M K Stalin
“கலைஞர் அன்று நடுங்கிப்போனார்.. அதுதான் தி.மு.க”: 1999 சம்பவத்தை நினைவுகூர்ந்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று மாலை - காணொலி வாயிலாகத் திருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.
அப்போது பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், “ஸ்டாலினிடம் ஒரு மனு கொடுத்தால் - அதனால் பயன் இருக்கும்”என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தியதுதான் இந்த ஒன்பது மாதகால ஆட்சியின் மிகப்பெரிய சாதனை! மக்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! அவ்வாறுதான் எங்களைத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆளாக்கியிருக்கிறார்.
நாங்கள் மக்களுக்காகவே வாழ்பவர்கள் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்! செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சென்னைக்கே ஏற்பட இருந்த பாதிப்பை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எவ்வாறு தடுத்தார் என்று வயதில் பெரியவர்களுக்கு நினைவிருக்கும்! இருந்தாலும் எல்லோருக்கும் நினைவூட்ட வேண்டியது என்னுடைய கடமை.
1999-ஆம் ஆண்டு ஒருநாள் நள்ளிரவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டிற்கு அவரைச் சந்திக்க புலனாய்வுத் துறை ஐ.ஜி. வருகிறார். “மிக அவசரமான சூழல், முதலமைச்சரை உடனே சந்திக்க வேண்டும்”என்று சொல்கிறார். உடனே தலைவர் கலைஞரை எழுப்பினார்கள். அந்த ஐ.ஜி. சொன்ன விஷயத்தைக் கேட்டதும் தலைவர் கலைஞர் அவர்கள் நடுங்கிப் போயிவிட்டார். செங்குன்றம் ஏரி உடையப் போகிறது, அது உடைந்தால் சென்னையும் சுற்றுப்பகுதியும் மூழ்குகிற அபாயம் ஏற்படும் என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார். உடனே அரசாங்க இயந்திரம் அனைத்தையும் தலைவர் கலைஞர் தட்டி எழுப்பினார். தாழ்வான பகுதியில் இருக்கின்ற மக்கள் எல்லோரும் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அன்றைக்கு நான் சென்னை மேயராக இருந்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையாக இறக்கிவிட்டோம். அந்த நள்ளிரவில் கோட்டைக்குப் புறப்பட்டார் முதலமைச்சர் கலைஞர். அவரோடு நானும் சென்றேன். எல்லோரையும் அங்கு வரச் சொல்லிவிட்டார். பாதி அமைச்சரவை கோட்டைக்கு வந்துவிட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் அவர்கள். அவரையும் கோட்டைக்கு முதலமைச்சர் கலைஞர் அழைத்தார்.
உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு அமைச்சர் சுந்தரத்தை அனுப்பி அங்கிருந்து தகவல் சொல்லிக்கொண்டே இருக்கச் சொன்னார். ஏரியில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவுவிற்குத் தண்ணீர் இருந்தது. ஏற்கனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த காவாங்கரை, கொளத்தூர், லட்சுமிபுரம், தணிகாசலம் நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளுக்கு, நமது அரசு எச்சரிக்கை செய்திருந்தாலும், இந்த உடைப்பு எதிர்பாராதது. “அதிகாலையில் ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியதும், செங்குன்றம் செல்லலாம்” என்று தலைவர் கலைஞர் சொல்லிவிட்டார். நானும் அவர் கூட தயாராகி நிற்கிறேன். காவல்துறை உயரதிகாரிகள் “நீங்க போக வேண்டாம்” என்று சொல்கிறார்கள். ஆனால் அதைத் தலைவர் கலைஞர் கேக்கவில்லை.
அங்கு சென்று பார்த்தே ஆகவேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார். அவரோடு நாங்களும் சென்றோம். நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தன் கண்ணால் பார்த்த பிறகுதான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அமைதியானார். இதுதான் கலைஞர்!
ஒரு சம்பவம் நடந்ததும் உடனே அந்த இடத்திற்குப் சென்றிட வேண்டும்.
மக்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு நாமும் இருக்க வேண்டும், அவங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் நமது தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வு! அவர் உருவாக்கிய மனிதாபிமானம்! மக்கள் பற்று! அதனால்தான் எந்த மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று மக்களைப் பார்க்க வேண்டும் என்று நான் புறப்பட்டுப் செல்கிறேன். நம்மை உருவாக்கிய தலைவர்கள் அப்படித்தான் நடந்து காட்டியிருக்கிறார். இது நம்முடைய ரத்தத்துலேயே ஊறியது! ஏதோ அரசியலுக்காக இல்லை, நம்முடைய இயல்பே இதுதான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும்- மக்களோடு மக்களாக நாம் இருப்போம்!
பழனிசாமி ஆட்சிக்காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்காக, ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கழக நிர்வாகிகளான நீங்கள் வழங்கினீர்கள். அரிசி, பருப்பு ஆகிய உணவுப் பொருட்களைக் கொடுத்தோம்! உணவாகவும் சமைத்து கொடுத்தோம்! பல ஊர்களில் நிதி உதவியும் செய்யப்பட்டது. மருந்துகளை வாங்கிக் கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைத்தோம். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்’. அந்தக் கொரோனா காலத்திலும் மக்களைக் காத்தோம். நடப்பது யாருடைய ஆட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் நம் சகோதரர்களாக நினைத்து செயல்படுகிறவன் நான். அவ்வாறு நினைக்கக் கூடியவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும்! தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் உணவுப் பொருட்களைக் கழகத் தொண்டர்கள் வழங்கினார்கள். கருணை உள்ளம் கொண்ட உடன்பிறப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் என்பதுதான், எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது!
1971-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,
“வீட்டுக்கு விளக்கு - நாட்டுக்குத் தொண்டன்
தொண்டு வென்றிட - விளக்கு நிலைத்திடத் தி.மு.கழகத்திற்கு வெற்றிகளைக் குவிப்பீர்”
என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவ்வாறுதான், இப்போது வரையிலும் கழகம் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறது.
வீட்டுக்கு விளக்காக இருப்பேன்! நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன்!
மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்! மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! - என்று சட்டமன்றத் தேர்தலின்போது நான் உறுதியளித்தேன். அவ்வாறுதான் நான் செயல்பட்டு வருகிறேன்.
நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காக டெல்லியில் நமது உறுப்பினர்கள் குரல் கொடுப்பதை, வாதாடுவதை பார்க்குறீர்கள்!
சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். தமிழ்நாட்டின் வளத்திற்காக கோட்டையில் இருந்து திட்டங்களைத் தீட்டி வருகிறோம்!” என உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!