M K Stalin

“குடும்பத் தலைவிகளுக்கு ரூ.1,000 உரிமைத்தொகை எப்போது?” : முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன பதில்!

“உங்கள் ஊரில் - உங்களோடு இருந்து - உங்களுக்காகப் பணியாற்ற திராவிட முன்னேற்றக் கழக வேட்பாளர்களுக்கும் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களுக்கும் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் வாக்களியுங்கள்." என தி.மு.க தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் இன்று (16/02/2022) மாலை - காணொலி வாயிலாகத் தருவள்ளூர் மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலை முன்னிட்டு ஏற்பாடு செய்யப்பட்டிருந்த “உள்ளாட்சியிலும் மலரட்டும் நம்ம ஆட்சி” என்ற தலைப்பிலான தேர்தல் பரப்புரைக் கூட்டத்தில் உரையாற்றினார்.

அவர் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:

"பழந்தமிழகத்தில் தொண்டை மண்டலத்தின் நுழைவு வாயிலாக இருந்த மாவட்டம் இது! பல்லவர்கள் தொடங்கி ஆங்கிலேயர்கள் வரை போர் செய்த பூமி இது! பிரிட்டிஷார் முதலில் வந்து இறங்கியது பழவேற்காடு உள்ளிட்ட இந்தப் பகுதியில்தான்! பழவேற்காட்டுக்கு வந்தவர்கள், மேடான ஒரு இடம் தேடி வந்தார்கள். அந்த இடத்தில் கோட்டை அமைத்தார்கள். அதுதான் இன்று சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டை ஆகும். எனவே, கோட்டைக்குப் பாதை அமைத்த மாவட்டம்- இந்த திருவள்ளூர்!

திருவள்ளூர் மாவட்டமானது பழமையான மாவட்டமாக இருந்தாலும், அதை நவீன மாவட்டமாக மாற்றியது நம்முடைய திராவிட முன்னேற்றக் கழக அரசுதான்! திருப்பெரும்புதூரிலும், இருங்காட்டுக்கோட்டையிலும், கும்மிடிப்பூண்டியிலும் உருவாக்கப்பட்ட தொழில் வளாகங்கள் -அம்பத்தூர், மணலி, திருவள்ளூரைச் சுற்றிலும் உருவாக்கப்பட்ட தொழிற்சாலைகள் - இதில் எல்லாம் பெரும்பாலானவை, திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சிக் காலத்தில் உருவாக்கப்பட்டதுதான்.

கார் உற்பத்தித் தொழிற்சாலைகள் முதல்- கண்ணாடி உற்பத்தித் தொழிற்சாலைகள்வரை, முத்தமிழறிஞர் கலைஞர் காலத்தில் தொடங்கியதுதான். உலோகத் தகடு முதல்- ஏ.சி. வரைக்கும் தயாரிக்கின்ற தொழிற்சாலைகளைத் திறந்து வைத்திருக்கிறோம்.

திருவள்ளூர் - காஞ்சிபுரம் மாவட்ட எல்லையைச் சுற்றி வந்தாலே தி.மு.க.வின் சாதனைகள் தெளிவாகத் தெரியும். தமிழ்நாடு தொழில் மேம்பாட்டு நிறுவனம் என்று சொல்லப்படுகின்ற, ‘சிப்காட்’ நிறுவனத்தை 1971-ஆம் ஆண்டு உருவாக்கியவர் முத்தமிழறிஞர் கலைஞர்தான்.

ஒரே இடத்தில் பல்வேறு தொழில் நிறுவனங்களை நடத்துவது-

அவர்களுக்கு சலுகைகள் தருவது-

வேலைவாய்ப்பை உருவாக்குவது-

ஏற்றுமதியை அதிகப்படுத்துவது- என்ற தொழில் கொள்கையை முதலமைச்சராக இருந்த கலைஞர் உருவாக்கினார். இதன்மூலம், 1974-ஆம் ஆண்டு- ஓசூரில் மாபெரும் தொழிற்பேட்டையை முத்தமிழறிஞர் கலைஞர் உருவாக்கினார். 1989-ஆம் ஆண்டு ராணிப்பேட்டையிலும், ஓசூரிலும்- இரண்டாம் பிரிவாக, இரண்டு தொழிற்பேட்டையை உருவாக்கினார். 1996-ஆம் ஆண்டு திருப்பெரும்புதூர், இருங்காட்டுக்கோட்டை, கும்மிடிப்பூண்டி ஆகிய இடங்களில், தொழில் வளாகங்களை அமைத்தார்.

அம்பத்தூர் தொழிற்பேட்டையில் இருக்கின்ற,

தமிழ்நாடு ஆல்கலைன் பேட்டரீஸ் தொழிற்சாலை-

அரக்கோணத்தில் வார்ப்படம் கொல் உலைத் தொழிற்சாலை-

மணலி எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையில், பியூட்டின் உற்பத்திப் பிரிவு-

இருங்காட்டுக்கோட்டையில் ஹூண்டாய் மோட்டார் நிறுவனம்-

திருவள்ளூரில் மிச்சுபிஷி லேன்சர் கார் தொழிற்சாலை-

மறைமலைநகரில் ஃபோர்டு மோட்டார் தொழிற்சாலை-

ஆட்டோலெக் நிறுவனம்,

காகித அட்டை தயாரிக்கும் தொழிற்சாலை,

ரினால்ட் பால்மென் தொழிற்சாலை,

செயிண்ட் கோபைன் கண்ணாடித் தொழிற்சாலை,

- இவ்வாறு திருவள்ளூர், காஞ்சிபுரம் எல்லையைச் சுற்றி பல தொழிற்சாலைகள் தொடங்கக் காரணமானது முதலமைச்சர் கலைஞர் தலைமையிலான திராவிட முன்னேற்றக் கழக ஆட்சி.

வல்லூர் அனல் மின்நிலையம்!

மீஞ்சூரில் கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம்!

திருத்தணி - நெமிலி கூட்டுக்குடிநீர்த் திட்டம்!

ஆவடி, திருவள்ளூர் நகராட்சிகளில் பாதாள சாக்கடைத் திட்டங்கள்!

திருத்தணியில் புதிய நீதிமன்றக் கட்டடம்,

திருவள்ளூர், பட்டாபிராம், வேப்பம்பட்டு ஆகிய பகுதிகளில் ரயில்வே மேம்பாலங்கள்,

பூந்தமல்லி பேருந்து நிலையம்,

பூந்தமல்லி புறவழிச் சாலை,

மக்களின் நூற்றாண்டு கனவான பழவேற்காடு ஏரி மேம்பாலம் - இதெல்லாம் திமுக ஆட்சியில்தான் கட்டப்பட்டது. திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு உருவாக்கத்தான் தெரியும்! ஆனால், அ.தி.மு.க.விற்கு அழிக்கத்தான் தெரியும்!

சமச்சீர்க் கல்வி-

மெட்ரோ ரயில் திட்டம்-

மதுரவாயல்- சென்னை துறைமுகம் பறக்கும் சாலைத் திட்டம்-

அண்ணா நூற்றாண்டு நூலகம்-

சேது சமுத்திரத் திட்டம்-

கடல்நீரைக் குடிநீராக்கும் திட்டம் என்று அ.தி.மு.க. ஆட்சி முடக்கிய திட்டங்களை ஏராளமாகச் சொல்ல முடியும். இவ்வாறு முடக்கி வைத்து மாநில தொழில் வளர்ச்சியை கெடுத்தவர்களை, இன்றைக்கு மக்களே முடக்கி வைத்துவிட்டார்கள்!

அ.தி.மு.க. ஆட்சியில் இருந்தபோதெல்லாம் தமிழ்நாடு அனைத்துத் துறைகளிலும் தேங்கி நிர்வாகச் சீர்கேட்டால் தத்தளித்தது! திராவிட முன்னேற்றக் கழக ஆட்சியில் தமிழ்நாடு முன்னேறியது! அனைத்துத் துறைகளிலும் இன்று முன்னேறிக்கொண்டே இருக்கிறது! அதனால்தான் ‘தமிழ்நாட்டின் நம்பிக்கை நாயகனாக’ திராவிட முன்னேற்றக் கழகம் என்றைக்கும் இருக்கிறது!

மக்கள் நம்மீது வைத்துள்ள நம்பிக்கை-

நம்மிடம் மக்களுக்கு உள்ள எதிர்பார்ப்புகள்-

தமிழ்நாட்டு உரிமைகளுக்கான நம்முடைய இடையறாத போராட்டங்கள் -

நேர்மையான, சிறப்பான நிர்வாகத்தை அளிப்பதில் நமக்குள்ள உறுதிப்பாடு-

இதனால்தான் இன்று திராவிட முன்னேற்றக் கழகம், நாட்டிலேயே மூன்றாவது மிகப்பெரிய கட்சியாக நாடாளுமன்றத்தில் அங்கீகாரம் பெற்றுள்ளது. சட்டமன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்திருக்கிறது. இதுவரை நடைபெற்ற உள்ளாட்சித் தேர்தல்களில் அமோக வெற்றி பெற்றுள்ளது. இப்போது நடைபெறுகின்ற நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தலில் நாடு போற்றும் வெற்றியை வழங்கிட மக்கள் தயாராகிவிட்டார்கள். சட்டமன்றத் தேர்தலில் கொடுத்த வாக்குறுதிகளில், ஏராளமான வாக்குறுதிகளை இந்த ஒன்பது மாதத்திலேயே நாம் நிறைவேற்றி இருக்கிறோம். மீதமிருக்கும் வாக்குறுதிகளையும் அடுத்தடுத்து நிறைவேற்றப் போகிறோம். அதில் யாருக்கும் - எந்த சந்தேகமும் வேண்டாம். அதில் நாம் உறுதியோடு உள்ளோம்.‘சொன்னதைச் செய்வோம் - செய்வதைச் சொல்வோம்’ - இதுதான் தி.மு.க.!

* மகளிர் அனைவருக்கும் நகரப் பேருந்துகளில் இலவசப் பயணம் என்று சொன்னோம்.

ஆட்சிக்கு வந்துதுமே கோட்டைக்கு வந்து கையெழுத்து போட்டேனா இல்லையா?

வேலைக்குச் செல்லும் பெண்கள்; காய்கறி- பூ- மீன் என சிறு வியாபாரங்களுக்குச் செல்லும் தாய்மார்கள்; கல்லூரிகளுக்குச் செல்லும் சகோதரிகள்; ஏன், உற்றார் உறவினர்களைச் சந்திக்க செல்லும் பெண்கள் எல்லாம் இந்தத் திட்டத்தால் இன்று பயனடைந்து கொண்டிருக்கிறார்கள்.

என்னைப் பொறுத்தவரைக்கும், இந்த ஸ்டாலின் ஒரு திட்டத்தை அறிவித்துவிட்டு கோட்டையில் உட்கார்ந்து இருப்பவன் அல்ல, மக்களோடு மக்களாக நாள்தோறும் இருந்து, அந்தத் திட்டம் எவ்வாறு செயல்படுகிறது என்றும் ஆய்வு செய்கிறேன்.

நான் காவல்துறைக்குப் பொறுப்பேற்றிருக்கிறேன்.

மக்களோடு நேரடியாக தொடர்பில் இருக்கின்ற காவல்துறை, பொதுமக்களோடு நண்பனாக செயல்பட வேண்டும் என்று நினைப்பவன் நான்! அதனால்தான், தருமபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல்நிலையத்திற்குச் சென்று காவல்நிலையப் பணிகளை ஆய்வு செய்தேன்.

பொங்கல் பரிசை அறிவித்ததோடு மட்டுமில்லாமல், பல ரேஷன் கடைகளுக்கும் நானே நேரில் சென்று ஆய்வு செய்தேன்.

தரமான சாலைகளைப் போட வேண்டும்- மில்லிங் செய்துதான் சாலை போட வேண்டும் என்று நள்ளிரவில்கூட நேரில் பார்வையிட்டு அறிவுறுத்தினேன்.

ஆதிதிராவிட மாணவர்களின் நலன் காக்க, தருமபுரி மாவட்டம் பென்னாகரம் அரசு ஆதிதிராவிடர் நல மாணவர் விடுதியில் அக்கறையோடு ஆய்வு செய்தேன்.

கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்களுக்கு நம்பிக்கையூட்ட, ‘P.P.E. Kit’ போட்டுக்கொண்டு, நானே கொரோனா வார்டிற்குள் சென்று ஆய்வு செய்தேன்.

மாணவர்களுக்குக் கொரோனா தடுப்பூசி என அறிவித்த உடனே, ‘ஒரு பெற்றோருக்கே உள்ள அக்கறையோடு’ பள்ளிக்குச் சென்று பார்வையிட்டேன்.

சகோதரி அஸ்வினியின் சுயமரியாதையைக் காக்க, பூஞ்சேரியில் உள்ள அவரது வீட்டுக்கே சென்று அவருக்கு மட்டுமல்ல, அங்கிருந்த ஒட்டுமொத்த என்னுடைய சகோதர- சகோதரிகளின் குடும்பங்களுக்கு உறுதுணையாக நின்று, அவர்களுக்கான அடிப்படை வசதிகள் கிடைப்பதை உறுதி செய்தேன்.

தந்தை பெரியாரும் - பேரறிஞர் அண்ணாவும் - முத்தமிழறிஞர் கலைஞரும் சொன்னதை, நித்தமும் நெஞ்சில் ஏந்தி, கொள்கை உணர்வோடு, இந்த தமிழினத்துக்காக- மக்களோடு மக்களாக நின்று பணியாற்றுபவன்தான் - இந்த ஸ்டாலின்!

இவ்வாறு மக்கள் நலனுக்காக செயல்படும் இந்த அரசு, கடந்த சில மாதங்களில் செய்த சாதனைகளில் சிலவற்றை மட்டும் இங்கே பட்டியலிட விரும்புகிறேன்.

* கொரோனா கால நிவாரணமாக 4,000 ரூபாய்;

* ஆவின் பால் விலை லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு;

* பெட்ரோல் லிட்டருக்கு 3 ரூபாய் குறைப்பு;

* முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு ரூபாய் 317 கோடியிலான பல்வேறு திட்டங்கள்;

* மீனவர்களுக்கு வழங்கக்கூடிய சிறப்பு உதவித் தொகை 5,000 ரூபாயிலிருந்து 6,000 ரூபாயாக உயர்வு;

* மக்களைத் தேடி மருத்துவம் திட்டம்;

* அனைத்துச் சாதியினரும் அர்ச்சகர் ஆகலாம்;

* ஒரு காலப்பூஜைத் திட்டத்தின்கீழ் உள்ள 12,959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டம்;

* 7.5 விழுக்காடு சிறப்பு உள் ஒதுக்கீட்டின் அடிப்படையில் பொறியியல் படிப்பிற்குத் தேர்வு செய்யப்பட்ட அரசுப் பள்ளி மாணாக்கர்களுக்கு சேர்க்கை ஆணை;

* கடந்த ஆட்சியில் அறவழியில் போராடிய மக்கள் மீது தொடரப்பட்ட 868 வழக்குகளைத் திரும்பப்பெற்றது;

* “கலைஞரின் வருமுன் காப்போம் திட்டம்”;

* திருக்கோயில்களில் தலைமுடி மழிக்கும் பணியாளர்களுக்கு மாத ஊக்கத் தொகையாக 5,000 ரூபாய் வழங்கும் திட்டம்;

* வெளிநாடுவாழ் தமிழர்களின் நலன்காக்க “புலம்பெயர் தமிழர் நலவாரியம்” என்ற புதிய வாரியம் தோற்றுவிப்பு;

* சம்பா பருவப் பயிர்களுக்கான இழப்பீட்டுத் தொகையான 1597 கோடியே 18 லட்சம் ரூபாயைச் சுமார் 6 இலட்சம் உழவர்களுக்கு வழங்கும் பணி;

* “இல்லம் தேடிக் கல்வி” திட்டம்;

* தமிழ்நாடு சிட்கோ தொழில் மனைகள் விலை குறைப்பு;

* மாநிலம் முழுவதும் 58 ஆயிரத்து 463 மகளிர் சுய உதவிக் குழுக்களைச் சேர்ந்த 7 லட்சத்து 56 ஆயிரத்து 142 பயனாளிகளுக்கு 2 ஆயிரத்து 750 கோடி ரூபாய் கடனுதவி;

* 36 மாவட்டங்களில் 70 புதிய கூட்டுறவு மருந்தகங்கள்;

* “இன்னுயிர் காப்போம்- நம்மைக் காக்கும் 48 திட்டம்”;

* “மீண்டும் மஞ்சப்பை” விழிப்புணர்வு இயக்கம்;

* இந்த நிதியாண்டில், 4 இலட்சத்து 2 ஆயிரத்து 829 பேர் கொண்ட 29 ஆயிரத்து 425 புதிய மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைக்கப்பட்டிருக்கிறது;

* சமூகநீதிப் போராளிகளுக்கு விழுப்புரத்தில் நினைவு மண்டபம்;

* நெசவாளர் கோரிக்கையை ஏற்று பஞ்சுக்கு நுழைவு வரி ரத்து;

* அரசுப் பணியாளர்களுக்கு 14 விழுக்காடு அகவிலைப்படி உயர்வு;

* தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நல ஆணையம் உருவாக்கம்;

* கூட்டுறவு வங்கிகளில் பெறப்பட்ட நகைக் கடன்களும், தமிழக வரலாற்றில் முதன்முறையாக மகளிர் சுய உதவிக்குழுக்கள் பெற்ற கடன்களும் ரத்து.

- இவ்வாறு பல சாதனைகளை நாம் செய்து வருகிறோம்.

நாம் இன்று செய்யும் சாதனைகள்- நாளை இந்தியாவுக்கே வழிகாட்டியாக இருக்கும்!

முப்பது ஆண்டுக்கும் முன்னால், பெண்களுக்கு சொத்தில் சம உரிமை என்று சொன்னோம். அது இந்திய அளவில் சட்டமாகியது!

இலவச கேஸ் அடுப்பு வழங்கினோம்- அதுவும் பின்னால் இந்திய அளவில் திட்டமாகியது!

உழவர்களுக்கு இலவச மின்சாரம் வழங்கினோம்- அதைத்தான் இன்றைக்கு உத்தரப் பிரதேச அரசியலில் வாக்குறுதியாக கொடுத்திருக்கிறார்கள்.

அவர்கள் வெற்றிபெற்று- நிறைவேற்றுவார்களா இல்லையா என்று நமக்குத் தெரியாது!

ஆனால், தமிழ்நாட்டை பொறுத்தவரைக்கும் தி.மு.க. ஒன்றை சொன்னால், அதை நிச்சயம் செய்யும்!

என்னதான் ‘பச்சைப் பொய்’ பழனிசாமியும் - ‘பக்கவாத்தியம்’ ஓ.பன்னீர்செல்வமும் ஊர் ஊராகச் சென்று, தங்களுடைய கட்டுக்கதைகளை அவிழ்த்துவிட்டாலும், தமிழ்நாட்டு மக்கள் அவர்களை ஒரு பொருட்டாகவே எடுத்துக்கொள்ள மாட்டார்கள்! ஏன் என்றால், இந்த அரசு செலவு செய்யும் ஒவ்வொரு பைசாவும் தமிழ்நாட்டு மக்களின் நலனுக்கு சென்றுக் கொண்டிருக்கிறது. அதனுடைய பயனை அனுபவிப்பவர்கள் அனைத்து இல்லங்களிலும் இருக்கிறார்கள்! ஏன், அ.தி.மு.க. தொண்டர்களும் பயன்பெறுகிறார்கள்! இதை அனைத்தும், அ.தி.மு.க. அரசு நிதிநிலையை சீரழித்த நிலையிலும் சாதித்திருக்கிறோம்! சீரழிப்பது மட்டும்தான் ‘பழனிசாமி - பன்னீர்செல்வம் காமெடி நாடகக் கம்பெனிக்குத்’ தெரியும். அவர்கள் நிதிநிலைமையை எவ்வாறு சீரழித்தார்கள் என்று சொல்ல வேண்டும் என்றால், தமிழ்நாட்டு அரசிற்கு இப்போது ஐந்தரை லட்சம் கோடி ரூபாய் கடன். இதுதான் அ.தி.மு.க. விட்டுவிட்டுப் சென்ற நிதிநிலைமை. 2011-ஆம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சிக்கு வரும்போது, தமிழ்நாட்டினுடைய கடன், சுமார் 1 லட்சம் கோடி ரூபாய்தான் இருந்தது. அதிலும் கடந்த பல ஆண்டுகளாக இருந்து வந்த கடனுடைய தொடர்ச்சிதான். ஆனால், கடந்த பத்தாண்டுகாலத்தில் மட்டும், ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக கடனை உயர்த்தி, தமிழ்நாட்டை கடனாளி மாநிலம் ஆக்கியது அ.தி.மு.க.தான்!

இன்னும் சொல்ல வேண்டும் என்றால், 60 ஆண்டுகளாக 1 லட்சம் கோடி ரூபாயாக இருந்த கடனை, பத்தே ஆண்டுகளில் ஐந்தரை லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தி, நிதிப் பற்றாக்குறை, வருவாய்ப் பற்றாக்குறை, மலையளவு கடனை வைத்துவிட்டுத் தமிழ்நாட்டு நிதிநிலைமை வரலாற்றில் ஒரு தலைக்குனிவை ஏற்படுத்திச் சென்றுவிட்டார்கள். இப்போது நாம் தமிழ்நாட்டையும்- தமிழ்நாட்டின் நிதிநிலைமையையும் தலைநிமிர வைத்துக் கொண்டிருக்கிறோம்.

இப்படிப்பட்ட நிலையில்தான், நான் சொன்ன மக்கள் நலத் திட்டங்களை- உதவிகளை தமிழ்நாட்டு மக்களுக்குச் செய்திருக்கிறோம் என்றால், அதற்கு ஒரே காரணம்…

தி.மு.க. அரசு என்பது மக்கள்நலன் காக்கும் அரசு! உங்கள் நலன் காக்கும் அரசு! அ.தி.மு.க. ஆட்சியில் நடந்த முறைகேடுகளை களைந்து மக்களுக்கு நகைக்கடளைத் தள்ளுபடி செய்தோம்! அ.தி.மு.க. ஆட்சியில் எவ்வாறெல்லாம் நகைக்கடன் முறைகேடுகள் நடந்தது என்று கேட்டீர்கள் என்றால்,

* போலி நகைகளை வைத்துக் கடன் வாங்கியிருக்கிறார்கள்.

* நகைகளே இல்லாமல், நகைகளை வைத்தது மாதிரியும் பொய்க் கணக்கு காட்டியிருக்கிறார்கள்.

* தூத்துக்குடி மாவட்டத்தில் ஒரு வங்கியில், 500 நகைப் பொட்டலங்களில், 261 பொட்டலங்களில் நகைகளே இல்லை! வெறும் பொட்டலம்தான் இருக்கிறது. அதை வைத்து மட்டும், ஒரு கோடியே 98 லட்சம் ரூபாய் கடன் கொடுக்கப்பட்டிருக்கிறது.

* நாமக்கல் மாவட்டத்தில் ஒருவர், 11 லட்சத்து 33 ஆயிரத்து 500 ரூபாய்க்கு கவரிங் நகைகளை வைத்து மோசடி செய்திருக்கிறார்.

* ஒரே நபர், 5 சவரன் அடிப்படையில் 625 நகைக் கடன்கள் மூலம், ஒன்றேகால் கோடி ரூபாய் கடன் வாங்கியிருக்கிறார்.

* இன்னொருவர், 647 நகைக்கடன்கள் மூலம், 1 கோடியே 47 லட்சம் ரூபாய் நகைக் கடன் பெற்றுள்ளார்.

* ஒரே ஒரு ஆள் 7 கோடி ரூபாய் வரைக்கும் கடன் வாங்கியிருக்கிறார்.

இவ்வாறு என்னால் வரிசையாகப் பட்டியல் போட முடியும்!

எந்தத் திட்டமாக இருந்தாலும், அதற்கான பயனாளிகள், உண்மையாக இருக்க வேண்டும்! அதுதான் அரசின் திட்டங்களில் மிகமிக அடிப்படையானது. மக்கள் வரிப்பணத்தில் நிறைவேற்றுகிற திட்டங்களை பொறுப்பாக செயல்படுத்த வேண்டும். கூட்டுறவு அமைப்புகளை மோசடியாகப் பயன்படுத்தி இதுபோலக் கடன் பெற்றவர்களைப் பிரித்தெடுத்துவிட்டோம். அ.தி.மு.க.வினரை வைத்து செய்த நகை மோசடிக்கு, வெறும் பொட்டலத்துக்கு “ஏன் நகைக்கடன் தள்ளுபடி பண்ணவில்லை”- என்று பழனிசாமியும் பன்னீர்செல்வமும் கேட்கிறார்கள். உண்மையான பயனாளிகள் அனைவருக்கும் நாங்கள் ரத்து செய்துவிட்டோம். 13 லட்சம் குடும்பங்களில் மகிழ்ச்சியை ஏற்படுத்திய ஆட்சிதான் இந்த ஆட்சி.

இந்து சமய அறநிலையத் துறை சார்பில், பல்வேறு அறப்பணிகள் செய்து வருவதோடு சேர்த்து, கோயில் பணியாளர்களுக்கு ஏராளமான சலுகைகளை வழங்கிய அரசுதான் நம்முடைய அரசு.

➢ ஒரு காலப்பூஜைத் திட்டத்தின் கீழ் உள்ள 12 ஆயிரத்து 959 திருக்கோயில்களில் பணிபுரியும் அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், பூசாரிகளுக்கு மாத ஊக்கத்தொகை வழங்கும் திட்டத்தை தொடங்கி இருக்கிறோம்.

➢ அர்ச்சகர், ஓதுவார், பிரபந்த விண்ணப்பர், வேதபாராயணர் மற்றும் இசை கற்போர் ஆகிய பயிற்சி பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு வழங்கப்பட்டு வந்த 1000 ரூபாய் ஊக்கத் தொகையை, 3000 ரூபாயாக உயர்த்தி வழங்கும் திட்டம் தொடங்கப்பட்டிருக்கிறது.

➢ அர்ச்சகர்கள், பட்டாச்சாரியார்கள், ஓதுவார்கள், பூசாரிகளுக்கு புத்தாடைகளையும்; திருக்கோயில் பணியாளர்களுக்கு நபர் ஒருவருக்கு இரண்டு சீருடைகளையும் பொங்கல் தினத்தை முன்னிட்டு வழங்கினோம். இவ்வாறு ஒவ்வொரு தரப்பினரையும் பார்த்துப் பார்த்து உதவிகள் செய்து வரும் அரசுதான், தி.மு.க. அரசு. இங்குள்ள தமிழருக்கு மட்டுமல்ல, இலங்கையில் இருந்து வந்த தமிழருக்கும் இதுபோல உதவிகளைச் செய்து வருகிறோம்.

சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னால், தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளுக்கும் சென்று மக்களிடம் மனுக்களை வாங்கினேன். அதைப் பெட்டியில் போட்டு, மக்கள் முன்னிலையில் பூட்டினேன். “ஆட்சிக்கு வந்ததும் இதைத் திறப்பேன், உங்கள் குறைகளைத் தீர்ப்பேன்”-என்று, நான் மக்கள் முன்னிலையில் உறுதியளித்தேன். இப்போது மக்கள் குறைகளைத் தீர்த்துக்கொண்டு இருக்கிறேன்!

➢ “உங்கள் தொகுதியில் முதலமைச்சர்” திட்டத்தின்கீழ்- 2 இலட்சத்து 29 ஆயிரத்து 216 மனுக்களுக்குத் தீர்வு காணப்பட்டிருக்கிறது.

இதில் தனி நபர்கள் அடைந்த பயனும் இருக்கும்; ஒரு தெரு அடைந்த பயனும் இருக்கும்; ஒரு ஊர் அடைந்த பயனும் இருக்கும்; ஒரு குறிப்பிட்ட சமூகம் அடைந்த பயனும் இருக்கும்! இதுதான் இந்த திட்டத்தின் இந்த ஆட்சியின் மகத்தான சாதனை!

“ஸ்டாலினிடம் ஒரு மனு கொடுத்தால் - அதனால் பயன் இருக்கும்”என்ற நம்பிக்கையை மக்கள் மனதில் ஆழமாக ஏற்படுத்தியதுதான் இந்த ஒன்பது மாதகால ஆட்சியின் மிகப்பெரிய சாதனை! மக்களுக்காகத்தான் நாங்கள் இருக்கிறோம்! அவ்வாறுதான் எங்களைத் தலைவர் கலைஞர் அவர்கள் ஆளாக்கியிருக்கிறார்.

நாங்கள் மக்களுக்காகவே வாழ்பவர்கள் என்பதற்கு ஒரே ஒரு எடுத்துக்காட்டு போதும்! செங்குன்றம் ஏரியில் உடைப்பு ஏற்பட்டு சென்னைக்கே ஏற்பட இருந்த பாதிப்பை அப்போதைய முதலமைச்சர் கலைஞர் அவர்கள் எவ்வாறு தடுத்தார் என்று வயதில் பெரியவர்களுக்கு நினைவிருக்கும்! இருந்தாலும் எல்லோருக்கும் நினைவூட்ட வேண்டியது என்னுடைய கடமை.

1999-ஆம் ஆண்டு ஒருநாள் நள்ளிரவில் முதலமைச்சர் கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டிற்கு அவரைச் சந்திக்க புலனாய்வுத் துறை ஐ.ஜி. வருகிறார். “மிக அவசரமான சூழல், முதலமைச்சரை உடனே சந்திக்க வேண்டும்”என்று சொல்கிறார். உடனே தலைவர் கலைஞரை எழுப்பினார்கள். அந்த ஐ.ஜி. சொன்ன விஷயத்தைக் கேட்டதும் தலைவர் கலைஞர் அவர்கள் நடுங்கிப் போயிவிட்டார். செங்குன்றம் ஏரி உடையப் போகிறது, அது உடைந்தால் சென்னையும் சுற்றுப்பகுதியும் மூழ்குகிற அபாயம் ஏற்படும் என்று அந்த அதிகாரி சொல்லியிருக்கிறார். உடனே அரசாங்க இயந்திரம் அனைத்தையும் தலைவர் கலைஞர் தட்டி எழுப்பினார். தாழ்வான பகுதியில் இருக்கின்ற மக்கள் எல்லோரும் மேடான பகுதிக்கு அழைத்துச் செல்லப்பட்டார்கள். அன்றைக்கு நான் சென்னை மேயராக இருந்தேன். மாநகராட்சி நிர்வாகத்தை முழுமையாக இறக்கிவிட்டோம். அந்த நள்ளிரவில் கோட்டைக்குப் புறப்பட்டார் முதலமைச்சர் கலைஞர். அவரோடு நானும் சென்றேன். எல்லோரையும் அங்கு வரச் சொல்லிவிட்டார். பாதி அமைச்சரவை கோட்டைக்கு வந்துவிட்டது. அன்றைக்கு எதிர்க்கட்சித் தலைவராக இருந்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சோ.பாலகிருஷ்ணன் அவர்கள். அவரையும் கோட்டைக்கு முதலமைச்சர் கலைஞர் அழைத்தார். உடைப்பு ஏற்பட்ட இடத்திற்கு அமைச்சர் சுந்தரத்தை அனுப்பி அங்கிருந்து தகவல் சொல்லிக்கொண்டே இருக்கச் சொன்னார். ஏரியில் உடைப்பு ஏற்பட்டிருக்கிறது. ஏரியின் மொத்த கொள்ளளவுவிற்குத் தண்ணீர் இருந்தது. ஏற்கனவே அந்தப் பகுதியைச் சேர்ந்த காவாங்கரை, கொளத்தூர், லட்சுமிபுரம், தணிகாசலம் நகர், கொடுங்கையூர் ஆகிய பகுதிகளுக்கு, நமது அரசு எச்சரிக்கை செய்திருந்தாலும், இந்த உடைப்பு எதிர்பாராதது. “அதிகாலையில் ஓரளவு நிலைமை சீரடையத் தொடங்கியதும், செங்குன்றம் செல்லலாம்”என்று தலைவர் கலைஞர் சொல்லிவிட்டார். நானும் அவர் கூட தயாராகி நிற்கிறேன். காவல்துறை உயரதிகாரிகள் “நீங்க போக வேண்டாம்”என்று சொல்கிறார்கள். ஆனால் அதைத் தலைவர் கலைஞர் கேக்கவில்லை.

அங்கு சென்று பார்த்தே ஆகவேண்டும் என்று கலைஞர் அவர்கள் சொன்னார். அவரோடு நாங்களும் சென்றோம். நிலைமை கட்டுப்படுத்தப்பட்டது. மக்களுக்கு எந்தப் பாதிப்பும் இல்லை என்று தன் கண்ணால் பார்த்த பிறகுதான் முதலமைச்சர் கலைஞர் அவர்கள் அமைதியானார். இதுதான் கலைஞர்!

ஒரு சம்பவம் நடந்ததும் உடனே அந்த இடத்திற்குப் சென்றிட வேண்டும்.

மக்களைப் பார்க்க வேண்டும், மக்களோடு நாமும் இருக்க வேண்டும், அவங்களுக்கு ஆறுதல் சொல்ல வேண்டும் என்று என் மனம் துடிக்கிறது என்றால், அதற்குக் காரணம் நமது தலைவர் கலைஞர் ஊட்டிய உணர்வு! அவர் உருவாக்கிய மனிதாபிமானம்! மக்கள் பற்று! அதனால்தான் எந்த மாவட்டத்தில் மக்கள் பாதிக்கப்பட்டாலும் உடனே சென்று மக்களைப் பார்க்க வேண்டும் என்று நான் புறப்பட்டுப் செல்கிறேன். நம்மை உருவாக்கிய தலைவர்கள் அப்படித்தான் நடந்து காட்டியிருக்கிறார். இது நம்முடைய ரத்தத்துலேயே ஊறியது! ஏதோ அரசியலுக்காக இல்லை, நம்முடைய இயல்பே இதுதான். எதிர்க்கட்சியாக இருந்தாலும் ஆளும்கட்சியாக இருந்தாலும்- மக்களோடு மக்களாக நாம் இருப்போம்!

பழனிசாமி ஆட்சிக்காலத்தில், கொரோனா கட்டுப்பாடுகளால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்ட ஏழை, நடுத்தர மக்களுக்காக, ‘ஒன்றிணைவோம் வா' என்ற திட்டத்தைத் தொடங்கி, அவர்களுக்குத் தேவையான பொருட்களைக் கழக நிர்வாகிகளான நீங்கள் வழங்கினீர்கள். அரிசி, பருப்பு ஆகிய உணவுப் பொருட்களைக் கொடுத்தோம்! உணவாகவும் சமைத்து கொடுத்தோம்! பல ஊர்களில் நிதி உதவியும் செய்யப்பட்டது. மருந்துகளை வாங்கிக் கொடுத்தோம். கோடிக்கணக்கான மக்களின் உள்ளத்தில் மகிழ்ச்சியை விதைத்தோம். ‘ஏழையின் சிரிப்பில் இறைவனைக் கண்டோம்’. அந்தக் கொரோனா காலத்திலும் மக்களைக் காத்தோம். நடப்பது யாருடைய ஆட்சி என்றெல்லாம் பார்க்கவில்லை. தமிழ்நாட்டு மக்கள் நம் சகோதரர்களாக நினைத்து செயல்படுகிறவன் நான். அவ்வாறு நினைக்கக் கூடியவர்கள்தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஒவ்வொரு தொண்டரும்! தங்களது சொந்தப் பணத்தைச் செலவு செய்து 'ஒன்றிணைவோம் வா' திட்டத்தில் உணவுப் பொருட்களைக் கழகத் தொண்டர்கள் வழங்கினார்கள். கருணை உள்ளம் கொண்ட உடன்பிறப்புகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட தலைவன் என்பதுதான், எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிப்பது!

1971-ஆம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள்,

“வீட்டுக்கு விளக்கு - நாட்டுக்குத் தொண்டன்

தொண்டு வென்றிட - விளக்கு நிலைத்திடத் தி.மு.கழகத்திற்கு வெற்றிகளைக் குவிப்பீர்” என்ற முழக்கத்தை முன்வைத்தார். அவ்வாறுதான், இப்போது வரையிலும் கழகம் ஒவ்வொரு நாளும் செயல்பட்டு வருகிறது.

வீட்டுக்கு விளக்காக இருப்பேன்! நாட்டுக்குத் தொண்டனாக இருப்பேன்!

மக்கள் கவலைகளைத் தீர்ப்பதில் முதல்வனாக இருப்பேன்! மக்களுக்காக கவலைப்படும் தலைவனாக இருப்பேன்! - என்று சட்டமன்றத் தேர்தலின்போது நான் உறுதியளித்தேன். அவ்வாறுதான் நான் செயல்பட்டு வருகிறேன்.

நாடாளுமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். தமிழ்நாட்டின் உரிமைக்காக டெல்லியில் நமது உறுப்பினர்கள் குரல் கொடுப்பதை, வாதாடுவதை பார்க்குறீர்கள்!

சட்டமன்றத் தேர்தலில் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுத்தீர்கள். தமிழ்நாட்டின் வளத்திற்காக கோட்டையில் இருந்து திட்டங்களைத் தீட்டி வருகிறோம்!

ஆட்சிக்கு வந்தவுடனே, அ.தி.மு.க. ஆட்சியில், கொரோனா பிடியில் சிக்கி, வாழ்வாதாரச் சிக்கலில் இருந்தவர்களுக்குத் தலா 4 ஆயிரம் ரூபாயை எந்தவிதமான புகாருக்கும் இடமில்லாமல் வழங்கியது தி.மு.க. ஆட்சி!

கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகள் பெயரில் 5 லட்சம் ரூபாய் வைப்புத் தொகை கொடுத்தது தி.மு.க. அரசு! தாய் அல்லது தந்தையை இழந்த குழந்தைகளுக்கு உடனடி நிவாரணமாக 3 லட்ச ரூபாய் வழங்கியது தி.மு.க. அரசு! கொரோனாவில் உயிரிழந்த ஒவ்வொருவரின் குடும்பத்திற்கும், இந்தியாவிலேயே முதன்முதலில் தலா 50 ஆயிரம் ரூபாய் வழங்கியது- நம்முடைய அரசுதான்! இலங்கை கடற்படையால் சேதாரப்படுத்தப்பட்ட மீனவர்களின் 108 படகுகளுக்கு, தலா 5 லட்ச ரூபாய் வழங்கியது இந்த திமுக அரசுதான். 17 நாட்டுப் படகுகளுக்குத் தலா ஒன்றரை லட்சம் ரூபாய் வழங்கியதும் திமுக அரசுதான். மழைக்காலங்களில் உப்பளத் தொழிலாளர்களுக்கு நிவாரண உதவித்தொகையாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கியது திமுக அரசு! மாற்றுத்திறனாளிகளின் உதவித்தொகையை 1500 ரூபாயில் இருந்து 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கியது தி.மு.க அரசு.

இவ்வாறு பல நிதி உதவிகளை வழங்கியது தி.மு.க அரசு, விரைவில் குடும்பத் தலைவிகளுக்கு 1000 ரூபாய் உரிமைத்தொகை வழங்கும் வாக்குறுதியையும் நிறைவேற்றுவோம். இந்த ஸ்டாலின் ஒன்று சொன்னால், அதை நிச்சயம் நிறைவேற்றுவான்! உள்ளாட்சி அமைப்புகளிலும் மகத்தான வெற்றியை மக்களாகிய நீங்கள் கொடுங்கள். உங்கள் ஊரில், உங்களோடு இருந்து பணியாற்றக் காத்திருக்கிறோம்."

இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.

Also Read: "தேர்தல் முடியட்டும்.. 2 நாட்களில் ஒரு நல்ல செய்தியை அறிவிப்பேன்”: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சொன்ன தகவல்!