M K Stalin
உலக சிக்கன நாள் : தமிழக மக்களுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் விடுத்த வேண்டுகோள் என்ன ?
வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கை சேமிப்பிற்கு ஒதுக்க வேண்டும் என உலக சிக்கன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பொது மக்களிடத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
‘சிக்கனம் தேவை இக்கணம்’ என்ற பழமொழியானது மக்கள் அனைவரும் சிக்கனுத்துடன் வாழ வேண்டும் என்று மூதாதையரைகளால் கூறப்பட்ட ஒன்றாகும். சிக்கனத்துடன் வாழ பழகிகிட்டால் நம்மால் பல விஷயங்களை எளிதில் செய்து விட முடியும் என்கிற கூற்றும் உள்ளது.
சேமிப்பு என்பது நமது அன்றாட வாழ்க்கையில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும். நாம் சேமிக்கும் ஒவ்வொரு விஷயமும் நமது எதிர்காலத்துக்கு பயனுள்ளதாக அமைகிறது. இந்த நிலையில் பொது மக்களிடையே சிக்கனத்தின் அவசியம் மற்றும் சேமிப்பின் முக்கியத்துவத்தை வலியுறுத்தும் விதமாக, ஆண்டுதோறும் அக்டோபர் 30-ம் தேதி உலக சிக்கன நாள் இந்தியாவில் கொண்டாடப்பட்டு வருகிறது.
அந்த வகையில் இந்தாண்டு நாளை (அக்டோபர் 30) உலக சிக்கன நாள் அனுசரிக்கப்படுகிறது. இந்த நிலையில் உலக சிக்கன தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மக்களுக்கு அறிவுரை கலந்த வாழ்த்துச் செய்தியை பகிர்ந்துள்ளார்.
அந்த செய்தி குறிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளதாவது, “சிக்கனம் என்பது தனிப்பட்ட வளர்ச்சியை மட்டுமல்ல, ஒட்டுமொத்த முன்னேற்றத்தையும் உறுதிப்படுத்தும் செயல். பணத்தை மட்டுமல்ல, பொருட்களையும், இயற்கையின் வளங்களையும் பொறுப்புடன் செலவழிப்பதில் சிக்கனம் தொடங்குகிறது. 'பணத்தைத் தண்ணீராய்ச் செலவழித்தல்' என்கிற உவமையிலிருந்து மாறுபட்டு, 'தண்ணீரைப் பணம் போல செலவழிக்கும்' கட்டாயத்தை உலகமே இன்று உணர்ந்திருக்கிறது.
அக்டோபர் 30-ஆம் நாளை உலக சிக்கன நாளாக நம் நாடு கடைப்பிடிக்கிறது. இன்று 'குறைந்தபட்சத் தேவைகளுடனான வாழ்க்கை' என்கிற கருத்தியல் விரைவாகப் பரவி வருகிறது. ஒரு பொருளை, 'தேவையா?' என்று பலமுறை சிந்தித்து வாங்குவதில் சிக்கனம் தொடங்குகிறது.
விழிப்புணர்வுடன் வாழ்க்கையை அணுகுகிறவர்கள் குறைந்தபட்சத் தேவைகளை மட்டும் கருத்தில்கொண்டு செலவு செய்கிறார்கள்; வருமானத்தில் பெரும்பகுதியைச் சேமித்து வைக்கிறார்கள். பெறுகிற வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கைச் சேமிப்பிற்கும், மூன்றில் ஒரு பங்கை உணவு, உடை போன்றவற்றிற்கும், மூன்றில் ஒரு பங்கைக் கல்வி, பராமரிப்பு, வரி போன்றவற்றிற்கும், பத்தில் ஒரு பங்கை கேளிக்கை, பொழுதுபோக்குக்காகவும் யார் செலவழிக்கிறார்களோ, அவர்களே வளமான வாழ்க்கையை வாழ முடியும்.
சேமிப்பே ஒருவர் வாழ்க்கையை நம்பிக்கைக்குரியதாக மாற்றுகிறது. சேமிப்பது மட்டுமல்ல, அதைச் சரியான வீதத்தில் முதலீடு செய்வதும் முக்கியம்.
இந்த உலக சிக்கன நாளில் தமிழக மக்கள் அனைவரும் சிக்கனமான வாழ்க்கை மேற்கொள்வதை உறுதிசெய்யும் பொருட்டு, இல்லத்திற்கு ஓர் அஞ்சலகத் தொடர் சேமிப்புக் கணக்கை அருகிலுள்ள அஞ்சலகங்களில் தொடங்கி பயன்பெற்று, வளமடைந்து, வாழ்வாங்கு வாழுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!