M K Stalin
'நீங்கள் படிப்பை பாருங்கள்.. நான் உங்கள் கவலைகளை பார்த்துக்கொள்கிறேன்.." - மாணவர்களுக்கு முதல்வர் உறுதி !
நடந்து முடிந்த சட்டமன்ற கூட்டத்தொடரின், அரசு பள்ளி மாணவர்களுக்கு மதிய உணவு திட்டத்துடன் சேர்த்து காலை உணவும் வழங்கப்படும் என்று அறிவித்தார். அதன்படி அரசு பள்ளி மாணவர்களுக்கான காலை சிற்றுண்டி திட்டத்தை அறிஞர் அண்ணாவின் 114-வது பிறந்த நாளான இன்று தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மதுரையில் தொடங்கி வைத்தார். காலை சிற்றுண்டி திட்டத்தை தொடக்கி வைத்த பின் மாணவர்களுக்கு முதலமைச்சர் உணவு பரிமாறியதுடன் அவர்களுடன் சேர்ந்து காலை உணவும் சாப்பிட்டார்.
பின்னர் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது, "பசித்த வயிறுகளுக்கு உணவாக; தவித்த வாய்க்கு தண்ணீராக; திக்கற்றவர்களுக்குத் திசையாக; யாருமற்றவர்களுக்கு ஆறுதலாக இருப்பதைப் போன்ற கருணை வடிவான திட்டம் தான் இந்த காலை உணவு வழங்கும் திட்டம். பள்ளிக்கு பசியோடு படிக்க வரும் பிள்ளைகளுக்கு முதலில் உணவு வழங்கிய பிறகு வகுப்பறைக்குச் செல்லக் கூடிய வசதியை ஏற்படுத்தித் தந்துள்ளோம்.
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தின் படி நாள்தோறும் முதல்கட்டமாக 1.14 லட்சம் குழந்தைகளுக்கு உணவு வழங்கப்பட இருக்கிறது. இதன்மூலம் 1,545 பள்ளிகளைச் சேர்ந்த குழந்தைகள் பயனடைய இருக்கிறார்கள். இந்த திட்டத்தின் மூலம் ஒரு குழந்தைக்கு நாள் ஒன்றுக்கு 12 ரூபாய் 75 காசுகள் செலவாகிறது.
செலவு என்பதை நிர்வாக மொழியில் சொல்கிறேன். உண்மையில் இது செலவு அல்ல, நமது அரசின் கடமையாகும். இன்னும் சொன்னால் எனது கடமையாகவே நான் கருதுகிறேன். இதனை இலவசம் என்றோ, தர்மம் என்றோ, தானம் என்றோ, சலுகை என்றோ நினைக்கக் கூடாது. இது கடமையும் பொறுப்பும் ஆகும். அத்தகைய கடமை உணர்வுடனும் பொறுப்புணர்வுடனும் தான் இந்த திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.
பசிப்பிணி நீங்கிவிட்டால், மனநிறைவுடன் பிள்ளைகள் கல்வி கற்பார்கள். அவர்கள் மனதில் பாடங்கள் பதியும். பள்ளிக்கு ஆர்வத்துடன் வருவார்கள். சீரான வருகைப் பதிவு இருக்கும். தமிழ்நாட்டின் கல்வி விகிதம் அதிகம் ஆகும். தமிழ்நாட்டு இளைஞர்கள் அனைவரும் அறிவாற்றல் பொருந்தியவர்களாக உயர்வார்கள்.
இப்படி எத்தனையோ நன்மைகளை இந்த மாநிலம் அடையப் போகிறது. எனவே இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கும் பணத்தைச் செலவாக நான் நினைக்கவில்லை. எனவே இந்தத் திட்டத்துக்கு ஒதுக்கும் பணத்தைச் செலவாக நான் நினைக்கவில்லை.
ஒரு சிறுவனுக்கு இன்று வழங்கும் உணவின் மதிப்பு 12 ரூபாயாக இருக்கலாம். அதனை உண்டு - சிறப்பான கல்வி கற்கும் ஒரு சிறுவன் நாளைய தினம் மிகப்பெரிய பொறுப்பில் வந்து உட்கார்ந்தால் அவன் மூலமாக இந்த சமூகம் அடையும் பயன் என்பது அளவிட முடியாதது.
என்னைப் பொறுத்தவரை கல்விக்காகவும், மருத்துவத்துக்காகவும், பசிப்பிணி போக்கவும் உருவாக்கப்படும் திட்டங்கள் எந்த விமர்சனத்துக்கு அப்பாற்பட்டவை. இத்தகைய திட்டங்களைத் தான் ஒரு ஆட்சியின் முகமாக நான் பார்க்கிறேன். இந்த ஆட்சியை அளவிடும் போது, இது போன்ற திட்டங்களை மனதில் வைத்து அளவிட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன். கலைஞர் மகனின் அரசு கருணையின் வடிவான அரசாகச் செயல்படும் என உறுதி அளிக்கிறேன்.
இந்த நேரத்தில் அரசு அதிகாரிகளுக்கும், ஆசிரியர்களுக்கும், பணியாளர்களுக்கும் என்னுடைய அன்பான வேண்டுகோளை வைக்க விரும்புகிறேன். அரசானது தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது. நீங்களும் தாயுள்ளத்தோடு இந்த திட்டத்தைத் தொடர்ந்து நடத்த வேண்டும். உங்கள் வீட்டுப் பிள்ளைகளுக்கு எத்தகைய கவனத்தோடும் கனிவோடும் உணவு வழங்குவீர்களோ, அதைவிடக் கூடுதல் கவனத்தோடும் கனிவோடும் வழங்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அன்புள்ள மாணவச் செல்வங்களே! உங்களுக்கு காலையும் மதியம் உணவும் வழங்குகிறோம். எனவே, நீங்கள் எதைப்பற்றியும் கவலைப்படாமல் படியுங்கள், படியுங்கள், படியுங்கள். இது ஒன்று தான் எனது வேண்டுகோள்.
படிப்பு ஒன்று தான் உங்களிடம் இருந்து யாராலும் பறிக்க முடியாத சொத்து ஆகும். அத்தகைய சொத்தை உங்களுக்கு நீங்களே சேர்த்துக் கொள்ளுங்கள். உங்களது மற்ற கவலைகள், மற்ற தேவைகளை பூர்த்தி செய்ய அரசு இருக்கிறது. நான் இருக்கிறேன்! நீங்கள் படிப்பில் மட்டும் கவனம் செலுத்துங்கள் !" என்றார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!