக்க வேண்டும், கேட்டை திறந்து விட்டார்கள். அதற்குப் பிறகு நாங்கள் உள்ளே வருகிறோம். உள்ளே வந்தவுடன் அங்கு கீழே அமர்ந்துகொண்டு ஆயிரக்கணக்கான மாணவியர்கள் போராட்டத்தை நடத்திக் கொண்டிருக்கிறார்கள். மரியாதையோடு தான் கதவை திறந்துவிட்டார்கள். அப்படி கல்லூரிக்குள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கக்கூடிய மாணவிகளையெல்லாம் நாங்கள் சந்தித்தோம். அதிக நேரம் கூட இல்லை, இரண்டு முதல் நான்கு நிமிடங்கள்தான் இருக்கும். தைரியமாக இருங்கள், நல்ல காரியத்திற்காக நீங்கள் போராடுகிறீர்கள், உங்கள் போராட்டம் நிச்சயம் வெற்றி பெறும், நாங்கள் உங்களுக்கு எப்போதும் துணை நிற்போம், கலைஞர் அவர்கள் எங்களுக்கு செய்தி சொல்லி அனுப்பினார், தொலைபேசியில் தொடர்பு கொண்டு உங்களுக்கு சொல்லிவிட்டு வரச்சொன்னார். எனவே, நாங்கள் ஆதரவு தருவோம், நீங்கள் எதற்கும் கலைப்பட வேண்டாம். ஆனால், அமைதியாக போராடுங்கள் என்று சொல்லிவிட்டு நாங்கள் சென்றோம். போகிறபோது கூட கேட் மூடியிருந்தது, அப்போதும் கேட்டை திறந்துவிடுகிறார்கள். வந்தபோதும் கேட்டை திறந்துவிட்டார்கள், போகிறபோதும் காவலர்கள் கேட்டை திறந்து விடுகிறார்கள். வந்து மாணவிகளைச் சந்தித்து ஆறுதல் சொல்லிவிட்டு, ஊக்கப்படுத்திவிட்டு, உற்சாகப்படுத்திவிட்டு வெளியில் திரும்ப வருகிறபோதும், மூடியிருந்த கேட் திறக்கப்படுகிறது, நாங்கள் வெளியில் போகிறோம். இது நடந்தது, பகல் 2.00 மணி அல்லது 2.30 மணி இருக்கும்.

இரவு 12.00 மணிக்கு வேளச்சேரியில் இருக்கிறேன், வேளச்சேரியில் தான் என்னுடைய வீடு. போலீஸ் வந்துவிட்டது.

எதற்கு என்று கேட்டேன்? கைது செய்ய வந்திருக்கிறோம் என்றார்கள். எதற்கு என்று கேட்டேன்? இராணி மேரி கல்லூரியில் பேராடிக் கொண்டிருக்கின்ற மாணவிகளையெல்லாம் நீங்கள் சுவர் ஏறிக் குதித்து, கேட் ஏறி குதித்து உள்ளே சென்று போய்விட்டு வந்திருக்கிறீர்கள். அதற்காக கைது. வழக்கு என்னவென்றால், கேட் ஏறி குதித்தாக வழக்கு. என்னையும், பொன்முடி போன்றவர்களையெல்லாம் கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தார்கள். ஒருமாத காலம் சிறையில் இருந்தோம். இங்கேகூட கல்லூரி முதல்வர் அவர்கள் துன்பப்பட்டார்கள் என்று சொன்னார்கள், துன்பப்படவில்லை, மகிழ்ச்சியாக ஏற்றுக் கொண்டோம். அதை துன்பமாக நாங்கள் கருதவில்லை. உங்களுக்காக, மாணவிகளுக்காக நாங்கள் அதை மகிழ்ச்சியாக ஏற்றுக்கொண்டோம். ஒருமாத காலம் இருந்தோம். அதில் எனக்கு என்ன பெருமை என்று கேட்டீர்களென்றால், நான் ஏற்கனவே சொன்னேன், இந்த இடத்திற்கு, இந்தக் கல்லூரி வளாகத்திற்கு "கேப்பர்" என்று பெயர். கடலூரில் கொண்டு போய் எங்களை சிறையில் அடைத்து வைத்தார்களே, அந்தச் சிறைக்கு என்ன பெயர் என்று கேட்டால், கேப்பர் சிறை, எவ்வளவு பொருத்தம் பாருங்கள். எனவே தான் சொன்னேன், என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத எத்தனையோ நிகழ்ச்சிகள் இருந்தாலும், இந்தக் கல்லூரிக்காக போராடிய மாணவிகளுக்குத் துணைநின்றதற்காக, அதை நினைத்துப் பார்க்கின்றபோது, இது ஒரு மறக்கமுடியாத சம்பவமாக என்னைப் பொறுத்தவரையில் அமைந்திருக்கிறது. சிறையில் இருந்து வாடினேன் என்று சொன்னால், நான் வாடவில்லை, மகிழ்ச்சியோடு தான் இருந்தேன். என் வாழ்வில் அப்படிப்பட்ட ஒரு முக்கியமான இடத்தைப் பிடித்த இடம்தான் இந்த இராணி மேரி கல்லூரி என்பதை மீண்டும் மீண்டும் இங்கே நினைவுபடுத்த விரும்புகிறேன்.

இத்தகைய புகழ்பெற்ற இந்த இராணிமேரிக் கல்லூரியில் 3 கோடியே

20 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கலைஞர் மாளிகை கட்டப்பட்டது. கடந்த கால ஆட்சியாளர்கள் கலைஞர் என்கின்ற அந்தப் பெயரை நீக்கி விட்டார்கள். அதனை மீண்டும் இப்போது நாம் சூட்டி இருக்கிறோம். கட்டடங்களில் இருக்கும் பெயரை நீக்குகிற காரணத்தால் கலைஞருடைய பெயரை மக்கள் மனதில் இருந்து யாராலும் நீக்கிவிட முடியாது. அது வேறு. அவர் கோடிக்கணக்கான மக்களுடைய மனதில் இடம் பிடித்தவர். அவரால் பயன்பெற்ற மாணவர்களின் உணர்வில் இன்றைக்கும் அவர் வாழ்ந்து கொண்டு இருக்கிறார். அத்தகைய பெருமைக்குரிய கலைஞர் பெயரால் மாளிகை அமைந்திருக்கும் இடம்தான் இந்த இராணிமேரி கல்லூரி!

பெருமைமிகு இக்கல்லூரியினுடைய 104-ஆவது பட்டமளிப்பு விழாவில் கலந்து கொண்டு உங்களுக்கு பட்டங்களை வழங்குவது எனக்குக் கிடைத்த பெருமை! 21 துறைகளைச் சேர்ந்த 3,259 மாணவியர்கள் பட்டம் பெறுகிறார்கள். இவர்களில் பெரும்பாலானவர்கள் முதல் தலைமுறைப் பட்டதாரிகள் என்பதுதான் எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சியை அளிக்கிறது.

பொன்முடி அவர்கள் சொன்னார், இன்னார்தான் படிக்கலாம் - இன்னார் படிக்கத் தேவையில்லை - உடல் உழைப்பு வேலைகளை மட்டுமே பார்க்கலாம் என்ற நிலைமை 100 ஆண்டுகளுக்கு முன்னால் இருந்தது. பெண்களின் நிலைமை இதைவிட மோசமாக இருந்தது. நீதிக்கட்சி ஆட்சி வந்து இந்த நிலை மாறத் தொடங்கியது.

'அடுப்பூதும் பெண்ணுக்கு படிப்பு எதற்கு?' என்று கேட்ட காலத்தில், சமையல் கரண்டி பிடித்திருக்கும் கையில், புத்தகத்தைக் கொடுங்கள் என்று சொன்னவர் ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியார் அவர்கள். அவரைப் போன்ற சீர்திருத்தவாதிகளால்தான் பெண் சமூகத்தில் ஒரு புரட்சிகரமான மாற்றம் நிகழத் தொடங்கியது.

அந்தக் காலத்தில் எட்டு வயது - பத்து வயது பெண் குழந்தைகளுக்கு எல்லாம் திருமணம் செய்து வைத்து விடுவார்கள். குழந்தை திருமணங்களை குற்றச் செயல்கள் என்று சட்டம் போட்டிருக்கிறோம். இந்த நிலையை நாம் சாதாரணமாக அடைந்துவிடவில்லை. எத்தனையோ பேர் மதம், கலாச்சாரம் என்ற பெயரில் போட்ட முட்டுக்கட்டைகளைக் கடந்துதான் இதை அடைந்திருக்கிறோம். இந்த அரங்கில் இன்று நாம் காணும் இந்தக் காட்சி நூற்றாண்டு காலப் போராட்டத்தின் விளைவு தான் இங்கே உங்களை காணுகின்ற காட்சி. பட்டத்தை வாங்கியிருக்கக்கூடிய உங்களைப் பார்க்கிற காட்சி.

அதனால்தான் முதல் தலைமுறை பட்டதாரிகளாகிய நீங்கள் உங்களுக்கு அடுத்தடுத்து வரும் தலைமுறைகளை படிக்க வைக்க வேண்டும் என்று நான் அன்போடு கேட்டுக் கொள்கிறேன். உங்களது பெயருக்குப் பின்னால் பட்டம் இருப்பது கெளவரம் மட்டுமல்ல – அது உங்கள் அடிப்படை உரிமை! இந்தப் பட்டமளிப்பு விழாவுக்கு இன்னொரு சிறப்பு என்ன என்றால், மாற்றுத்திறனாளிகளை பெண்கள் ஆறு பேரும் இன்று பதக்கம் பெறுகிறார்கள் என்பதுதான் மிக மிகச் சிறப்பு.

கழகம் ஆட்சியில் அமைந்த காலத்தில் எல்லாம் பெண்கள் முன்னேற்றத்துக்காக ஏராளமான திட்டங்களைத் தீட்டி இருக்கிறது. இப்போது தீட்டியும் வருகிறது.

பெண்களுக்குச் சொத்தில் சம உரிமைச் சட்டம் கொண்டு வந்தது கலைஞருடைய திமுக அரசு.

அரசுப் பணியிடங்களில் பெண்களுக்கு 30 சதவீத இடஒதுக்கீடு. அதை உருவாக்கித் தந்தவர் தலைவர் கலைஞர். அதை இப்போது 40 விழுக்காடு ஆகவும் உயர்த்தியிருக்கிறோம். போறப்போக்கில், ஆண்களுக்கு இட ஒதுக்கீடு வேண்டும் என்று கேட்கின்ற நிலை வந்தாலும் ஆச்சரியம் இல்லை.

உள்ளாட்சி அமைப்புகளில் பெண்களுக்கு 33 சதவீதம் இட ஒதுக்கீடு. இப்போது 50 சதவீதம் இடஒதுக்கீடு.

மகளிர் சுய உதவிக்குழுக்களை அமைத்தது கழக அரசு தான்.

மகளிர் தொழில் முனைவோர் உதவித்திட்டம் கொண்டு வந்தோம்.

இப்படி பெரிய பட்டியலை என்னால் அடுக்கிக் கொண்டிருக்க முடியும்.

அந்த வரிசையில்தான் மகளிருக்கு கட்டணமில்லாப் பேருந்து பயணத்தை உருவாக்கிக் கொடுத்திருக்கிறோம். இது ஏதோ வெறும் கட்டணச் சலுகை என்று நீங்கள் நினைத்திட வேண்டாம். பெண்களுக்கான பொருளாதார தன்னிறைவுக்கு அடித்தளம் அமைக்கக்கூடிய திட்டம் தான் இந்தத் திட்டம். இதன் மூலமாக ஏராளமான பெண்கள் கல்வி கற்கவும், வேலைகளுக்காகவும், சிறுதொழில் நிறுவனங்களை உருவாக்கவும் வெளியில் வரத் தொடங்கி இருக்கிறார்கள்.

எனது கனவுத் திட்டங்களில் ஒன்றான புதுமைப் பெண் - உயர் கல்வி உறுதித் திட்டம் தொடங்கப்பட்டுள்ளது. இந்தத் திட்டத்தினால் இந்த ஆண்டு, இராணி மேரி கல்லூரியில் இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆண்டில் பயிலக்கூடிய 1,039 மாணவியர்கள் இதனால் பயன் பெற்றிருக்கிறார்கள் என்பதை பார்க்கிறபோது நான் உள்ளபடியே பெருமைப்படுகிறேன், மகிழ்ச்சியடைகிறேன். இந்த ஆண்டு முதலாமாண்டு சேர்ந்த மாணவியரும் இத்திட்டத்தின் மூலமாக பயன்பெற உள்ளனர்.

'புதுமைப் பெண்' திட்டத்தின் காரணமாக, இக்கல்லூரியில் சேரும் மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டிருக்கிறது என்கிற தகவலும் தொடர்ந்து எனக்கு வந்து கொண்டிருக்கிறது, அது மகிழ்ச்சியை தருகிறது. அப்படி தங்களது கல்லூரிக் கனவை நனவாக்கிக் கொள்ள வரக்கூடிய மாணவிகள், இந்தக் கல்லூரியிலேயே தங்கி படிப்பதற்கு வசதியாக விடுதி ஒன்றை ஏற்படுத்தித்தர வேண்டும் என்பது இந்தக் கல்லூரி நிர்வாகத்தின் கோரிக்கையாக இருப்பதாக நான் அறிந்தேன்.

எனவே, மாணவியர்கள் தங்கிப் பயில ஏதுவாக கல்லூரி வளாகத்திற்குள்ளேயே விடுதி கட்டித்தரப்படும் என்பதை இந்த நேரத்தில் நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.

கடந்த மே 25-ஆம் நாளன்று இதே இராணி மேரி கல்லூரியில் நடந்த மாநில அளவிலான முதல் இளைஞர் திறன் திருவிழா மற்றும் மகளிர் சுய உதவிக்குழுக்களுக்கு வங்கிக் கடன் வழங்குகிற விழாவில் நான் கலந்து கொண்டேன்.

நான் மட்டும் முதல்வன் என்று சொல்லிக் கொண்டிருந்தால் போதாது, நீங்கள், ஒவ்வொருவரும் நான் முதல்வன், நான் முதல்வன் என்று சொல்லக்கூடிய ஒரு சூழ்நிலையை ஏற்படுத்த வேண்டும். அதற்காகத்தான் அந்தத் திட்டத்தையும் தொடங்கி இருக்கிறோம். வேலைக்கான ஆட்களை உருவாக்கத் திறன் மேம்பாட்டுப் பயிற்சிகளை வழங்கி வருகிறோம். இதனை இன்றைய இளைய தலைமுறை நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்று நான் கேட்டுக் கொள்கிறேன்.

நான் முதல்வன் திட்டத்தின்கீழ் இராணி மேரி கல்லூரியில் கடந்த 6 மாதங்களில், BFSI (Banking, Financial Services and Insurance) அந்த பயிற்சியில் 449 மாணவியர்களும், Logistics-ல் 221 பேரும், பயிற்சி எடுத்துப் பயன் பெற்றிருக்கிறார்கள்.

பல கல்விக்குழுக்கள் மற்றும் பயிற்சி பட்டறைகள் உருவாக்கப்பட்டுள்ளது,

காவல்துறை சீருடைப் பணியாளர் தேர்வாணையத் தேர்வுக்கான இலவசப் பயிற்சியும் பேராசிரியர் குழுவால் நடத்தப்பட்டு வருகிறது.

வேலைவாய்ப்பு முகாம்களை நடத்தி, அதன் மூலம் 948 பேர் வேலைவாய்ப்பு பெற்றிருக்கிறார்கள்.

தமிழ்வழிக் கல்வி பயின்றோருக்கான ஊக்கத் தொகையை, இராணி மேரி கல்லூரியில் 842 பேர் பெற்று வருகிறார்கள்.

இராணி மேரி கல்லூரி மாணவிகள், விளையாட்டு துறையிலும் சளைத்தவர்கள் அல்ல. கல்லூரியின் சார்பாக, கண்பார்வையற்ற மாற்றுத் திறனாளிகளுக்கான Para Asian ஜுடோ போட்டிகள், இங்கிலாந்து மற்றும் தென்கொரியாவில் நடைபெற்றபோது, இந்தக் கல்லூரியினுடைய மாணவியர் பங்குபெற்று பதக்கம் வென்றிருக்கிறார்கள்.

இந்திய பார்வையற்ற பெண்கள் கால்பந்து வீராங்கனைகள் சங்கம் சார்பில், சர்வதேச போட்டிகள் மற்றும் பயிற்சிகளில் பங்கேற்று, கல்லூரிக்கு பெருமை சேர்த்திருக்கிறார்கள்.

சிலம்பத்திலும் கோ-கோ-விலும் தேசிய அளவில் தங்கப் பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.

மால்கம் போட்டி, கராத்தே, மற்றும் கபடியிலும், தேசிய அளவில் வெள்ளி பதக்கம் பெற்றிருக்கிறார்கள்.

மாநிலங்களுக்கிடையேயான ரஞ்சிக் கோப்பை கிரிக்கெட்டில் பங்கு பெற்றிருக்கிறார்கள்.

மாணவி நித்யா குறளோவியம் நாட்காட்டி ஓவியப் போட்டியில் வென்று தனது ஓவியத்தை அரசு நாட்காட்டியில் ஏற்றியிருக்கிறார். பரதநாட்டிய நடனத்திலும் சாதனை படைத்து வருகிறார்.

இராணி மேரி கல்லூரி தொடர்ச்சியாக, 6 ஆண்டுகள் சென்னையில் குடியரசு நாள் கொண்டாட்ட நிகழ்வில் நடைபெறும் நடனப் போட்டியில், முதல் பரிசு பெற்று பெருமை பெற்றிருக்கிறது.

இராணி மேரி கல்லூரி இசைத் துறை மாணவியர், திரை இசை மற்றும் கர்நாடக இசையில் முன்னணி வகித்து வருகின்றனர்.

மாணவிகள் மட்டுமல்ல, இராணி மேரி கல்லூரியின் பேராசிரியர்களும், மாணவியர்களுக்கு சளைக்காமல், பல சாதனைகளை படைத்திருக்கிறார்கள்.

தமிழ்த் துறை இணைப் பேராசிரியர் திருமதி. லோகநாயகி அவர்கள், தமிழக அரசு சார்பில் கலைஞர் விருது பெற்றிருக்கிறார்கள்.

2011ஆம் ஆண்டு மற்றும் 2014ஆம் ஆண்டுகளில், முறையே, இந்திய குடியரசு தலைவரால் வழங்கப்பட்ட விருதுகளை, தமிழ்த்துறை பேராசிரியர் முனைவர் சிவஞானம் கலைமகள் அவர்களும், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் து. விஜயலட்சுமி அவர்களும் பெற்றிருக்கிறார்கள்.

இராணி மேரி கல்லூரியில் சேர்ந்து, பயின்று, மாற்று பாலினத்தவராக மாறியவர்க்கு, இறுதியாண்டு தேர்வு எழுதி, அவர் பட்டம் பெற்று செல்லும் வரையான அனைத்து உதவிகளையும் செய்து, அவரை தேர்ச்சி பெற வைத்தது குறிப்பிடத்தக்க நிகழ்வாகும். இப்படி உங்கள் கல்லூரியானது சாதனைக் கல்லூரியாக இருக்கிறது. பட்டம் வழங்கும் கல்லூரியாக மட்டுமல்ல – திறமையின் கிடங்காகவும் உங்கள் கல்லூரி இயங்கிக் கொண்டிருக்கிறது.

நூறாண்டுகளுக்கும் மேலாக, கல்விப் பணியாற்றி வரும் இந்த இராணி மேரி கல்லூரி, வருங்காலங்களிலும் பெண் கல்வியின் மகத்துவத்தை உலக அரங்கிலும் முன்னிறுத்தும் என்று நான் நம்புகிறேன்.

33 மாணவிகளுடன் தொடங்கப்பட்டு, இன்று 5 ஆயிரம் மாணவியருடன் மாபெரும் அளவில் உயர்ந்து நிற்கிறது. மிக உயர்ந்த நோக்கம் இருந்தால்தான் இத்தகைய வளர்ச்சி சாத்தியம். இதே போன்ற உயர்ந்த நோக்கம் கொண்டவர்களாக மாணவியர் அனைவரும் தங்களது எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள வேண்டும். யார் எதைச் சொன்னாலும் அதனை அப்படியே ஏற்றுக்கொள்ளாமல், பகுத்தறிவோடு கேள்வி கேட்கும், விமர்சிக்கும் அறிவியல் மனப்பான்மையை நீங்கள் வளர்த்துக்கொள்ள வேண்டும். அப்போதுதான் நீங்கள் பெற்ற பட்டம் முழுமை பெறும்.

நாமும் கல்லூரியில் படித்திருக்கிறோம் - ஒரு பட்டம் வாங்கி இருக்கிறோம் என்று இல்லாமல் வாங்கிய பட்டத்தில் உயர்நிலை எதுவோ அதையும் முயன்று நீங்கள் அடைய வேண்டும். அதன் மூலமாக உச்சமான தகுதியை நீங்கள் பெற வேண்டும். அந்தத் தகுதியின் மூலமாக இன்னும் பலரையும் நீங்கள் வளர்த்தெடுக்க வேண்டும். இன்று பெறும் பட்டம் என்பது முடிவல்ல, தொடக்கம் என்பதை மறக்காதீர்கள்.

கடற்கரைச் சாலையில் இருந்து அறிவுச்சாலைக்குள் பயணிக்கப் போகக்கூடிய உங்களுக்கும், உங்களை இந்தக் கோலத்தில் கண்டு பெருமிதத்தில் திளைத்திருக்கும் உங்கள் பெற்றோர்களுக்கும் மீண்டும் ஒரு முறை என்னுடைய வாழ்த்துகள்.

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

Also Read: "சமூக நீதிக்கு வேட்டு வைக்கும் ஒன்றிய அரசுக்கு எதிராக இன்றும் தேவை நீதிக்கட்சி எழுச்சியே".. முரசொலி!