M K Stalin
EPS, OPS-ஐ கூட வைத்துக்கொண்டு ஊழல் பற்றி பேச மோடி அமித்ஷாக்கு என்ன தகுதி இருக்கிறது? - மு.க.ஸ்டாலின்
தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ‘தினமலர்’ நாளிதழுக்கு அளித்துள்ள பேட்டியை அந்நாளிதழ் நேற்று (29.3.2021) வெளியிட்டுள்ளது. அதில் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் அனைத்துத் தரப்பினரின் நன்மதிப்பையும் தி.மு.கழக தேர்தல் அறிக்கை பெற்றுள்ளது என்றும் "இ.பி.எஸ்.- ஓ.பி.எஸ்.’’சை அருகில் வைத்துக்கொண்டு பிரதமர் மோடியும், அமித்ஷாவும் ஊழலைப் பற்றிப் பேச என்ன தகுதி இருக்கிறது?’’ என்று கேள்வி எழுப்பியுள்ளார்.
‘தினமலர்’ நாளிதழில் வெளிவந்துள்ள பேட்டியை இங்கே அப்படியே எடுத்து வெளியிட்டுள்ளோம். அது வருமாறு :-
செய்தியாளர்: சமதர்ம சமுதாயத்தை உருவாக்கும் நோக்கில், ஏற்கனவே, கலைஞர் கருணாநிதி ஆட்சி காலத்தில் அறிவிக்கப்பட்ட, அஞ்சுகம் அம்மையார் திட்டத்தை செம்மைப்படுத்துவோம் என்ற அறிவிப்பு, தலித் அல்லாத பிற ஜாதியினர் மத்தியில் எதிர்ப்பை கிளப்பி இருக்கிறதே? உண்மையில், தி.மு.க.வின் தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டிருப்பது என்ன?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 73வது பக்கத்தில், 259வது வாக்குறுதியாக, ஒரு திட்டம் அறிவிக்கப்பட்டுள்ளது. அந்தத் திட்டத்தின் பெயர், ‘அஞ்சுகம் அம்மையார் கலப்பு திருமண நிதியுதவி திட்டம்!’ இந்தத் தலைப்பின் கீழ், கலப்பு திருமணங்களை ஊக்கப்படுத்தி பிறப்பு அடிப்படையிலான ஜாதி இன வேறுபாட்டை அகற்றி, தீண்டாமையை ஒழிக்கும் நோக்கத்தில், தி.மு.க., ஆட்சிக் காலத்தில், தலைவர் கலைஞரால் அறிமுகப்படுத்தப்பட்ட அஞ்சுகம் அம்மையார் நினைவு கலப்பு திருமண நிதியுதவி திட்டம், புதுப்பிக்கப்பட்டு செயல்படுத்த, அரசாணை வெளியிடப்படும்.
கலப்பு திருமணம் செய்யும் மணமக்களில் ஒருவர், ஆதிதிராவிடர் அல்லது மலைவாழ் பழங்குடியினர் எனில், அவர் பிற இனத்தவரை மணந்தால் வழங்கப்படும் நிதியுதவி, 60 ஆயிரம் ரூபாய் மற்றும் தாலிக்கு, 8 கிராம் தங்கக் காசும் வழங்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது. இந்தத் திட்டம், 1989ம் ஆண்டு முதல், தமிழகத்தில் அமலில் இருக்கிறது. 2011ல் முதல்வரான ஜெயலலிதா, இந்தத் திட்டத்தின் பெயரை, ‘டாக்டர் முத்துலட்சுமி ரெட்டி நினைவு கலப்பு திருமண உதவி திட்டம்’ என்று மாற்றினார்.
அவரது ஆட்சியிலும் தொடரத்தான் செய்தது. இதைத்தான் சிலர் திரித்து, திசை திருப்ப முயற்சி செய்கின்றனர்; அது, எடுபடாது. 2013ல் இருந்து, மத்திய அரசிலும், இப்படி ஒரு திட்டம் அமலில் உள்ளது. உள்நோக்கத்தோடு இதை திரித்து, விஷமப் பிரசாரம் செய்தவர் மீது, வழக்குப்பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ‘தி.மு.க. ஆட்சிக்கு வந்தால், நில அபகரிப்பு நடக்கும்; கட்டப் பஞ்சாயத்து, ரவுடியிசம் தலைதூக்கும்’ என, முதல்வர் இ.பி.எஸ். தொடர்ந்து குற்றம் சாட்டுகிறாரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சிக்கு வரப்போகிறது. அப்போது அப்படி நடந்தால், என்னிடம் நேரில் வந்து, இ.பி.எஸ். முறையிடலாம்.
செய்தியாளர்: குடும்ப தலைவியருக்கு மாதம், 1,000 ரூபாய் வழங்கப்படும் என, தி.மு.க., அறிவித்ததும், 'எங்கள் திட்டங்களை இங்கிருந்து யாரோ, ஸ்டாலினுக்கு சொல்லி விடுகின்றனர். அதை வைத்து, அவர் முன்கூட்டியே அறிவித்து விடுகிறார்' என, இ.பி.எஸ்., சொன்னாரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: இது ஒன்றே போதும்; ஆட்சி நடத்துவதற்கான நுணுக்கம், தகுதி, அவரிடம் இல்லை என்பதை அறிந்துகொள்ள. இன்னமும் பக்குவப்படாமல்தான், அவர் இருக்கிறார் என்பதையே, இதுகாட்டுகிறது.
அப்பட்டமான ஜெராக்ஸ் காப்பி!
செய்தியாளர்: தி.மு.க., தேர்தல் அறிக்கையின், 'ஜெராக்ஸ்' தான், அ.தி.மு.க., தேர்தல் அறிக்கை என, உங்கள் கட்சியினர் சொல்கின்றனரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: சும்மா சொல்லவில்லை. அப்பட்டமான, ஜெராக்ஸ் காப்பியாகவே இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை குறைப்பு, குடும்பத் தலைவியருக்கு உரிமைத் தொகை முதல், அனைத்தும் அப்படியே இருக்கிறது. இல்லை என்று, இ.பி.எஸ்., சொல்ல முடியுமா?
செய்தியாளர்: மூன்று மாதத்திற்கும் மேலாக, கடுமையாக உழைத்து தயார் செய்யப்பட்ட, தி.மு.க., தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும், சில விஷயங்களை, ஒரு தரப்பினர் எதிர்க்கின்றனரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: அப்படி எந்த தரப்பினரும் எதிர்க்கவில்லை. அனைத்து தரப்பினரின் நன்மதிப்பையும் பெற்றுள்ளது. பொதுவான தேர்தல் அறிக்கையோடு, மாவட்டங்களுக்கான இன்னொரு தேர்தல் அறிக்கையையும் வெளியிட்டுள்ளோம். இது, மாவட்டங்கள், நகரங்கள், ஒன்றியங்கள், கிராமங்கள் என, பொதுமக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பையும், நம்பிக்கையையும் ஏற்படுத்தி உள்ளது.
பா.ஜ.க. சொன்னால் அது பொய்யாகத்தான் இருக்கும்!
செய்தியாளர்: தி.மு.க., கூட்டணியை எதிர்க்க, 100 காரணங்களை, பா.ஜ.க. அடுக்கி இருக்கிறதே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: பா.ஜ., சொல்வதாலேயே, அவை பொய்யாகத்தான் இருக்க முடியும். பா.ஜ., எங்களை எதிர்த்தால், நாங்கள் சரியாக இருக்கிறோம் என்று, பொருள்.
செய்தியாளர்: தி.மு.க.,வின் முரண்பட்ட கருத்துக்களை, விளம்பரமாக வெளியிட்டு வருகிறதே அ.தி.மு.க.,?
தலைவர் மு.க.ஸ்டாலின்: அந்த விளம்பரங்கள் பொய்யானவை. 'நீட்' தேர்வு, காங்கிரஸ் ஆட்சியில் வரவில்லை. பா.ஜ., ஆட்சியில்தான் வந்தது. ‘ஹைட்ரோ கார்பன்' திட்டங்களுக்கு, நான் அனுமதி எதுவும் தரவில்லை. ஜல்லிக்கட்டு தடைக்கும், தி.மு.க.வுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. உண்மை, பொய் என்று பிரித்து, பொய்யான விளம்பரத்தை, அ.தி.மு.க., கொடுத்து வருகிறது.
செய்தியாளர்: கரூர் செந்தில் பாலாஜியின் ஆதிக்கம் தாங்க முடியாமல் தான், தி.மு.க., விவசாய அணி செயலராக இருந்த சின்னசாமி, அ.தி.மு.க.,வுக்குப் போய்விட்டார் என்கிறார்களே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: ‘தினமலர்’ நாளிதழை விட்டு வெளியேறியவர்கள் எல்லாம், என்ன காரணம் சொல்வார்கள்? மக்களை பாருங்கள் மக்களிடம் கேளுங்கள்!
செய்தியாளர்: பத்தாண்டு காலம், அ.தி.மு.க., தொடர்ச்சியாக ஆட்சியில் இருந்த போதும், ஆட்சிக்கு எதிரான அலை இல்லை என்கிறார்களே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: மக்களை விட்டு அதிக தூரத்தில், நீங்கள் இருப்பதாகத் தெரிகிறது. வெளியில் போய் மக்களை பாருங்கள்; மக்களிடம் கேளுங்கள்.
செய்தியாளர்: தி.மு.க. போன்ற, தொண்டர்களால் வளர்க்கப்பட்ட இயக்கத்துக்கு, வியூகம் வகுத்துக் கொடுக்க, 'கார்ப்பரேட்' நிறுவனம் தேவையா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: கருத்துக்கணிப்பு எடுப்பதற்கும், கள நிலவரங்கள் அறிவதற்கும், இன்றைய நவீன தொழில் நுட்பங்களைப் பயன்படுத்துவதற்கும்,- தேர்தல் நேரத்துக்கு மட்டும், எங்களுக்கு உதவ, ஒரு நிறுவனத்தை தேர்ந்தெடுத்துக் கொண்டோம். இவர்கள் வந்துவிட்டதால், ‘தொண்டர்கள் யாரும் வீட்டை விட்டு வெளியே வர வேண்டாம்' என்று, அறிவித்துவிடவில்லை. தொண்டர்களின் பணி வேறு, இவர்களின் பணி வேறு. இந்த நிறுவனத்தின் வெற்றி பின்னணியை அறிந்த காரணத்தால், பலரும் வயிற்றெரிச்சலில், இதுபோன்ற செய்திகளை பரப்பிவருகின்றனர்.
வீரபாண்டியார் குடும்பத்து பிள்ளைதான் வேட்பாளர்!
செய்தியாளர்: சேலம் வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்தோருக்கு, 'சீட்' கொடுக்காமல், குடும்பத்தையே தி.மு.க., புறக்கணித்துவிட்டது என, புலம்புகிறார்களே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: வீரபாண்டி ஆறுமுகம் குடும்பத்தை சேர்ந்த, டாக்டர் தருண் காசி விஸ்வநாதன்தான், வீரபாண்டி தொகுதியில் நிறுத்தப்பட்டுள்ளார். அவரை ஆதரித்து நான் பேசியபோது, சேலத்தில் எழுந்த கைதட்டலை நீங்கள் பார்க்கவில்லை போலும். வீரபாண்டியார் குடும்பத்துப் பிள்ளை என்றுதான், நான் அவரை அறிமுகம் செய்தேன்.
செய்தியாளர்: போலீஸ் வாகனங்களில், அ.தி.மு.கவினர் பணம் கடத்துகிறார்கள் என, தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்திருக்கிறீர்களே... இதற்கெல்லாம் நடவடிக்கை இருக்கா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: எங்களுக்கு கிடைத்த தகவல் உண்மை. தேர்தல் ஆணையத்தை, இன்று வரை நம்புகிறோம். நடவடிக்கை எடுக்காவிட்டால், எடுக்க வைப்போம்.
ஆளுங்கட்சியின் ‘ஏவலாள்கள்’ மீதுதான் புகார்!
செய்தியாளர்: எஸ்.பி., அந்தஸ்தில் துவங்கி, டி.ஜி.பி., வரையிலான அதிகாரிகளை மாற்ற வேண்டும் எனச் சொல்லி, தேர்தல் கமிஷன் தலைமையகத்தில் புகார் கொடுத்து இருக்கிறீர்களாமே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தமிழகத்தில் உள்ள அனைத்து அதிகாரிகளையும் மாற்றச் சொல்லி, நாங்கள் மனு கொடுக்கவில்லை. சிலர் மட்டும், ஆளும் கட்சியின் ஏவலாள்களாக செயல்படுகிறார்கள். அவர்களை பற்றி மட்டுமே, புகார் கொடுத்துள்ளோம். தமிழக நிர்வாகத்தில் இருக்கும் பெரும்பாலான அதிகாரிகள், விதிப்படி நேர்மையாக நடப்பவர்கள்தான் என்பதில், சந்தேகம் இல்லை.
செய்தியாளர்: ஒருவேளை, தி.மு.க.,ஆட்சிக்கு வந்தாலும், இதே அதிகாரிகளை வைத்துத்தான் நிர்வாகத்தை கொண்டு செல்வீர்களா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: ஒருவேளை அல்ல; தி.மு.க., தான் ஆட்சிக்கு வரப் போகிறது; சந்தேகம் வேண்டாம். அதே அதிகாரிகள், இன்று ஏதோ நிர்ப்பந்தம் காரணமாக, அப்படி நடந்திருக்கலாம். எங்கள் ஆட்சியில், நேர்மையுடன் செயல்பட வழிநடத்தப்படுவர். பழிவாங்கும் நோக்கம் எப்போதும் இருக்காது.
'ஜனநாயக ஊடகங்கள்தான் அம்பலப்படுத்த வேண்டும்!
செய்தியாளர்: ‘டிஜிட்டல்' பணப்பரிவர்த்தனை செய்து, மக்களை தங்களுக்கு ஓட்டுப்போட சொல்லுகின்றனர், அமைச்சர்கள் என, தேர்தல் கமிஷனில் புகார் கொடுத்துள்ளீர்கள். அதை தடுக்க முடியுமா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தடுக்கத்தான் வேண்டும். இத்தகைய திருட்டுத்தனத்தை, உங்களைப் போன்ற, ஜனநாயக ஊடகங்கள் அம்பலப்படுத்த வேண்டும்.
செய்தியாளர்: தி.மு.க. வேட்பாளர்கள் பணம் செலவழிக்க முடியாமல், பிரச்சாரத்தை முழு வேகத்தில் செய்ய முடியாமல் தடுமாறுகிறார்களாமே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: அப்படியா! உங்கள் கவலைக்கு நன்றி.
செய்தியாளர்: கருப்பர் கூட்டத்துக்கு பக்க பலமாக இருந்து செயல்பட்டதோடு, ஹிந்து மத கோட்பாடுகளை கொச்சைப்படுத்தி பேசி வந்த எழிலனுக்கு, ஆயிரம் விளக்கில், 'சீட்' கொடுத்திருக்கிறீர்களே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: எவரது நம்பிக்கையையும், தி.மு.க., கொச்சைப்படுத்தாது. அவரவர் வழிபாடு, அவரவர் உரிமை.
பா.ஜ.க.வின் வேட்பாளர் பஞ்சத்துக்கு உதாரணம்!
செய்தியாளர்: `சீட்' கிடைக்காத விரக்தியில், காலையில் பா.ஜ.க.வில் சேர்ந்து, மதியம் மதுரை வடக்கு தொகுதியில் போட்டியிட வாய்ப்பு பெற்றிருக்கிறாரே, மருத்துவர் சரவணன்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: பா.ஜ.க.வில் இருக்கும் வேட்பாளர் பஞ்சத்துக்கு, இது ஒரு உதாரணம்.
செய்தியாளர்: தேர்தல் முடிந்து, ஒரு மாதம் காத்திருந்த பின்தான், தேர்தல் முடிவுகள் தெரியும் சூழல் உருவாகி இருக்கிறது. இந்த ஒரு மாத காலத்துக்கு, ஓட்டுப் பெட்டிகளை முறைகேடு இல்லாமல் பாது காக்க வேண்டுமே என்ற அச்சம், தி.மு.கவிடம் இருக்கிறதா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: எங்கள் கட்சியினர் காவலுக்கு கெட்டிக்காரர்கள். உங்களது முன்னெச்சரிக்கைக்கு நன்றி.
செய்தியாளர்: கட்சியிலும், வெளியேயும் விமர்சனங்கள் இருந்த நிலையிலும், சேப்பாக்கம் - திருவல்லிக்கேணி தொகுதியில் போட்டியிட உதயநிதிக்கு, 'சீட்' கொடுக்கப்பட்டிருக்கிறதே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க., உறுப்பினருக்குத் தானே வாய்ப்பு தரப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ‘நீட்' தேர்வை இனி ரத்து செய்ய வாய்ப்பே இல்லை என்ற சூழலிலும், அதை ரத்து செய்வோம் என, உறுதிபட தெரிவிப்பது எப்படி?
தலைவர் மு.க.ஸ்டாலின்: வாய்ப்பே இல்லை என்று எப்படிச் சொல்ல முடியும்? இந்தியாவின் அரசியலமைப்பு சட்டமே, 100 முறைக்கு மேல் திருத்தப்பட்டுள்ளது என்பதை மனதில் வையுங்கள்.
செய்தியாளர்: ஏற்கனவே, 5.7 லட்சம் கோடி ரூபாய் கடன் சுமையால் தள்ளாடும் சூழலில், இலவச அறிவிப்புகளை, இரு திராவிட இயக்கங்களும் போட்டி போட்டு அள்ளி விடுவது சரியா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: கார்ப்பரேட் கம்பெனிகளுக்கு பல்லாயிரம் கோடி, பல லட்சம் கோடி வரிச்சலுகை தரும்போது கேட்பீர்களா, இந்தக் கேள்வியை? முடிந்தால் நிர்மலா சீதாராமனிடம் போய் கேளுங்கள். கடனாளி நாட்டில், தனி நபர் வாராக் கடன்களை ரத்து செய்வது தவறல்லவா என்று கேளுங்கள்.
செய்தியாளர்: தமிழக கஜானா நிறைய, என்ன மாதிரியான நடவடிக்கை எடுப்பீர்கள்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தேர்தல் அறிக்கையில், இது பற்றி தெளிவாக கூறப்பட்டிருக்கிறது. கடன்களில் இருந்து மீள, நிதி நிலைமையை பெருக்க, நிபுணர் குழு அமைக்கப்பட்டு, அதன்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்று, சொல்லப்பட்டு உள்ளது.
செய்தியாளர்: மது விலக்கு விஷயத்தில், உங்கள் நிலைப்பாடு என்ன?
தலைவர் மு.க.ஸ்டாலின்: காத்திருங்கள். தேர்தல் அறிக்கையை நன்றாகப் படித்துப்பாருங்கள்.
செய்தியாளர்: ஜெயலலிதா மரணத்தில் இருக்கும் மர்மத்தை வெளிக்கொண்டு வருவோம்' என, தி.மு.க.,சொல்வது அரசியலுக்காகவா?
தலைவர் மு.க.ஸ்டாலின்: இல்லை. ஓ.பி.எஸ்.,சொன்னதற்கு, அவர் பரிகாரம் காணவில்லை. இ.பி.எஸ். அமைத்த ஆணையத்தின் முடிவை, அவரே வாங்கித் தரவில்லை. இந்த மர்மத்தில் மறைந்துள்ளதை, தி.மு.க.அரசு வெளிக் கொண்டு வரும்.
செய்தியாளர்: ‘மிகச் சிறந்த பொய்யர்' என, முதல்வர் இ.பி.எஸ்., உங்களை விமர்சிக்கிறாரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: டேபிளுக்கு கீழே ஊர்ந்து போனாரே அவரா?
செய்தியாளர்: தி.மு.க. வேட்பாளர் பட்டியலில் ஏகப்பட்ட அதிருப்தி இருப்பதாக, பல இடங்களிலும், பலரும் போராட்டம் நடத்தி இருக்கின்றனரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: உங்கள் கனவில் அப்படி வந்ததா?
தேர்தலில் பணியாற்ற மண்டல பொறுப்புப் பணி!
செய்தியாளர்: கட்சியில் கனிமொழிக்கு முக்கியத்துவம் கொடுத்து, தென் மண்டல பொறுப்பாளர் பதவி கொடுக்கப்பட்டிருக்கிறதே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தங்கை கனிமொழி, மகளிரணி செயலராக உள்ளார். தற்போது, தேர்தலுக்கு பணியாற்ற, தென் மண்டல பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது.
செய்தியாளர்: ஹிந்துக்களுக்கு நாங்கள் எதிரி அல்ல என்று காட்டுவதற்காக, வேல் வாங்கினீர்கள்; அது தொடர்ந்து நடக்கவில்லையே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: திருத்தணியில் மக்கள் கிராம சபைக் கூட்டத்தில், அந்த நகரின் அடையாளமாக, வேல் தரப்பட்டது; வாங்கிக் கொண்டேன். வேலை வாங்காமல் இருந்தால் என்ன சொல்வீர்கள்?
செய்தியாளர்: முதல்வர் இ.பி.எஸ், தினகரன், கமல், மோடி, ராமதாஸ், சீமான் என எல்லாரும், தி.மு.க.,வுக்கு எதிராக வரிந்து கட்டி களம் இறங்கி இருப்பது ஏன்?
தலைவர் மு.க.ஸ்டாலின்: தி.மு.க., ஆட்சிக்கு வரப் போவதால்.
செய்தியாளர்: தி.மு.க.-காங்., ஊழல் கூட்டணி என, அமித்ஷாவும், மோடியும் விமர்சிக்கின்றனரே?
தலைவர் மு.க.ஸ்டாலின்: இ.பி.எஸ்.சையும், ஓ.பி.எஸ்.சையும் பக்கத்தில் வைத்துக்கொண்டு, இதை மோடியும் அமித்ஷாவும் சொல்ல, என்ன தகுதி இருக்கிறது? பா.ஜ.க. ஆட்சி மொத்தமாக, இரண்டு மிகப்பெரிய கம்பெனிகளுக்கு சாதகமான அவர்களது மறைமுக ஆட்சி என்பது, நாடறிந்த ரகசியம். இவர்களா ஊழலைப் பற்றி பேசுவது?
இவ்வாறு தலைவர் மு.க.ஸ்டாலின்அவர்கள் தினமலர் நாளிதழுக்கு பேட்டியளித்தார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!