M K Stalin
”அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு” - அணை பாதுகாப்பு மசோதாவுக்கு முதல்வர் கண்டனம்!
"மாநில அரசுகளின் அடிப்படை உரிமைகளைப் பறிக்கும் அணைப் பாதுகாப்பு மசோதாவினை நிறைவேற்றியிருப்பது கடும் கண்டனத்திற்குரியது" என தி.மு.கழகத் தலைவரும் தமிழ்நாடு முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதன் விவரம் பின்வருமாறு:-
”கூட்டாட்சித் தத்துவத்திற்கும், மாநில அரசின் அதிகாரங்களுக்கும் எதிரான அணைப் பாதுகாப்பு மசோதாவை ஒன்றிய அரசு பிடிவாதமாக நிறைவேற்றி இருப்பது கடும் கண்டனத்திற்குரியது. திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சி வரிசையில் இருந்தபோதும் - இப்போது ஆளுங்கட்சியாகவும் இந்த மசோதாவை கடுமையாக எதிர்த்து வந்துள்ளது.
“அணைப் பாதுகாப்புச் சட்டம் நிறைவேற்றக் கூடாது” என்று தமிழ்நாடு சட்டமன்றத்தில் தீர்மானம் வந்தபோது, ஒருமனதாக ஆதரித்துள்ளோம். அதையும் மீறி, 2.8.2019 அன்று இந்த மசோதாவினை ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களவையில் கொண்டு வந்தபோது, அதில் பங்கேற்றுப் பேசிய கழக நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.இராசா, “அவசரகதியில் கொண்டு வரப்பட்டுள்ள அணைப் பாதுகாப்பு மசோதா என்பது அரசியல் சட்டம் தந்துள்ள கூட்டாட்சித் தத்துவத்தின் மீதான கடும் தாக்குதல். ஆகவே, இந்த மசோதாவை திரும்பப் பெறுங்கள்” என எதிர்த்துப் போர்க்குரல் எழுப்பியதை இந்த நேரத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.
இந்நிலையில், நேற்றைய தினம் (2.12.2021) இந்த மசோதா மாநிலங்களவையில் கொண்டு வரப்பட்ட போது பேசிய திருச்சி சிவா எம்.பி., அவர்கள், “ஜனநாயகம், கூட்டாட்சித் தத்துவத்தின்கீழ் இயங்குவதுதான் நமது அரசியல் சட்டத்தின் சிறப்பம்சம். ஆனால் இந்த மசோதா மாநில அரசுகளிடம் உள்ள அடிப்படை உரிமைகள் மற்றும் அதிகாரங்களைப் பறித்து, ஒன்றிய அரசுக்குக் கூடுதல் அதிகாரத்தை அளித்து விடும்.” என்றும்; “அணைகள் மாநிலத்தினுடையது. எனவே அதன் பாதுகாப்பும் எங்களுடையது. ஆனால் இந்த மசோதா அரசியல் சாசனத்தின் விதி 252-ஐ மீறுவதாக உள்ளது. அணைப் பாதுகாப்பு என்பதைவிட மாநில அரசுகளின் அதிகாரப் பாதுகாப்பே இப்போது கேள்விக்குரியதாகியுள்ளது” என்று டி.கே.எஸ். இளங்கோவன் எம்.பி., அவர்களும் அடுக்கடுக்கான வாதங்களை எடுத்து வைத்து - வலுவாக எதிர்த்துப் பேசி - இந்த மசோதாவை தேர்வுக் குழுவின் ஆய்வுக்கு அனுப்பிட வேண்டும் என ஆணித்தரமாக எடுத்துரைத்தார்கள்.
திராவிட முன்னேற்றக் கழகம் சார்பில் இந்த மசோதாவை மாநிலங்களவையின் தேர்வுக்குழுவிற்கு அனுப்ப வேண்டும் என்று திருச்சி சிவா திருத்தம் கொடுத்து - அந்தத் திருத்தத்தின் மீது வாக்கெடுப்பும் நடத்தப்பட்டுள்ளது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் இந்தத் திருத்தத்தை மற்ற எதிர்க்கட்சிகளும் ஆதரித்துள்ளன. குறிப்பாக அ.தி.மு.க. உறுப்பினர்களும் ஆதரித்த நிலையில் - தங்களுக்கு உள்ள பெரும்பான்மையைப் பயன்படுத்தி - அணைப் பாதுகாப்புச் சட்ட மசோதாவை தேர்வுக் குழுவிற்கு அனுப்ப வேண்டியதில்லை என்று முடிவு செய்து - இந்த அணைப் பாதுகாப்புச் சட்டத்தை ஒன்றிய பா.ஜ.க. அரசு கொண்டு வந்திருப்பது “ஒன்றிய - மாநில அரசுகளுக்கு” இடையிலான உறவில் மிகப்பெரும் சறுக்கலாகவே அமைந்திருப்பது கண்டு வேதனைப்படுகிறேன்.
திராவிட முன்னேற்றக் கழகம் மக்களவையிலும், மாநிலங்களவையிலும் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்தும், ஜனநாயக - நாடாளுமன்ற மரபுகளுக்கோ, இவற்றைக் காப்பாற்றும் அரசியல் சட்டத்திற்கோ துளியும் மதிப்பளிக்காமல் மாநில அரசுகளின் உரிமைகளைப் பறிக்கும் ஒன்றிய அரசின் செயல் மிகவும் சர்வாதிகாரமானது. ஜனநாயகத்திற்கு ஆபத்தானது. மாநிலங்களில் உள்ள மக்கள் நாடாளுமன்றத்தில் அளித்த பெரும்பான்மையைக் கொண்டு மாநிலங்களுக்கு எதிராகவே சட்டமியற்றி, அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்தும் ஒன்றிய பா.ஜ.க. அரசு மக்களுக்குப் பதில் சொல்ல வேண்டிய காலம் வெகு தொலைவில் இல்லை என்று தெரிவித்துக் கொள்கிறேன்.” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!