M K Stalin
"எனக்கு ஸ்டாலின் என கலைஞர் பெயர் சூட்டிய காரணம் இதுதான்".. CPI மாநாட்டில் முதல்வர் நெகிழ்ச்சி!
கேரளா மாநிலம் திருவனந்தபுரத்தில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அகில இந்திய மாநாடு நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் 'கூட்டாட்சி மற்றும் மத்திய - மாநில உறவு' என்ற தலைப்பில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார். அதன் விவரம் வருமாறு:-
பொதுவாக தமிழ்நாட்டில் தான் கூட்டணிக் கட்சியின் மாநாடுகள் நடந்தால் என்னை அழைப்பார்கள். ஆனால் சமீப காலமாக கேரளாவில் நடைபெறும் கூட்டணிக் கட்சி மாநாடுகளிலும் என்னை அழைப்பதை வழக்கமாக வைத்துள்ளீர்கள். நானும் தமிழ்நாட்டில் தட்டாமல் கலந்து கொள்வதைப் போல இங்கு நடந்தாலும் பங்கேற்கின்றேன். மாநில எல்லைகள் நம்மைப் பிரித்தாலும் - நாம் இந்தியா முழுமைக்கும் உருவாக்க நினைக்கும் கூட்டாட்சியானது வெல்ல வேண்டுமானால் அனைவரும் எல்லைகளை மறந்து ஒன்றாக வேண்டும்.என்பதன் அடையாளமாகத்தான் நீங்கள் என்னை அழைப்பதும். நான் இங்கே வருவதும்.
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் 23 ஆவது மாநாடு கண்ணூரில் நடந்த போது நான் வந்திருந்தேன். அப்போது சொன்னேன். என் பெயர் ஸ்டாலின். அதனால் நீங்கள் என்னை அழைக்காமல் இருக்க முடியாது என்று சொன்னேன். திராவிட இயக்கத்துக்கும் கம்யூனிஸ்ட் இயக்கங்களுக்குமான நட்பு என்பது இரண்டு இயக்கங்களும் தோன்றிய காலத்திலேயே உருவான நட்பாகும்.
சுயமரியாதை இயக்கம் கண்ட தந்தை பெரியார் அவர்கள் - சோவியத் நாட்டுக்குச் சென்று விட்டு வந்த பிறகு தான் தனது சமதர்மக் கொள்கையை வடிவமைத்தார்கள். தமிழ்நாட்டில் பொதுவுடமை இயக்கத்தின் மாபெரும் தூண்களாக போற்றப்படும் ம.வெ.சிங்காரவேலரும் - ஜீவா அவர்களும் சுயமரியாதை இயக்கத்துடன் நெருங்கிய தொடர்பில் இருந்தவர்கள்.
இந்தியா சுதந்திரம் அடைந்தபோது கம்யூனிஸ்ட் கட்சி தடை செய்யப்பட்ட காலக்கட்டத்தில் கம்யூனிஸ்ட் தலைவர்கள் திராவிட இயக்கத்தின் தலைவர்கள் வீட்டில் தலைமறைவாக இருந்தார்கள். 1967 ஆம் ஆண்டு தமிழகத்தில் நடந்த ஆட்சி மாற்றத்தின் போது திமுகவுடன் இருந்த கட்சி தான் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி ஆகும்.
திராவிட இயக்கம் உருவாகவில்லை என்றால் நான் கம்யூனிஸ்ட் கட்சியில் தான் இருந்திருப்பேன் என்று சொன்னவர் தலைவர் கலைஞர் அவர்கள். அது மனப்பூர்வமாகச் சொன்னது என்பதன் அடையாளம் தான் எனக்கு ஸ்டாலின் என்று பெயர் சூட்டியது ஆகும். நாம் வெவ்வேறு இயக்கமாக இருந்தாலும் எங்கள் கட்சிக் கொடியில் பாதி சிவப்பு நிறம் இருக்கிறது. நாம் ஒரே கொள்கைக்காரர்கள் என்பதால் தான் தமிழ்நாட்டில் மட்டுமல்ல - அகில இந்திய அளவில் கூட்டணியைத் தொடர்ந்து கொண்டு இருக்கிறோம்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : ஜார்க்கண்டில் பெரும்பான்மையை தாண்டியது இந்தியா கூட்டணி !
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?