M K Stalin
“பொய் விளம்பர பழனிசாமியின் முகத்திரையை மக்கள் தேர்தலில் கிழித்தெறிவார்கள்” - மு.க.ஸ்டாலின் விளாசல்!
“பொய் விளம்பரங்களைக் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கும் பழனிசாமியின் நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது; மக்கள் அவரது முகத்திரையைத் தேர்தலில் கிழித்தெறியப் போகிறார்கள்” என தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் உரையாற்றினார்.
இன்று (26-03-2021), திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள், தேர்தல் பரப்புரைப் பயணத்தின்போது, கரூரில் பொதுமக்களிடையே உரையாற்றி வாக்கு சேகரித்தார்.
தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்கள் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“உங்களைத் தேடி நாடி, உங்களிடத்தில் வாக்கு கேட்டு, ஆதரவு கேட்டு வந்திருக்கிறேன். வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி நடைபெறவிருக்கும் சட்டமன்ற பொதுத்தேர்தலில், நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களைப் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும்.
கரூர் தொகுதியில் கழக வேட்பாளராக போட்டியிடுகிறார் அருமைச் சகோதரர் செந்தில் பாலாஜி. இந்த மாவட்டத்தில் ஆளுங்கட்சி என்றால் இவர் சிம்மசொப்பனம். ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராகவும் - அமைச்சராகவும் இருந்து மக்களுடைய முன்னேற்றத்திற்காகப் பாடுபட்டு பணியாற்றியவர். இன்றைக்கு திராவிட முன்னேற்றக் கழகத்தின் மாவட்டக் கழகப் பொறுப்பாளராகப் பணியாற்றி, கழகத்திற்கு மேலும் வலுசேர்க்கும் வகையில் அதில் வெற்றி கண்டிருப்பவர். அவரை நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தரவேண்டும். அதேபோல அரவக்குறிச்சி தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் மொஞ்சனூர் இளங்கோ அவர்கள், பொறியியல் பட்டதாரி. ஏற்கனவே சட்டமன்ற உறுப்பினராக இருந்த மொஞ்சனூர் ராமசாமி அவர்களின் அருமை மகன். இப்போது ஒன்றியக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல கிருஷ்ணராயபுரம் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர் சிவகாமசுந்தரி அவர்கள், வழக்கறிஞராக பணியாற்றுபவர். பெண்களுடைய உரிமைகளுக்காக வாதாடுபவர். ஒன்றிய கழகத்தின் துணைச் செயலாளராக பணியாற்றிக் கொண்டிருப்பவர். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
அதேபோல குளித்தலைத் தொகுதியில் போட்டியிடும் நம்முடைய கழக வேட்பாளர், நகரக் கழகத்தின் செயலாளராகப் பணியாற்றிக் கொண்டிருக்கும் இரா.மாணிக்கம் அவர்களுக்கு உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித்தர வேண்டும்.
கழகத்தின் ஊரான கரூர். சேரர்களின் தொழில் நகரமான கரூர். முதன்முதலாக தலைவர் கலைஞர் அவர்கள் கரூர் மாவட்டத்தை சேர்ந்த குளித்தலைத் தொகுதியில் தான் சட்டமன்ற உறுப்பினராக போட்டியிட்டு வெற்றி பெற்றார். சேவல் விளையாட்டுக்கு பெயர் போன அரவக்குறிச்சி. காவிரி ஆறும் கடவூர் மலையும் சேர்ந்த கிருஷ்ணராயபுரம். இவ்வாறு பல பெருமைகளைப் பெற்றிருக்கும் தொகுதிகளுக்கு உங்களில் ஒருவனான ஸ்டாலின் வந்திருக்கிறேன்.
இந்தத் தேர்தலையொட்டி இப்போது ஊடகங்களில் பல்வேறு கருத்துக்கணிப்புகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது. எல்லாக் கருத்துக் கணிப்புகளும் தி.மு.க. அணி தான் வெற்றி பெறப்போகிறது என்று தெளிவாக சொல்லிக் கொண்டிருக்கிறது. இதை பார்த்த ஆளுங்கட்சிக்கு வயிற்றெரிச்சல். அவர்கள் மிரண்டு போயிருக்கிறார்கள்.
நேற்று மாலை முரசு தொலைக்காட்சியில் தென் மாவட்டங்களில் தி.மு.க. அதிக இடங்களில் வெற்றி பெறும் என்று ஒரு செய்தியை ஒளிபரப்பி இருக்கிறார்கள். உடனே அந்தத் தொலைக்காட்சியை இருட்டடிப்புச் செய்துவிட்டார்கள்.
தேர்தல் நேரத்தில் அரசு கட்டுப்பாட்டில் இருக்கும் கேபிள் டிவி கார்ப்பரேஷனை இப்படிப் பயன்படுத்துகிறார்கள். அராஜக நிலையில் சர்வாதிகாரத்தோடு கையில் அதிகாரம் இருக்கும் காரணத்தால் இவ்வாறு செய்கிறார்கள். இவை எல்லாம் வரும் ஏப்ரல் மாதம் ஆறாம் தேதியோடு முடியப்போகிறது. அதில் எந்த மாற்றமும் இல்லை.
பல்லாயிரம் கோடி செலவு செய்து விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். ‘ஆகா – ஓகோ‘, ‘இந்திரன் – சந்திரன்’ என்று முதலமைச்சர் பழனிசாமியைப் புகழ்ந்து பாராட்டி, மக்களுடைய வரிப் பணமான அரசாங்கப் பணத்தில் விளம்பரம் கொடுத்துப் பார்த்தீர்கள். அரசாங்கப் பணம் என்றால் மக்களின் வரிப்பணம். அதில் எப்படிக் கொடுத்தீர்கள்?
பொய் விளம்பரங்கள் கொடுத்து மக்களை ஏமாற்ற நினைக்கிறார்கள். அது நடக்காது. மக்கள் உங்களுடைய முகத்திரையை இந்தத் தேர்தலில் கிழிக்கப் போகிறார்கள். அதில் எந்த மாற்றமும் இல்லை.
பழனிசாமியின் அமைச்சரவையில் – அ.தி.மு.க.வின் அமைச்சரவையில் இரண்டு விஜயபாஸ்கர் இருக்கிறார்கள். ஒன்று குட்கா விஜயபாஸ்கர். இரண்டு மணல் கொள்ளை விஜயாபாஸ்கர். இரண்டு பேரும் இந்தத் தேர்தலில் படுதோல்வி அடையப்போகிறார்கள். டெபாசிட் காணாமல் ஓடப்போகிறார்கள். அதுதான் நடக்கப்போகிறது.
அமராவதி ஆற்றில் சுத்திகரிப்பு செய்யாமல் சாயக்கழிவுகளைக் கலக்கச் செய்பவர்களைக் காப்பாற்றி வருகிறார் இந்த விஜயபாஸ்கர். பசுமைத் தீர்ப்பாயம் விவசாயிகளுக்கு இழப்பீடு தரச் சொல்லி பத்து ஆண்டுகள் ஆகப்போகிறது. சம்பந்தப்பட்டவர்களிடம் கமிஷன் வாங்கிக்கொண்டு விவசாயிகளுக்கு இழப்பீடு வழங்காத அவர்களைக் காப்பாற்றி வருகிறார்.
அதேபோல அமராவதி ஆற்றில் தண்ணீர் திருடுபவர்களுக்கு துணையாக இருக்கிறார். யாருக்கும் அனுமதி இல்லை என்று மாவட்ட ஆட்சித் தலைவர் அனுமதி மறுத்தாலும், அவரைப் பந்தாடியவர்தான் இந்த மணல் திருட்டு விஜயபாஸ்கர்.
அது மட்டுமா பல கோடி மணல் கொள்ளை நடக்கிறது. அதை தட்டிக் கேட்டு போராடிய முகிலனைப் பல்வேறு வழக்குகளைப் போட்டுச் சிறையில் தள்ளி இருக்கிறார்கள். ஆற்று மணல் கொள்ளையை நீதிமன்றம் தடை செய்த நிலையில் எம்-சாண்ட் குவாரிகளை தன்னுடைய உறவினர்கள் பெயரில் எடுத்திருக்கிறார். ஏற்கனவே இதை நடத்துபவர்களை மிரட்டிக் கொள்ளை அடிப்பவர்தான் இந்த மணல் கொள்ளை விஜயபாஸ்கர்.
அதேபோல அவருடைய துறை போக்குவரத்துத் துறை. அந்தத் துறையில் ஜி.பி.எஸ். கருவி பொருத்துவது, ஸ்டிக்கர் ஒட்டுவது போன்றவற்றை தனது பினாமி நிறுவனங்களுக்கு மட்டுமே கொடுக்க வேண்டுமென லாரி உரிமையாளர்களை பகிரங்கமாக மிரட்டி இருக்கிறார். பிறகு அவர்கள் என்னைச் சந்தித்தனர். பின்னர் சட்டரீதியாக அணுகியிருக்கிறார்கள். கரூர் அரசு பேருந்துகளுக்கு ஸ்டாண்ட் கட்டுவதற்கு தனது பினாமிகளுக்கு ஒப்புதல் தருவதைத் தொடர்ந்து பாரம்பரிய பஸ் பாடி கட்டும் உரிமையாளர்கள் இன்றைக்கு குமுறிக்கொண்டிருக்கிறார்கள்.
இதற்கெல்லாம் முடிவு கட்டும் நாள் தான், இந்த ஊழல் விஜயபாஸ்கரை ஓட ஓட விரட்டும் நாள்தான், வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி.
இந்த ஆட்சியில் எல்லாவற்றிலும் கொள்ளை - ஊழல் - லஞ்சம் என்று ஒரு மோசமான ஆட்சியை பழனிசாமி தலைமையில் அ.தி.மு.க. நடத்திக் கொண்டிருக்கிறது.
தூத்துக்குடியில் சுற்றுச்சூழல் பாதிப்பை ஏற்படுத்திய ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிராக அமைதி வழியில் போராடியவர்கள் மீது, பயிற்சி பெற்ற காவலர்களை வைத்துத் துப்பாக்கிச்சூடு நடத்தினர். அதில் 13 பேர் கொல்லப்பட்டனர்.
அதேபோல சாத்தான்குளத்தில் இரட்டைக்கொலை தந்தை – மகன். இருவரையும் போலீஸ் லாக்கப்பில் அடித்து, உதைத்து, சித்திரவதைக்கு ஆளாக்கி கொன்றிருக்கிறது இந்த பழனிசாமி தலைமையில் இருக்கும் காவல்துறை.
பொள்ளாச்சியில் 200-க்கும் மேற்பட்ட பெண்களைக் கடத்தி பண்ணை வீட்டில் வைத்து பாலியல் பலாத்காரம் செய்து அதை வீடியோவில் பதிவு செய்து, அதை அவர்களுக்கு போட்டுக் காட்டி, மிரட்டி அச்சுறுத்தி பணம் பறிக்கும் செயல் மூன்று வருடங்களாக தொடர்ந்து நடந்திருக்கிறது.
சென்னையில் ஆளுங்கட்சியின் சார்பில் வைத்த பேனரால் விபத்துக்குள்ளாகி இறந்து போன சுபஸ்ரீ. அந்த மரணத்திற்கு காரணமான அரசுதான் பழனிசாமி தலைமையில் இருக்கும் அரசு.
கோவையில் அ.தி.மு.க.வின் கொடிக்கம்பம் விழுந்து அனுராதா என்ற ஒரு பெண் தனது ஒரு காலை இழந்துவிட்டார். நான் அந்தப் பெண்ணை நேரடியாக சந்தித்து ஆறுதல் சொல்லி விட்டு வந்தேன்.
அதேபோல டெல்டா பகுதியில் மீத்தேன் ஹைட்ரோகார்பன் எடுக்கும் பிரச்சினை. தேனியில் நியூட்ரினோ பிரச்சினை. சேலத்தில் எட்டு வழி சாலைக்காக விவசாய நிலங்கள் அழிக்கப்படுகிறது. இவ்வாறு அனைத்திற்கும் காரணமான ஆட்சிதான் பழனிசாமி தலைமையில் நடைபெறும் இந்த அரசு.
இரண்டு உலக முதலீட்டாளர்கள் மாநாட்டை நடத்தினார்கள். 6 லட்சம் கோடி முதலீட்டை ஈர்த்ததாக சொல்கிறார்கள். நான் கேட்கிறேன். எத்தனை தொழிற்சாலைகள் வந்திருக்கிறது? எத்தனை பேருக்கு வேலை வாங்கி கொடுத்து இருக்கிறீர்கள்? அதுகுறித்து வெள்ளை அறிக்கை வெளியிடுங்கள் என்று சட்டமன்றத்திலும் மக்கள் மன்றத்திலும் நான் கேட்டேன். இதுவரையில் அதற்கு பதில் இல்லை. மக்கள் நலத் திட்டங்கள் எதையும் கொண்டு வந்து அறிமுகப்படுத்தவில்லை. இதுதான் இன்றைக்கு இருக்கும் நிலை.
முதலமைச்சராக இருக்கும் பழனிசாமி எடுபிடி மட்டுமல்ல, உதவாக்கரை முதலமைச்சராக இருக்கிறார் என்பதற்கு இவை எல்லாம் உதாரணங்களாக இருக்கின்றன.
நினைத்துப் பாருங்கள். அவருக்கு கோபம் பொத்துக் கொண்டு வருகிறது. தோல்வி பயத்தின் காரணமாக ஆத்திரம் பீறிட்டு வருகிறது.
ஊர்ந்து சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். தவழ்ந்து சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். தவ்வி தவ்வி சென்று முதலமைச்சர் ஆனார் என்று சொன்னேன். நான் சொல்வது பொய்யா? அந்த காட்சிகளை நீங்கள் பார்த்தீர்களா? இல்லையா?
ஆனால் அவர், நான் என்ன பாம்பா? பல்லியா? என்று கேட்கிறார். பாம்பு, பல்லி விஷத்தை விட துரோகம் செய்வது தான் மிகப் பெரிய விஷம்.
நான் பொத்தாம் பொதுவாக சொல்லவில்லை. ஆதாரத்தோடு தான் சொல்கிறேன். இது அனைவரும் பார்த்த காட்சி தான். சமூக வலைதளங்களில் பரவிய காட்சி.
சரி, நீங்கள் பதவியை எப்படியோ வாங்கிக் கொள்ளுங்கள். அந்த பிரச்சினைக்கு நான் வரவில்லை. நீங்கள் ஊர்ந்து போனது உண்மையா? இல்லையா? அதற்குப் பதில் சொல்லுங்கள்.
கொரோனா என்ற கொடிய நோய் உலக அளவில் பரவி தமிழ்நாட்டிற்குள் நுழைந்தது. அதனை தடுக்கும் நடவடிக்கை எடுக்குமாறு சட்டமன்றம் உட்பட பல்வேறு தருணங்களில் வலியுறுத்தினோம். அலட்சியமாகப் பேசினர்.
எங்கள் அம்மா ஆட்சியில் ஒரு உயிர் கூட போகாது என்று சொன்னார். இன்றைக்கு தமிழ்நாட்டை பொறுத்தவரையில் 8 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். 12,000க்கும் மேற்பட்டோர் இறந்திருக்கிறார்கள். அந்தக் கொடுமைக்கு காரணம் பழனிசாமி அரசு தான் – அ.தி.மு.க. அரசுதான்.
இன்றைக்கு விவசாயிகள், நெசவாளர்கள், அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள், தொழிலாளர்கள், பாட்டாளிகள், சிறு - குறு தொழில் செய்பவர்கள், பெரும் தொழில் நிறுவனங்கள், எந்தத் தரப்பும் இந்த ஆட்சியில் நிம்மதியாக இல்லை.
எந்தெந்தத் திட்டங்களில் கொள்ளையடிக்க முடியுமோ, அவற்றில் எல்லாம் கொள்ளையடித்துக் கொண்டிருக்கும் ஆட்சிதான் இந்த ஆட்சி. சுருக்கமாக கமிஷன் - கரப்ஷன் - கலெக்சன் இதுதான் இன்றைக்கு பழனிசாமியின் கொள்கையாக இருக்கிறது. இவ்வாறு மக்களுக்கு பயன்படாத - எதற்குமே பயன்படாத இந்த ஆட்சியை விரட்டி அடிக்கும் நாள்தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை நீங்கள் மறந்துவிடக் கூடாது.
நாம் ஆட்சிக்கு வந்தவுடன் என்னென்ன செய்யப் போகிறோம் என்ற உறுதிமொழிகளைத் தேர்தல் அறிக்கையில் தெளிவாகச் சொல்லி இருக்கிறோம்.
தொழில் வளர்ச்சிக்காக, கொரோனா காலத்தில் விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளின் காரணமாக மூடப்பட்ட தொழிற்சாலைகளை மீண்டும் இயங்க வைக்கவும், அங்கே பணியாற்றிய தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலைவாய்ப்பு கிடைக்கவும், இந்த நிறுவனங்களுக்கு எளிய தவணையில் திரும்பச் செலுத்தும் வகையில் கடன் உதவி செய்வதற்கென்று 15,000 கோடி நிதி ஒதுக்கப்படும், டிட்கோ - சிட்கோ போன்ற முன்னோடி அமைப்புகள் உருவாக்கப்பட்டது போல, வங்கிகள் - நிதி நிறுவனங்களோடு இணைந்து சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு தேவையான நிதி உதவியினை ஏற்பாடு செய்ய சிறப்பு நிறுவனங்கள் உருவாக்கப்படும். தொழில் நிறுவனங்களை நலிவிலிருந்து மீட்க அரசு துறைகள், நிதி நிறுவனங்கள், தொழில் துறையினர் ஆகியவற்றின் பிரதிநிதிகள் அடங்கிய குழு ஒன்று அமைக்கப்படும். தொழிலாளர்கள் நல வாரியங்கள் முழு வீச்சில் செயல்படும்.
அதேபோல, நெசவாளர்களுக்குத் தனிக் கூட்டுறவு வங்கி அமைக்கப்படும். அடையாள அட்டை வழங்கப்படும். கைத்தறி நெசவாளர்களுக்குத் தற்போது வழங்கப்பட்டு கொண்டிருக்கும் இலவச மின்சாரம் இரண்டு மாதத்திற்கு 200 யூனிட் என்பது 300 யூனிட்டாக உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்குத் தடையின்றி நூல் கிடைக்க அரசு கொள்முதல் நிலையங்கள் அமைத்து நெசவாளர் சங்கங்களுக்கு நூல் வழங்கப்படும். ஜவுளித் துறையை மேம்படுத்துவதற்காக ஜவுளி ஆணையம் தனியாக அமைக்கப்படும். நெசவாளர்களுக்கு வீடுகள் கட்ட மானியமாக வழங்கப்படும் தொகையை 4 லட்சம் ரூபாய் என அந்தத் தொகை உயர்த்தி வழங்கப்படும். நெசவாளர்களுக்குக் கூட்டுறவு சங்கங்கள் மூலமாக வழங்கப்படும் கடனுக்கான வட்டி 12 சதவிகிதம், 8 சதவிகிதமாகக் குறைக்கப்படும். பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் நகரப் பேருந்துகளில் இலவசமாகப் பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
மேலும் கரூர் மாவட்டத்திற்கான வாக்குறுதிகள். உள்ளூர்க் கட்டுமானப் பணிகளுக்காக அமராவதி மற்றும் காவிரி ஆற்றில் மாட்டு வண்டி உரிமையாளர்கள் மணல் அள்ள முறைப்படி அனுமதி வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கரூர் நகராட்சி மாநகராட்சி ஆக்கப்படும். கரூர் மாவட்டத்தில் அரசு கால்நடை மருத்துவக் கல்லூரி அமைக்கப்படும். கரூரில் புதிய பேருந்து முனையம்; காமராசர் மார்கெட்டில் புதிய மார்கெட் வளாகம்; நம்மாழ்வார் பெயரில் அரசு இயற்கை வேளாண்மைக் கல்லூரி; வெற்றிலை மற்றும் வாழை ஆராய்ச்சி மையம்; பணிபுரியும் பெண்கள் தங்குவதற்கு என்று விடுதிகள்; முருங்கைப் பவுடர் உற்பத்தித் தொழிற்சாலை; சாயக்கழிவுகளைச் சுத்திகரிப்பதற்காகக் கழிவுநீர் சுத்திகரிப்பு ஆலை; சாயப் பட்டறைப் பூங்கா; நவீன தொழில்நுட்ப வசதியுடன் கூடிய பஸ் பாடி பூங்கா ஆகிய திட்டங்கள் நிறைவேற்றப்படும். திருகாம்புலியூரில் உள்ள லட்சுமி நாராயணசாமி கோயிலுக்குக் குடமுழுக்கு விழா நடத்தப்படும். அரவக்குறிச்சியில் அரசு கலை அறிவியல் கல்லூரி தொடங்கப்படும்; அரவக்குறிச்சி மற்றும் பள்ளப்பட்டி அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும். புகலூர், பள்ளப்பட்டி பேரூராட்சிகள் நகராட்சிகளாக உயர்த்தப்படும். குளித்தலையில் புதிய பேருந்து நிலையம்; பாதாளச் சாக்கடைத் திட்டம். குளித்தலை - மணப்பாறை சாலையில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்படும். கிருஷ்ணராயபுரம், பழைய ஜெயங்கொண்ட சோழபுரம், தோகைமலை மற்றும் கடவூர் பகுதிகளுக்குக் காவிரி கூட்டுக் குடிநீர் திட்டம் விரிவுபடுத்தப்படும். காகித ஆலை மற்றும் சிமென்ட் ஆலைகளுக்கு நிலம் வழங்கிய குடும்ப வாரிசுகளுக்கு வேலை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். காகித ஆலை ஒப்பந்தத் தொழிலாளர்களை நிரந்தரத் தொழிலாளர்களாக மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும். ஐந்து ஆண்டுகளில் நிறைவேற்றப் படுவதற்கான, தேர்தல் அறிக்கையில் சொல்லப்பட்டுள்ள 505 உறுதிமொழிகளில் சிலவற்றை உங்களிடம் சொல்லி இருக்கிறேன். ஆனால், இப்போது தமிழ்நாடு இந்த ஆட்சியால் 50 வருடங்களுக்கு பின்னோக்கி சென்று விட்டது. அதனால்தான் கடந்த 7ஆம் தேதி அன்று, திருச்சியில் ஒரு மாநில மாநாடு போல நடைபெற்ற மிகப்பெரிய பொதுக் கூட்டத்தில் ஏழு அறிவிப்புகளை வெளியிட்டேன். அதற்கு தலைப்பு ‘ஸ்டாலினின் 7 உறுதிமொழிகள்‘. அதாவது தொலைநோக்கு பார்வையோடு நாம் ஆட்சிக்கு வந்து பத்து வருடத்திற்கு என்னென்ன செய்யப்போகிறோம் என்பதை வாக்குறுதிகளாகச் சொன்னேன்.
அதைச் சொல்லும் போது அண்ணா மீது ஆணையாக - கலைஞர் மீது ஆணையாக - ஒட்டு மொத்தத் தமிழ் நாட்டு மக்கள் மீது ஆணையாக இவையெல்லாம் நிறைவேற்றப்படும் என்று நான் உறுதியாகச் சொல்லி இருக்கிறேன்.
அதற்காகத்தான் உங்களைத் தேடி நாடி நம்முடைய வேட்பாளர்களை உதயசூரியன் சின்னத்தில் ஆதரிக்கக் கேட்டு வந்திருக்கிறேன். அவர்களுக்கு மட்டுமல்ல எனக்கும் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். முதலமைச்சர் வேட்பாளராக உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன். நான் முதலமைச்சராக வேண்டும் என்றால் இந்த 4 பேரும் வெற்றி பெற்றாக வேண்டும்.
இப்படிப்பட்ட நிலையில், எப்படியாவது தமிழ்நாட்டிற்குள் இந்தியைத் திணித்து, மதவெறியைத் தூண்டி, சமஸ்கிருதத்தைத் திணித்து, இந்த நாட்டை மதவெறி நாடாக மாற்ற வேண்டும் என்ற முயற்சியில் இன்றைக்கு பாஜக ஈடுபட்டிருக்கிறது. அதற்கு இங்கிருக்கும் துதிபாடி அடிமை எடுபிடி அரசும் துணை நிற்கிறது.
நான் சொல்கிறேன் - இது திராவிட மண். தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் வாழ்ந்த மண் இந்த மண். இங்கு உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் எல்லாம் பலிக்காது, எடுபடாது.
தலைவர் கலைஞர் அவர்கள் எப்போதும் உடன்பிறப்பே… உடன்பிறப்பே… என்று சொல்வார். அவ்வாறு கழகத் தோழர்களை மட்டுமல்ல, ஒட்டுமொத்தத் தமிழர்களையும் உடன்பிறப்புகள் என்றுதான் அழைப்பார்.
இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்கான தேர்தல்தான். அதேநேரத்தில் நம்முடைய சுய மரியாதையைக் காப்பாற்றுவதற்காக நடக்கின்ற தேர்தல் என்பதையும் மறந்துவிடாதீர்கள். தன்மானத்தைக் காப்பாற்றுவதற்காகவும் நடக்கின்ற தேர்தல். நாம் இழந்திருக்கும் உரிமைகளை மீட்க நடக்கின்ற தேர்தல்.
தமிழகத்தை மீட்க வேண்டும் என்றால் நீங்கள் அத்தனை பேரும் உதயசூரியன் சின்னத்தில் வாக்களித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன். நன்றி. வணக்கம்.”
இவ்வாறு கழகத் தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
ஈரோடு மேற்கில் தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலின் ஆற்றிய உரையின் விவரம் வருமாறு:
“சட்டமன்றப் பொதுத்தேர்தலில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் எனக் கேட்டுக் கொள்ள வந்திருக்கிறேன்.
மொடக்குறிச்சி தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணிக்காக, திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளர் திருமதி. சுப்புலட்சுமி ஜெகதீசன் அவர்கள் போட்டியிடுகிறார். அவரைப் பற்றி உங்களுக்கு அதிகம் சொல்ல வேண்டிய அவசியமில்லை. கழகத்தின் துணைப் பொதுச் செயலாளராகப் பொறுப்பேற்று தன்னுடைய கடமையை நிறைவேற்றி கொண்டிருப்பவர். ஏற்கனவே மாநிலத்தில் - மத்தியில் அமைச்சராக இருந்து மக்களுக்காக பல்வேறு பணிகளை ஆற்றியவர். ஒரு பெண் வீராங்கனையாகக் குரல் கொடுப்பவர். எனவே அவரைத்தான் தேர்ந்தெடுத்து மொடக்குறிச்சி தொகுதியின் கழக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு நீங்கள் எல்லாம் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும் என்று அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.
ஈரோடு மேற்கு தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் ஈரோடு முத்துசாமி அவர்கள், அவருடைய பெயரிலேயே ஈரோடு இருக்கிறது. அவர் மாவட்டக் கழகத்தின் செயலாளராக கழகத்திற்கு பணியாற்றிக்கொண்டிருப்பவர். இப்போது திராவிட முன்னேற்றக் கழகம் எதிர்க்கட்சியாக இருந்தாலும், ஆளுங்கட்சியாக இருந்து ஆற்ற வேண்டிய பணிகளை எல்லாம் ‘ஒன்றிணைவோம் வா’ திட்டத்தின் மூலமாக கொரோனா காலத்தில் எந்த அளவிற்கு அவர் ஆற்றி இருக்கிறார் என்பது உங்களுக்கு நன்றாகத் தெரியும். அவரும் முன்னாள் அமைச்சராக இருந்து மக்களுக்காக பணியாற்றி இருப்பவர். எனவே அவரைத்தான் தேர்ந்தெடுத்து இந்த ஈரோடு மேற்கு தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளராக நம்முடைய கழக வேட்பாளராக நிறுத்தி இருக்கிறோம். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரித்து மிகப்பெரிய வெற்றியைத் தேடித் தர வேண்டும்.
குமாரபாளையம் தொகுதியில் நம்முடைய கழக வேட்பாளர் வெங்கடாசலம் அவர்களை நீங்கள் ஆதரித்து பெருவாரியான வாக்குகள் வெற்றிபெற வைக்க வேண்டும். அவரை எதிர்த்து நிற்கும் அ.தி.மு.க. வேட்பாளர் யார் என்பது உங்களுக்கு தெரியும். பழனிசாமி தலைமையில் இருக்கும் அமைச்சரவையில் இரண்டு மணியான அமைச்சர்கள் இருக்கிறார்கள். தங்கமணி, வேலுமணி. அந்த வேலுமணி அடிக்கின்ற கொள்ளையைப் போல் இதுவரைக்கும் யாரும் அடித்திருக்க முடியாது. அவ்வளவு கொள்ளை அடித்து இருக்கிறார். அதேபோல வேலுமணி, தங்கமணி இரண்டு பேருக்கும் என்ன வித்தியாசம் என்றால் வேலுமணி எதுவும் வெளிப்படையாக செய்வார். ஆனால் தங்கமணி அமைதியாகச் செய்வார். அந்தத் தங்கமணியை எதிர்த்துத்தான் நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக, நம்முடைய கழக வேட்பாளராக வெங்கடாசலம் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவருக்கு நீங்கள் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தர வேண்டும்.
பெருந்துறை தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளராக கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் அந்த கட்சியின் மாநில பொருளாளர் கே.கே.சி.பாலு அவர்கள் வேட்பாளராக உதயசூரியன் சின்னத்தில் நிறுத்தப்பட்டு இருக்கிறார். அவரையும் பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றிபெற வைக்க நீங்கள் அத்தனை பெரும் உதயசூரியன் சின்னத்தில் ஆதரவு தரவேண்டும் என்று உங்களை நான் கேட்டுக் கொள்ள கடமைப்பட்டிருக்கிறேன்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர் காங்கிரஸ் பேரியக்கத்தின் அங்கீகாரம் பெற்ற வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா. அவர்கள். அவர் யார் என்பது உங்களுக்கு தெரியும். காங்கிரஸ் கட்சியின் மூத்த முன்னோடிகளில் ஒருவரான - நம்முடைய தலைவர் கலைஞர் அவர்களுக்கு மிகவும் நெருங்கிய நண்பரான - எல்லோரிடத்திலும் கட்சி பாகுபாடில்லாமல் அன்போடு பழகுபவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் அவர்கள். அவருடைய திருமகன் தான் திருமகன் ஈ.வெ.ரா. அவர்கள். அவருக்கு கை சின்னத்தில் ஆதரவு தந்து மிகப்பெரிய வெற்றியை நீங்கள் எல்லாம் தேடித் தரவேண்டும் என்று நான் உங்களை அன்போடு உரிமையோடு விரும்பி வேண்டி கேட்டுக் கொள்ளக் கடமைப்பட்டிருக்கிறேன்.
உங்களிடத்தில் வாக்குக் கேட்க ஆதரவு கேட்க ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். ஈரோட்டுச் சிங்கம் பகுத்தறிவுப் பகலவன் தந்தை பெரியார் பிறந்த ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். நம்மை ஆளாக்கிய நம்முடைய ஒப்பற்ற தலைவர் பேரறிஞர் பெருந்தகை அண்ணா அவர்கள் பணியாற்றிய ஈரோட்டிற்கு வந்திருக்கிறேன். மறைந்தாலும் நம்முடைய உள்ளத்தில் நிரந்தரமாக வாழ்ந்து கொண்டிருக்கும் நம்முடைய முத்தமிழறிஞர் கலைஞர் அவர்களுடைய குருகுலமான இந்த ஈரோட்டிற்கு உங்களை நாடி உங்களை சந்திக்க வந்திருக்கிறேன்.
எழில்மிகு மாநகரின் தொகுதியான ஈரோடு மேற்கு, ஈரோடு கிழக்கு. வாகை பெருந்துறை என்று அழைக்கப்பட்ட பெருந்துறை. அதிகமான பாசனப் பகுதி உள்ள ஊர்தான் மொடக்குறிச்சி. இவ்வாறு பெருமைக்குரிய தொகுதிகளை கொண்டிருக்கும் ஈரோடு மாவட்டத்திற்கு உங்களிடத்தில் வாக்குக் கேட்க வந்திருக்கிறேன்.
மறந்திருக்க மாட்டீர்கள். இதே ஈரோட்டில்தான் கலைஞர் அவர்கள் உடல் நலிவுற்று ஓய்வில் இருந்த நேரத்தில் மண்டல மாநாட்டை நாம் நடத்தினோம். அந்த மண்டல மாநாட்டில் நான் ஒரு ஐம்பெரும் முழக்கங்களை எடுத்து வைத்தேன்.
கலைஞரின் கட்டளையைக் கண்போல் காப்போம்,
தமிழரை வளர்த்து தமிழைப் போற்றுவோம்,
அதிகாரக் குவியலை அடித்து நொறுக்குவோம்,
மதவெறி மாய்த்து மனிதநேயம் காப்போம்,
வளமான தமிழகத்தை வளர்த்தெடுப்போம் என்று அந்த மாநாட்டில் சூளுரைத்தோம். கழக ஆட்சி அமைத்து கலைஞரிடம் ஒப்படைப்போம். அதற்கான காலம் தான் வருகின்ற ஏப்ரல் மாதம் ஆறாம் தேதி என்பதை நீங்கள் மறந்து விடக்கூடாது.
இந்த கொங்கு வட்டாரத்திற்கு ஏராளமான திட்டங்களை உருவாக்கித் தந்த ஆட்சிதான் தி.மு.கழகத்தின் ஆட்சி. தலைவர் கலைஞர் அவர்கள் ஐந்து முறை ஆட்சி பொறுப்பில் இருந்தபோது இந்த கொங்கு வட்டாரத்தில் ஆற்றியிருக்கும் பணிகளில் சிலவற்றை நான் உங்களிடத்தில் நினைவுபடுத்த சுட்டிக்காட்ட கடமைப்பட்டிருக்கிறேன்.
கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாய மக்களை பிற்படுத்தப்பட்டோர் பட்டியலில் சேர்க்க வேண்டும் என்ற கோரிக்கை 1955-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்திருக்கிறது. 1955-ஆம் ஆண்டிலிருந்து இருந்து வந்தாலும் அந்தக் கோரிக்கையை 1975-ஆம் ஆண்டு செய்துகொடுத்த ஆட்சி தான் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி - தலைவர் கலைஞர் தலைமையில் இருந்த ஆட்சி.
நான் ஏதோ பொத்தாம் பொதுவாகப் பேசுகிறேன் என்று நினைத்துவிடாதீர்கள். ஆதாரத்தோடு தேதியோடு சொல்கிறேன். 16.05.1975-ஆம் நாள் அதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. ஜி.ஓ.எண் எம்.எஸ். 371 அதுதான் அந்த அரசாணை. அதற்குப்பிறகு பேரவையில் நிறைவேற்றப்பட்டது. எனவே அந்தச் சட்டத்தைக் கொண்டு வந்ததற்கு பிறகு கோவையில் தலைவர் கலைஞர் அவர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.
அந்த விழாவில் கலந்து கொண்டு உரையாற்றிய முன்னாள் அமைச்சர் சர்க்கரை மன்றாடியார் அவர்கள், கலைஞர் அவர்களைப் புகழ்ந்து பாராட்டி பேசினார். அவர், “டாக்டர் சுப்பராயன் சாதிக்காததை, சி.சுப்பிரமணியம் செய்யாததை, என்னாலும் செய்ய முடியாததை முதலமைச்சராக இருக்கும் கலைஞர் செய்து முடித்திருக்கிறார். எனவே அவரை மனதார நான் பாராட்டுகிறேன் வாழ்த்துகிறேன். இலட்சக்கணக்கான மக்களைக் கொண்டிருக்கும் இந்த கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு இனி நல்ல வேலைவாய்ப்புகள் கிடைக்கும். இதனால் பல நன்மைகளை நாங்கள் அடையப்போகிறோம்” என்று அவர் பேசினார்.
அதற்குப்பிறகு நிறைவாகப் பேசிய தலைவர் கலைஞர் அவர்கள், “நான் உங்களுக்குக் கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறேன். இப்பொழுது உங்களுக்கு அளிக்கப்பட்டிருப்பது சலுகை அல்ல, உரிமை என்று சொல்வதுதான் பொருத்தமாக இருக்கும்” என்று குறிப்பிட்டார்கள்.
அத்தகைய உரிமையை கொங்கு வேளாளர் சமுதாயத்திற்கு பெற்று தந்த இயக்கம் தான் தி.மு.க. – அதைச் செய்த தலைவர்தான் கலைஞர் அவர்கள்.
இன்றைக்கு மாநில அரசுப் பணிகளை மட்டுமல்ல, மண்டல் கமிஷன் மூலமாக மத்திய அரசுப் பணிகளிலும் இச்சமூகத்தினர் சேர்வதற்கு வாசல் அமைத்துக் கொடுத்ததும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் அரசுதான் - கலைஞர் தலைமையில் இருந்த அரசு தான்.
இதேபோல அருந்ததியினர் இனத்தைச் சேர்ந்த மக்களுக்காக உள்ஒதுக்கீடு கேட்ட போது 3 சதவிகித உள்ஒதுக்கீடு கொடுத்த அரசும் தி.மு.க. அரசு தான் - கலைஞர் தலைமையில் இருந்த கழக அரசு தான். அதை சட்டமன்றத்தில் நிறைவேற்றிய நாள், கலைஞர் சட்டமன்றத்திற்கு வரமுடியவில்லை. அப்பொழுது அவர் உடல் நலிவுற்று முதுகில் ஒரு அறுவை சிகிச்சை செய்து கொண்டு ராமச்சந்திரா மருத்துவமனையில் ஓய்வெடுத்துக் கொண்டிருந்தார். ஒரு அருமையான சட்டம் நிறைவேறப் போகிறது. என் வாழ்நாளில் இதை எப்படியாவது நிறைவேற்ற வேண்டும் என்று எண்ணிக்கொண்டிருந்த சட்டம் நிறைவேறப்போகிறது. எனவே நான் எப்படியும் சட்டமன்றத்திற்குப் போக வேண்டும் என்று தலைவர் கலைஞர் அவர்கள் அழுத்தந் திருத்தமாக சொன்னார்கள். ஆனால் மருத்துவர்கள் மறுத்துவிட்டார்கள்.
அதனால், துணை முதலமைச்சராக இருந்த என்னை அழைத்து கலைஞர் உத்தரவிட்டார். கலைஞர் சார்பில் அருந்ததியினருக்கு 3 சதவிகித உள் ஒதுக்கீட்டை நிறைவேற்றிய பெருமை எனக்கு கிடைத்தது. அதை நினைத்து நான் பெருமைப்படுகிறேன்.
கொங்கு வேளாளர் கவுண்டர் சமுதாயப் பெருமக்கள், குட்டப்பாளையம் சுவாமிநாதன் அவர்கள் தலைமையில் கொங்கு வேளாளர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் தலைவர் கலைஞர் அவர்களை வந்து சந்தித்தார்கள். அப்போது ‘தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தில் உறுப்பினராக எங்கள் சமுதாயத்தைச் சேர்ந்த யாருமில்லை. 1929-ஆம் ஆண்டு முதல் 1974-ஆம் ஆண்டு வரை, இந்த 55 வருடத்தில் ஒருவர் கூட இதுவரைக்கும் இல்லை. எனவே ஒருவரை நியமிக்க வேண்டும்’ என்று முதலமைச்சர் கலைஞரிடம் கோரிக்கை வைத்தார்கள்.
அந்த கோரிக்கையை ஏற்று கலைஞர் அவர்கள் ஏ.பழனிச்சாமி அவர்களை உறுப்பினராக நியமித்து அழகு பார்த்தார். அப்போது அந்த கோரிக்கை வைத்தவர் குட்டப்பாளையம் சுவாமிநாதன் அவர்கள். அவருடைய பேரன் தான் இன்றைக்கு தொண்டாமுத்தூரில் தி.மு.கழகத்தின் வேட்பாளராக நிறுத்தப்பட்டு இருக்கிறார் என்பது வரலாறு.
அதுமட்டுமல்ல விவசாயிகளுக்காக விதிக்கப்பட்டிருந்த தெண்ட வரியை நம்முடைய முதலமைச்சராக இருந்த கலைஞர் நீக்கினார். பரம்பிக்குளம் ஆழியாறு திட்டத்தைக் கொண்டுவந்து நிறைவேற்றினார். அத்திக்கடவு அவினாசி திட்டம் பேஸ்-1, அத்திக்கடவு அவினாசி திட்டம் பேஸ்-2. ஜவுளித் தொழிலின் நலிவுக்கு காரணமாக இருந்த சென்வாட் வரி ரத்து. ஈரோடு நகராட்சியை மாநகராட்சி ஆக்கியதும் கலைஞர்தான். ஈரோட்டில் பாதாள சாக்கடை திட்டம். பெருந்துறையில் மஞ்சள் வணிக வளாகம். சித்தோடு கங்காபுரத்தில் டெக்ஸ் வேலி. கோவையில் வேளாண் பல்கலைக்கழகம். சிறுவாணி கூட்டுக் குடிநீர் திட்டம். செம்மொழி மாநாட்டின் மூலமாக 300 கோடிக்கு கோவை மேம்படுத்தப்பட்டது. சேலம் உருக்காலை திட்டம். சேலம் இரயில்வே கோட்டம். பெரியார் பல்கலைக்கழகம். சேலம் மாநகராட்சிக்கு கூட்டுக் குடிநீர் திட்டம். திருப்பூரை கொண்ட புதிய மாவட்டம். திருப்பூர் மாநகராட்சியாக மாறியது. தென்னை நல வாரியம் அமைத்ததும் தி.மு.க. தான். இவ்வாறு கொங்கு மண்டலமான இந்த மேற்கு மண்டலத்திற்கு ஏராளமான திட்டங்களை கொடுத்த ஆட்சி தான் தி.மு.க. ஆட்சி.
இவ்வாறு நான் வரிசைப்படுத்தி சொல்கிறேன். இது போன்று இன்றைக்கு முதலமைச்சராக இருக்கும் பழனிசாமிக்கு வரிசைப்படுத்தி சொல்லும் ஆற்றல் உண்டா?
மேற்கு மண்டலம் எங்களுடைய மண்டலம் என்று பிதற்றிக் கொண்டு இருக்கிறீர்களே, உங்களால் இந்த மண்டலத்திற்கு கிடைத்திருக்கும் நன்மை என்ன? அதை நீங்கள் பட்டியல் போட முடியுமா?
உங்களால் இந்த மேற்கு மண்டலத்திற்கு கிடைத்திருப்பது எல்லாம் வேதனைகள் - சோதனைகள் - துரோகம் தான். நான் அதையும் வரிசைப்படுத்தி சொல்கிறேன்.
ஜி.எஸ்.டி. வரியை ஏற்றுக் கொண்டதன் மூலமாக சிறு, குறு தொழில்களை இந்த மண்டலத்தில் சிதைத்தது முதல் துரோகம்.
மூன்று வேளாண் சட்டங்களை ஆதரித்ததன் மூலமாக இந்த மண்டலத்தின் முக்கியத் தொழிலான வேளாண்மையை சிதைத்தது இரண்டாவது துரோகம்.
எட்டு வழி பசுமை சாலை மூலமாக விவசாய நிலங்களை அந்த மக்களிடமிருந்து பறித்து, போராடிய மக்களை அடித்து உதைத்து கொடுமைப் படுத்தியது மூன்றாவது துரோகம்.
மற்ற மாநிலங்களில் சாலைகளில் குழாய்கள் பதிக்கும் போது, இங்கு மட்டும் விவசாய நிலங்களில் குழாய்களை பதித்து இந்த வட்டாரத்து விவசாயிகளை நிம்மதி இல்லாமல் ஆக்கியது நான்காவது துரோகம்.
பொள்ளாச்சியில் இளம்பெண்களைக் கடத்தி பாலியல் தொல்லைக்கு உள்ளாக்கிய அ.தி.மு.க.வினரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார்களே அது ஐந்தாவது துரோகம்.
இந்தியாவிலேயே தண்ணீருக்கு கட்டணம் வசூலிக்க வீடு வீடாக மீட்டர் பொருத்தி கொண்டிருக்கிறீர்களே அது ஆறாவது துரோகம்.
கோவையின் பெருமை மிகு சிறுவாணி தண்ணீரை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்த்தது ஏழாவது துரோகம்.
தொழில் நிறுவனங்கள், குடியிருப்புகள் என யாருக்கும் முன்னறிவிப்பு செய்யாமல் கொள்ளை அடிப்பதற்காகவே அவசரகதியில் அவினாசி சாலையில் பாலம் கட்ட தொடங்கியது எட்டாவது துரோகம்.
உறவினர்களுக்கு பினாமிகளுக்கு மட்டுமே டெண்டர் கொடுத்து, மற்ற ஒப்பந்ததாரர்களை தொழில் செய்யவிடாமல் தடுத்து அல்லது மற்ற ஒப்பந்ததாரர்களை தனது உறவினர்களின் கொத்தடிமைகளாக மாற்றியது ஒன்பதாவது துரோகம்.
எடப்பாடியில் பழனிசாமி, கோபிசெட்டிபாளையத்தில் செங்கோட்டையன், தொண்டாமுத்தூரில் வேலுமணி, குமாரபாளையத்தில் தங்கமணி, உடுமலையில் ராதாகிருஷ்ணன், பவானியில் கருப்பண்ணன் என கொங்கு மண்டலத்திற்கு ஏராளமானவர்கள் அதிகாரம் பொருந்திய பதவிக்கு வந்த பிறகும் இந்த மேற்கு மண்டலத்திற்கு எதுவும் செய்யாமல் தங்களது சுயநலத்தை மட்டும் பார்த்துக் கொண்டிருக்கிறீர்களே இது பத்தாவது துரோகம்.
எனவே அப்படிப்பட்ட துரோகத்தை செய்து கொண்டிருப்பவர்களுக்கு இந்த தேர்தலில் நீங்கள் பாடம் புகட்ட தயாராக வேண்டும் என்று உங்களை அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
அதேநேரத்தில் கழகத்தின் சார்பில் தேர்தல் அறிக்கை வெளியிட்டு இருக்கிறோம். அதில் பெண்களுடைய முன்னேற்றத்திற்காக, குடும்பத் தலைவிகளுக்கு உரிமைத் தொகையாக மாதம் 1,000 ரூபாய் வழங்கப்படும், மகளிருக்கான செலவைக் குறைக்க உள்ளூர் பேருந்துகளில் இலவசமாக பயணம் செய்யலாம் என்பது உட்பட பல்வேறு சிறந்த வாக்குறுதிகளை வழங்கி உள்ளோம். ஆட்டோ வாங்குபவர்களுக்கு 10,000 ரூபாய் மானியம் வழங்கப்படும். விவசாய விளைநிலங்களில் அமைக்கப்படும் உயர்மின் அழுத்த கோபுரங்கள் அமையும் நிலங்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகையும், வாடகையும் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும். கெய்ல் எரிவாயு மற்றும் ஐ.டி.பி.எல். பெட்ரோலிய குழாய்கள் விளைநிலங்கள் வழியாக அமைக்கப்படுவதைத் தடுத்து, சாலையோரங்களில் பதிக்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். கட்டுமானத் தொழிலாளர் நலன்காக்க நலவாரியம் அமைக்கப்படும். மாதம் ஒருமுறை மின்கட்டணம், விலைவாசியைக் கட்டுப்படுத்த பால் விலை, பெட்ரோல் - டீசல் விலையைக் குறைத்தல், விவசாயிகளின் வாழ்க்கைத்தரத்தை உயர்த்துதல், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு என அனைத்துத் தரப்பினருக்குமான வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்.
மேலும் இந்த மாவட்டத்திற்காக, ஈரோட்டில் அரசு பல்கலைக்கழகம், சட்டக்கல்லூரி, வேளாண்மைக் கல்லூரி மற்றும் இந்திய ஜவுளி தொழில்நுட்ப அறிவியல் பல்கலைக்கழகம். ஈரோடு அரசு மருத்துவமனை தரம் உயர்த்தப்பட்டுப் புற்றுநோய் சிகிச்சைப் பிரிவு தொடங்கப்படும். ஈரோடு மாநகரில் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மேம்பாலங்கள். ஈரோட்டில் மஞ்சள் ஏற்றுமதி மையம் தரம் உயர்த்தப்படும். பெருந்துறை அரசு மருத்துவமனைகள் நவீனப்படுத்தப்படும்; தொழிற்பயிற்சி நிலையம் அமைக்கப்படும்.ஈரோடு மாவட்டத்தில் அரசு வேளாண் கருவிகள் உற்பத்தித் தொழிற்பேட்டை அமைக்கப்படும். ஈரோட்டில் அமைக்கப்படும் பொது சுத்திகரிப்பு நிலையங்களுக்கு வழங்கப்படும் மின்சாரத்திற்கு சலுகைக் கட்டணம் வசூலிக்கப்படும். ஈரோட்டில் வர்த்தக மையம். தொழிலாளர்கள் மிக அதிக அளவில் வசிக்கும் ஈரோடு மாவட்டத்தில் இ.எஸ்.ஐ. மருத்துவமனை அமைக்க ஆவன செய்யப்படும். மொடக்குறிச்சியில் தொழிற்பேட்டை, பாலிடெக்னிக் கல்லூரி. பெருந்துறையில் சிப்காட் தொழிற்பேட்டை அமைப்பதற்கு நிலம் வழங்கிய உரிமையாளர்களுக்கு உரிய இழப்பீடு கிடைத்திட நடவடிக்கைகள் எடுக்கப்படும். சுதந்திரப் போராட்ட வீரரும் தீரன் சின்னமலை அவர்களின் தளபதிகளில் ஒருவருமான பொல்லான் அவர்களுக்கு ஓடாநிலை அருகே ஜெயராமபுரத்திலும், வல்வில் ஓரிக்குக் கொல்லிமலையிலும் நினைவு மண்டபங்கள் கட்டப்படும். குமாரபாளையம் கால்வாய் நீர்ப்பாசனத் திட்டம் செயல்படுத்தப்படும். இப்பகுதியில் உள்ள சாயக்கழிவு பிரச்சினைகளுக்குத் தீர்வு காணப்படும். இப்போது நாம் ஆட்சிக்கு வந்து ஐந்து வருடத்தில் என்னென்ன செய்யப்போகிறோம் என்பதில் சிலவற்றை உங்களுக்கு எடுத்துச் சொல்லி இருக்கிறேன்.
எனவே நம்முடைய மதச்சார்பற்ற முற்போக்குக் கூட்டணி வேட்பாளர்களை பெருவாரியான வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற வைக்க வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.
தமிழர்களுடைய சுயமரியாதை இன்றைக்கு பறி போய்க்கொண்டிருக்கிறது. இந்தத் தேர்தல் என்பது ஆட்சி மாற்றத்திற்காக நடக்கின்ற தேர்தல் மட்டுமல்ல, நம்முடைய தன்மானம் – சுயமரியாதை காப்பாற்றப்பட வேண்டும். இது தந்தை பெரியார் - அறிஞர் அண்ணா - தலைவர் கலைஞர் பிறந்த மண்.
இன்றைக்கு இந்தியை கொண்டு வந்து, சமஸ்கிருதத்தைக் கொண்டு வந்து, நீட் தேர்வைத் திணித்து நம்முடைய பிள்ளைகளின் மருத்துவக் கனவுகளைச் சிதைத்து, மதவெறியைத் தூண்டி நாட்டைத் துண்டாட நினைக்கிறார்கள்.
அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது உங்கள் மோடி மஸ்தான் வேலைகள் இந்தத் தமிழ்நாட்டில் பலிக்காது. மாநில உரிமைகளைப் பாதுகாக்க, நம்முடைய தமிழகத்தை மீட்க, நீங்கள் அத்தனை பெரும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி வேட்பாளர்களை வெற்றி பெற வையுங்கள் என்று உங்களை அன்போடு கேட்டு விடைபெறுகிறேன்.”
இவ்வாறு தி.மு.க தலைவர் அவர்கள் உரையாற்றினார்.
Also Read
-
ரேஷன் கடைகளில் துவரம் பருப்பு விவகாரம் : அவதூறு வெளியிட்ட பாமக ராமதாஸுக்கு அமைச்சர் சக்கரபாணி பதிலடி!
-
BJP அஜெண்டா.. “அதற்கு நாம் இடம் கொடுத்துவிடக் கூடாது” - திமுக MP-க்கள் கூட்டத்தில் முதலமைச்சர் கறார் ?
-
நாடாளுமன்ற குளிர்கால கூட்டத்தொடர் : திமுக எம்.பி-க்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் என்ன?
-
அன்று கிருஷ்ணகிரி... இன்று கோவை... கூண்டோடு கலைக்கப்பட்ட கோவை நாதக : சிக்கலில் சீமான் - காரணம் என்ன?
-
“மோடியை பற்றி பேசினா கூட வராத கோபம், அதானியை பற்றி பேசினால் வருது” -பாஜகவை விமர்சித்த செல்வப்பெருந்தகை!