M K Stalin

இளைஞர்களின் எதிர்காலம் சிறக்க “நான் முதல்வன்” திட்டத்தை தொடங்கி வைத்தார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! (ALBUM)

தி.மு.க தலைவரும், தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலினின் 69வது பிறந்த நாள் இன்று. இதனையொட்டி, இன்று காலையிலேயே சென்னை மெரினாவில் உள்ள பேரறிஞர் அண்ணா, முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் வேப்பேரியில் உள்ள பெரியார் திடலில் தந்தை பெரியாரின் நினைவிடத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அமைச்சரவை சகாக்களுடன் இணைந்து மலர்தூவி மரியாதை செலுத்தினார்.

அதன் பின்னர், கோபாலபுரம் இல்லத்தில் வைக்கப்பட்டுள்ள கலைஞரின் திருவுருவப்படத்துக்கு மரியாதை செலுத்திவிட்டு தயாளு அம்மாளிடமும், சி.ஐ.டி. காலணியில் உள்ள ராஜாத்தி அம்மாளிடமும் ஆசி பெற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், பேராசிரியர் அன்பழகன் வீட்டிலும் சென்று மரியாதை செலுத்தினார்.

அதனையடுத்து சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற அரசு விழாவில் பங்கேற்று “நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற பள்ளி, கல்லூரி மாணவர்கள், இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டுத் திட்டத்தை தொடங்கி வைத்தார்.

அப்போது, “நான் முதல்வன் - உலகை வெல்லும் இளைய தமிழகம்” என்ற திறன் மேம்பாட்டுத் திட்டத்தை எனது பிறந்த நாளில் தொடங்கி வைப்பது என் வாழ்நாள் பெருமையாக கருதுகிறேன் எனவும் பேசியிருந்தார்.

இந்த நிலையில், ”என்னை வார்ப்பித்த தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா, கலைஞர் ஆகியோரது நினைவிடங்களிலும், கலைஞரின் கோபாலபுரம் & சிஐடி காலனி இல்லங்களிலும், பேராசிரியர் இல்லத்திலும் மரியாதை செலுத்தினேன்.

இளைஞர்கள் எதிர்காலம் சிறக்க இந்தப் பிறந்தநாளில் #நான்_முதல்வன் திட்டத்தைத் தொடங்கி வைத்துள்ளேன்.” என சமூக வலைதளங்களிலும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதிவிட்டுள்ளார்.

Also Read: “ஸ்டாலினின் இந்த வெற்றிப்பயணம்; வரலாற்றில் பொறிக்கப்படவேண்டிய புதுமைப் பயணம்” : அன்றே சொன்னார் கலைஞர்!