M K Stalin

"ஒரு சொல் வெல்லும். அதே போல் ஒரு சொல் கொல்லும்": பொதுக்குழுவில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தல்!

சென்னை பச்சையப்பன் கல்லூரி எதிரில் உள்ள “செயின்ட் ஜார்ஜ் பள்ளி விங்க்ஸ் கன்வென்ஷன்சென்டரில்” நடைபெற்று வரும் தி.மு.க பொதுக்குழுவில் 2வது முறையாக ஒருமனதாக மீண்டும் தலைவராக மு.க.ஸ்டாலின் தேர்வு செய்யப்பட்டார். அதேபோல், பொதுச் செயலாளர் பதவிக்கு துரைமுருகன், பொருளாளர் பதவிக்கு டி.ஆர்.பாலு ஆகியோர் தேர்வு செய்யப்பட்டனர்.

இதையடுத்து சிறப்புரையாற்றிய தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின், "மக்களிடம் பெற்றுள்ள இந்த நற்பெயரைக் காப்பாற்ற வேண்டும் என்பதும் - இந்த நம்பிக்கையைத் தக்க வைக்க வேண்டும் என்பதும்தான் என்னுடைய சிந்தனையாக இருக்கிறது. சிலப்பதிகாரத்தில் சேரன் செங்குட்டுவன் சொல்வதாக இளங்கோவடிகள் எழுதி இருப்பார். 'மன்பதை காக்கும் நன்குடிப் பிறத்தல் துன்பமல்லது தொழு தகவு இல்' என்கிறார் இளங்கோவடிகள். எதுவந்தாலும் பொறுப்பேற்க வேண்டியவன் மன்னன்தான். எனவே அப்பதவியால் துன்பம் தானே தவிர இன்பமல்ல என்கிறார் இளங்கோவடிகள்.

மழையே பெய்யவில்லை என்றாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். அதிகமாக மழை பெய்துவிட்டாலும் என்னைத்தான் குறை சொல்வார்கள். பல்வேறு பக்கங்களிலும் வரும் பன்முனைத் தாக்குதலுக்கும் பதில் சொல்ல கடமைப்பட்டவன் நான். ஒருபக்கம் திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர். இன்னொரு பக்கம் தமிழ்நாட்டின் முதலமைச்சர்.

மத்தளத்துக்கு இரண்டு பக்கமும் அடி என்பதைபோல இருக்கிறது என்னுடைய நிலைமை. இத்தகைய சூழ்நிலையில் இருக்கும் என்னை மேலும் துன்பப்படுத்துவது போல கழக நிர்வாகிகளோ - மூத்தவர்களோ - அமைச்சர்களோ நடந்து கொண்டால் நான் என்ன சொல்வது? யாரிடம் சொல்வது?

நாள்தோறும் காலையில் நம்மவர்கள் யாரும் எந்தப் புதுப் பிரச்னையையும் உருவாக்கி இருக்கக் கூடாதே என்ற நினைப்போடுதான் கண் விழிக்கிறேன். இது சில நேரங்களில் என்னை தூங்கவிடாமல் கூட ஆக்கிவிடுகிறது. உங்களது செயல்பாடுகள் கழகத்துக்கும் உங்களுக்கும் பெருமைத் தேடுத் தருவது போல அமைய வேண்டுமே தவிர சிறுமைப்படுத்துவதாக அமையக் கூடாது. பொது நன்மைக்காக மட்டுமே இதனை நான் சொல்லவில்லை, உங்களது நன்மைக்காகவும் சேர்த்தே சொல்கிறேன். பொது இடங்களில் சிலர் நடந்து கொண்ட முறையின் காரணமாக கழகம் பழிகளுக்கும் ஏளனத்துக்கும் ஆளானது. இன்றைக்கு நம் வீட்டின் பாத்ரூம், படுக்கை அறை தவிர அனைத்தும் பொது இடமாக ஆகிவிட்டது. பிரைவேட் ப்ளேஸ் என்று எதுவுமில்லை.

எல்லோருக்கும் மூன்றாவது கண்ணாகச் செல்போன் முளைத்துவிட்டது. உங்களது ஒவ்வொரு நிமிடமும் கண்காணிக்கப்படுகிறது. எனவே உங்களது ஒவ்வொரு நொடியையும் கண்ணியமாகப் பயன்படுத்த வேண்டும், பணிவோடு நடந்து கொள்ள வேண்டும். நாம் பயன்படுத்தும் சொற்கள் மிகமிக முக்கியமானவை. ஒரு சொல் வெல்லும். அதே போல் ஒரு சொல் கொல்லும்.

பிறகு மக்கள் பணியை எப்படி பார்க்க முடியும்? இப்படி நம்முடைய கவனத்தை திசை திருப்புவதுதான் எதிரிகளின் ஒரே நோக்கம். இன்றைக்கு நாம் செய்து வரும் சாதனைகளில் குறை கண்டு பிடிக்க முடியாதவர்கள் - நமது மக்கள் நலத்திட்டங்களைப் பார்த்து மலைத்துக் கிடப்பவர்கள் - கொச்சைப்படுத்துவதன் மூலமாக குளிர்காயப் பார்ப்பார்கள். அதற்கு நம்மவர்களே இடம் தந்துவிடக் கூடாது என்பதுதான் எனது பெருங்கவலை!

'திராவிட மாடல்' - என்ற சொல்லே இந்தியாவின் கவனத்தை ஈர்த்துவிட்டது என்பதைப் பற்றி பேசுங்கள். அமைச்சர்கள் ஒவ்வொருவரும் தங்களது துறையில் ஆற்றிவரும் பல்வேறு திட்டங்களின் மூலமாக திராவிட மாடல் வலிமை பெற்று வருகிறது. எத்தனையோ இரவு பகல் திட்டமிட்டு ஒரு திட்டத்தை தீட்டுகிறோம். பல்லாயிரம் கோடி பணம் அதற்காகச் செலவு செய்யப்படுகிறது. பல்லாயிரக்கணக்கான அதிகாரிகள், அலுவலர்கள் பணியாற்றுகிறார்கள். நிதி நிலைமை மட்டும் சீராக இருந்திருக்குமானால் இன்னும் பல நூறு திட்டங்களைத் தீட்டி இருப்போம். ஒவ்வொரு மனிதரையும் ஏதாவது ஒரு திட்டம் சென்று சேர்ந்துள்ளது. அந்த அளவுக்கு அனைவரது வீடுகளுக்கும் நன்மை செய்து வருகிறோம். இத்தகைய சாதனைகளை மக்களுக்கு நினைவூட்டிக் கொண்டே இருக்க வேண்டும். தி.மு.க. ஆட்சி, மக்களின் ஆட்சியாக நடந்து வருகிறது என்பதை ஒவ்வொரு தரப்பிடமும் திரும்பத் திரும்பச் சொல்லி வாருங்கள்" என தெரிவித்துள்ளார்.

Also Read: ”தி.மு.க. பழுத்த மரம் அல்ல - கற்கோட்டை”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எச்சரிக்கை!