M K Stalin
“உடன்பிறப்புகள் இருக்கும் திசைநோக்கி வணங்கி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்கிறேன்” : மு.க.ஸ்டாலின்
"கொரோனா காலம் என்பதால் எளிமையாக நடைபெறுகிறது பதவியேற்பு விழா; உங்கள் உடல்நலமே முக்கியம் என்பதால் உடன்பிறப்புகள் இல்லத்தில் இருந்தே கண்டுகளிக்க வேண்டுகிறேன்" என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் விடுத்துள்ள அறிக்கையில், “தமிழர்களின் ஒவ்வொரு வீட்டுக்கும் ஒளி விளக்காய், நம் நாட்டுக்கு எப்போதும் நற்பணியாற்றும் தொண்டனாய்த் திகழ்ந்துவரும்; அண்ணா அவர்களால் உருவாக்கப்பட்டு, கலைஞர் அவர்களால் வளர்த்தெடுக்கப்பட்ட திராவிட முன்னேற்றக் கழகத்தின் மீது நம்பிக்கை வைத்து, தமிழ்நாட்டு மக்கள் மகத்தான தீர்ப்பை வழங்கி இருக்கிறார்கள். ஐந்து முறை தமிழகத்தை ஆண்ட இயக்கம் தான் நமது தி.மு.கழகம். ஆறாவது முறையும் ஆட்சி அமைக்கும் அரிய வாய்ப்பைத் தமிழக மக்கள் மனமுவந்து வழங்கி இருக்கிறார்கள்.
தனிப்பெரும்பான்மை கட்சியாக தி.மு.கவுக்கு ஆட்சி அமைக்கும் நல்வாய்ப்பை மக்கள் வழங்கி இருக்கிறார்கள். உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்டு வென்ற சட்டமன்ற உறுப்பினர்கள் கூட்டம் 4-ஆம் தேதி மாலையில் அண்ணா அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தில் கூடியது. அக்கூட்டத்தில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சட்டமன்றக் கட்சித் தலைவராக எனது பெயரை மரியாதைக்குரிய கழகப் பொதுச்செயலாளர் அண்ணன் துரைமுருகன் அவர்கள் முன்மொழிந்தார்கள். அருமைச் சகோதரர் கழக முதன்மைச் செயலாளர் கே.என்.நேரு அவர்கள் வழிமொழிந்தார்கள். உதயசூரியன் எனும் ஒப்பற்ற சின்னத்தில் வென்ற அனைவரும் ஒன்று சேர்ந்து, ஒருமனதாக இதனை ஏற்றுக் கொண்டார்கள். இது என்னுடைய வாழ்க்கையில் மறக்க முடியாத நாள்.
பேரறிஞர் அண்ணா அவர்கள் அலங்கரித்த நாற்காலியில், முத்தமிழறிஞர் கலைஞர் அவர்கள் அமர்ந்து கோலோச்சிய பொறுப்பில், கழகத்தின் சட்டமன்ற உறுப்பினர்களால் உட்கார வைக்கப்படும் அளவுக்கு, உழைப்பையே மூலதனமாகக் கொண்டு, என்னை நான் படிப்படியாக வளர்த்துக் கொண்டதை நினைத்துப் பெருமைப்படுகிறேன்.
தி.மு.க. சட்டமன்றக் கட்சித் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட எனக்குத் தமிழக முதலமைச்சராகப் பதவிப் பொறுப்பு ஏற்பு செய்து வைக்க இருக்கிறார் மேதகு தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவர்கள். சட்டமன்ற உறுப்பினர்களது ஆதரவுக் கடிதத்தை நேற்றைய தினம் காலையில் மேதகு ஆளுநரிடம் ஒப்படைத்து வந்தோம். நாளை (மே 7) காலை 9 மணியளவில் பதவி ஏற்பு விழா ஆளுநர் மாளிகையில் மிக எளிமையான முறையில் நடைபெற இருக்கிறது. அன்றைய தினம் தமிழக அமைச்சரவையில் இடம்பெறும் அமைச்சர் பெருமக்களும் பொறுப்பேற்க இருக்கிறார்கள்.
மே - 7, தமிழக அரசியல் வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறித்துக் கொள்ளும் நாளாக மாற இருக்கிறது. திராவிட முன்னேற்றக் கழகம் ஆறாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்க இருக்கிறது. மீண்டும் கழக ஆட்சி - கலைஞரின் கனவு நிறைவேறுகிறது என்ற மகிழ்ச்சி ஒருபக்கம் இருந்தாலும் - மனதின் ஓரத்தில் கவலையும் ஏற்படுகிறது.
இரத்தமும் வியர்வையும் சிந்தி கழகத்துக்காக - நமது வெற்றிக்காக உழைத்த தொண்டர்கள் அனைவரையும் சென்னைக்கு அழைத்து - அவர்களுக்கு முன்னால் - அவர்களின் மனம் நிறைவு கொள்ளும் வண்ணம் - பதவியேற்க முடியவில்லையே என்பதுதான் எனது கவலைக்குக் காரணம். இந்த வெற்றிக்குக் காரணமான கதாநாயகர்கள், கழக உடன்பிறப்புகளும் தோழர்களும் ஆகிய நீங்கள்தான். உங்களது அயராத உழைப்பால், அசைக்கவியலாத உறுதியால், கம்பீரத்தால், கடின முயற்சியால் கிட்டியது இந்த வெற்றி. அதனால் மிகப்பெரிய அளவில், தொண்டர்கள் முன்னிலையில், பதவி ஏற்பு விழாவை நடத்தலாம் என்று தேர்தலுக்கு முன்னதாகவே சிந்தித்து வைத்திருந்தேன்.
ஆனால் கொரோனா என்ற பெருந்தொற்று, இரண்டாவது பேரலையாக எழுந்து வீசும் இந்தச் சூழலில், அத்தகைய மக்கள் கூடும் மாபெரும் விழா நடத்த இயலாது. அதனால் ஆளுநர் மாளிகையில், மிக எளிய முறையில் நாளை (வெள்ளிக்கிழமை) காலை 9 மணிக்கு நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
ஒவ்வோர் உடன்பிறப்பின் - தோழரின் உடல்நலன்தான் எனக்கு முக்கியம். அதனால் அனைவரும் தங்கள் இல்லத்தில் இருந்தபடியே, விழாவைத் தொலைக்காட்சி நேரலையில் காணுங்கள்! தொண்டர்கள் அனைவரும் உடலால் உங்கள் வீட்டில் இருந்தாலும், உள்ளத்தால் சென்னையிலேதான் - எம்முடனேதான் இருப்பீர்கள் என்பதை நான் நன்கு அறிவேன். இந்த உடன்பிறப்பு எனும் பாச உணர்வுதான் மகத்தான வெற்றிக்குக் காரணம்.
கழக ஆட்சி - கலைஞர் ஆட்சி என்பதே, பல இலட்சக்கணக்கான உடன்பிறப்புகள் அனைவரும் ஒன்றுபட்ட சொல் தான். 'இத்தனை தொண்டர்களைப் பெற்றெடுக்க ஒரு தாய் வயிறு தாங்காது என்பதால் தனித்தனி தாய் வயிற்றில் பிறந்த பிள்ளைகள் நாம்' என்றார் பேரறிஞர் அண்ணா அவர்கள். அத்தகைய கலைஞர் எனும் ஒரு தாய்ப் பிள்ளைகளான கழக உடன்பிறப்புகள் அனைவரும் இருக்கும் திசை நோக்கி வணங்கி தமிழகத்தின் முதலமைச்சராகப் பொறுப்பேற்க நான் தயாராகிவருகிறேன்.
உங்களது உழைப்பு கழக ஆட்சியை மலர வைத்தது. உங்களது வாழ்த்து எங்களைப் பெருமைப்படுத்தும். அனைவரும் ஒன்றுசேர்ந்து, தமிழக மக்கள் அனைவருக்கும், சம உரிமையும் கடமையும் உடைய, உயர்வான தமிழகத்தை உருவாக்கிடுவோம்!” எனக் குறிப்பிட்டுள்ளார்.
Also Read
-
ஹிஜாப் கட்டுப்பாட்டுக்கு எதிர்ப்பு...உள்ளாடைகளுடன் போராட்டம் நடத்திய ஈரான் பல்கலைக்கழக மாணவி கைது !
-
இந்தியாவின் சக்தி வாய்ந்தவர்கள் பட்டியலில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்: எஃகு வீரர் என India Today புகழாரம்!
-
கூடலூர் & ஆனைமலை புலிகள் காப்பகம் : ஆர்கிடேரியங்களை மேம்படுத்த ரூ.3 கோடி ஒதுக்கி அரசாணை வெளியீடு!
-
பாலஸ்தீனத்தில் மனித உயிர்கள் கொல்லப்படுவது துயரமானது, இஸ்ரேல் நிறுத்திக் கொள்ள வேண்டும் - முரசொலி !
-
”தவறான நோக்கத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு” : இந்தியில் நடத்த கோரிய மனுவை தள்ளுபடி செய்த உச்சநீதிமன்றம்!