M K Stalin
இந்த அரசு சட்டத்தின் - நீதியின் - சமூகநீதியின் அரசாக செயல்படுகிறது - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய கட்டடங்களுக்கு இன்று அடிக்கல் நாட்டு விழா சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ரூ.315 கோடி மதிப்பில் புதிய கட்டடங்களுக்கு அடிக்கல் நாட்டினார். பிறகு மேடையில் பேசிய அவர், இந்த அரசு சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதாக தெரிவித்தார்.
தொடர்ந்து முதலமைச்சர் பேசியதாவது, "சென்னையில் ஏராளமான நீதிமன்றங்கள் செயல்பட்டு வருகின்றன. அவை அனைத்தையும் ஒரே இடத்தில் இருந்து செயல்பட வைக்க வேண்டும், அதுதான் சிறப்பானதாக இருக்கும். நீதித்துறையினர் நினைத்து அரசுக்குப் பரிந்துரை செய்ததும், உடனே அதனை நாங்கள் முழுமையாக ஏற்றுக் கொண்டு ஒப்புதலை வழங்கினோம்.
இதன் மூலமாக சென்னையில் இருக்கக்கூடிய நூற்றுக்கும் மேற்பட்ட நீதிமன்றங்கள் ஒரே இடத்தில் இருந்து செயல்படப் போகின்றன. இது பொதுமக்களுக்கு ஏற்பட்ட வசதி மட்டுமல்ல, வழக்கறிஞர்களுக்கும் இது மிகப்பெரிய வசதிதான். அலைச்சல் தவிர்த்து, அமைதியாகப் பணியாற்ற இது வழிவகுக்கும்.
உயிரிழந்த வழக்கறிஞர்களின் வாரிசுதாரர்களுக்கு சேமநல நிதியானது 7 லட்சம் ரூபாயில் இருந்து 10 லட்சம் ரூபாயாக உயர்த்தப்பட்டுள்ளது என்று நான் அறிவித்தது உங்களுக்கு நினைவில் இருக்கும் என்று நான் நம்புகிறேன். நீதித்துறையின் உட்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழக அரசு சிறப்புக் கவனம் செலுத்தி வருகிறது.
கடந்த ஏப்ரல் 23 அன்று சென்னை உயர்நீதிமன்ற வளாகத்தில் நடந்த விழாவில் நான் பங்கேற்றேன். அந்த விழாவில் இதற்கான முறையான அறிவிப்பை நான் வெளியிட்டேன். நீதித்துறையின் உட்கட்டமைப்புத் தேவைகளுக்காக பல்வேறு நீதிமன்றங்கள் அமைக்கும் வகையில் 4.24 ஏக்கர் நிலத்தை நீதித்துறைக்கு அரசு வழங்கி ஆணையிட்டுள்ளது என்பதை நான் குறிப்பிட்டேன். 9 அடுக்கு கட்டடம் கட்ட 315 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
இந்த அரசு பொறுப்பேற்ற மே மாதம் 2021 முதல், 3 கூடுதல் மாவட்ட நீதிமன்றங்கள், 12 சார்பு நீதிமன்றங்கள், 6 முதன்மை குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் மற்றும் 14 மாவட்ட உரிமையியல் மற்றும் குற்றவியல் நடுவர் நீதிமன்றங்கள் உள்ளிட்ட 35 புதிய நீதிமன்றங்கள், 54 கோடியே 85 இலட்சம் ரூபாய் செலவில் அமைக்க ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன.
கோயம்புத்தூர், காஞ்சிபுரம், திருவாரூர் மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் பட்டியல் இனத்தவருக்கு எதிரான குற்ற வழக்குகளை விசாரிக்க 4 சிறப்பு நீதிமன்றங்கள் அமைக்க அரசு ஆணை வெளியிட்டுள்ளது. புதியதாக நீதிமன்ற கட்டடங்கள் கட்டுதல், குடியிருப்பு கட்டடங்கள் கட்டுதல், பழைய நீதிமன்ற கட்டடங்களை பராமரித்தல் ஆகிய பணிகளுக்காக, தமிழ்நாடு அரசு 2021-22 மற்றும் 2022-23 ஆகிய நிதியாண்டுகளில் மொத்தம் 268.97 கோடி ரூபாய் ஒப்பளிப்பு தந்திருக்கிறது.
கீழமை நீதிமன்றங்களுக்கு (Subordinate Courts) பல்வேறு நிலையிலான 155 பணியாளர் பணியிடங்களை உருவாக்கி ஆணைகள் வெளியிடப்பட்டுள்ளன. சென்னை உயர்நீதிமன்றம், மதுரை கிளை நீதிமன்றம் மற்றும் கீழமை நீதிமன்றங்களுக்கு கணினி மற்றும் கணினி தொடர்பான கட்டமைப்புகளை உருவாக்குவதற்கு (Computer and IT related infrastructure) மொத்தம் ரூபாய் 11.63 கோடி ஒப்பளித்துள்ளது.
நீதித்துறையின் நீடித்த சிறப்பான செயலாக்கத்துக்கு இந்த அரசு பல்வேறு நடவடிக்கைகளைத் தொடர்ந்து எடுக்கும் என்றும் நான் உறுதி அளிக்கிறேன். அப்போது நடந்த அந்த விழாவிற்கு உச்சநீதிமன்றத்தின் தலைமை நீதியரசர் மாண்பமை ரமணா அவர்கள் வருகை தந்திருந்தார்கள். நீதித்துறைக்குத் தமிழ்நாடு அரசு செய்து வரக்கூடியத் திட்டங்களை மாண்புமிகு நீதியரசர் அவர்கள் வெகுவாகப் பாராட்டினார். அவர் அருகில்தான் நான் அமர்ந்திருந்தேன். எனக்கு நன்றியும் தெரிவித்தார்.
அந்த விழாவில் பேசும்போது, வெளிப்படையாகப் பாராட்டினார். 'பொதுமக்களுக்கு விரைந்து நீதி வழங்குவதை உறுதி செய்யும் வகையில் நீதிமன்றங்களுக்குத் தேவையான கட்டட வசதி, மனித ஆற்றல், பிற உள்கட்டமைப்பு வசதிகளைச் செய்து கொடுப்பதில் தமிழ்நாடு அரசு கவனம் செலுத்தி வருகிறது. நீதித்துறை உள்கட்டமைப்புகளை மேம்படுத்துவதில் தமிழ்நாடு அரசு முதலிடத்தில் இருக்கிறது' என்றும் மாண்புமிகு தலைமை நீதிபதி ரமணா அவர்களே அன்றைக்குப் பாராட்டினார்.
பொதுவாக, நீதியரசர்கள் வெளிப்படையாகப் பாராட்டமாட்டார்கள் என்பதை நான் அறிவேன். நீங்களும் அறிவீர்கள். அதையும் மீறி பாராட்டினார்கள். அதன் மூலம் தமிழக அரசு நீதித்துறை மீது எத்தகைய அக்கறை கொண்டுள்ளது என்பதை நான் சொல்லத் தேவையில்லை.
சில கோரிக்கைகளை, தமிழ்நாட்டின் சார்பாக இங்கு வருகை புரிந்திருக்கும் மாண்பமை உச்சநீதிமன்றத்தின் நீதியரசர்களின் கனிவான கவனத்திற்கு கொண்டுவர விரும்புகிறேன்.
முதலாவதாக தென்னிந்திய மக்கள் பயன்பெறும் வகையில் உச்சநீதிமன்றத்திற்கான ஒரு கிளை நீதிமன்றம் சென்னையில் அமைக்கவேண்டும்.
இரண்டாவதாக, நீதி கேட்டு வந்திருக்கும் மக்கள் நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணையின் தன்மையினை புரிந்துகொள்ளும் வகையில் உயர்நீதிமன்றத்தில் தமிழ் வழக்காடு மொழியாக அமையவேண்டும்.
மூன்றாவதாக, நீதிபதிகள் நியமனங்கள் சமூகத்தின் அனைத்துத் தரப்பு மக்களின் பிரதிநிதித்துவம் இருக்கும் வகையில் நியமனங்கள் அமைய வேண்டும். இவற்றை இங்கு வருகை புரிந்திருக்கும் உச்சநீதிமன்றத்தின் மாண்மிகு நீதியரசர்கள் கனிவுடன் அவர்கள் இதை பரிசீலிப்பார்கள் என்று நான் நம்புகிறேன்.
எனது தலைமையிலான அரசானது சட்டத்தின் அரசாக, நீதியின் அரசாக, சமூகநீதியின் அரசாக செயல்பட்டு வருவதை நீங்கள் எல்லாம் நன்கு அறிவீர்கள். நீதித்துறையின் ஒரு தீர்ப்பு அல்ல, ஒற்றைச் சொல்லையும் மதிக்கும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. மக்களின் நல்வாழ்வுக்கு அரசும், மக்களுக்காக, நீதிக்காக நீங்களும் பணியாற்றி வருகிறீர்கள். நல்வாழ்வுடன் இணைந்ததுதான் நீதி.
எனவே நீதித்துறையின் கட்டமைப்புகளை மேம்படுத்துவதற்கான அனைத்து உதவிகளையும், தமிழ்நாடு அரசு எப்போதும் செய்யும் என்ற உறுதியை மீண்டும், மீண்டும் உங்களிடத்தில் இந்த நேரத்தில் எடுத்துச் சொல்கிறேன்" என்று பேசினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!