M K Stalin
“தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை” : மு.க.ஸ்டாலின் பேச்சு!
“தி.மு.க.வை அழிக்க இதுவரை ஒருவர் பிறக்கவுமில்லை; இனியும் பிறக்கப் போவதில்லை. தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்கள்தான் இதுவரை அழிந்து போயிருக்கிறார்கள்; தி.மு.க.வை யாராலும் அழிக்க முடியாது" எனத் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்று (28-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, காங்கேயத்தில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
உங்களது சிறப்பான, உற்சாகமான வரவேற்புக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத் தேர்தலில், மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
காங்கேயம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் அருமைச் சகோதரர் மு.பெ.சாமிநாதன் அவர்கள், மிகவும் அமைதியானவர் – அடக்கமானவர். ஆனால் எந்தப் பணியைச் செய்வதாக இருந்தாலும் அதில் தனி முத்திரை பதிக்கும் ஒரு ஆற்றல்மிக்க செயல்வீரராக விளங்கிக் கொண்டிருப்பவர். கலைஞருடைய ஆட்சியில் நெடுஞ்சாலைத்துறை அமைச்சராக இருந்து பல சாலைகளைத் தமிழகத்திற்குக் கொண்டு வந்து நிறைவேற்றித் தந்திருப்பவர்.
அப்படிப்பட்ட சிறந்த செயல் வீரர்தான் இந்த காங்கேயம் தொகுதி வேட்பாளராகத் தேர்ந்தெடுத்து மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளராக, நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும்.
அதேபோல தாராபுரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கயல்விழி செல்வராஜ் அவர்கள், அவர் முதுகலைப் பட்டம் பெற்ற வேட்பாளர். பெண்களுடைய உரிமைக்காக, பெண்களுடைய சுயமரியாதைக்காக குரல் கொடுக்கும் சகோதரி கயல்விழி செல்வராஜ் அவர்களை, மகளிருக்கு முக்கியத்துவம் தரவேண்டும் என்று கருதி வேட்பாளராக தேர்வு செய்து நிறுத்தியுள்ளோம். அவர்களுக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அதேபோல பல்லடம் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் நிறுத்தப்பட்டிருக்கும் முத்து ரத்தினம் அவர்கள், இரண்டு முறை ஊராட்சித் தலைவராக இருந்து அந்த ஊராட்சி மக்களுடைய அன்பை ஆதரவைப் பெற்று மக்கள் பணியில் தன்னை ஒப்படைத்துக் கொண்டிருப்பவர். மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்ட துணைச் செயலாளராக இருந்து அந்தப் பணியையும் நிறைவேற்றிக் கொண்டிருப்பவர். அப்படிப்பட்ட சிறந்த வேட்பாளரைத்தான் இந்த பல்லடம் தொகுதிக்கு தேர்ந்தெடுத்து உங்களிடத்தில் ஒப்படைத்திருக்கிறோம். அவருக்கும் நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
முதலமைச்சர் பழனிசாமி தோல்வி பயத்தில் ஏதேதோ உளற ஆரம்பித்திருக்கிறார். வாய்க்கு வந்தபடி எல்லாம் பேசத் தொடங்கி இருக்கிறார்.
நேற்றைக்கு ஒரு கூட்டத்தில் தி.மு.க.வை வீழ்த்துவதற்கு என்னையே பலியிடத் தயார் என்று பழனிசாமி பேசியிருக்கிறார். சபாஷ்… அவரை நான் பாராட்டுகிறேன். ஏனென்றால் தேர்தலுக்கு முன்பே தோல்வியை ஒத்துக்கொள்கின்ற ஒரே பெரிய மனுஷன் பழனிசாமி தான். அது பாராட்டுக்குரியது தான்.
மிஸ்டர் பழனிச்சாமி அவர்களே… தி.மு.க.வை அழிக்கப் போகிறோம் என்று சொல்கிறீர்களே… தி.மு.க.வை அழிக்க நினைத்தவர்தான் அழிந்து போயிருக்கிறானே தவிர, தி.மு.க. அழிந்ததாக வரலாறு இல்லை. தி.மு.க.வை வீழ்த்தவும் முடியாது. அதை நினைத்துப் பார்க்கவும் முடியாது. தி.மு.க.வை வீழ்த்துவதற்கு இதுவரை ஒருவன் பிறக்கவுமில்லை. இனியும் ஒருவன் பிறக்கவே முடியாது.
தி.மு.க. என்பது தனிப்பட்ட ஸ்டாலின் அல்ல, சென்னை முதல் குமரி வரை இருக்கும் லட்சோப லட்ச ஸ்டாலின்களைக் கொண்ட இயக்கம்தான் இந்த தி.மு.க. என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது. கலைஞருக்கு நான் மட்டும் மகன் அல்ல, இந்த இயக்கத்தின் ஒவ்வொரு உடன்பிறப்புகளும் கலைஞருடைய பிள்ளைகள்தான் என்பதை மறந்து விடக்கூடாது.
பேரறிஞர் அண்ணா காலத்தில் இருந்து பார்த்துக் கொண்டிருக்கிறோம். பல சுள்ளான்கள், பல அயோக்கியர்கள் தி.மு.க.வை வீழ்த்த போகிறோம் என்று கிளம்பி இருக்கிறார்கள். எனவே பழனிசாமியின் இந்த வசனத்தை 50 வருடங்களாக கேட்டுக் கேட்டுப் புளித்துவிட்டது. அவர்கள் ஆசையெல்லாம் நப்பாசைதான். அரைக்க அரைக்கத்தான் சந்தனம் மணம் வரும், வெட்ட வெட்டத்தான் மரம் தழைக்கும். கழகத்திற்கு எதிர்ப்பு வளர வளரத்தான் கழகம் வளரும். இந்த அரசியல் உண்மையை பழனிசாமி அவர்களே, நீங்கள் முதலில் புரிந்து கொள்ளுங்கள்.
மத்தியிலும் நம்முடைய ஆட்சி இல்லை. மாநிலத்திலும் ஆளுங்கட்சி இல்லை. எதிர்க்கட்சியாக இருக்கும் ஒரு கட்சியை வீழ்த்த இத்தனை பேர் கூடி இருக்கிறார்கள் என்றால் நம்முடைய சக்தி என்னவென்று பாருங்கள்.
கலைஞர் இல்லை அதனால் கட்சியை சுலபமாக வீழ்த்தி விடலாம் என்று நினைத்துவிட்டார்கள். கலைஞர் மறைந்துவிட்டாலும் கலைஞரால் உருவாக்கப்பட்டிருக்கும் உடன்பிறப்புகள் இருக்கிறார்கள். அதை மறந்துவிடாதீர்கள். கலைஞர் மறைந்துவிட்டாலும் எங்களைப் போன்ற உள்ளங்களில் கலைஞர் இன்றைக்கும் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அதை மறந்து விடாதீர்கள்.
இந்தக் களத்தில் நிற்பது கலைஞர்தான். இந்தக் களத்தில் நிற்பது உதயசூரியன்தான். 234 தொகுதிகளிலும் நிற்பது இந்த ஸ்டாலின்தான். பணியாற்றுபவர்கள் கழகத் தொண்டர்கள். அதை மறந்துவிடாதீர்கள். இந்த பாசம், நேசம், ஒற்றுமையினால்தான் ஒரு குடும்ப உணர்வோடு நாம் இருக்கிறோம்.
1949-ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 17-ஆம் தேதி கொட்டுகின்ற மழையில் ராபின்சன் பூங்காவில் பேரறிஞர் அண்ணா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட இயக்கம்தான் திராவிட முன்னேற்றக் கழகம். அவ்வாறு தொடங்கி வைக்கப்பட்ட போது அந்தக் கூட்டத்திற்கு தலைமை தாங்கியவர் பெத்தாம்பாளையம் பழனிசாமி என்பது வரலாறு. அப்படிப்பட்ட பெத்தாம்பாளையம் பழனிசாமி அவர்கள் தலைமையில் அண்ணா அவர்களால் தொடங்கி வைக்கப்பட்ட தி.மு.க.வை வீழ்த்த உங்களைப் போன்ற எத்தனை தடைகள் வந்தாலும், இந்த இயக்கத்தை எவனும் தொட்டுக் கூடப் பார்க்க முடியாது என்பதை நான் அழுத்தந் திருத்தமாகக் குறிப்பிட விரும்புகிறேன்.
பழனிசாமி அவர்களே… மன்னிக்க வேண்டும். மிஸ்டர் பழனிசாமி அவர்களே… மாண்புமிகு முதலமைச்சர் பழனிசாமி அவர்களே… தி.மு.க.வை வீழ்த்த உங்கள் உயிரைத்தர வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் நீண்ட காலம் வாழுங்கள். விரைவில் ஆட்சிப் பொறுப்பேற்று தி.மு.க. ஆளுகின்ற காட்சியை நீங்கள் பார்க்க வேண்டும். அதைத்தான் இந்த காங்கேயம் கூட்டத்தின் மூலமாக மிஸ்டர் பழனிசாமி அவர்களுக்கு நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
பழனிசாமி அவர்கள் முதலமைச்சர் மட்டுமல்ல, பொதுப்பணித்துறை - நெடுஞ்சாலைத் துறையும் அவர் கையில்தான் இருக்கிறது. அதைப் பயன்படுத்தி எவ்வளவு அக்கிரமம் செய்து கொண்டிருக்கிறார்? எவ்வளவு கொள்ளை அடித்துக் கொண்டிருக்கிறார்? என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும்.
தி.மு.க. ஆட்சிக்கு வந்தவுடன் நீர்ப்பாசனத்துறையைத் தனியாகப் பிரித்து, தனி அமைச்சகத்தை உருவாக்கப்போகிறோம். அதேபோல, நீர் மேலாண்மை ஆணையம் அமைக்கப்போகிறோம். முதலமைச்சருடைய நேரடிக் கண்காணிப்பில் 10,000 கோடியில் ஏரி, குளங்கள் பாதுகாப்பு சிறப்பு திட்டம் செயல்படுத்தப்படும். 2,000 கோடி ரூபாயில் 200 தடுப்பணைகள் கட்டப்படும். முதலமைச்சர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட காவிரி - குண்டாறு இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். முதலமைச்சர் கலைஞரால் தொடங்கி வைக்கப்பட்ட தாமிரபரணி – கருமேனி ஆறு - நம்பியாறு இணைப்புத் திட்டம் விரைந்து செயல்படுத்தப்படும். நெல்லை, தூத்துக்குடி, விருதுநகரில் 40,000 ஏக்கர் பயனடைய கன்னிகா மதகு கால்வாய் சீரமைக்கப்படும். காவிரி - வைகை - தாமிரபரணி ஆற்றின் கரைகள் மேம்படுத்தப்படும். நீர்நிலைகளில் கட்டப்பட்ட தரைப்பாலங்கள் உயர்மட்ட பாலங்களாக ஆக்கப்படும். மழைக்கால சிறப்பு கட்டுப்பாட்டு மையங்கள் 24 மணி நேரமும் செயல்படும் வகையில் அமைக்கப்படும். தமிழ்நாடு நிலத்தடி நீர் பாதுகாப்பு சட்டம் புதிதாக நிறைவேற்றப்படும். நீர்வரத்தை உறுதிசெய்ய நீரோடை வழித்தடங்கள் உருவாக்கப்படும். தமிழக புவியியல் அடிப்படையில் நீர் பாதைகள் கணக்கிடப்பட்டு அவற்றை மேலாண்மை செய்வதற்கு அரசு முயற்சிகள் மேற்கொள்ளும். அத்திக்கடவு – அவினாசித் திட்டம் முழுமையாக நிறைவேற்றப்படும். இந்திய நதிகளை இணைக்க மத்திய அரசை வலியுறுத்துவோம். தென்னக நதிகளை இணைப்போம்.
உங்களால் அமையவிருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசு இவை அனைத்தையும் நிறைவேற்றி தரும் என்ற உறுதியை நான் தெரிவித்துக் கொள்ள விரும்புகிறேன்.
அதனால்தான் நான் தொடர்ந்து சொல்லிக் கொண்டிருக்கிறேன். 234 இடங்களிலும் நாம்தான் வெற்றி பெறப்போகிறோம். அதில் எந்த மாற்றமும் இல்லை. ஏற்கனவே தேர்தல் தேதி அறிவித்த போது 200 இடங்களுக்கு மேல் வெற்றி பெறுவோம் என்று சொன்னேன். அதற்குப் பிறகு கருத்துக்கணிப்புகள் எல்லாவற்றிலும் தி.மு.க. தான் ஆட்சிக்கு வரப்போகிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.
கலைஞரைப் பொறுத்தவரையில் கருத்துக்கணிப்புகள் சாதகமாக வந்தாலும் பாதகமாக வந்தாலும் அதை நாம் ஏற்றுக்கொள்ள வேண்டிய அவசியமில்லை. ஆனால் நாம் நம்முடைய பணியைச் செய்ய வேண்டும். அதில் நாம் ஏமாந்து விடக்கூடாது என்று அடிக்கடி கலைஞர் அவர்கள் நமக்கு எச்சரிக்கை செய்வார்கள். நானும் உங்களிடத்தில் அதைத்தான் சொல்கிறேன். கருத்துக்கணிப்புகள் சொல்லிவிட்டது என்று நாம் ஓய்வெடுத்துவிட கூடாது. நாம் கடைசி வரையில், கடைசி வாக்கைக் கொண்டு வந்து வாக்குச்சாவடியில் பதியவைக்கும் வரையில் நம்முடைய பணி ஓயாது என்ற நிலையில், நீங்கள் பணியாற்ற வேண்டும். அதுதான் முக்கியம். அந்தப் பணியினை செய்து விட்டீர்கள் என்றால் உறுதியாக ஓரிடத்தில் கூட பா.ஜ.க.வும் – அ.தி.மு.க.வும் வெற்றி பெறாது.
என்ன குட்டிக்கரணம் போட்டாலும் பாஜக கட்டாயம் வரப்போவதில்லை. அவர்கள் வாஷ் அவுட். அதனை கடந்த நாடாளுமன்றத் தேர்தலிலேயே நாம் பார்த்தோம். அதே நேரத்தில் ஒரு அ.தி.மு.க. கூட வெற்றி பெற கூடாது. ஏனென்றால் ஒரு இடத்தில் அ.தி.மு.க. வெற்றி பெற்றாலும் அவர் அ.தி.மு.க. எம்.எல்.ஏ.வாக இருக்க மாட்டார். பாஜக எம்.எல்.ஏ.வாக தான் இருப்பார்.
அதற்கு உதாரணம் கடந்த நாடாளுமன்ற தேர்தலில் அதிமுக சார்பில் வெற்றி பெற்ற ஒரே ஒரு எம்.பி.யான ஓ.பி.எஸ் மகன்தான். அவர் வெற்றி பெற்று அ.தி.மு.க. எம்.பி.யாக அல்லாமல் பாஜக எம்.பி.யாகத்தான் வேலை செய்து கொண்டிருக்கிறார். எப்போதும் ஒரு எம்.பி.யின் லெட்டர் பேடில் அவருடைய கட்சித் தலைவரின் புகைப்படம்தான் இருக்கும். ஆனால் இவருடைய லெட்டர் பேடில் மோடியின் படத்தைப் போட்டு வைத்திருக்கிறார்.
எனவேதான் அவர்களுக்குச் சுத்தமாக முடிவு கட்ட வேண்டும். அதற்கு நீங்கள் தயாராக இருக்க வேண்டும்.
திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன திட்டங்களை - என்னென்ன சாதனைகளைச் செய்யப்போகிறது என்று தேர்தல் வாக்குறுதியாக 505 வாக்குறுதிகளைச் சொல்லி இருக்கிறோம். அதில் சுருக்கமாகத் தலைப்புச் செய்தியாக முக்கியமான சிலவற்றை மட்டும் நினைவுபடுத்துகிறேன்.
அதில் விவசாயிகளின் வாழ்க்கை தரம் உயர, 3 விவசாய சட்டங்களைத் திரும்பப் பெற, நாம் ஆட்சிக்கு வந்தவுடன் முதல் சட்டமன்ற கூட்டத்திலேயே தீர்மானம் நிறைவேற்றப்படும். வேளாண் துறைக்கு தனி பட்ஜெட் உருவாக்கப்படும். நெல் குவிண்டாலுக்கு ரூ. 2,500 கரும்பு டன்னுக்கு ரூ. 4,000 வழங்கப்படும். அனைத்து உணவுப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச ஆதார விலை. இயற்கை வேளாண்மையை ஊக்கப்படுத்த வேளாண் துறையில் தனிப்பிரிவு. நம்மாழ்வார் பெயரில் இயற்கை வேளாண் ஆய்வு மையம் உருவாக்கப்படும். மின் இணைப்பு கோரி விண்ணப்பித்த விவசாயிகள் அனைவருக்கும் தடையின்றி இலவச மும்முனை மின் இணைப்பு வழங்கப்படும். விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்ற விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு வங்கிகளில் 5 சவரனுக்கு உட்பட்ட நகைக் கடன் தள்ளுபடி செய்யப்படும். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும்.
மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம், அரசு வேலை வாய்ப்புகளில் இருக்கும் 30 சதவிகித இடஒதுக்கீட்டை 40 சதவிகிதமாக உயர்த்தி வழங்குதல், கூட்டுறவு வங்கிகளில் பெற்ற மகளிர் சுயஉதவிக் குழு கடன் தள்ளுபடி செய்யப்படும், சிறப்பு தாய்,சேய் நலன் திட்டம் மூலமாக கருவுற்ற பெண்களுக்கு வீடு தேடி வசதிகள். விலைவாசியை குறைக்க, பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் குறைக்கப்படும், டீசல் லிட்டருக்கு 4 ரூபாய் குறைக்கப்படும், சிலிண்டர் ஒன்றுக்கு 100 ரூபாய் மானியம் வழங்கப்படும், பால் லிட்டருக்கு 3 ரூபாய் குறைக்கப்படும், மாணவர்கள் நலனை அடிப்படையாக வைத்து அவர்கள் கல்விக்காக வங்கிகளில் வாங்கியிருக்கும் கடன் ரத்து செய்யப்படும், அரசு அலுவலகங்களில் காலியாக இருக்கும் பணியிடங்களில் 3 லட்சத்து 50 ஆயிரம் தமிழக இளைஞர்களே நியமிக்கப்படுவார்கள், நீர்நிலைகள், இயற்கை வளங்களை பாதுகாக்கவும் கண்காணிக்கவும் 75,000 இளைஞர்கள் அந்த பணிகளில் அமர்த்தப்படுவார்கள், சாலைகள், பாலங்கள் உள்ளிட்ட பொது சொத்துக்களைப் பாதுகாக்கும் பணிகளில் 75,000 சாலை பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள், தமிழகம் முழுவதும் அறநிலையங்கள் பாதுகாப்பில் 25,000 இளைஞர்கள் திருக்கோயில் பணியாளர்களாக நியமிக்கப்படுவார்கள், மக்கள் நலப் பணியாளர்களாக 25,000 மகளிர் நியமிக்கப்படுவார்கள், ஒவ்வொரு ஆண்டும் 10 லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படும்.
கொரேனா காலத்தில் நிவாரணத் தொகையாக 5,000 ரூபாய் வழங்க வேண்டும் என்று வலியுறுத்தினேன். ஆனால் அவர்கள் வெறும் 1,000 ரூபாய் வழங்கினார்கள். மீதமிருக்கும் 4,000 ரூபாயை நாம் ஆட்சிப் பொறுப்பேற்று ஜூன் 3-ஆம் தேதி, தலைவர் கலைஞர் பிறந்த நாளன்று அனைத்துக் குடும்ப அட்டைதாரர்களுக்கும் வழங்கப்படும், மாதம் ஒருமுறை மின் கட்டணம் செலுத்தும் முறை அமல்படுத்தப்படும். இப்போது பொதுவான வாக்குறுதிகளில் சிலவற்றை நான் இங்கு பட்டியல் போட்டு சொன்னேன்.
மேலும் இந்த 3 தொகுதிகளுக்கான வாக்குறுதிகள், தாராபுரம், காங்கேயம் அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். பல்லடத்தில் குளிர்பதனக் கிடங்கு, கோழிகள் ஆராய்ச்சி மையம். பல்லடம் மற்றும் காங்கேயத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனைகள் கட்டப்படும். காங்கேயம் காளை ஆய்வு மையம் மற்றும் காளைச் சந்தை காங்கேயத்தில் அமைக்கப்படும். பல்லடம் வட்டத்தில் உள்ள குளங்களை நிரப்புவதற்காக நொய்யல் ஆற்றிலிருந்து உபரி நீர் கொண்டுவருவதற்கு ஆய்வு மேற்கொள்ளப்படும். காங்கேயம், வெள்ளக்கோயில் மற்றும் பல்லடத்தில் சுற்றுச்சாலை அமைக்கப்படும். வெள்ளக்கோயில், நாகமநாயக்கன்பட்டியில் உள்ள அமராவதி மற்றும் பரம்பிக்குளம் ஆழியாறு உபரி நீரை வட்டமலைக்கரை அணைக்குக் கொண்டுவரப்படும். மாவட்டம் முழுவதும் நீர்வழிப் பாதைகளில் தடுப்பணைகள் கட்டப்படும். ஆனைமலை - நல்லாறு அணைத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். இவை எல்லாம் இந்தப் பகுதிக்கான வாக்குறுதிகள்.
நானும் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்கு கேட்க வந்திருக்கிறேன். முதலமைச்சர் வேட்பாளர். இவர்கள் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். அதனால் இந்த மூன்று பேரையும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும். ஒன்றை மட்டும் மறந்து விடாதீர்கள். இந்த தேர்தல் என்பது நாங்கள் வெற்றி பெற வேண்டும் - ஆட்சி மாற்றம் ஏற்பட வேண்டும் என்பதற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல.
தமிழ்நாட்டில் நீட்டை கொண்டு வந்து திணித்து விட்டார்கள். இந்தியை நுழைத்துக் கொண்டிருக்கிறார்கள். சமஸ்கிருதத்திற்கு வாசலை திறந்து விட்டார்கள். நம்முடைய தமிழ் மொழிக்குப் பெரிய ஆபத்தை உருவாக்கிக் கொண்டிருக்கிறார்கள். நம்முடைய மாநில உரிமைகள் பறிபோய்க் கொண்டிருக்கின்றன. நம்முடைய சுயமரியாதையை இழந்து கொண்டிருக்கிறோம்.
அப்படிப்பட்ட சுயமரியாதையைக் காப்பாற்றுவதற்காக நாம் தயாராக இருக்க வேண்டும். இது தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் பிறந்த மண். இது திராவிட மண். இது சுயமரியாதை மண்.
எனவே நம்முடைய தமிழகத்தை மீட்க, நீங்கள் உதயசூரியன் சின்னத்திற்கு வாக்களித்து, மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
கோபிச்செட்டிப்பாளையத்தில் கழகத் தலைவர் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்றப் பொதுத்தேர்தலில் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்பதற்காக உங்களைத் தேடி நாடி வந்திருக்கிறேன்.
அந்தியூர் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஏ.ஜி.வெங்கடாசலம், மூன்று முறை பேரூராட்சியின் தலைவராக இருந்து பணியாற்றி இருப்பவர். இப்போது ஒன்றியக் கழகத்தின் செயலாளராக கடமையாற்றி கொண்டிருப்பவர். அவரைத்தான் வேட்பாளராக அந்தியூர் தொகுதிக்கு மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளராக நிறுத்தியிருக்கிறோம். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியை தேடித் தரவேண்டும்.
அதேபோல கோபிச்செட்டிபாளையம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் ஜி.வி.மணிமாறன் அவர்களை, யாரை எதிர்த்து நிற்க வைத்திருக்கிறோம் என்பதைப் பாருங்கள். மலையை எதிர்த்து ஒரு மடுவை நிற்க வைத்திருக்கிறோம். அமைச்சரை எதிர்த்து ஒரு எளியவரை நிற்க வைத்திருக்கிறோம். மணிமாறன் யார் என்பது உங்களுக்கு தெரியும். மறைந்த முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் பெரியவர் வெங்கிடு அவர்களுடைய அருமை மகன். ஒரு எளிமையான தொண்டர். டீக்கடை வைத்து தன்னுடைய வாழ்க்கையை நடத்திக் கொண்டிருப்பவர். எனவே அப்படிப்பட்ட ஒரு ஏழை எளியவரை தேர்ந்தெடுத்து, வேட்பாளராக கோபிசெட்டிபாளையம் தொகுதியில் நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
அதேபோல பவானி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் கே.பி.துரைராஜ் அவர்கள், ஒன்றியக் குழு உறுப்பினராக மக்களுக்கு பணியாற்றிக் கொண்டிருப்பவர். ஒன்றியக் கழகத்தின் செயலாளர். எனவே அப்படிப்பட்ட ஒரு எளிய தொண்டருக்குத்தான் அந்த வாய்ப்பு வழங்கப்பட்டிருக்கிறது. எனவே துரைராஜ் அவர்களை வெற்றி பெற வைக்க நீங்களெல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
அதேபோல பவானிசாகர் தொகுதியில் போட்டியிடும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் சுந்தரம் அவர்கள், அந்த கட்சியின் மாநிலக் குழு உறுப்பினராக இருக்கிறார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர். எனவே அவரை நீங்களெல்லாம் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க, கதிர் அரிவாள் சின்னத்தில் வாக்களிக்க வேண்டும்.
உங்கள் மாவட்டத்தில் அமைச்சர் ஒருவர் இருக்கிறார். அவர் ஒரு மூத்த அமைச்சர். அவர்தான் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அவர் அமைச்சர் தானா? அல்லது அமைச்சர் மாதிரி ஒருவரா? என்று யாருக்கும் புரியவில்லை. அதற்கு பல உதாரணங்கள் இருக்கின்றன. இதே செங்கோட்டையனிடம் கைகட்டி நின்றவர் பழனிசாமி. இன்றைக்கு பழனிசாமியினிடத்தில் கைகட்டி நிற்கிறார் செங்கோட்டையன். எனவே, பழனிசாமி இப்போது செங்கோட்டையனைப் பழி வாங்கிக் கொண்டிருக்கிறார்.
அதற்கு ஆதாரங்கள், பத்தாம் வகுப்பு தேர்வு ரத்தாகாது என்று சொன்னார் செங்கோட்டையன். அடுத்தநாளே ரத்து செய்தார் பழனிசாமி. பள்ளிகள் திறக்கப்படாது என்று சொன்னார் செங்கோட்டையன். அடுத்தநாளே முதலமைச்சர் பழனிசாமி பள்ளிகள் திறக்கப்படும் என்று சொன்னார். பள்ளிக் கல்வித் துறையில் இருக்கும் அதிகாரிகளே அமைச்சர் செங்கோட்டையனுக்கு மதிப்பும் மரியாதையும் கொடுப்பதில்லை. அதிகாரிகள் அறிக்கை கொடுப்பார்கள். அது அமைச்சருக்கே தெரியாது. அது போல தன் துறையில் எதையும் உருப்படியாக செய்யாதவர் தான் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன்.
நீட் தேர்வு, புதிய கல்வி கொள்கை என்று கல்வித்துறையை ஒரு காவித் துறையாக மத்தியில் இருக்கும் பா.ஜ.க. மாற்றிக் கொண்டிருக்கிறது. அதைக் கைகட்டி, வாய் பொத்தி வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறார் அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன்.
ஆசிரியர் தகுதித் தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்குப் பணி வழங்காதவர்தான் இந்தப் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன். அதனால்தான் தி.மு.க. தேர்தல் அறிக்கையில் நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அனைவருக்கும் பணி வழங்கப்படும் என்று அறிவித்து இருக்கிறோம். ஆசிரியர்கள் பணியிட மாறுதல் கலந்தாய்வு மூலம் நடைபெற வேண்டும். ஆனால் அந்த முறையைத் தூக்கி விட்டு பணத்தை வைத்து பணிமாறுதல் வழங்கிக் கொண்டிருக்கிறார் பள்ளிக் கல்வித் துறை அமைச்சராக இருக்கும் செங்கோட்டையன். சரி, தன்னுடைய துறையில்தான் எதுவும் செய்யவில்லை. இந்தத் தொகுதிக்காவது எதாவது செய்திருக்கிறாரா? அதுவும் இல்லை.
உதாரணமாக, கடந்த 15 வருடங்களாக ஒரே வாக்குறுதியை திரும்பத் திரும்ப அமைச்சர் செங்கோட்டையன் சொல்லிக் கொண்டிருக்கிறார். அதாவது நகரின் மையப் பகுதியில் உள்ள நகராட்சி குப்பைக் கிடங்கை வேறு இடத்திற்கு மாற்றுவதாக ஒவ்வொரு தேர்தலின் போதும் கூறிக் கொண்டிருக்கிறார். அவ்வாறு கூறி வாக்கை மட்டும் வாங்கிவிடுகிறார். இதுவரையில் அவர் அந்த குப்பைக்கிடங்கை மாற்ற எதாவது முயற்சி எடுத்திருக்கிறாரா?
கீரிப்பள்ளம் ஓடையில் கான்கிரீட் தளம் அமைக்கப்போவதாக பல ஆண்டுகளாக கூறி வரும் அமைச்சர், தற்போது பெயரளவிற்கு தொடங்கி வைத்துள்ளார். அந்த பணியும் தொடங்கிய நிலையில் கிடப்பில் போடப்பட்டுள்ளது. ஈரோட்டில் இருந்து கோபி வழியாக மைசூர் செல்லும் சாலையை, நான்கு வழிச்சாலையாக மாற்றப்போவதாக பத்து ஆண்டுகளாக சொல்லி வருகிறார். அதுவும் செய்யவில்லை. கோபி பகுதிக்கு புதிய குடிநீர் திட்டத்திற்காக 52 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு அடிக்கல் மட்டும் நாட்டப்பட்டது. வேறு பணிகள் எதுவும் நடைபெறவில்லை.
கோபியின் மையப்பகுதியில் இடிந்துவிழும் நிலையில் உள்ள தினசரி மார்க்கெட்டை புதுப்பிக்கும் பணி இன்னமும் தொடங்கவில்லை.
திட்டமலையில் அரசு கலைக் கல்லூரி கொண்டுவருவதாகச் சொன்னார். செய்தாரா?
டி.என்.பாளையத்தில் அரசு தொழிற்பயிற்சி மையம் அமைப்பேன் என்று சொன்னார். செய்தாரா?
கொளப்பலூரில் டெக்ஸ்டைல் பார்க் கொண்டு வருவேன் என்று சொன்னார். கொண்டு வந்தாரா?
குண்டேரிபள்ளம் அணை இன்று வரை சுமார் பத்து ஆண்டுகளாக தூர்வாரப்படவில்லை. அணையின் முன்பகுதியில் சுற்றுலா பயணிகள் கண்டு களிக்கும் வகையில், ரூபாய் 10 கோடி செலவில் வளர்ச்சி பணிகளுக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, அந்தப் பணிகள் துவங்கப்படவில்லை.
இதுதான் செங்கோட்டையனுடைய லட்சணம். அவருக்கும் இந்த ஆட்சிக்கும் பாடம் புகட்ட வேண்டும் என்றால் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நீங்களெல்லாம் ஒரு முடிவு எடுக்க வேண்டும். அவ்வாறு முடிவெடுத்து நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வைக்க வேண்டும்.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன செய்யப் போகிறோம் என்பதை தேர்தல் அறிக்கையில் சொல்லி இருக்கிறோம். தேர்தல் அறிக்கை என்பது பெயருக்கு சொல்லிவிட்டுப் போவதில்லை. தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் தேர்தல் அறிக்கை வெளியிடும் போது திருக்குறள் போன்ற இரண்டு வரியைச் சொல்வார், ‘சொன்னதைச் செய்வோம், செய்வதைத்தான் சொல்வோம்‘.
எனவே கலைஞரின் மகனாக சொல்கிறேன். ‘சொன்னதைச் செய்வேன், செய்வதைத்தான் சொல்வேன்‘. இதுதான் ஸ்டாலின்.
1957-ஆம் ஆண்டிலிருந்து நாம் தேர்தல் களத்தில் நிற்கிறோம். நாம் தேர்தல் களத்திற்கு வந்ததிலிருந்தே நாம் ஆட்சிக்கு வந்தால் என்ன செய்யவிருக்கிறோம் என்பதை பகிரங்கமாக மக்களிடத்தில் சொல்லிவிட்டுத்தான் தேர்தலில் நிற்போம்.
அதே அடிப்படையில் தான் இப்போதும் டி.ஆர்.பாலு அவர்கள் தலைமையில் தேர்தல் அறிக்கை தயாரிப்பதற்கு ஒரு குழு அமைக்கப்பட்டது. அந்த குழுவில் நம்முடைய துணைப் பொதுச்செயலாளர் அந்தியூர் செல்வராஜ், சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் உள்ளிட்ட கழக முன்னோடிகள் இடம் பெற்றிருந்தனர். இவ்வாறு கழகத்தில் இருக்கும் முன்னோடிகள் பலர் இடம் பெற்று தமிழ்நாடு முழுவதும் சுற்றுப்பயணம் செய்து, பலதரப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்கள் கோரிக்கையைக் கேட்டு, அந்தக் கோரிக்கையை நிறைவேற்ற எங்கிருந்து நிதி ஆதாரம் என்பதை ஆய்வு செய்து, அதற்குப் பிறகு 505 உறுதிமொழிகள் வழங்கப்பட்டிருக்கின்றன.
அதில் சிலவற்றை மட்டும் நான் சொல்ல விரும்புகிறேன். இந்தப் பகுதி நெசவாளர் பெருமக்கள் அதிகம் வாழும் பகுதி என்பதால் அத்துறைக்காக நாம் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன பணிகளை செய்யப் போகிறோம் என்பதை தலைப்புச் செய்தியாக வரிசைப்படுத்த விரும்புகிறேன்.
நெசவாளர்களுக்கென தனியாக கூட்டுறவு வங்கி தொடங்கப்படும். இலவச வேட்டி, சேலை நெய்தலில் நெசவாளர்களுக்கு முன்னுரிமை தரப்படும். பள்ளிச்சீருடைக்கான துணிகள் உற்பத்தி நெசவாளர்களிடமே ஒப்படைக்கப்படும். நீங்கள் நூல் விலை ஏற்றத்தால் எவ்வளவு கஷ்டத்திற்கு ஆளாகி இருக்கிறீர்கள் என்பதை நான் நன்றாக அறிவேன். அதனால் தான் அரசே நூல் கொள்முதல் நிலையங்கள் அமைத்து குறைந்த விலையில் நெசவாளர்களுக்கு நூல் கிடைக்க வழிவகை செய்யப்படும் என அறிவித்துள்ளோம். கைத்தறித் துணி வகைகளின் பட்டியல் மறுசீராய்வு செய்யப்படும். ஜவுளி ஆணையம் அமைக்கப்படும்.
பட்டுநூல் முறுக்காலை அமைக்க மானியத்துடன் கடனுதவி வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்க்கு வழங்கப்பட்டு வரும் இலவச மின்சாரம் 300 யூனிட்டாக ஆக்கப்படும். விசைத்தறி நெசவாளர்க்கு வழங்கப்படும் இலவச மின்சாரம் 1000 யூனிட்டாக ஆக்கப்படும். நெசவாளர் வீடு கட்ட மானியம் என்பது 4 லட்சமாக உயர்த்தப்படும். நெசவாளர்கள் கடனுக்கான வட்டி 8 சதவிகிதமாக குறைக்கப்படும். நெசவாளர் பாதுகாப்புத் தொகை 2 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த 4 தொகுதிகளுக்கான வாக்குறுதிகள், அந்தியூரில் காவிரிக் கூட்டுக் குடிநீர் திட்டம்; பட்லூரில் புதிய அணை. அந்தியூரில் அரசு கலைக் கல்லூரி, தொழிற்பயிற்சி நிலையம். பவானியில் புறவழிச் சாலை அமைக்கப்படும். கோபிசெட்டிபாளையம் அரசு மருத்துவமனை நவீனப்படுத்தப்படும். தாளவாடி, சத்தியமங்கலம் (கடம்பூர்), அந்தியூர் (பர்கூர்) ஆகியன மலைப்பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டு அங்கு பணியாற்றும் ஆசிரியர் மற்றும் அரசு ஊழியர்களுக்கு மலைப்பணி படிகள் வழங்கப்படும். சத்தியமங்கலத்தில் நறுமணத் தொழிற்சாலை அமைக்கப்படும். அந்தியூர், பவானி பகுதிகளில் விவசாய நிலங்களுக்கு நீர்ப்பாசன வசதிகளைப் பெருக்குவதற்காகத் தோணிமடுவு பாசனத் திட்டம் நிறைவேற்றப்பட ஆவன செய்யப்படும். விசைத்தறித் தொழிலில் ஏற்பட்டுள்ள தேக்க நிலையைச் சரிசெய்ய மத்திய அரசுடன் பேசி தக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
உள்ளாட்சிகளில் தனியாக வசூலிக்கப்படும் குப்பை வரி நீக்கப்படும். மணியாச்சி, வரட்டுப்பள்ளம், வழுக்குப்பாறை ஆறுகளை இணைத்து அந்தியூர், அம்மாபேட்டை ஒன்றியங்களில் நீர்ப்பாசன வசதிகள் பெருக்கப்படும். இப்போது ஐந்து வருடத்திற்கு நாம் செய்ய வேண்டிய பணிகளில் சிலவற்றை சொன்னேன். நான் கடந்த 7ஆம் தேதி திருச்சியில் நடைபெற்ற பெரிய பொதுக்கூட்டத்தில், ‘ஸ்டாலினின் ஏழு உறுதிமொழிகள்’ என்ற தலைப்பில் பத்து வருடங்களுக்கான தொலைநோக்கு பார்வையோடு சில திட்டங்களை அறிவித்தேன்.
இந்த ஐந்து வருட திட்டங்களையும், பத்து வருட தொலைநோக்கு திட்டங்களையும் நிறைவேற்ற வேண்டும். எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களாக நிறுத்தப்பட்டிருக்கும் இந்த நான்கு வேட்பாளர்களையும் உதயசூரியன் மற்றும் கூட்டணிக் கட்சியின் சின்னங்களில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
இவர்கள் நான்கு பேரும் வெற்றி பெற்றால்தான் நான் முதலமைச்சர். எனவே அந்த வெற்றியை நீங்கள் தேடித் தரவேண்டும்.
தமிழர்களின் உரிமைகள் இன்றைக்கு பாழாகி, படுகுழிக்கு, பாதாளத்திற்கு போய்க்கொண்டிருக்கிறது. மாநில உரிமைகள் பறி போய்விட்டன.
மத்திய அரசு மதவெறியைக் கொண்டு வந்து திணித்துக் கொண்டிருக்கிறது. இந்தியைத் திணித்து தமிழ்மொழியை எப்படியாவது அழிக்க வேண்டும் என்ற முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறது.
மதவெறி பிடித்திருக்கும் மத்திய அரசுக்கு - மோடி அரசுக்கு நான் சொல்ல விரும்புவது, இது திராவிட மண். மறந்துவிடாதீர்கள். தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் பிறந்த மண் இந்த மண். உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் இங்கு பலிக்காது.
எனவே, மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணியின் வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று உங்கள் அனைவரையும் அன்போடு கேட்டு, விடை பெறுகிறேன். நன்றி. வணக்கம்.
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!