M K Stalin
“பணத்தை எடுத்துட்டு வரல.. நான் கொண்டு வந்திருக்குறது என்னன்னா..?” - ‘பொளேர்’ பதிலடி கொடுத்த முதல்வர்!
“எத்தனையோ கடல் மைல்களைத் தாண்டி வந்து மிகுந்த மகிழ்ச்சியுடன் நீங்கள் வாழ்ந்து வருவதைப் பார்க்கும்போது தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல; உங்களில் ஒருவனாகவும் நான் மகிழ்ச்சி அடைகிறேன்.” என அபுதாபி வாழ் தமிழர்களிடையே முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று (28.3.2022) அபுதாபியில் உள்ள இந்திய சமூக மற்றும் கலாச்சார மையத்தில், இந்திய சமூக மற்றும் கலாச்சார மையம் மற்றும் அபுதாபி வாழ் தமிழ் சமூகம் சார்பாக நடைபெற்ற பாராட்டு விழாவில் ஆற்றிய உரை வருமாறு:
“அபுதாபி வாழ் தமிழ் உடன்பிறப்புக்களிடத்தில் முதலில் என்னுடைய அபுதாபி மாலை வணக்கத்தைத் தெரிவித்துக் கொள்ள நான் விரும்புகிறேன்.
நான்கு நாட்களாக துபாயிலும், இந்த அபுதாபி பகுதியிலும் நான் ஒரு சுற்றுப் பயணத்தை நடத்திக் கொண்டிருக்கிறேன். தமிழகத்திலே தான் சுற்றுப் பயணம் நடத்துவது எனக்கு வழக்கம். அவர்கள் அழைத்த இடங்களுக்கு எல்லாம் நான் போவது உண்டு. அப்படி அழைக்கப்பெறும் இடங்களிலெல்லாம் எனக்கு வரவேற்புக்களை மகிழ்ச்சியோடு, உற்சாகத்தோடு, ஊக்கத்தோடு அவர்கள் என்னை வரவேற்பது உண்டு. அதற்குக் கொஞ்சம் கூட குறைவில்லாமல், கொஞ்சம் கூட இல்லை, ஒரு இன்ச் கூட குறைவில்லாமல், இந்த நான்கு நாட்களாக நான் திக்குமுக்காடிப் போயிருக்கிறேன். எதைப் பேசுவது, என்ன பேசுவது, எப்படிப் பேசுவது என்று நான் யோசிக்கின்ற நேரத்தில், பேசாமல் உங்கள் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தால் போதும், அப்படி என்கிற உணர்வு தான் என்னை ஆட்கொண்டிருக்கிறது.
நான் நலம்! நீங்கள் அனைவரும் நலமா? நீங்கள் நலமாக இருக்கிறீர்கள் என்பது உங்களது முகத்தைப் பார்த்தாலே தெரிகிறது. உங்களுடைய மகிழ்ச்சியை, உங்களுடைய எழுச்சியை, உங்களுடைய உணர்ச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தை பார்க்கின்றபோதே எனக்குத் தெரிகிறது. அப்படி இருக்கக்கூடிய உங்களைப் பார்க்கிறபோது எனக்கு மகிழ்ச்சி தான். எனக்கும் இப்போது ஒரு உத்வேகம் வருகிறது. எத்தனையோ கடல் மைல்களைத் தாண்டி இங்கே வந்து தொழில் முன்னேற்றத்திற்கு குறிப்பாக, தமிழகத்தினுடைய முன்னேற்றத்திற்கு திட்டங்களைத் தீட்டுகிற, அதற்காக ஒப்பந்தங்களை போடுகிற அந்தப் பணியை நானும் நம்முடைய தங்கம் தென்னரசு அவர்களும், எங்களோடு வருகை தந்திருக்கக்கூடிய அரசு அதிகாரிகளும், அந்தப் பணியைச் செய்து கொண்டிருக்கிறோம். ஆகவே, என்னைப் பொறுத்தவரைக்கும் நான் உங்களிடத்தில் சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டினுடைய முதலமைச்சராக மட்டும் மட்டுமல்ல, உங்களில் ஒருவனாக, அதனால் தான் நீங்கள் நம்மில் ஒருவராக நீங்கள் என்னை ஏற்றுக் கொண்டிருக்கிறீர்கள். உள்ளபடியே எனக்கு மகிழ்ச்சி.
தமிழ்நாட்டை நோக்கி பல தொழில் நிறுவனங்களை ஈர்ப்பதற்கான பயணமாக என்னுடைய பயணம் என்று சொல்லப்பட்டாலும், அதற்காக சுற்றுப் பயணத்தை வகுத்திருந்தாலும், இன்னும் அதைத் தாண்டி சொல்ல வேண்டுமென்றால், தமிழ்நாட்டை நோக்கி தமிழர்களின் மனங்களை ஈர்க்கின்ற பயணமாக என்னுடைய பயணம் அமைந்திருக்கிறது.
ஆனால், இந்தப் பயணம் இவ்வளவு வெற்றி அடைந்து கொண்டிருக்கிறதே, இவ்வளவு சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறதே, ஊடகங்களில் பார்க்கிறார்கள், பத்திரிகைகளில் படிக்கிறார்கள், தொலைக்காட்சியில் இந்தக் காட்சிகளையெல்லாம் தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய எல்லோரும் பார்க்கிறார்கள். ஆனால் ஒரு சிலருக்கு இந்த வெற்றியைத் தாங்கிக் கொள்ள முடியவில்லை. இதைத் திசை திருப்ப வேண்டும், ஒரு தவறான பிரசாரத்தை நடத்திட வேண்டும் என்று திட்டமிட்டு, நான் பணத்தை எடுத்துக் கொண்டு வந்திருப்பதாக, நான் அரசியல் பேசுவதாக நீங்கள் கருதக்கூடாது, நான் அரசியல் பேசினேன் என்றால் நீங்கள் என்னை விடமாட்டீர்கள், அது வேறு அதுவும் எனக்குத் தெரியும். நான் பணத்தை எடுத்துக் கொண்டு வரவில்லை, தமிழ்நாட்டில் வாழக்கூடிய மக்களுடைய மனத்தைத் தான் எடுத்து வந்திருக்கிறேன், அதுதான் உண்மை.
இனத்தால் - மொழியால் - பண்பாட்டால் - நாகரிகத்தால் - பழக்க வழக்கங்களால் - அன்பால் - பண்பால் - நடத்தையால் - அடுத்தவருக்கு உதவி செய்யக்கூடிய குணத்தால் - இன்னொருவர் பாதிக்கப்படும்போது துடிக்கக்கூடிய துடிப்பால் நாம் அனைவரும் தமிழினத்தைச் சார்ந்திருக்கக்கூடியவர்கள். எனக்கு ஒரு சந்தேகம், தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமா, துபாயில் இருக்கிறோமோ அல்லது அபுதாபியில் இருக்கிறமோ என்று ஒரு சந்தேகம். எங்கு இருக்கிறோமோ தமிழரிடத்தில் இருக்கிறோம், தமிழர் உள்ளம் படைத்திருக்கக்கூடிய உங்களிடத்தில் இருக்கிறோம். அதுதான் எனக்கு முக்கியம். அந்த நட்பின் அடிப்படையில்தான் உங்களைத் தேடி நான் வந்திருக்கிறேன். அதேபோல, என் முகத்தைப் பார்க்க, என்ன பேசப் போகிறேன் என்பதைக் கேட்க நீங்களும் வந்திருக்கிறீர்கள்.
இதெல்லாம் தமிழுக்கும் தமிழர் நலனுக்கும் எதிராகச் சிந்திக்கக்கூடியவர்களுக்குப் புரியாது, உண்மையான தமிழனாக இருந்தால் அவனுக்குப் புரியும். பொய்களையும், அவதூறுகளையும் கட்டமைத்து, வெறுப்பு என்று சொல்லக்கூடிய நஞ்சை நெஞ்சில் விதைத்து அதன்மூலம் ஆதாயம் தேடலாம் என்று கணக்குப் போடுபவர்களுக்கு இதெல்லாம் புரியாது!
உங்களில் ஒருவனான நான், உங்களது தமிழ்ச் சொந்தங்களால் தமிழ்நாட்டின் முதலமைச்சர் பொறுப்புக்கு வந்திருக்கிறேன், அந்தப் பொறுப்பை ஏற்றுக் கொண்டு செயலாற்றிக் கொண்டிருக்கிறேன். நான் எப்போதும் சொல்வது உண்டு. துபாயில் கூட பேசுகிற போது, குறிப்பிட்டுச் சொன்னேன். முதலமைச்சர் பொறுப்பு என்று சொன்னேனே தவிர, முதலமைச்சர் பதவி என்று சொல்லவில்லை. என்னை ஆளாக்கி இருக்கக்கூடிய நம்முடைய தலைவர் முத்தமிழ் அறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் பலமுறை எங்களுக்கு சொல்லக்கூடிய அறிவுரைகள், ஆலோசனைகள் என்னவென்றால், இன்றைக்கு நீங்கள் சட்டமன்ற உறுப்பினர்களாக, நாடாளுமன்ற உறுப்பினர்களாக, அமைச்சர்களாக அல்லது பல மக்களுக்கு பணியாற்றக்கூடிய பொறுப்புக்களில் வந்திருக்கிறீர்கள் என்றால், அதை நீங்கள் பொறுப்பாக எண்ணி, பொறுப்பாகப் பணியாற்ற வேண்டும். அதை யாரும் பதவியாக நினைத்துவிடக் கூடாது, ஏதோ ஒரு பெரிய சிம்மாசனம் கிடைத்திருக்கிறது என்று நினைத்துவிடக் கூடாது. என்னுடைய உள்ளத்தில் என்றைக்கும் மறக்க முடியாத, மறைத்து வைக்க முடியாத ஒரு உண்மை என்னவென்றால், நான் முதன்முதலில் 1996ஆம் ஆண்டு சென்னை மாநகரத்தினுடைய மேயராக, மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் மேயராக நான் பொறுப்பேற்றேன். அப்படி பொறுப்பேற்ற அந்த மேயர் பொறுப்பில் சென்று அமர்கிற நேரத்தில், அதில் முதல் பேச்சு என்னுடைய பேச்சு இருக்க வேண்டும், அந்த மன்றக் கூட்டத்தில் நான் உரையாற்ற வேண்டும். அதற்காக நான் ஒரு பேச்சை தயாரித்தேன். ஏனென்றால் முதன் முதலில் பேசப் போகிறோம், ஜாக்கிரதையாக பேச வேண்டும், கொஞ்சம் பதட்டமும் எனக்கு இருந்தது. ஆகவே, பேச்சை நானே முழுமையாக தயாரித்து நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞரிடத்தில் கொண்டு போய் காண்பித்தேன். அதை அவர் படித்துப் பார்த்து, இரண்டு இடத்தில் திருத்திக் கொடுத்தார்.
மேயர் பதவி என்று இரண்டு இடத்தில் போட்டிருந்தேன். அந்த இரண்டு இடத்தில் அந்த பதவி என்கின்ற வார்த்தையை அடித்து விட்டு, மேயர் பொறுப்பு என்று மாற்றிக் கொடுத்தார். நான் இதை ஏன் அடித்துத் திருத்திக் கொடுத்திருக்கிறேன் என்று உனக்குப் புரிகிறதா என்று கேட்டார். கொஞ்சம் தயக்கத்தோடு நின்று கொண்டிருந்தேன், அவரே சொன்னார், மக்கள் உனக்கு மேயர் பதவியைத் தரவில்லை, மேயர் பொறுப்பு என்கிற அந்த காரியத்தை உன்னிடத்தில் ஒப்படைத்திருக்கிறார்கள். அதைப் பொறுப்போடு இருந்து, பொறுப்புணர்வோடு நீ பணியாற்ற வேண்டும் என்பதற்காகத்தான் நான் அதை மாற்றிக் கொடுத்தேனே தவிர வேறு அல்ல என்று எனக்கு விளக்கம் சொன்னார்.
ஆகவே, இப்போது முதலமைச்சர் என்கின்ற பொறுப்பில் நான் அமர்ந்திருக்கிறேன் என்று சொன்னால், அதைப் பதவியாகக் கருதாமல், மக்களுக்குத் தொண்டாற்றக் கூடிய அறிஞர் அண்ணா அவர்கள் அடிக்கடி சொல்வார்கள்; மக்களிடம் செல், மக்களோடு மக்களாக இருந்து பணியாற்று, மக்களுக்காக உன் கடமைமையை செய் என்று அடிக்கடி சொல்வார். ஆகவே, அந்த நிலையிலே தான் நான் என்னுடைய பணியை நிறைவேற்றிக் கொண்டிருக்கிறேன்.
அத்தகைய கோடிக்கணக்கான மக்களுடைய பிரதிநிதியாக இருந்து தமிழ்நாட்டை தெற்காசியாவிலேயே சிறந்த மாநிலமாக மாற்றுவதற்கு, ஆக்குவதற்கு அனைத்து முயற்சிகளையும் நான் எடுத்துக் கொண்டிருக்கிறேன். அதில் நான் வெற்றி பெறுவேன் என்கிற நம்பிக்கை எனக்கு நிறைய இருக்கிறது. ஏனென்றால், நான் கலைஞருடைய மகன். அதுவும், உங்கள் முகத்தையெல்லாம் பார்க்கிறபோது, உங்களுடைய எழுச்சியை, ஆர்வத்தை, ஆரவாரத்தை, உணர்ச்சியை, இந்த அன்பை எல்லாம் பார்க்கிறபோது, அதை நிச்சயம் நிறைவேற்றுவேன் என்ற நம்பிக்கை இன்னும் அதிகமாகிக் கொண்டிருக்கிறது என்பதுதான் உண்மை.
அனைவரையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அனைத்தையும் உள்ளடக்கிய வளர்ச்சி, அதுதான் திராவிட மாடல். அந்த திராவிட மாடல் ஆட்சியைத்தான் நாங்கள் இன்றைக்கு தமிழகத்தில் நடத்திக் கொண்டிருக்கிறோம். ஆகவே, பல துறைகள் இருந்தாலும், முக்கியமான துறைகளில் ஒன்று, தொழில் துறை. அந்தத் தொழில் வளர்ச்சி என்பது தனிப்பட்ட ஒரு நிறுவனத்தினுடைய வளர்ச்சி மட்டுமல்ல, ஒரு தொழில் நிறுவனம் தொடங்குகின்றபோது, அந்த நிறுவனத்தோடு சேர்ந்து பல்லாயிரக்கணக்கான குடும்பங்கள் பயனடைகிறார்கள். அந்த நிறுவனத்தின் மூலமாக மாநிலமே வளர்ச்சி பெறுகிறது. அத்தகைய வளர்ச்சிக்கு இந்த ஐக்கிய அரபு அமீரகமும், அதன் நிறுவனங்களும் ஒத்துழைக்க வேண்டும் என்று நான் உங்களையெல்லாம் விரும்பி, வேண்டி கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.
இந்தப் பயணத்தில், நான் பெருமையோடு சொல்கிறேன், 6,100 கோடி ரூபாய் மதிப்பிலான தொழில்கள் தொடங்க ஒப்பந்தங்கள் போடப்பட்டிருக்கிறது. துபாய் இல்லாமல் - துபாய் நிறுவனங்கள் இல்லாமல் ஒரு மாநிலம் வளர முடியாது என்பது எல்லோருக்கும் தெரியும், எனக்கும் தெரியும். அதனால்தான் முதல் வெளிநாட்டுப் பயணமாக துபாய் பயணத்தைத் தான் நான் தேர்ந்தெடுத்தேன். தமிழ்நாட்டில் தொழில் தொடங்குவதற்கு இத்தனை நிறுவனங்கள் ஆர்வமாக இருப்பதைப் பார்த்து நான் உள்ளபடியே மகிழ்ச்சி அடைகிறேன்.
துபாய்க்கு வந்த பிறகு, இதனை வெளிநாட்டுப் பயணம் என்று சொல்ல முடியாத அளவுக்கு சொந்த நாட்டுக்குள் இருப்பது போன்று தான் நான் உணர்கிறேன். அந்த உணர்வை நீங்கள் ஏற்படுத்திக் கொடுத்திருக்கிறீர்கள்.
துபாயில் இருக்கக்கூடிய உலகின் மிக உயர்ந்த கட்டடமான புர்ஜ் கலீஃபா அந்த கோபுரத்தில் நம்முடைய செம்மொழியான தமிழ் வண்ண வண்ண விளக்குகளில் ஒளிர்ந்ததை, அதைப் பாடியதை, நம்முடைய தமிழ்நாட்டின் பெருமை - பாரம்பரியம் - அகழ்வாய்வுகள் காட்டும் தொன்மை ஆகியவற்றின் சிறப்புகள் உலகறிய வெளிப்பட்டதைப் பார்த்தபோது எனக்கு உள்ளபடியே மகிழ்ச்சி. மகிழ்ச்சி இருந்தாலும் ஒரு ஏக்கம் இருந்தது, இதைப் பார்க்க நம்முடைய முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்கள் இல்லையே என்ற அந்த ஏக்கம் எனக்கு இருந்தது.
கலைஞர் அவர்கள் இல்லாவிட்டாலும், கலைஞரின் பிள்ளையான நான் அதைப் பார்த்ததில் எனக்கு மகிழ்ச்சி. இன்னும் சொல்ல வேண்டுமென்றால், நான் மட்டுமா தலைவர் கலைஞருடைய பிள்ளை, நீங்களும் தலைவர் கலைஞருடைய பிள்ளைகள் தான், அவரது உடன்பிறப்புகள்தான். அத்தகைய தமிழ் உணர்வை, கடல் கடந்து வந்திருந்தாலும் - நீங்கள் தக்க வைத்திருப்பதைப் பார்க்கும் போது எனக்கு உள்ளபடியே பெருமையாக இருக்கிறது.
அதுதான் தமிழுக்கு இருக்கக்கூடிய பெருமை.
தமிழினத்தினுடைய பெருமை.
தமிழினத்துக்கு இருக்கும் பெருமை.
தமிழ்நாட்டுக்கு இருக்கக்கூடிய பெருமை.
நேற்று முன்தினம் துபாய் தமிழர்களைப் பார்த்த போதும் - அதேபோல, இன்று அபுதாபித் தமிழர்களைப் பார்க்கும்போதும் - சத்தியமாகச் சொல்கிறேன், உறுதியாகச் சொல்கிறேன், அண்ணா மீது ஆணையிட்டுச் சொல்கிறேன். தமிழ்நாட்டில் தான் இருக்கிறோமோ அல்லது வேறு எங்காவது இருக்கிறோமா!
"கல் தோன்றி மண் தோன்றாக் காலத்தே வாளொடு முன்தோன்றி மூத்தகுடி தமிழ்க்குடி’என்று சொல்வார்கள்.
இன்றைக்கு உலகம் முழுவதும் பரவி இருக்கும் நம்முடைய தமிழினம், சுமார் 75-க்கும் மேற்பட்ட நாடுகளில் தமிழர்கள் வந்து வாழ்கிறார்கள்.
தமிழ்ப் பெருமையை நாம் பேசினாலும் -
'யாதும் ஊரே யாவரும் கேளிர்' என்ற தமிழ் நெறிப்படி உலகம் முழுவதும் பரவி நாம் வாழ்ந்து வருகிறோம்.
எந்த நாட்டில் வாழ்ந்தாலும், நமது தாய் மண்ணை நாம் மறந்துவிடக் கூடாது.
சிவகங்கை மாவட்டம் கீழடியில் கிடைத்துள்ள ஆதாரங்கள் நம்முடைய பழமையை - பெருமையை பறைசாற்றுவதாக அமைந்துள்ளது.
இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பே -
வியக்கத்தக்க வகையிலே செங்கல் கட்டுமானங்கள்,
கருப்பு மற்றும் சிவப்பு வண்ணம் தாங்கிய பானை ஓடுகள்,
அரிய கல்மணிகள்,
தங்க அணிகலன்கள்,
சிந்துவெளி நாகரிக காலத்தில் காணப்பட்ட அதே,
திமில் கொண்ட காளையின் எலும்புகள்,
விளையாட்டுப் பொருட்கள், தொழிற்பகுதிகள்
என ஒரு செழுமைமிக்க சமூகமாக சங்காலத் தமிழர்கள் வாழ்ந்திருக்கிறார்கள் என்பதை நாம் மட்டுமல்ல, உலகமே கீழடி மூலமாக அறிந்து கொண்டிருக்கிறது.
இவற்றைக் கொண்ட மாபெரும் கண்காட்சி அரங்கத்தை விரைவில் நாம் அமைக்க இருக்கிறோம்.
* கீழடி,
* ஆதிச்சநல்லூர்,
* சிவகளை,
* கொற்கை,
* கொடுமணல்,
* மயிலாடும்பாறை,
* கங்கைகொண்ட சோழபுரம் ஆகிய இடங்களிலும் தற்போது அகழாய்வுப் பணிகளை நாம் மேற்கொண்டிருக்கிறோம்.
தமிழினத்தின் வரலாறு என்பது 3200 ஆண்டுகளுக்கு முந்தியது என்ற வரலாற்றை மீட்டெடுக்க தமிழ்நாடு அரசு உறுதி பூண்டுள்ளது.
ஆதிச்சநல்லூர், சிவகளை மற்றும் கொற்கை உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வின் போது கிடைத்திருக்கக்கூடிய அரிய பொருட்களை அழகுற காட்சிப்படுத்தும் விதமாக, திருநெல்வேலி நகரில் நவீன வசதிகளுடன் அருங்காட்சியகம் அமைக்கப்படும். இது "தண்பொருநை" அருங்காட்சியகம் என அழைக்கப்படும் என்று சட்டமன்றத்தில் நான் ஏற்கனவே அறிவித்திருக்கிறேன்.
இதுமட்டுமல்ல, தமிழ்ப் பண்பாட்டின் வேர்களைத் தேடி, இந்திய நாடெங்கும், அதேபோல் கடல்கடந்து பயணம் செய்து தமிழர்கள் வெற்றித்தடம் பதித்த வெளிநாடுகளிலும் தமிழ்நாடு தொல்லியல் துறை உரிய அனுமதிகளைப் பெற்று இனி ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளும் என்றும் நான் அறிவித்திருக்கிறேன்.
ஒரு இனம் கடந்தகால வரலாற்றை முழுமையாக அறிந்திருக்க வேண்டும். அதனை ஆவணப்படுத்த வேண்டும். அதனை வரக்கூடிய வருங்காலத் தலைமுறைக்குச் சொல்லித் தர வேண்டும். எத்தகைய வரலாற்றுக்கு சொந்தக்காரர்கள் என்ற பெருமிதம் நமக்கு வேண்டும்.
அதே நேரத்தில் கடந்தகாலப் பெருமைகளை மட்டும் பேசிக் கொண்டு இருந்துவிடக் கூடாது. நிகழ்காலத்தில் கல்வியில், வேலைவாய்ப்பில், தொழில் வளர்ச்சியில், வர்த்தகத்தில் நாம் முன்னேற வேண்டும்.
அதனால்தான், ஒரு கையில் கடந்த காலப் பெருமிதங்கள் - இன்னொரு கையில் எதிர்கால பெரிய உயர்வுகள் - ஆகிய இரண்டுக்கும் முக்கியத்துவம் தரும் அரசாக தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. இத்தகைய அரசுக்கு நீங்கள் உறுதுணையாக இருப்பதற்கு மீண்டும், மீண்டும் உங்கள் அத்தனைப் பேருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்s விரும்புகிறேன்.
நேற்றைய முன்தினம் நான் துபாயில் குறிப்பிட்டதைப் போல, சாதி, மதம் ஆகிய வேற்றுமைக்கு முக்கியத்துவம் தராமல் - இனத்தால் மொழியால் நாம் அனைவரும் தமிழர்கள் என்ற ஒற்றுமை உணர்வோடு வாழுங்கள் என்று உங்களை நான் கேட்டுக் கொள்ள விரும்புகிறேன்.
நம்மை ஒற்றுமைப்படுத்தும் ஆற்றல் நம் தமிழ் மொழிக்கு உண்டு!
அத்தகைய தமிழினப் பெயரால் அமைந்துள்ள அபுதாபி தமிழ்ச் சங்கத்தில் எனக்கு நீங்கள் கொடுத்துள்ள இந்த வரவேற்பு என்னுடைய வாழ்நாளில் மறக்க முடியாத ஒரு வரவேற்பாக அமைந்திருக்கிறது. அதற்காக நான் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன்.
அதேபோல, உங்களையும் தமிழ்நாடு வரவேற்கக் காத்திருக்கிறது. இந்த நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னால் அமீரக தேசிய கீதம் பாடல் பாடப்பட்டது. இந்தியாவினுடைய தேசிய கீதம் பாடலும் பாடினார்கள். அதேபோல தமிழ்த்தாய் வாழ்த்தும் பாடப்பட்டிருக்கிறது. ஆகவே, எப்படி அமீரக தேசிய கீதம் பாடுகின்றபோது, நாம் எழுந்து நின்று அதற்குரிய மரியாதையை, நம்முடைய வணக்கத்தைச் செலுத்தினோமோ, அதேபோல, இந்தியாவினுடைய தேசிய கீதம் பாடுகிறபோதும் நாம் நம்முடைய மரியாதையை, நம்முடைய வணக்கத்தைத் தெரிவித்திருக்கிறோம். நிறைவாக, தமிழ்த்தாய் வாழ்த்து பாடுகிறபோது பார்த்தேன், எல்லோருடைய வாயும் அசைந்தது, மேடையில் இருக்கக்கூடிய எல்லோருடைய வாயும், என்னுடைய வாயும் சேர்த்துச் சொல்கிறேன். எல்லோர் வாயும், அந்தப் பாடலைப் பாடியது. அந்தப் பாடலுக்கு நாம் ஆட்சிக்கு வந்தவுடன் ஒரு சர்ச்சை ஏற்பட்டது, நான் அந்த பிரச்சனைக்கு போக விரும்பவில்லை. ஆனால், அந்த சர்ச்சைக்கு முற்றுப்புள்ளி வைத்து இனி தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எல்லோரும் எழுந்து நின்று வணக்கத்தைச் சொல்ல வேண்டும் என்று ஒரு அரசாணையையும் வழங்கப்பட்டது, அதை நீங்கள் செய்திகளில் பார்த்திருப்பீர்கள்.
ஆகவே, நான் அதிக நேரம் எடுத்துக் கொள்ள விரும்பவில்லை, நான் எப்போதும் அதிக நேரம் பேச மாட்டேன். அதைக்கூட எல்லோரும் கிண்டல் செய்வார்கள், இவர் பேசவே மாட்டார், பேசவே மாட்டார் என்று. ஒரு அடுக்கு மொழி உண்டு, பேச்சைக் குறைத்து செயலில் நம்முடைய திறமையை காட்டு. என்னைப் பொறுத்தவரைக்கும், அடிக்கடி பல கூட்டங்களில் சொல்லியிருக்கிறேன். ஒரு அடுக்கு மொழி உண்டு, Do or Die செய் அல்லது செத்து மடி என்று வரும். ஆனால் அந்த or என்கிற வார்த்தையை நீக்கிவிட்டு Do and Die, செய்து முடித்துவிட்டுத் தான் சாக வேண்டும். அப்படி என்கிற அந்த உறுதியை எடுத்துக்கொண்ட காரணத்தால்தான், பேச்சைக் குறைத்து நம்முடைய செயலில், நம்முடைய திறமையைக் காட்டிட வேண்டும் என்ற அந்த உணர்வோடு நான் பணியாற்றிக் கொண்டிருக்கிறேன். தமிழ்நாட்டுக்கு போய் இன்று இரவோடு இரவாக நான் இறங்கப் போகிறேன். பத்திரிக்கை நிருபர்கள், ஊடகத்துறையைச் சார்ந்தவர்கள் என்னை மறித்து கேட்பார்கள், என்ன நடந்தது, எவ்வளவு முதலீட்டைப் பெற்றிருக்கிறீர்கள், எப்படி இருந்தது என்று துளைத்துத் துளைத்து கேள்வி கேட்பார்கள். நான் அவர்களிடத்திலே சொல்லப் போவது ஒன்றே ஒன்று தான். நான் துபாய்க்கு, அபுதாபிக்கு சென்றுவிட்டு வந்தேனென்றால், அங்கிருக்கக்கூடிய என்னுடைய சொந்தங்களை, என்னுடைய உறவினர்களை, என்னுடைய நண்பர்களை, என்னுடைய உடன்பிறப்புக்களை பார்க்கத்தான் போயிருந்தேன், பார்த்துவிட்டுத் தான் வந்திருக்கிறேன்.
எனக்கு ஒரு ஏக்கம், உள்ளபடியே ஒரு ஏக்கத்தோடு தான் நிற்கிறேன். என்ன ஏக்கம் என்றால், நான்கு நாள் தானே நிகழ்ச்சி போட்டிருக்கிறோம், இன்னும் ஒரு நான்கு நாட்கள் இருந்துவிட்டு போகக்கூடாதா அப்படியென்ற ஒரு ஏக்கம் எனக்கு வந்திருக்கிறது. ஆனால், நாளைக்கு சென்னைக்குச் சென்றவுடன், உடனடியாக நான் டெல்லிக்கு செல்ல வேண்டியிருக்கிறது. பிரதமரிடத்திலும், உள்துறை அமைச்சரிடத்திலும் நேரம் கேட்கப்பட்டு, நேரமும் தேதியும் குறித்துக் கொடுத்திருக்கிறார்கள், அந்த நிகழ்ச்சியில் சென்று கலந்து கொள்ள வேண்டும். அதைத் தொடர்ந்து எப்படி சென்னையில் கலைஞரால் கட்டப்பட்ட அறிவாலயம் இன்றைக்கு கம்பீரமாக காட்சி அளித்துக் கொண்டிருக்கிறதோ, அதேபோல, இந்தியாவினுடைய தலைநகரமான புதுதில்லியிலேயே கலைஞர் அறிவாலயம் கட்டடம் கட்டப்பட்டு, அதனுடைய தொடக்க விழா நிகழ்ச்சியும் நடைபெற இருக்கிறது. அதற்கெல்லாம், பணிகள் இருக்கிறது, அதற்கு உடனடியாக நான் போக வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறேன்.
இப்போது சொல்கிறேன், இனிமேல் நீங்கள் அழைத்தாலும், அழைக்காவிட்டாலும் அடிக்கடி இந்த துபாய்க்கு வந்து போவேன். ஆகவே, துபாயில் நடந்த நிகழ்ச்சியின்போது, ஏனென்றால் இங்கு வந்திருக்கக்கூடிய 99 சதவீதம் என்று கூட சொல்ல வேண்டாம், 100 சதவீதமும் எப்படியாவது இவரிடம் போய் ஒரு செல்பி எடுத்துக்கொள்ள வேண்டும் என்று நினைத்துக் கொண்டிருப்பீர்கள், அதற்கான முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று காத்துக் கொண்டிருக்கிறீர்கள், அது எனக்குத் தெரிகிறது. தமிழ்நாட்டிலேயே அது இருக்கிறது என்றால் இங்கு இல்லாமல் போய்விடுமா அது? அதனால்தான், துபாயில் என்ன செய்தேன் என்றால், நீங்கள் அப்படியே அமர்ந்திருங்கள், நான் இந்த மேடையில் இருந்துகொண்டு உங்களை செல்பி எடுத்துக்கொண்டு, அது சமூக ஊடகங்களில் எல்லாம் வந்துவிடும், வந்துவிட்டது என்றால், அதை நீங்கள் எடுத்து வைத்துக் கொள்ளலாம். சுலபமாக எந்த தள்ளுமுள்ளு இல்லாமல், எந்த பிரச்சனையும் இல்லாமல் அதை எடுத்துக் கொள்ள முடியும். எனவே அமைதியாக அப்படியே உட்கார்ந்திருங்கள், நான் உங்களிடத்தில் செல்பி எடுத்துக் கொள்வதற்கு நீங்கள் அனுமதி கொடுக்க வேண்டும் என்று உங்களையெல்லாம் அன்போடு கேட்டு இந்த சிறப்பான வாய்ப்பை எனக்கு ஏற்படுத்தித் தந்த அனைவருக்கும் என்னுடைய இதயப்பூர்வமான நன்றியையும், வணக்கத்தையும் தெரிவித்து என் உரையை நிறைவு செய்கிறேன்.”
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
Also Read
-
🔴Live| தேர்தல் முடிவுகள் : 2 லட்ச வாக்குகள் வித்தியாசத்தில் பிரியங்கா காந்தி முன்னிலை!
-
திண்டுக்கல் சீனிவாசனின் ஒப்புதல் : “அதிமுக ஊழல் பற்றி இன்னும் சில மாதங்களில் மேலும் உண்மைகளை சொல்வார்”!
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?